முத்திரை - விக்கிபீடியா : muthirai-Wikipedia-logo முத்திரை - கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்  : muthirai-Scret_logo

விக்கிபீடியர்களுக்கான பயிற்சி

கடந்த ஒரு மாதமாகத், தமிழ்நாட்டின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (SCERT) மூலமாகத் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தகவல்,  தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 ஆசிரியர்கள் என்று மொத்தம் 1500 ஆசிரியர்கள் மூன்று நாட்களுக்கு இப்பயிற்சி பெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நாள் முழுதும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆசிரியர்கள் பங்களிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
  மா.க.ஆ.ப.நி.(SCERT) நியமித்த பயிற்றுநர்களுடன், சேலத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் பார்வதி அவர்களின் ஒருங்கிணைப்பில் 9 விக்கிப்பீடியர்கள் மாநிலம் முழுதும் பயணம் மேற்கொண்டு இப்பயிற்சிகளை அளித்தனர். இதன் காரணமாக,  ஒவ்வொரு மாதமும்  ஏறத்தாழ 300 பேர் அளவில் பங்கேற்று வரும் தமிழ் விக்கிப்பீடியா 1100 பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையைத் தொட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் (நவம்பர் மாதப் புள்ளிவிவரங்கள் https://ta.wikipedia.org/s/4t60). இது ஆசிய அளவிலேயே கூட கூடுதலான பங்கேற்பு ஆகும்.
கல்வியில் விக்கிப்பீடியா (https://outreach.wikimedia.org/wiki/Education) என்னும் திட்டம் 70+ உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அவை பெரும்பாலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களைக் குறித்தே நடந்து வருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு என்று சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது உலகிலேயே இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் பாடநூல்களைத் தாண்டி அறிவுத் தேடலைத் தணித்துக் கொள்வதற்கான தகவலை விக்கிப்பீடியாவில் சேர்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைப்பதற்கான வழிகளையும் ஆய்ந்து வருகிறோம். இவ்வொருங்கிணைப்புக்கு எனத் தனியே ஒரு  பகிர்பேசி (WhatsApp)  குழுமமும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகத்து மாதம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வினை அடுத்து இத்தகைய பயிற்சிக்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநருக்கும் தமிழ்நாட்டின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனத்தின் இயக்குநருக்கும் விக்கிப்பீடியர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பயிற்சிக்கான முழு ஒத்துழைப்பினை வழங்கிய மா.க.ஆ.ப.நி.(SCERT) பொறுப்பாளர்கள் உமா மகேசுவரி, ஆசிர் அவர்களுக்கும், மா.க.ஆ.ப.நி.(SCERT) சார்பாக மாநிலம் முழுதும் பயணம் செய்த பயிற்சி அளித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இரவிசங்கர் ஐயாக்கண்ணு
இரவிசங்கர் ஐயாக்கண்ணு : ravishankar_ayyaakkannu