தலைப்பு, ஆரியச்சூழ்ச்சி, பெரியார்வழி, முத்துச்செல்வன் ; thalaippu_aariyachuuzhchi_muthuselvan

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

2/9

  தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.
  இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம்.
  “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’ என்கிற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்த நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாசை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் – தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவற்றிற்கு அதில் சொன்னால்தான் புரியும் – பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிலையான பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
  ஆரியரின் சூழ்ச்சிபற்றிக் கட்சி சார்பில்லா அறிஞர் பாவாணர் கூறுவதும் பெரியார் கருத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
    மொழி ஞாயிறு பாவாணர் தம் ‘வடமொழி வரலாறு’ நூலுக்கு வரைந்த  முன்னுரையில், “வேதப் பிராமணர், தம் வெண்ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் ஆரவார வொலியையும், தமிழ, திராவிடரின் பழங்குடிப் பேதைமையையும் கொடை மடத்தையும் மதப் பித்தையும், அளவிறந்து பயன்படுத்திக் கொண்டு, தம்மை நிலத் தேவராகவும் தம் முன்னோர் மொழியையும் தம் இலக்கியச் செயற்கை மொழியையும் தேவமொழியாகவும் காட்டி, அவற்றைப் பழங்குடி மக்கள் நம்புமாறு செய்துவிட்டனர். அதனால் தமிழ் கோயில்வழிபாட்டிற்கும் இருவகைச் சடங்குகட்கும் ஏற்காதென்று தள்ளப்பட்டு, சமற்கிருதமே அவ்வினைகட்குப் பிராமணரால் ஆளப்பெற்று வருகின்றது.” எனக் காட்டுகிறார்.
  தமிழ் நெறியையே ஆரியவழிப்பட்டதாகத் திரிக்கும் ஆரியக் கயமைக்கு ஒரு சான்று வருமாறு:
  சங்கப் பரிவாரத்தினரால் இன்றளவும் தங்கள் குருக்களின் குரு என்று போற்றப்படுபவர் கோல்வாக்கர். திருக்குறளைப்பற்றிக் கருத்துக் கூறவந்த கோல்வாக்கர், “தற்போது தமிழைப்பற்றி நிறைய பேசப்படுகிறது; சில தமிழ்ப் பற்றாளர்கள் தமிழைத் தனித்த மொழியாகவும் தங்கள் பண்பாட்டைத் தனித்த பண்பாடாகவும்  காட்ட முற்படுகின்றனர். அவர்கள் வேதங்களை எதிர்க்கிறார்கள். திருக்குறளைத் தங்கள் மறை என்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறள் சிறந்த நூல்தான் என்பதில் ஐயமில்லை. திருவள்ளுவர் மிகச் சிறந்த அறிஞர்தாம். அவரை நாம் “ப்ரதா –  ஃச்மார்ணம்” என்று மதிக்கிறோம். …..  ஆனால் திருக்குறள் கூறுவது என்ன? இந்துத் தத்துவத்தின் அடிப்படையான தரும, அருத்த காம மோட்சம் (அறம், பொருள். காமம். வீடு) ஆகியவற்றையே வலியுறுத்துகிறது. என்ன வேறுபாடென்றால் ‘வீடு; என்பதை முதலில் வைத்துள்ளார் என்பதே. எந்த வழிபாட்டு முறையையும் கடவுளையும் முன்வைக்காமல் வீட்டுப்பேற்றை வலியுறுத்தியுள்ளார். மகா பாரதம் காட்டும் இந்துக்களின் சமூக வாழ்க்கை முறையைத்தான் வள்ளுவரும் காட்டியுள்ளர். இந்துக்களைத் தவிர வெறெவரிடத்தும் இந்தச் சமூக வாழ்க்கை முறையைக் காண இயலாது. எனவே, திருக்குறள் இந்து எண்ணங்களை வலியுறுத்த இந்துக்களின் மொழி ஒன்றில் ஓர் இந்துவால் படைக்கப்பட்டதென்பதே உண்மை.
(தொடரும்)
பெங்களூருமுத்துச்செல்வன், மீனாட்சிசுந்தரம்; bangaluru-muthuselvan-muthuchelvan-meenakshisundaram-meenatchisundaram
– பெங்களூரு முத்துச்செல்வன்