தலைப்பு, ஆரியச்சூழ்ச்சி, பெரியார்வழி, முத்துச்செல்வன் ; thalaippu_aariyachuuzhchi_muthuselvan

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

 1/9

  சாதிப்பிரிவு கூடாது என்பதுதான் நம் எண்ணம். இருப்பினும் பிராமணீயம் செல்வாக்குடன் திகழ்ந்து சமற்கிருதத்திணிப்பில் தொடர்ந்து ஈடுபடுகையில் நாம் அமைதி காத்துப் பயனில்லை. இந்த நேரத்தில் ஆரியச் சூழ்ச்சி குறித்துப் பெரியார் எச்சரித்த சிலவும் தொடர்பான சில கருத்துகளும் நினைவிற்கு வருகின்றன. அவற்றை இங்கே பகிர்கின்றேன்.
   தந்தை பெரியார், ‘சமசுகிருதம் ஏன்‘ என்னும் தலைப்பில்(15–02–1960) விடுதலையில் பின்வருமாறு எச்சரித்துள்ளார்.
  “இன்று இந்த நாட்டில் நடைபெறும் ஆட்சியானது, ‘சனநாயகக் குடியரசு’ என்னும் போலிப் பெயரைக் கொண்டதாயினும், உண்மையாக இது பார்ப்பன நாயகம் என்பதையும் பார்ப்பனர்களின் நலத்தைப் பாதுகாக்கிற தன்மையில் அவர்களால் நடைபெற்று வருவதாகும் என்பதையும் நான் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறேன். இன்னும் அதைத்தான் செய்து கொண்டு வருகிறேன். இந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் என்கிற யாவும் ‘இந்த அரசாங்கத்தால் நமக்கு ஏதாவது பங்கு கிடைக்கிறதா? நாமும் பொறுக்கித் தின்று வாழ்வதற்கு வகை கிடைக்காதா?” என்கின்ற தன்மையில்தான் – அதனை ஒழிக்கப் போட்டி போடுவதைப் போல நடித்து மக்களிடம் வாக்கு வாங்கிக் கூட்டுக் கொள்ளைப் பங்கு பெறத் துடித்துக்கொண்டும் இருக்கின்றன.
  அரசாங்கத்தினரும் இவர்களுக்கும் பங்கு கிடைக்கவே பல ஏற்பாடுகள் செய்து வைத்து ஆசை காட்டுகிறார்கள். ஆகவே, அவர்களால் (இதில் பங்கு பெறுபவர்களால்) இதைப் ‘பார்ப்பன நாயகம்’ என்பதை ஒருநாளும் ஒப்புக்கொண்டதாகக் காட்டிக்கொள்ள முடியாது.”
  1960 இல் தந்தை பெரியார் கூறிய இந்தக் கூற்றை அப்படியே இன்றைய அரசியலுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். அன்றைய ஆட்சி பேராயக்கட்சி(காங்கிரசு) ஆட்சி. இன்று ஆர்.எசு.எசு. இயக்கும் பா.ச.க. என்னும் இந்துத்துவச் சங்கப் பரிவார வெறியிய ஆட்சி! இன்றைய ஆட்சியினரின் பாசிசப் போக்கிற்குத் துணை போகின்றவர்கள், தந்தை பெரியார் கூறியவாறு, ‘இந்த அரசாங்கத்தால் நமக்கு ஏதாவது பங்கு கிடைக்கிறதா?  நாமும் பொறுக்கித் தின்று வாழ்வதற்கு வகை கிடைக்காதா?” என்று ஏங்குபவர்களே என்பதில் என்ன  ஐயம் இருக்கவியலும்?  இன்று நடைபெறுவது மக்களாட்சி (சனநாயகம்) என்னும் பிராமணீய நாயகம் என்னும் பெயரில் இந்துத்துவ முகமூடியுடன் நடைபெறும் ‘பிராமணீய நாயகம்’ அல்லாமல் வேறு என்ன?  ஐயா சொல்லுவது போலத் ”தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளியில் சொன்னால் – “வயிறு கழுவுவது,’, காலட்சேபம் நடத்துவது’, ‘கொள்ளைப்பணம் சேர்ப்பது’, பதவி பெறுவது – பாதிக்கப்படுமே என்று கருதி அஞ்சி, பயந்து ஒடுங்கிப், பார்ப்பான் பாடுகிற – ‘சனநாயகச் சங்கீதக் கச்சேரி’க்கு இவர்கள் பக்க மேளம் வாசிப்பவர்களாக இருக்கிறார்கள்” (அதே கட்டுரையின் பகுதி) என்பதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?
  சங்கப் பரிவாரத்தினரின் ‘பிராமணீய நாயகம்’ என்பது ‘இந்துத்துவ நாயகம்’ ஆகும். ‘ஒரே நாடு’(பாரத்(து) வருச), ’ஒரே பண்பாடு’ (இந்துவிய வேதப் பண்பாடு), ’ஒரே மொழி ’ (சமற்கிருதம்). இந்த அடிப்படை வாதத்தை ஏற்றுக் கொள்ளாதார் சிலரும் ஐயா சொல்லிய காரணங்களுக்காவே ஒத்து ஊதுகின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆரிய நாகரிகமும் ஆரிய மொழியான சமற்கிருதமுமே உலக உய்விற்கு வழி காட்டுவன என்னும் பொய்யான வாதத்தை மெய்போலக் கற்பித்து மக்கள் மனத்தைத் திரிக்கும் கயமைப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த மண்ணில் இந்துவல்லாப் பிற சமயங்களை ஒழித்து விடலாம்  என்றும் சமற்கிருத வழிப்பட்ட இந்தி அல்லாத பிறமொழிகளை ஒடுக்கி விடலாம் என்றும் மனப்பால் குடிக்கின்றனர். இது இந்தியாவில் மொழிவழித் தேசியத் தன்மைகளைப் புறந்தள்ளி, சங்கப் பரிவாரத்தினர் திணிக்க நினைக்கும் ‘இந்துத்தேசியம்’ ஆகும்.
  `இந்த இடத்தில் திராவிடர் கழகத்தின் தன்மையை ஐயா விளக்கும் பாங்கினைப் பாருங்கள். “இது பகுத்தறிவைப் பயன்படுத்துகிற அறிவாளிகளுக்கு விளங்காமற் போகாது. இதை எவன் புரிந்து கொள்கிறானோ அவனால்தான் திராவிடர் கழகத்தின் மகத்தான தொண்டின்  ஆற்றல், மகத்துவம். பெருமை என்னவென்று உணரமுடியும்.” (மேற்கண்ட கட்டுரை)
(தொடரும்)
பெங்களூருமுத்துச்செல்வன், மீனாட்சிசுந்தரம்; bangaluru-muthuselvan-muthuchelvan-meenakshisundaram-meenatchisundaram
பெங்களூரு முத்துச்செல்வன்