செவ்வாய், 5 ஜனவரி, 2016

இசை நாட்டியத்துடன் திருக்குறள் கற்பிப்பு

இசை,நாட்டியம் மூலம் திருக்குறள் பயிற்சி03 :thirukkural_naattiyapayirchi03

பள்ளி மாணவர்களுக்கு நடனமாடி இசையோடு

திருக்குறளைக் கற்றுக் கொடுப்போம்!

 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லிக் கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயிற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது.
  பயிற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேசுவரி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை   கலை-அறிவியல்   கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கிப் பேசுகையில், என் அன்னை தொடக்கப்பள்ளி ஆசிரியை. அவரிடம்தான் நான் முதலில் திருக்குறள் கற்றேன். அவர் சொல்லிக் கொடுத்த இராகத்துடன் இங்கே நான் திருக்குறளைப் பாடிக் காண்பிக்கின்றேன். அகரம்தான் தமிழுக்கு சிகரம் எனவும், இந்தியாவில் பிறந்ததால்தான் திருக்குறளைப் படிக்கும் பாக்கியம் பெற்றோம் எனவும் கூறினார். சீன நாட்டினர், “ஒரு திருக்குறளை முழுமையாகப் பொருள் புரிந்து படித்தால் பல கோடிகளைப் பணமாகச் சம்பாதித்து விடுவோம். அவ்வளவு பொருள் அதனில் பொதிந்துள்ளது” எனக் கூறுகின்றனர். 1330 திருக்குறளை நமது தாய்மொழியில் வைத்துள்ள நாம் அதனைச் சிறுவயதிலிருந்தே படிக்க வேண்டும் எனக் கூறினார். அகர முதல, கற்றதனால் என்ற இரு குறளையும் இசையோடு பாடிக் காண்பித்தார்.
நடனத்துடன் திருக்குறள்    
  இசையோடு சூத்திரத்தின் மூலமாகத் திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் திருக்குறளை நாட்டியப் பாவத்துடன் விளக்கினார். மாணவர்கள் எந்தக் கலையையும் பெரிதாக நினைத்து அறிந்து செயல்பட வேண்டும். திருக்குறளில் விளையாட்டு விளையாடப் போகிறோம் என்றவுடன் மாணவர்கள் உற்சாகமாகக் கவனித்தனர். முத்தமிழ் எவை? இயற்றமிழ், இசைத்தமிழ். நாடகத்தமிழ் இவற்றைப் பற்றி மாணவர்களிடையே விளக்கம் கேட்டே அறியப் வைத்தார். எண் வரக்கூடிய திருக்குறளைச் சொல்லச் சொல்லி அந்தக்குறளை நடித்துக் காட்டினார். எட்டு, ஒன்பது தவிர மற்ற எண்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறள் சொல்லி அதற்கு நாட்டியம் ஆடிக்காட்டினார். மேலும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்றவற்றை விளையாட்டாகக் கேள்விகள் கேட்டு அவற்றிற்குரிய குறள்களை மாணவர்களைச் சொல்லவைத்து அவற்றுக்கு ஆடிகாட்டினார். அகர, எண்ணென்ப, ஒருமையுள், கற்க, சொல்லுக, நன்றி, துப்பார்க்கு, நன்றிக்கு வித்தாகும், ஒருமையும், உடுக்கை போன்ற பல குறள்களுக்கு நடனம் ஆடிக் காட்டி மாணவர்களை நடன அசைவின் மூலமாகவே குறள் சொல்லத் துண்டினார். ‘எப்பொருள்’ எனத் தொடங்கும் குறளுக்குக் கதைகூறி நடனம் ஆடிப் பல பாவனைகளைச் செய்து இசையோடு பாடமுடியும் என்பதைச் செய்து காட்டினார்.
மாணவர்கள் நடனமாடுதல்
  இசை, நடனத்தோடு கற்பித்தால், திருக்குறளை எளிதாக மனத்தில் பதிய வைக்கலாம் என்பதை பரமேசுவரி, சொர்ணம்பிகா, பவனா, புனிதா, இராசேசுவரி, நித்யகல்யாணி ஆகிய மாணவிகளுக்கு ‘அகர முதல’ எனத்தொடங்கும் குறளை நடனம் ஆடி, இசையோடு கற்றுக் கொடுத்து அவர்களையும் ஆட வைத்தார்.
  திருக்குறளை எவ்வாறு எளிதாகப் படிக்கலாம் என்பதை ‘அ க ம வே இ பொ த அ கோ பி’ என்ற சூத்திரத்தின் மூலமாக முதல் அதிகாரத்தில் உள்ள பத்து குறளுக்கும் முதல் எழுத்தை நினைவில் வைத்துக் கொண்டால் இதனை ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் நினைவில் வைத்துச் சொல்லலாம் எனக் கூறினார். ஒரே மாதிரியாக வரக்கூடிய இரண்டு குறள்களையும், மூன்று பாலிலும் இடம் பெறக்கூடிய ஒவ்வொரு குறளையும் நடனத்துடன் ஆடிப்பாடிக் காட்டினார்.
  திருக்குறளை நடனமாடி சொல்லிக் கொடுத்ததைக் கற்று கொண்ட மாணவர்கள் கிருட்டிணவேணி, காயத்திரி, தனலெட்சுமி, கீர்த்தியா, பவித்திரன், நடராசன், சூரியா, நவீன்குமார் ஆகியோர் மேடையில் நடனத்துடன் ஆடிக் காண்பித்தனர்.
படிப்பறிவா ? பட்டறிவா?
   பரமேசுவரி என்ற மாணவி “திருக்குறளை இவ்வளவு அழகாக நடனத்துடன் சொல்லி கொடுக்கிறிர்களே? இது படிப்பறிவா? பட்டறிவா?” எனக் கேள்வி கேட்டார். அதற்குச் சுந்தர மகாலிங்கம் குறளைப் படித்துதான் அறிந்து கொண்டேன் எனக் கூறினார். மேலும் அவர் இதுகுறித்துக் கூறுகையில், “நான் மதுரை மாவட்டம், பரவையைச் சார்ந்தவன். கரூர் மாவட்டம் மஞ்சபுளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.
  திருக்குறள் மீது ஆழந்த ஈடுபாடு கொண்டதனால் இசை, நடனம் மற்றும் பாவனைகளுடன் அவற்றைக் குழந்‌தைகள் காப்பக மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள்வரை தேடிச் சென்று இலவசச் சேவையாக இதனைச் செய்து வருகின்றேன்.(எனது பேசி எண் : 9626365252) அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் எந்தப் பாகுபாடும் காட்டாமல்   சென்று இசையோடு கற்பித்தால், திருக்குறளை எளிதாக அனைவர் மனத்திலும் பதிய வைக்கலாம் என்ற நோக்கத்தோடு இதனைச் செய்து வருகின்றேன்” என்றார்.
மாணவர்கள் உறுதி
மாணவ,மாணவியர் பயிற்சியின் நிறைவாக மேடையில்   பேசும்போது, “நாங்களும் இதே போன்று திருக்குறளைக் கற்று நடனமாடி இசையோடு பள்ளிகளுக்குச் சென்று கற்றுக் கொடுப்போம்” என உறுதியோடு   கூறினர்.
 நிகழ்ச்சியின் நிறைவாக சௌமியா என்ற மாணவி நன்றி கூறினார். பயிற்சி ஆசிரியை முத்து மீனாள் தொகுத்து வழங்கினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக