எழுக தமிழ்21 ; ezhuga-thamizh21

எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்!
  வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றக் கோரியும்,  தீவிரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர்.
  ‘தமிழ் மக்கள் பேரவை’யின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள்,
 வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரணத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் ஏற்கும் நிகராட்சி (சம ஆட்சி) முறையான தீர்வு வேண்டுமென்றும்,
தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தையும் தமிழர் தாயகத்தின் அடையாளத்தையும் சிதைத்துச் சீரழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பௌத்த- சிங்களப் பேரினத்தன்மையான நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டுமென்றும்,
காணாமல் போனோர் சிக்கல், அரசியல் கைதிகள் சிக்கல் ஆகியவற்றுக்குத் தீர்வு வேண்டும் என்றும்,
மக்களின் தலைமுறைவழிக்(பூர்வீக) குடியிருப்புகளில் சட்டப்புறம்பாக நிலைகொண்டுள்ள சிங்களப் படையினர் வெளியேற வேண்டுமென்றும்,
மீள்குடியேற்றம் பன்னாட்டுச் சட்டங்களுக்கு ஏற்பத் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்றும்,
இன அழிப்பு எதிர்காலத்தில் இடம்பெறாதபடி பக்கச்சார்பற்ற பன்னாட்டு உசாவல் (விசாரணை) மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளனர்.
  2009ஆம் ஆண்டு(இனப்படுகொலைப்) போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர்த் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கிளர்ந்தெழுந்து தமது சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தியிருக்கின்றனர்.
  இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேசுவரன்,சிங்கள மக்கள் எதிர்க்கக்கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசும் சிதைக்க முயலக்கூடாது! அரசியல் சட்டங்களினால் பாதிப்படையப் போகும் மக்கள் நாங்களேயாவோம். எனவே, எங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவே இந்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியை நடத்தினோம். இந்தப் பேரணி யாருக்கும் எதிரானது இல்லை. ஆட்சியில் உள்ள எவரையும் எதிர்த்து நடத்தப்படும் பேரணி இது அன்று. நாம் மத்திய அரசை எதிர்த்து இதனை நடத்தவில்லை. சிங்கள உடன் பிறப்புகளையோ, பௌத்த சங்கத்தினரையோ எதிர்த்து நாம் இதனை நடத்தவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சியைக் கூட நாம் எதிர்த்து இதனை நடத்தவில்லை. நாம் எமது தமிழ் பேசும் மக்களின் அக்கறைகளை, கவலைகளை ஆகக்கூடிய எமது கண்டனங்களை வெளிப்படுத்தி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நடத்தியுள்ளோம்” என்று சுட்டிக் காட்டியிருந்தார்.
  “மனக்கசப்புகளை உலகறிய உரத்துக் கூறவே நாம் இங்கு கூடியுள்ளோம். திடீரென்று அரசியல் சட்டம் ஒன்றைத் தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம். எமது எதிர்பார்ப்புகளை வரப்போகும் அரசியல் சட்டத்தினால் நிறைவேற்ற முடியுமென நாம் எதிர்பார்க்கவில்லை” என்றும் முதலமைச்சர் விக்கினேசுவரன் தெரிவித்திருக்கின்றார்.
  இதே போல், இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களான தருமலிங்கம் சித்தார்த்தன், சுரேசு பிரேமச்சந்திரன், கசேந்திரகுமார் பொன்னம்பலம் முதலானோரும் பேரணி குறித்த தமது கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
  தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட இந்த ‘எழுக தமிழ்’ப் பேரணிக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளும் ஆதரவு நல்கியிருந்தன.
  தற்பொழுதைய நிலையில் இவ்வாறான எழுச்சிப் பேரணி தேவையா என்ற கேள்வியும் ஒரு சாராரால் எழுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் எழுச்சிப் பேரணி நடந்தேறியிருக்கின்றது. இதன் மூலம் அரசுக்கும் பன்னாட்டுக் குமுகத்திற்கும் (சமூகத்திற்கும்) வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சிக்கல்கள், ஐயப்பாடுகள் (சந்தேகங்கள்) எடுத்து இயம்பப்பட்டுள்ளன.
  தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), சுரேசு பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (தெலோ) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், பேரணியில் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த முதன்மையாளர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை.
  இந்தப் பேரணிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைமை ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்படுகின்றது.
தற்பொழுதைய நிலையில் தமிழரசுக் கட்சியின் இந்த முடிவு சரியானதென்றே கருத வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிசேனா தலைமையிலான தற்பொழுதைய அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அரசியல் தீர்வைக் காண்பதற்கும் தற்பொழுது நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அரசியல் சட்டம் இயற்றும் அவையாக மாற்றி அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதற்கான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் கருதப்படுகின்றது. அவ்வாறான அரசியல் சட்டமன்றத்தின் வழிநடத்தல் குழுவானது தற்பொழுது அதிகாரப் பகிர்வு குறித்தும் ஆராயத் தொடங்கியுள்ளதாகவும் சிலரால் நம்பப்படுகின்றது.
  இவ்வாண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அக்கறை காட்டி வருகின்றார். இதற்கான முன்முயற்சிகளில் அரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஈடுபட்டு வருகின்றது.
  இதே போல், தமிழ் மக்களின் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான அழுத்தங்களையும், கூட்டமைப்பின் தலைமை அரசுக்கு வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அரசு முயற்சி எடுத்து வருவதாகவே வைத்துக் கொண்டாலும் அது மந்தமாகவே நடைபெற்று வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
  தமிழ் மக்களின் காணிகளைத் திரும்ப ஒப்படைப்பதாக இருக்கட்டும், அல்லது மீள் குடியேற்றமாகட்டும் – மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. காணாமல் போனோர் சிக்கல், அரசியல் கைதிகள் சிக்கல் ஆகியவற்றுக்கும் உரிய தீர்வுகள் காண முயற்சிக்கப்படுகின்ற பொழுதிலும் அதிலும் வேகம் போதாமல் உள்ளது.
  இருந்தாலும் அரசுடன் ஒத்துழைத்து, தமிழ் மக்களின் அன்றாடச் சிக்கல்களுக்கும் அடிப்படைச் சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டுமென்னும் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைமை முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றது.
  இவ்வாறானதொரு நிலையில் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அரசுக்கு எதிராகப் பேரணியை நடத்துவது என்பது இருதரப்பிற்குமிடையில் முரண்பாடுகளை மிகுதியாக்கவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. இதன் மூலம் சிக்கலுக்கான தீர்வு என்பது இயலாத ஒன்றாக ஆகிவிடும். இதனால்தான் தமிழரசுக் கட்சியின் தலைமை இந்த ‘எழுக தமிழ்’ பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
  தற்பொழுதைய நிலையில் தமிழரசுக் கட்சியின் இந்த முடிவினைத் தவறென்று கூற முடியாது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக எவ்வாறு தீர்வைப் பெறுவது என்பதைத் தமிழ் மக்களின் தலைமை சிந்திக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது. இதனை உணர்ந்தே தமிழரசுக் கட்சியின் தலைமையானது அரசுடன் ஒத்துழைத்து, தீர்வினைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது.
  ஆனாலும், இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.
  ஏனெனில், தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் அவர்களை ஏமாற்றக்கூடிய நிலை இல்லை என்பதைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசுக்கு எடுத்துக் கூறக்கூடிய நிலையை இந்த ‘எழுக தமிழ்’ப் பேரணி ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும், தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாடும் தற்பொழுதைய நிலையில் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
நன்றி: தமிழ்விண்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்