சிவராசனைக் கைது செய்ய
நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை!
– நளினி சொல்லும் உண்மை
‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் ஐந்தாம் பகுதி இது. இதில் சிவராசன் பற்றிய பகுதிகள் இடம்பெறுகின்றன:
இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச்
சேர்க்கப்பட்ட சிவராசன் உண்மையில் பிடிக்க முடியாத ஆளா அல்லது பிடிபடாத ஆளா
என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எங்களைக் கேட்டால், மிக எளிதாகவே
சிவராசனைப் பிடித்திருக்கலாம். வேண்டுமென்றே அவரைப் ‘பிடிக்க முடியாத’ ஆளாக மாற்றிக் காட்டியது நடுவண் புலனாய்வுத்துறையின் (சி.பி.ஐ.) சிறப்புப் புலனாய்வு குழுதான்.
இந்தக் குற்றச்சாட்டை நான் வேண்டும் எனவோ, மேம்போக்காகவோ கூறவில்லை.
இன்னும் சொல்லப் போனால், இஃது என் சொந்தக் கருத்தும் இல்லை. நான் சொல்பவை
அனைத்தும் புலனாய்வுத்துறையினர் சொன்னவை. நீதிமன்றத்தில் பதிவான சான்றுகள்,
இதழ்களின் செய்திகள், இன்னும் முதன்மையான ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து
மட்டுமே எடுத்துச் சொல்கிறேன்.
வைகாசி 07, 2012 / 1991 மே மாதம் 21-ஆம்
நாள் முன்னிரவு இராசீவு காந்திப் படுகொலை நடந்தது. நடுவண் குற்றப்
புலனாய்வுக் (சி.பி.சி.ஐ.டி.) காவல்துறையிடம் இருந்த இந்த வழக்கை, நடுவண்
புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) எடுத்துக் கொண்டு சிறப்புப் புலனாய்வுக்
குழுவை அமர்த்தியது. அதிலிருந்தே குற்றவாளிகளைத் தேடத் தொடங்குகிறார்கள்.
மே மாதம் 23-ஆம் நாள் தஞ்சாவூர்ப்
பேருந்து நிலையத்தில் வைத்து சங்கர் என்பவரைக் கைது செய்தார்கள். இவர்
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், சென்னைப்
புரசைவாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என்றும் தெரிய
வந்தது. அவரிடம் இருந்த நாட்குறிப்பேட்டில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது.
அதில் நளினி – தாசு என்ற பெயரில் என் அலுவலகத் தொலைபேசி எண்ணும் அலுவலக
முகவரியும் எழுதப்பட்டிருந்தன. எபினேசர் கடை, இராபர்ட்டு பயசு என்ற பெயரில்
உள்ள தொலைபேசி எண்ணும் இருந்தது. இந்த இரண்டு தொலைபேசி எண்களை வைத்து உடனே
உசாவலில்(விசாரணையில்) இறங்கி விட்டனர். அந்த நிமையமே(நிமிடம்) நளினியாகிய
நானும் இராபர்ட்டு பயசும் நடுவண் புலனாய்வுத்துறைக் கண்காணிப்பு
வளையத்துக்குள் வந்து விட்டோம். அடுத்த நாள், 24-ஆம் நாளன்று வந்த
இதழ்களில், ‘சங்கர் என்ற விடுதலைப்புலி, சென்னைப் புரசைவாக்க விடுதி
ஒன்றில் தங்கியிருந்தார். அவரைச் சிவராசன் என்பவர்தான் தங்க வைத்துப்
பணமும் கொடுத்தார்’ என்று வெளியானது. ஆக, சிவராசன் பெயர் 23-5-1991 அன்றே
நடுவண் புலனாய்வுத்துறை அலுவலர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது.
சங்கர் பிடிபட்டு, அவரிடம் இருந்த
தொலைபேசி எண்களை எடுத்துக் கொண்டபொழுதே நான் அவர்களின் கண்காணிப்பு
வளையத்துக்குள் வந்து விட்டேன் என்றால், அப்பொழுதே என் கணவரும் அவர்களின்
வளையத்துக்குள் வந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். 24, 25 ஆகிய இரண்டு
நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் நான் அலுவலகம்
செல்லவில்லை. ஆனால், 23-ஆம் நாள் அன்றே நான் அலுவலகத்தில் இருந்து
புறப்பட்டு வந்த பிறகு காவல்துறையினர் அங்கு சென்று என்னைப் பற்றி
உசாவியிருக்கிறார்கள். அடுத்து, 27, 29-ஆம் நாட்களில் என்னை
அலுவலகத்துக்குத் தேடி வந்து உசாவி விட்டுப் போனார்கள். அப்பொழுதே என்
அலுவலகம், வீடு ஆகியவற்றிலெல்லாம் கண்காணிப்புக் காவலர்களை
நிறுத்தியிருப்பார்கள். அந்தக் கட்டத்தில், இராயப்பேட்டை வீட்டில் இருந்த
என் கணவர், என்னைத் தேடி அடையாற்றில் உள்ள என் அலுவலகம் வந்து
கொண்டிருந்தார். ஆக, அவரும் அவர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள்தான்
இருந்திருக்க வேண்டும்.
மற்றொரு பக்கம், 23-ஆம் நாளே அரிபாபுவின் ஒளிப்படக் கருவியும் (camera), அதில் இருந்த படங்களும் காவல்துறைக்குக் கிடைத்து விட்டன.
அதில் சிவராசன், தணு, சுபா உடன் என்னுடைய படங்களும் இருந்தன. அந்தப்
படத்தில் இருந்தவர்கள்பற்றித் துருவித் துருவி உசாவிக் கொண்டிருந்தார்கள்.
அதாவது, சங்கர் மூலமாகச் சிவராசன் பெயரும் அரிபாபுவின் ஒளிப்படக் கருவி
மூலமாகச் சிவராசன் படமும் நடுவண் புலனாய்வுத்துறைக்குக் கிடைத்து விட்டன.
கையில் ஈங்க (சந்தன) மாலையோடு நின்றிருந்த தணுவின் படம் 26-ஆம் நாள்
இதழ்களில் வெளியானது. அடுத்து, 27-ஆம் நாள் மாலை நாளேடுகளில் தளருடை
(பைசாமா- குர்தா) அணிந்த சிவராசனுடைய படங்கள் வெளியாயின.
அரிபாபு, புகைப்பட வல்லுநர் சுபா
சுந்தரத்தின் மாணவர் என்பதால் 23-ஆம் நாளில் இருந்தே அவரை உசாவத் தொடங்கி
29-ஆம் நாள் அவரைக் கைது செய்தனர். அப்படியே அரிபாபுவின் மற்ற
நண்பர்களையும் உசாவத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஆக இந்த வழியிலும்
கோணத்திலும் காவல்துறை போய்க் கொண்டிருந்தது.
அதே போன்று, சூன் 3-ஆம் நாள் அன்று என்
தம்பி பாக்கியநாதனையும் உசாவத் தொடங்கினார்கள். அதாவது, நாள்தோறும் வந்து
அழைத்துச் செல்வார்கள். உசாவுவார்கள். பகல் உணவுக்குக் கொண்டு வந்து
விடுவார்கள். மீண்டும் அழைத்துச் சென்று மாலையில் கொண்டு வந்து
விடுவார்கள். மீண்டும் விடிகாலையில் வந்து அழைத்துக் கொண்டு போவார்கள்.
இப்படியே இருந்து விட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு 6-ஆம் நாள் அன்று என்
தம்பியைக் கைது செய்தார்கள். ஆக, எங்கள் வீட்டைச் சுற்றிக் காவல்துறைக்
கண்காணிப்பு தொடர்ந்தபடியே இருந்துள்ளது. பேரறிவாளன் மே 23-ஆம் நாள் அன்றே
தமது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய்
விட்டிருந்தார். பிறகு, அவரையும் உசாவிக் கொண்டு சோலார்ப்பேட்டை வரையிலும்
போய் நின்றார்கள். அங்கேயும் காவல் வளையம் போடப்பட்டு விட்டது.
இதற்கிடையில், என் கணவர், தொடர்ந்து
எங்கள் இராயப்பேட்டை வீட்டில் தங்க முடியாத நிலை. அதாவது, எங்கள் காதல்
திருமணம் பற்றி அம்மாவுக்குத் தெரிந்து, அது சண்டையானதால், நான்தான் தம்பி
பாக்கியநாதனின் அச்சகத்தில் தற்காலிகமாகத் தங்கச் சொன்னேன். நான் வேலை
முடிந்து, அன்றாடம் அவரைச் சென்று பார்த்துவிட்டு, உணவை வாங்கிக் கொடுத்து
விட்டு, பிறகுதான் வீட்டுக்குச் செல்வேன். என்னைப் பின்தொடர்ந்து
கண்காணிக்கும் காவல்துறையினருக்கு நான் என் கணவரைச் சந்திப்பதும், அவர்
அங்கே இருப்பதும் தெரிந்தபடிதான் இருந்திருக்கும். சூன் 6-ஆம் நாள் என்
தம்பியைக் கைது செய்து கொண்டு போன பின்னர், மூன்று நாட்கள் கழித்து 9-ஆம்
நாள் அன்று என் அம்மா, தங்கை கல்யாணி, தோழி பாரதி, மனநலம் குன்றிய மாமா
இராசரத்தினம் ஆகியோரைக் கைது செய்தார்கள். அதே நாள் செயக்குமார், அவரது
மனைவி சாந்தி, அவர்களின் குழந்தை ஆகியோரையும் கைது செய்தார்கள். அடுத்த
நாள் சூன் 10-ஆம் நாள் அன்று இராபர்ட்டு பயசு அவர் குடும்பத்துடன் கைது
செய்யப்பட்டார். மேலும், தொடர்ந்து தேடப்பட்டுக் கொண்டிருந்த பேரறிவாளன்
11-ஆம் நாள் அன்று அடைக்கலம் அடைய, அவரையும் கைது செய்ததாக அறிவித்தார்கள்.
மறுநாள் எனது படம் இதழ்களில் வெளியானது.
கூடவே, என் கணவரின் விவரங்களும் அடையாளங்களும் தாசு என்ற பெயரில்
வெளிவந்தன. அதற்கடுத்த நாளே என் கணவரின் படமும் வெளிவந்தது. ஆனால், அது என்
கணவரின் உண்மையான ஒளிப்படம் இல்லை. அவருடைய அடையாளங்களைத் துல்லியமாகத்
தெரிந்தவர் சொல்லச் சொல்லக் கணினியில் வரையப்பட்ட வரைகலைப் படம்தான் அது.
அந்தப் படத்தில் என் கணவர் முகம் மிகத் துல்லியமாக இருந்தது. இவர்கள்
எல்லாரும் பிடிபட்ட பிறகு, கடைசியாகத்தான் நாங்கள் சூன் 14-ஆம் நாள் நடு
இரவில் சைதாப்பேட்டைப் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கியபொழுது கைது
செய்யப்பட்டோம். நாங்கள் அடையாளம் காட்டி யாரும் பிடிபட வாய்ப்பில்லை.
கடைசியாகத்தான் நாங்கள் கைதானோம்.
குற்றம் நடந்த மே 21-ஆம் நாளில் இருந்து,
சூன் மாதம் 14-ஆம் நாள் வரை இருபத்து நான்கு நாட்களும் நான் மேலே சொன்ன
ஆட்களில் சிலரைச் சிவராசன் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான்
இருந்துள்ளார். இதனைப் புலனாய்வுத்துறையினரின் ஆவணங்களே பல இடங்களிலும்
பதிவு செய்திருக்கின்றன. சில சான்றுரைஞர்களின் வாக்குமூலமும் அப்படி
இருக்கிறது. மே 23-ஆம் நாள் அன்றே சிவராசன் எங்களைச் சந்தித்தார். மே 25,
26-ஆம் நாட்களில் எங்களோடு திருப்பதிக்கு வந்து திரும்பினார். அதன் பிறகு
என் கணவரை இரண்டு தடவை சந்தித்தார். என் தம்பியையும் போய்ப் பார்த்தார்.
மே 25 முதல் சூன் 7 வரை என்
கணவரையும், உசாவல் கண்காணிப்புக்குள் இருந்த வேறு சிலரையும் மூன்று நான்கு
தடவை சிவராசன் சந்தித்ததாகப் புலனாய்வுத்துறையினர் கதை எழுதி வைத்துள்ளனர்.
இந்த இடத்தில், நடுவண் புலனாய்வுத்துறை சொன்ன மற்றொரு கதையையும் பார்ப்போம்.
சூன் மாதம் 7-ஆம் நாள் அன்று சிவராசன்,
சுபா, சாந்தன், என் கணவர், நான் ஆகிய ஐந்து பேரும் அடையாறு அட்டலட்சுமி
கோயிலில் ஒன்றாகச் சந்தித்துப் பேசிக் கொண்டதாகவும், அப்பொழுது சுபாவுக்கு
அங்கே இருந்த மருத்துவமனையில் பண்டுவம்(சிகிச்சை) பார்த்ததாகவும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தக் கதையின்படி பார்த்தால்கூட நாங்கள்
எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தோம். மற்றவர்களை விடுங்கள், என்னை அலுவலகம்
வந்து உசாவினார்கள்; தொடர்ந்து கண்காணித்தார்கள். அதன் பேரில் என்னிடம்
வந்து போய்க் கொண்டிருந்த என் கணவரையும் பின்தொடர்ந்திருப்பார்கள். அப்படி
இருக்கும்பொழுது சிவராசன் உள்பட நாங்கள் எல்லாரும் ஒன்றாகப் பலமுறை
சந்தித்துக் கொண்டபொழுது மட்டும் ஏன் புலனாய்வுத்துறை அலுவலர்கள்
பின்தொடராமல் விட்டார்கள்? ஏன் பிடிக்காமல் விட்டார்கள்?
ஒன்று, எங்களையெல்லாம் பின்தொடர்ந்து
கண்காணித்ததாகச் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, தெரிந்தே
சிவராசனைப் பிடிக்காமல் விட்டது உண்மையாக இருக்க வேண்டும்; அப்படித்தானே?
எங்களில் யாரையாவது ஒருவரைப் பின்தொடர்ந்து கண்காணித்திருந்தாலும்
சிவராசனைப் பிடித்திருக்க இயலும்தானே? பிறகு ஏன் சிவராசனைப்
பார்த்துப் புலனாய்வுத்துறை விலகி விலகி ஓடிக் கொண்டிருந்தது என்பதற்கு,
காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமியின், ‘இராசீவு காந்தி
படுகொலை – தூக்குக் கயிற்றில் நிசம்’ என்ற நூலைப் படித்துப் பார்த்தால்
எல்லாமும் விளங்கும்.
இது தவிர, சிவராசனைக் கைது செய்யக்கூடிய
மேலும் பல வாய்ப்புகள் நிறைய இருந்தன. நடுவண் புலனாய்வுத்துறைச் சிறப்புப்
புலனாய்வுக் குழுவின் தலைமையிடமான மல்லிகைக் கட்டடத்தில், இராசீவு
கொலையாளிகளைப்பற்றித் தகவல் தருவதற்கு என்றே பல தொலைபேசி எண்களை
அறிவித்திருந்தார்கள். அந்தத் தொலைபேசி அழைப்புகளைக் கேட்டு அதற்கேற்ப
நடவடிக்கை எடுப்பதற்கு என்று அலுவலர் குழு ஒன்றை அமைத்திருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தமிழ் அறவே தெரியாது. ஆங்கிலமும் தெரியவில்லை.
தெலுங்கு, இந்தி தெரிந்தவர்களை மட்டுமே அமர்த்தியிருந்தார்கள்.
திட்டமிட்டு, வேண்டும் என்றே அப்படிச் செய்திருக்கிறார்கள். இதை,
புலனாய்வுத்துறையில் இருந்த ஆய்வாளர் செபமணி மோகனராசு
இணையத்தளம் ஒன்றுக்குக் கொடுத்த நேர்காணலில், “தமிழ்மொழி தெரியாத
அலுவலர்களைத்தான் அந்த இடத்தில் வைத்திருந்தார்கள்” என்று ஆற்றாமையோடு
அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, சிவராசன் குறித்த செய்திகளை நடுவண்
புலனாய்வுத்துறை அறிய விரும்பவில்லை என்றே தெரிகிறது.
ஆகத்து 19-ஆம் நாள் அன்றுதான் சிவராசன் –
சுபா பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்கள். இடைப்பட்ட
இரண்டு மாதங்களில் சிவராசனை உயிருடன் பிடிப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள்
இருந்ததாகச் சான்றுகள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் மயிரிழையில்
தப்பிவிட்டார் என்பது போல், அதாவது இருந்த இடத்தை விட்டுச் சிவராசன்
தப்பிப் போன மறுகணமே அங்கு போனதாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏன் அந்தக் கண் மறைப்பு நாடகம்?
இறுதியாக, பெங்களூருவில் சிவராசன் இருந்த
வீடு சுற்றி வளைக்கப்பட்டபொழுதும் உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. 20
மணி நேரம் வேண்டுமென்றே தாமதம் செய்தார்கள். மயக்க மருந்துக்காகத்தான்
காத்திருந்தார்கள் என்றால் அதைத் தில்லியில் இருந்து இந்தியப் படை
வானூர்தியின் மூலம் பெங்களூருக்கு எடுத்து வர ஒரு மணி நேரம் போதுமே! ஏன்
இந்த நாடகம் நடத்தினார்கள்? சிவராசனை உயிருடன் பிடிப்பதைத் தவிர்த்தார்கள்.
அதுதான் உண்மை! ‘சிவராசனை உயிருடன் பிடிக்க நடுவண் புலனாய்வுத்துறை
விரும்பவில்லை’ என்று இந்த வழக்கில் கைதாகித் தூக்குத் தண்டனை பெற்றுப்
பிறகு விடுதலையான பெங்களூரு அரங்கநாத்து நன்றாகவே தெளிவுபடுத்தி உள்ளார்.
என் கணவரை முதல் குற்றவாளியாக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப என்னை ஒப்புக் கொண்ட குற்றவாளியாக(approver) மாற்ற வேண்டும்
என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காகவே, எங்களுக்குத் திருமணம்
நடந்திருந்தும், கைதாகும்பொழுது கழுத்தில் தாலி, காலில் மெட்டி, வயிற்றில்
குழந்தை, கூடவே கணவர் இருந்தும், தனிப்பட்ட தேடல் அறிக்கையில்(Personal
search memo) தாலி – மெட்டி அணிந்து இருந்ததைப் பதிவு செய்து முதல் முறை
நீதிமன்றத்தில் நேர்நிறுத்தியபொழுது குறிப்பிட்டிருந்தும் அதன் பிறகு
உருவாக்கிய ஆவணங்களிலெல்லாம் திட்டமிட்டு மறைத்து வைத்திருந்தார்கள்.
இப்படி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தோமானால் சிவராசனைப் பிடிக்க
வேண்டும் என்ற நோக்கம் நடுவண் புலனாய்வுத்துறையினருக்குத் தொடக்கத்தில்
இருந்தே இருக்கவில்லை என்பது தெரியும்.
முழுப் பூசணிக்காயையும் இலைச்
சோற்றுக்குள் மறைத்து வைத்து வென்றவர்கள் கார்த்திகேயன் தலைமையிலான நடுவண்
புலனாய்வுத்துறையின் சிறப்புப் புலனாய்வு குழுவினராகத்தான் இருக்க
முடியும்.
– இளைய (சூனியர்) விகடன், 11.12.2016 இதழ்
கருத்தாளர்: நளினி முருகன்
தொகுப்பாளர்: பா.ஏகலைவன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக