கவிஞர் முருகேசிற்குத்

தமிழக அரசின்

பொது நூலகத் துறை சார்பில்

‘நூலக ஆர்வலர் 2018’ விருது

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச் சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்தமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது – 2018’ வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர் வட்டத்திற்கு
‘நூலக ஆர்வலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
2018-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா கடந்த நவம்பர்-14-ஆம் நாள்  சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை ஏற்றார். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவு முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித் துறை – பொது நூலகத் துறை இயக்குநர் இராமேசுவர முருகன் முன்னிலை வகித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் து.செயக்குமார் வாழ்த்துரை
வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நூலக வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. இந்த வாசகர் வட்டத்தின் தலைவராகத்
தேர்வு செய்யப்பட்ட கவிஞர் மு.முருகேசு தலைமையின் கீழ்த், தொடர்ந்து மாதந்தோறும் ‘சந்திப்பு’ எனும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்வில்,நூல் அறிமுகம், நூல் வெளியீடு, நூல் திறனாய்வு, பல்துறை வல்லுநர்களின் உரையரங்கு எனத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உரூ.1,000/- செலுத்திய 7 நூலகப் புரவலர்கள் மட்டுமே இந்த கிளை நூலகத்தில் இன்றைக்கு 190 நூலகப் புரவலர்கள் சேர்ந்திருக்கிறார்கள். உரூ.5,000/-
செலுத்தி, 4 பெரும் புரவலர்கள் இணைந்திருக்கிறார்கள். புதிதாக 8 ஆயிரம் நூலக உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நூலகத் தந்தை எசு.ஆர்.இரங்கநாதன் பிறந்த நாள் விழா, தேசிய நூலக வார விழா, உலகத் தாய்மொழி நாள் விழா, நூலகத்திலேயே சிறப்புத் தள்ளுபடியுடன் ஒரு வார காலம் புத்தகக் கண்காட்சி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
நூலகத்திற்குத் தேவையான தூய்மையாக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், கதிரொளி(சோலார்) மின்விளக்கு, 20 நெகிழி நாற்காலிகள், 4 மர நாற்காலிகள், இரும்புப் பேழை ஒன்று, நகர மக்களிடமிருந்து நன்கொடை மூலமாக வாங்கப்பட்டுள்ளன. உரூ.30,000/- மதிப்பிலான நூல்களும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.
மேற்கண்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டமைக்காக நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ‘நூலக ஆர்வலர் விருது – 2018’ விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
இவ்விழாவில், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி, நல்நூலகர் விருதுபெற்ற வந்தவாசி அரசுக் கிளை நூலகர் பூ.சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட நூலகர் வெங்கடேசன் முதலான பலர் பங்கேற்றனர்.