தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும்
கெடுத்து விடவில்லை
பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான மூன்று பாவினங்களை அமைத்துப் பன்னிருவகையான செய்யுட்களை உண்டாக்கினார்கள்.
பழைய ஆசிரியப்பாவோடு ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்
என்றும் வெண்பாவோடு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்றும்,
கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு
வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்றும் பாவகைகளை
வளர்த்தார்கள். பாவினங்களின் அமைப்பு திடீரென்று அமைந்து விடவில்லை. அவை
சரியானபடி முழு உருவை அடைவதற்குப் பல ஆண்டுகள், சில தலைமுறைகள் சென்றிருக்க
வேண்டும். புத்தம் புதிய முயற்சியில் தொடக்கக் காலத்தில் சில பல குறைகள்
இருக்கும். அக்குறைபாடுகள் நீங்கி நிறைவான வடிவம் அமைவதற்குப் பல ஆண்டுகள்
சென்றிருக்க வேண்டும். புதிய பாவினங்களைப் புலவர் உலகம் சம்மதித்து
ஏற்றுக்கொள்வதற்குப் பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும்.
இந்தப் புதிய ஆக்கம், தமிழர் சமற்கிருத,
பிராகிருத மொழிகளைப் பயில வாய்ப்பு ஏற்பட்ட காலத்தில் உண்டான வளர்ச்சி
யாகும். இந்தப் புதிய முயற்சியில் அக்காலத் தமிழர் தமிழ் மொழியின் தனித்தன்மையும் இயல்பும் கெடாதபடி பார்த்துக் கொண்டார்கள்.
கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் பிராகிருத – சமற்கிருத எழுத்துகளையும்
சொற்களையும் அப்படிஅப்படியே சேர்த்துக்கொண்டு கன்னடம், தெலுங்கு, மலையாள
மொழிகளின் தூய்மையையும் தனித்தன்மையையும் கெடுத்துக்கொண்டதுபோல, பாவினங்களை
அமைத்த காலத்தில் தமிழர் பிராகிருத-சமற்கிருத மொழிச் சொற்களையும்
எழுத்துகளையும் அப்படி அப்படியே எடுத்துக் கொண்டு தமிழின் தூய்மையையும்
தனித் தன்மையையும் கெடுத்து விடவில்லை. பிராகிருத – சமற்கிருத மொழிச்
சொற்கள் ஓரளவு தமிழில் கலந்தபோதிலும், அச்சொற்கள் தமிழ் மரபுக்கேற்பக்
கிருதம் பெற்றபடியால் தமிழ், திராவிட இயல்பை இழக்காமல் இருக்கிறது.
மயிலை சீனி. வேங்கடசாமி:
ஆய்வுக் களஞ்சியம் 3:
பண்டைத் தமிழக வரலாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக