சனி, 1 அக்டோபர், 2016

வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு




வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு

தலைப்பு-திருக்குறள் மாநாடு ; thalaippu_thirukkuralmaanadu

தென் குமரியில்  உலகத் திருக்குறள்  மாநாடு

  மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பு, சப்பானிய, கொரிய, சீனக் கூட்டுறவோடு சென்னையில் செயல்பட்டுவரும் ஆசியவியல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடு இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புக்களும் இணைந்து  அனைத்துநாட்டுக் கூட்டு முயற்சியாகத் தமிழகத்தின் தென்கோடிக் குமரியில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை அடுத்து வரும் வைகாசி 03-05 / 2048 / 2017ஆம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றன.
  அனைத்துலகு நோக்கிய திருக்குறளின் பயணத்தை, மொரிசியசு நாட்டுக் கல்வியமைச்சரும் முன்னாள் உலக வங்கியின்மூத்த  அறிவுரைஞரும், கஅபபஅ/யுனெசுகோவின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர்  ஆறுமுகம்  பரசுராமன், ஆசியவியல்     நிறுவன     இயக்குநர்     முனைவர் சான் சாமுவேல் ஆகியோர் இணைந்து  மூன்று  நிலைகளில் செயல்படுத்த முடிவு   செய்துள்ளனர் .
  ஆடி 22, 2047 / 2016 ஆகத்து 6-ஆம் நாள் மொரிசியசு நாட்டில் திருக்குறள் உலகப் பொது மறை என்ற தலைப்பில் முன்னோடித் திருக்குறள் மாநாடு ஒன்று மேற்கூறிய  திட்டத்தின் தொடக்க நிலையாக மிகச்சிறப்பாக  அந்த நாட்டுக்குடியரசுத் துணைத்தலைவரின் தலைமையில்    நடைபெற்றது.  இதே மையப் பொருளில் மூன்று  நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் அனைத்துலக மாநாட்டினை நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் அடுத்த ஆண்டில் ஒருங்கிணைத்து நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது.
  இம்மாநாட்டின்  ஆய்வரங்குகள்  அனைத்தும்  நாகர்கோவிலிலுள்ள இசுகாட்டு கிறித்தவக்  கல்லூரி  வளாகத்தில் நடைபெறவுள்ளன. இம்மாநாட்டைச் சிறப்பாக நடத்த 30 நாடுகளின் உறுப்பினர்களைக்  கொண்ட அனைத்துநாட்டு அறிவுரைக் குழுவொன்று  அமைக்கப்பட்டுள்ளது.
 வரலாற்று அறிஞர்  முனைவர் பத்மநாபன், ஒப்பிலக்கிய அறிஞர் பேராசிரியர்  சேம்சு தானியல், வரலாற்றுத் துறைப் பேராசிரியர் வே.தி.செல்லம், பேராசிரியர் சந்திரபாபு போன்ற பல்வேறு அறிஞர்களைக்கொண்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவும் குமரி  மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவில்   ஏராளமான  அறிஞர்கள்  இணைந்து   செயல்பட  உள்ளனர்.   25-க்கும்  மேற்பட்ட  உலகின் பல்வேறு நாடுகள் இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் என்று ஏதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு,  செருமனி, இரசியா, போலந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கனடா, பருமா, சீனா, தென் கொரியா, சப்பான், வளைகுடா நாடுகள்,  (இ)ரீ யூனியன், செசில்சு, மடகாசுகர், தென் ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாட்டறிஞர்கள் இதில் கலந்து கொள்ள  உள்ளனர்.  மொரிசியசு நாட்டிலிருந்து மட்டும் 133 பேர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
  மாநாட்டின் போது அரிய கலை நிகழ்ச்சிகளும், புத்தக, ஓலைச்சுவடிகள் கண்காட்சி ஆகியனவும் இடம் பெற உள்ளன. மாநாட்டு முடிவில் பிறநாட்டுப் பேராளர்கள் தென்குமரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச்  சுற்றுலா  செல்வதற்கு  ஏற்பாடுகள்  செய்யப்பட்டு  வருகின்றன.
 மொரிசியசில்   இம்மாதம்   கால்கோள்    கண்ட   திருக்குறள்   தேசிய   மாநாடு    அடுத்த  ஆண்டு  மேற்கூறியவாறு  தென் குமரியில் அனைத்துலக மாநாடாக மலரவுள்ளது. இதன் மூன்றாவது மாநாட்டினைப் பிரான்சு நாட்டின்  தலை நகரான  பாரீசில் கஅபபஅ/யுனெசுகோவுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டில் நடைபெறச்செய்து உலக அளவில் திருக்குறளுக்கு பன்னாட்டு அறிஞர்கள் முன்னிலையில் அனைத்துநாட்டுத் தகுதிப்பாடு கிடைப்பதற்குரிய பணியினை கஅபபஅ/யுனெசுகோவின் முன்னாள் இயக்குநரும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின்  அனைத்துநாட்டு அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம்பரசுராமன், சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர்.  சான் சாமுவேல், ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இம்முயற்சிகள் செயலாக்கம் பெறும்போது உலகப்பொதுமறை என்றழைக்கப்படும் தகுதிப்பாட்டினைத் தமிழர்  மறையான  திருக்குறள்   அனைத்துநாட்டு நிலையில்  பெறும் என்பது உறுதி.
 தென்குமரியில் நடைபெறவிருக்கும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு தொடர்பான  அறிவுரைக் கூட்டம் ஆவணி 21, 2047 / 06-09-2016 (செவ்வாய்) அன்று நாகர்கோவிலிலுள்ள விசயதா  உறைவகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த  60 க்கும்   மேற்பட்ட அறிஞர்களும், ஆர்வலர்களும் கலந்து  கொண்டனர்.  மொரிசியசு பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின்  கலந்துரையாடல்களில் வரலாற்று அறிஞர் முனைவர் பத்மநாபன், சென்னை ஆசியவியல் நிறுவன இயக்குனர் முனைவர்  சான் சாமுவேல், சாமித் தோப்பு பால பிரசாபதி அடிகள்,  இசுகாட்டு கிறித்தவக்  கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர்  சேம்சு தானியல், வரலாற்று அறிஞர் முனைவர் தி.வ. செல்வம் போன்ற பலர் பங்கேற்றனர்.
  அன்று காலை  இசுகாட்டு கிறித்தவக் கல்லூரியின் கவிமணி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவினைப்  பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தொடங்கி  வைக்க  முனைவர் .  சான் சாமுவேல் சிறப்புரையாற்றினார்.  கல்லூரி  முதல்வர்   முனைவர் எட்வர்டு  ஞானதாசு   தலைமை  தாங்கினார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக