எழுக தமிழ் 15 ; ezhuga-thamizh15

எழுந்து நிற்கிறது எழுக தமிழ்!


  தமிழரின் தாகம் தணிவதில்லை. அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சூழ்நிலைகளில் அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாகக் கடந்த புரட்டாசி 08, 2047 / 24.9.2016 அன்று நடைபெற்ற ‘எழுக தமிழ்’ப் பேரணி அமைந்திருந்தது. தற்காப்பு முறையில், உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் அறப் போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது இப்பேரணி. அதுவும், இப்பொழுதைய கால ஓட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான தொடக்கக் கட்டமைப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.
  தான் தொடங்கப்பட்ட நோக்கத்தைத் தமிழ் மக்கள் பேரவை, பற்றிப் பிடித்து ஓட்டமெடுக்கத் தொடங்கியுள்ள புள்ளியாகவே இந்த ‘எழுக தமிழ்’ப் பேரணியை நோக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்களின் கட்சியை முன்னிலைப்படுத்தி இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், கட்சிகளையும் பொது அமைப்புகளையும் சேர்த்துக் கொண்டு, பொதுவான ஒரு நோக்கத்தோடு மக்களிடம் சென்றமையாலேயே எழுக தமிழ்’ வெற்றி பெற்றிருக்கிறது.
  இந்தப் பேரணி தொடர்பிலான உரையாடல்கள், தமிழர் தரப்புக்களின் பல்வேறு மட்டங்களிலும், எதிர்பார்த்ததை விட மிகுதியாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, தமது இருப்புக்குக் கண்டம்(ஆபத்து) என்று தமிழரசுக் கட்சி கருதியிருந்தது.
  இதனையடுத்து, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரசுக் கட்சியின் முதன்மையாளராக அடையாளப்படுத்தப்படுபவரும், அக்கட்சியின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதன்மைத் தலைவரும் ஏனையவர்களும் இப்பேரணியை முடக்குவதற்கு முழு அளவில் பின்னணியில் வேலை செய்திருந்தார்கள். ‘எழுக தமிழ்’ப் பேரணியானது, நல்லூர் ஆலய முன்றலிலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்தும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேசுவரனால் தொடங்கி வைக்கப்பட்டு, யாழ். முற்றவெளியைச் சென்றடைந்திருந்த நிலையில், பேரணிக்கு முதல் நாள், தாமும் கூட்டுப் பேரணி நடத்துவதாகச் சுவரொட்டிகளை ஒட்டி, எழுக தமிழென்று திரையரங்குக்கு முன்னால் கூட்டத்தைக் கூட்டிய வீணைக் கட்சியின் தலைமை, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நின்றிருந்த நிலையில், ‘எழுக தமிழ்’ப் பேரணியானது, அஞ்சலகத்துக்கு முன்னால் இருந்த சுற்றுவட்டத்தால் திசை திருப்பப்பட்டு, கோட்டையைச் சுற்றிப் பொதுக்கூட்டம் இடம்பெற்ற முற்றவெளிக்குச் சென்றதால், தாடிக்கார ஐயாவும் மூக்குடைபட்டிருந்தார்.
  பேரணியில் முன்வைக்கப்பட்டிருந்த அறிவிப்புகள் பல ஏற்கெனவே கூறப்பட்டிருந்தாலும், 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக் கொள்ளப்பட்ட பின்னர், மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி முதல் தடவையாகக் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள் என்று கண்டிப்பாகப் பல இடங்களிலும் உணரப்பட்டிருக்கும்.
 அதுவும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரே, எதிர்த்தரப்பின் நடவடிக்கைகளுக்குத், திட்டமிட்ட பின்வாங்கல்களையே மேற்கொண்டிருந்த தமிழ் மக்கள், ‘எழுக தமிழ்’ என இப்படி ஒரு போராட்டத்தின் மூலம் முன்னோக்கிக் காலை எடுத்து வைத்துள்ள நிலையில், இதற்குக் கண்டிப்பாக ஒரு நல்ல பின்விளைவு இருக்கும். தாமே முன்னெடுப்புகளை மேற்கொண்ட தரப்புகள், இப்பொழுது எதிர்வினைகளை ஆற்ற வேண்டிய இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால், ‘எழுக தமிழி’ன் வெற்றியைத் தமிழ் மக்கள் பேரவையிலுள்ளவர்கள் தமது தனிப்பட்ட அரசியலுக்காகப் பயன்படுத்துவார்களானால், இதனால் ஏற்படும் எழுச்சி முற்றவெளிக்குள்ளேயே மண்ணாகிவிடும். எனவே, தமிழ் மக்கள் பேரவைக்கு ‘எழுக தமிழி’ன் மூலம் கிடைத்திருக்கும் ஆணையை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். முன்னைய காலங்களில், எந்தத் தரப்பை நோக்கிக் கைகாட்டப்படுகின்றதோ அத்தரப்புக்கே மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆகவே, கட்சிகளைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை யார் முன்னெடுத்தார்களோ, அவர்களின் பின்னாலேயே மக்கள் அணி திரண்டிருந்தார்கள்.
  இப்பொழுது, தற்பொழுதைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு போராட்ட வடிவம், அற வழியிலான மக்கள் போராட்ட வடிவமாக மாறியிருக்கிறது. அதுவும் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த ஈகையர் திலீபன் உண்ணாநிலையிருந்த நினைவு நாளை ஒட்டி இப்பேரணி நடைபெற்று வெற்றியடைந்துள்ளது. எனவே, கட்சிகளைத் தாண்டி, மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை யார் முன்னெடுக்கிறார்களோ, அவர்களின் பின்னால் தற்பொழுதும் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இதைச் சரியாகப் பயன்படுத்தி, அடுத்த கட்டத்தை ஒப்படைப்பு உணர்வுடன் (அர்ப்பணிப்புடன்) தமிழ் மக்கள் பேரவை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
 அடுத்து, ‘எழுக தமிழ்’ வெற்றி பெற்றால், தென் பகுதிகளில் இது திகைப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகச் சிக்கல் தோன்றும் என்றும் கூறி, எனவே, இப்பேரணி நடத்தப்பட்ட இச்சூழல் சரியானதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. நடைமுறை அளவில் பார்க்கும்பொழுது இஃது ஓரளவுக்குச் சரியானதும் கூட.
  எனினும், உரிமைகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டமானது அமைதிப்படுத்திக் கொள்ளப்பட்ட பின்னர், தற்பொழுதும் உரிமைகளுக்கான தாகமானது அப்படியே இருக்கையில், தொடர்ந்தும் உறங்கு நிலையில் இருக்காது, அறவழியிலான மக்கள் போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ளத்தான் வேண்டும். அதற்கான தொடக்கப் புள்ளியே ‘எழுக தமிழ்’.
  தவிர, பேரணியில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் கூறியது போன்று, மத்திய அரசையோ, சிங்கள உடன் பிறப்புக்களையோ, பௌத்தச் சங்கத்தினரையோ அல்லது தமிழரசுக் கட்சியையோ எதிர்த்து இது நடாத்தப்படவில்லை. நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதாலோ, மாகாண அவைகளுக்குத் தெரியப்படுத்துவதாலோ வென்றெடுக்க முடியாத தமிழ் மக்களின் உரிமைகளை, அக்கறைகளை, கவலைகளை ஆகக்கூடிய கண்டனங்களை வெளிப்படுத்தி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே ‘எழுக தமிழ்’ப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது.
  இது தவிர, முதலமைச்சர் குறிப்பிட்டிருந்ததுபோலத், தமிழ் பேசும் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில், இன்னும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் எழுதிக் கொள்ளப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலிருந்து வருவோருக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. இவை போன்ற நடைமுறைச் சிக்கல்களை வெளிப்படுத்தும் இடமாகவும் இப்பேரணி அமைந்திருந்தது.
  மேலும், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சிங்களமயமாக்கலை நிறுத்தித் தமிழின அடையாளத்தைக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தவிர, வடக்கு, கிழக்கிலிருந்து சிங்களப் படையினரை வெளியேற்றுமாறும், தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் கூறப்பட்டிருந்ததோடு, இறுதிக் கட்ட (இனப்படுகொலைப்) போரின்பொழுது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்காக, வெளிநாட்டு நீதியரசர்கள் அற்ற உள்ளகப் பொறிமுறை மட்டுமே தற்பொழுது முன்வைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாடான பன்னாட்டு உசாவலை (விசாரணையை) ‘எழுக தமிழ்’ வற்புறுத்தியிருக்கிறது.
  மேற்குறிப்பிட்டவை தவிர, வன்கொடுமை(பயங்கரவாத)த் தடுப்புச் சட்டம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்றும், இச்சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் நெறிப்பாடு இன்றி (நிபந்தனையின்றி) உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்றும் இப்பேரணி கோரியதுடன் கடத்தப்பட்ட, அடைக்கலமடைந்த பின்னர் காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழர் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது எனக் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளது.
  இவை தவிர, தெற்குப் பகுதி மீனவர்கள், வடக்கு – கிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மட்டுமின்றி, நிலையான தங்குமிடங்களை அத்துமீறி அமைப்பதனால், தமது சொந்த மீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படும் நிலை உருவாவதாகவும் இவ்வாறான செயல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ‘எழுக தமிழ்’ அரசை வலியுறுத்துவதுடன், இந்திய மீனவர்களின் சட்டப்புறம்பான மீன்பிடி முறைகளால் தமிழ் மீனவர்களின் கடல்வளங்கள் சூறையாடப்படுவதையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
  இவை போக, தீவிரமான படையினர் கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருக்கின்ற வடக்கு, கிழக்கில் பெருமளவான போதைப்பொருட்கள் பரவுவதுடன், மதுப் பழக்கமும் ஊக்கப்படுத்தப்படுவதாகவும், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு அழிக்கும் இந்நடவடிக்கைகளை நிறுத்தவும் கட்டுப்படுத்தவுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘எழுக தமிழ்’ வற்புறுத்தியுள்ளது.
  இதே வேளை, புதிய அரசியலைமைப்பானது, தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என ‘எழுக தமிழ்’ கூறியுள்ளதோடு, ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் இயலாது என்றும் தெரிவித்துள்ளது. தமிழர்களை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு நாடாக, அவர்களது தன்னாட்சி உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட தன்னாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே தேசிய இனச் சிக்கலுக்கான தீர்வு அடையப்படும் எனவும் உரைத்துள்ளது.
  மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும், தமிழ்த் தேசியத்தால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளே. இவற்றினையே மீளவும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். மக்களும் மக்கள் உறுப்பினர்களும் இணைந்து கோரிக்கைகளை முன்வைக்கும்பொழுது கிடைக்கும் உச்சஅளவிலான வீச்சு இப்பேரணிக்குக் கிடைத்திருக்கிறது.  இது, தமிழரசுக் கட்சிக்குக் கண்டிப்பாகப் பெரியதோர்  அடியே ஆகும். ‘எழுக தமிழி’ல் திரண்டிருந்தவர்களில்  பெரும்பாலோனோர் தமிழரசுக் கட்சிக்குத் தேர்தலில் வாக்களித்தவர்களே ஆவர். ஆக, தேர்தல் கால அரசியலையும் தாண்டி, தம்மை எதிரொலிக்கின்ற அரசியல் நோக்கத்துக்காக, கட்சியையும் தாண்டி மக்கள் ஒன்றிணைவார்கள் என்கிற நடைமுறை உண்மையை உணர வைத்ததுடன், தமது வாக்கு வாங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ, தமது பதவிகளுக்கு ஆப்பு வைக்கப்படுமோ என்றும் அவர்களுக்கு ஐயம் (சந்தேகம்) ஏற்பட்டிருக்கும். எனவே, அதிகாரங்கள் குவிந்துள்ளது காரணமாகத் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் தமிழரசுக் கட்சிக்கான பாடமாகவும் இப்பேரணி இருக்கும் என்பதோடு, தாம் செய்யும் பிழைகள் கணக்கில் எடுக்கப்படாது, தம்மிடையே பேசித் தீர்மானித்து விட்டு மக்களிடையே திணிக்கலாம் என்ற அவர்களின் செயல்பாடுகள் இனி நிறுத்தப்படும். ஆகையால், இனி வரும் காலங்களில், மக்களுடன் தமிழரசுக் கட்சி நெருங்கிச் செயல்பட வேண்டும்; மக்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு செயலாற்ற வேண்டும் என்றவாறான அழுத்தங்களைத் தமிழரசுக் கட்சிக்கு ‘எழுக தமிழ்’ப் பேரணி வழங்கியிருக்கின்றது. இவற்றைப் புரிந்து கொள்ள மறுத்து, தேர்தல் கால அரசியலை மட்டுமே முன்னெடுத்தால், உடனடியாக இல்லாவிடினும், படிப்படியாக மக்களால் புறக்கணிக்கப்பட்டு தூக்கியெறியப்படும் சூழல் வரலாம்.
  ஆக மொத்தத்தில், ‘எழுக தமிழ்’ அனைவரையும் எழ வைத்திருக்கிறது. எழுந்து கொண்டவர்கள் முன்னே பயணிக்கலாம். எழ மறுப்பவர்கள் ஏறி மிதிக்கப்படலாம்!
– முருகவேல் சண்முகன்
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்