மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது!
உரைக்கும் மொழியும் உண்ணும் உணவும்
“மக்களிடையே சமநிலைக் கொள்கையைப்
பரப்பும் செயலில்தான் இப்பொழுது கருத்து செலுத்துதல் வேண்டும். இந்தியைத்
தடுத்தலோ தமிழைப் புகுத்தலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்”; என்று சிலர்
கருதுகின்றனர். ஒரு நாட்டின் வாழ்வியல் முறையும் பொருளியல் கொள்கையும்
அவ்வப்போது தோன்றும் தலைவர்களுக்கு ஏற்ப மாறி அமையலாம். இன்று தனி உடைமைக்
கொள்கையைப் பின்பற்றும் நாடு நாளை, பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றலாம்.
இன்று முடியாட்சியில் உள்ள நாடு நாளை, குடியாட்சியை மேற்கொள்ளலாம். இவை
மாறியும் அமையலாம். ஆனால் ஒரு நாடு தன் மொழியை இழக்குமேல் மீண்டும் பெறல் அரிது. எடுத்துக் காட்டுக்கு வேறு எங்கும் வேண்டாம். நம் நாடே தக்க சான்றாகும்.
ஒரு காலத்தில் இமயம் முதல் குமரி வரை நம் செந்தமிழ் வழங்கியது. பின்னர்
விந்தியம் முதல் குமரி வரை தமிழே மக்கள் மொழியாக இருந்தது. ஏன் பத்தாம்
நூற்றாண்டு வரை மலையாளம் எனப்படும் சேரநாட்டில் செந்தமிழே ஆட்சி புரிந்தது.
இப்பொழுது காண்பது என்ன? செந்தமிழ்ப் பகுதிகளெல்லாம் வேற்று மொழி நாடுகளாக மாறுபட்டு விளங்குகின்றன. இனி மீண்டும் அவற்றைத் தமிழ் வழங்கும் நாடாகக் காணல் கூடுமா?
ஆதலின் எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்! மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது
என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி
மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும்
உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்.
மைய அரசு இந்தியைக் கட்டாயமாகப்
புகுத்தவில்லையென்று கூறிக்கொண்டே கட்டாயமாக வற்புறுத்தி நம்மீது
சுமத்தும் செயலில் நாடோறும் ஈடுபட்டு வருகின்றது. இனி மைய அரசு
மாநில அரசுகளுடன் இந்திமொழியில்தான் கடிதப் போக்குவரத்து வைத்துக்
கொள்ளுமாம். அங்ஙனமாயின் மாநில அரசினர் இந்தியைக் கற்றுத்தான் ஆக
வேண்டுமென்றே நிலையைத் தவிர்க்க முடியாது. மாநில அரசுக்கும் மைய
அரசுக்கும் உள்ள தொடர்பு மொழி இந்தியென்றால், மாநில அமைச்சர்களும் இந்தி
தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாய நிலைதானே உண்டாகின்றது. அமைச்சர்களும்
ஆட்சித்துறைப் பணியாளர்களும் இந்தி மொழியைக் கற்றிருக்கவேண்டு மென்றால்
மாநில மொழியாம் தமிழை எதற்குக் கற்பிக்கப் போகின்றனர். மாநில அரசு
தமிழில்தான் நடைபெறும் என்ற கூற்று பொய்த்து விடுமே. ஆகவே மெல்ல மெல்ல
ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி அமர்ந்து விடுதல் எளிதன்றோ? தமிழ் மெல்ல மெல்ல
மறைந்து ஒழிதலும் கூடுமன்றோ? ஆதலின் தமிழ்ப் பெருமக்களே! உண்ணும் உணவினும்
உயர்வாக மொழியைக் கருதி அதனைக் காக்கும் தொண்டில் ஒன்றுபடுவீர்களாக!
வளர்ந்து வரும் இந்தி முதன்மை வளரும் நம் செந்தமிழை அழித்தே தீரும்.
விழிமின்! எழுமின்! வேற்றுமையை மறந்து விழியினும் மேலான மொழியைக் காக்கப்
புறப்படுமின்.
– தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக