வியாழன், 21 மே, 2015

திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்!





திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்!
பல்கலக்கழகத் தேர்வு எழுத விடவில்லை!
தமிழர் வாழும் தமிழ்நாட்டில்தான்  இந்தக் கொடுமை!
தமிழர்க்கு விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் இந்த வகை அவலங்கள் தொடரத்தான் செய்யும்!

  சென்னை, தியாகராய நகரில் (மேட்லி தெருவில் காவல் நிலையம் அருகில்) உள்ளது  சிரீ சங்கர்லால் சுந்தர்பாய் சாசன்  சமணர்(செயின்) பெண்கள் கல்லூரி. இக்கல்லூரியில் 21.02.2015 அன்று நடைபெற்ற  கருணா பன்னாட்டுக் கலைவிழா என நடைபெற்ற விழாவில்,  ஒரு மாணவி  திருவள்ளுவர் திருக்குறளைச் சமணநூல் ஒன்றில் இருந்து மொழிபெயர்த்து எழுதியுள்ளார் எனப் பேசியுள்ளார். இதைக் கேட்டதும் கல்லூரி ஆட்சிக்குழுவினரும் முதல்வர் முதலான ஆசிரியர் கூட்டமும் கைதட்டி வரவேற்பு தெரிவித்ததும் மாணவர்களும்  கைதட்டி வரவேற்றுள்ளனர். ஆனால், பிரிதிவி என்னும் ஒரு மாணவி இதகை் கேட்டதும் அதிர்ச்சியுற்றார்.
  பிரித்தி,  தன்னுடைய தாயின் ஊக்கத்தால், 4 ஆம் அகவையிலேயே 1330 திருக்குறளையும் அதற்கான கவியோகி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒப்பித்தவர். அதன்பின்னர் வெவ்வேறு திருக்குறள் மேடைகளில் பங்கேற்றுச் சிறப்பு பெற்றவர். சிறுஅகவையிலேயே நாடுகளின் தலைநகரங்கள் போன்ற பொது அறிவுத் தகவல்களையும் தெரிவித்துப் பாராட்டு பெற்றவர். எனவே, இவருக்குத் திருவள்ளுவர் உலகப் பொதுமறையாக ஆக்கித் தந்த திருக்குறளை மற்றொன்று மொழி பெயர்ப்பு நூல்  என்று  தவறாகச் சொன்னதும் உடனே மறுத்துள்ளார். ஆனால், இவரது மறுப்பைக் கல்லூரிக் குழுவினர் பொருட்படுத்தவில்லை. இவர் தகவல் தொடர்பியல் துறையின் இரண்டாமாண்டு மாணவி. கல்லூரியின் பெரும்பாலான கணிணி சார்ந்த வேலைகளையும் ஒளிப்பட வேலைகளையும் இவரின் திறமையால் இவரிடமே கல்லூரி ஒப்படைத்திருந்தது. அந்த வகையில் அந்த விழாவின் ஒளிப்படக் கலைஞராகப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். எனவே, தன் எதிர்ப்பைக்  காட்டாவிட்டால், தான் திருக்குறளைப்பயின்று பயனில்லை என ஒளிப்படம் எடுக்கும் வேலையை விட்டுவிட்டு விழா அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார்.

 மறுநாள் மாணவியை அழைத்து எதிர்காலம்பாதிக்கும் என்றெல்லாம் சொல்லிக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இம்மாணவியிடம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி தொடர்பான அனைத்துப்பணிகளையும் திரும்பப் பெற்றுக்  கொண்டனர்.

 தவறான கருத்தைச் சொல்பவரைப் பாராட்டும் கல்லூரியினர் உண்மையைச் சொல்லும் மாணவியின்  குரல்வளையை நெறிப்பதேன்? தமிழ்நாட்டில் தமிழுக்கு எதிராக யார் வேண்டுமென்றாலும் பேசலாம் என்னும் நிலை இருப்பதுதானே!  தங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த மாணவி கல்லூரியில் இருந்தால் நல்லது  அல்ல என்ற முடிவிற்கு வந்த கல்லூரியினர்,  எவ்வாறு கல்லூரியில் இருந்து நீக்குவது என எண்ணியுள்ளனர்.  எனவே, பிற மாணவிகள்  மூலம் மாணவி பிரிதிவிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இம்மாணவியையும் இவரின் தாயாரையும் ஒரு மாணவி தகாச் சொற்களால் ஏசியுள்ளார். இது தொடர்பில் வருமாறு 11.3.15 அன்று அழைத்து மாணவி பிரிதிவியிடம் அப்பெண்ணை அடித்ததாகக் கூறியுள்ளனர்; இவரிடம் மன்னிப்பு கேட்குமாறு தெரிவித்துள்ளனர்.  திருக்குறளைப்பற்றிய தவறான கருத்திற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்தது உண்மைதான் என்று கூறி, அதற்காகவும் அடிக்காததற்காகவும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். உண்மையிலேயே திட்டிய மாணவிமீது, அவ்வாறு திட்டியதை ஒப்புக்கொள்ளும் கல்லூரியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அடித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி  ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருந்த இடை நீக்க ஆணையை அளித்துள்ளனர். அதற்கு அடுத்த இரு நாளில் முழுமையாகக் கல்லூரியில் இருந்து நீக்கித் தேர்வு எழுத முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

  இது தொடர்பில், பிரிதிவி தந்தை காவல்நிலையத்தில் முறையீடு  அளித்துள்ளார். இவர் என்ன அரசியல்வாதியா?  அல்லது நடிகரா? அல்லது தமிழ்ப்பகைவரா? உடனே நடவடிக்கை எடுக்க! எனவே, பயனில்லை.

 நீதிமன்றம் சென்று மாணவியைத்தேர்வு எழுத இசைவளிக்குமாறு  வழக்கும் தொடுத்துள்ளனர். கொலைக்குற்றவாளிகளும் பிற சிறைவாசிகளும் தேர்வு எழுத அரசு ஊக்குவித்து வருகிறது.

  ஆனால், தமிழுக்காக - உலகப்புலவர் திருவள்ளுவர் சார்பில் - குரல் கொடுத்தமையைப் பெருங்குற்றமாகக் கருதி சமணர் கல்லூரி மாணவியை நீக்கியதுடன்  பல்கலைக்கழகத் தேர்வும் எழுத விடவில்லை.  நீதியைக் காக்க வேண்டிய காவல்துறையும்  நீதி மன்றமும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை.

 நல்ல வேளையாக விண் தொலைக்காட்சி  வைகாசி 05, 2046 / 19.05.15 செவ்வாயன்று, நீதிக்காக  நிகழ்ச்சி மூலம் இதனை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. விண் தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சி நடத்துநர் திரு துரைபாரதிக்கும் ஏற்பாட்டாளர் திரு மோனிசு கண்ணனுக்கும் தமிழ் உள்ளங்களின் சார்பில் நன்றி. எனக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று  இதன் மூலம், திருவள்ளுவர் தமிழர்க்காகத் தமிழில் எழுதிய நூலே திருக்குறள் என்பதையும்  இன்பத்துப்பால் எனத் தனியே இல்லற இன்பம் குறித்து உலகப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளதால், சமணச்சார்பில்லை என்பதையும் விளக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.

   நிகழ்ச்சியில் தொலைபேசி  வழி கருத்து தெரிவித்த (அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பேத்தி முதலான) நேயர்கள் அனைவருமே  மாணவியின்  நீக்கத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  நிகழ்ச்சி முடிந்ததும் நான் புதுச்சேரி செல்ல வேண்டி யிருந்தது. எனவே, தமிழ்ச்சுற்றம் அன்றில் இறைஎழிலன் முதலான சிலரிடம் இக்கொடுமை குறித்துத் தெரிவித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்து பரிமாறிக் கொண்டோம். புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன்,  வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர்  இரா.சுகுமாறன் முதலான சிலரிடம் மாலையில் இது குறித்துச் சந்தித்துப் பேசுவது குறித்துத் தெரிவித்தேன். திடீர்ச்சந்திப்பு என்பதால் சிலரால் வர இயலாமல் போகலாம் என்பதால், தொலைபேசி வழி பிறரின் கருத்தையும இசைவையும் பெறவும் தெரிவித்தேன்.

 மாலையில் சந்தித்தோம். இவர்களுடன் கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் தலைவர் இரா.தேவதாசுபுதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலர் புதுவைத் தமிழ் நெஞ்சன், மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் கு.அ தமிழ்மொழி  முதலான பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னரே, வரிவடிவச்சிதைவு எதிர்ப்பு,  கணிணி வழிக்கிரந்தத்  திணிப்பு எதிர்ப்பு எனப் பலவற்றில்  தமிழக அமைப்புகளும் புதுச்சேரி அமைப்புகளும் இணைந்து செயல்பட்டதால்,   தமிழ்நாடு - புதுச்சேரி  தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பாகச் செயல்பட முடிவெடுத்தோம்.

1.            கல்லூரி நிருவாகம் உடனடியாக மாணவியை கல்லூரியில் சேர்த்து தேர்வு எழுத ஆவன செய்ய வேண்டும்.
2.            சென்னைப் பல்கலைக்கழகம் இம்மாணவிக்கத் தனித்தேர்வினை நடத்த ஆவன செய்ய வேண்டும்.
3.     கல்லூரி திருக்குறள் குறித்த தவறான கருத்துக்கு ஆதரவளித்தமைக்கு மன்னிப்பு கோரவேண்டும்.
4.    
 தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்து மாணவியை கல்லூரியில் சேர்க்கவும் தனித்தேர்வு எழுதவும் ஆவன செய்வதோடு தவறான செய்தி பரப்பும் இக்கல்லூரி மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  
5.            மேற்கூறியவற்றை நிறைவேற்ற மறுத்தால் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் சேர்த்து கல்லூரியின் முன் போராட்டம் நடத்துவது.

என முடிவு செய்தோம்.

மாணவி பிரிதிவியும் அவர் தந்தையும்  உண்ணா நோன்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருந்ததால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் முடிவு எடுத்தோம். நானும் இரா.சுகுமாறனும்  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து  செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது.

  தமிழில் சிறந்த கருத்துகள் இருந்தாலே பிறருக்குரியதாகக் கூறும் கூட்டம் பெருகிக் கொண்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டும். தமிழுக்கு எதிராகச் சொன்னால் வளமாக வாழலாம்; தமிழுக்குச் சார்பாகப் பேசினால் தண்டனை என்ற அறமற்ற போக்கு நம் நாட்டில் நிலவுகிறது. இதனை மாற்ற வேண்டும். எனவே,  இதனைத் தனிப்பட்ட மாணவியின் சிக்கலாகத் தமிழுணர்வாளர்கள் கருதக் கூடாது.  கல்லூரி நீக்கமும் பல்கலைக்கழகத்தேர்வு எழுத விடாமல் செய்ததும் மாணவி பிரிதிவியின் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வதும் தமிழன்பர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தமிழ்ப்பகைவர்களுக்கு நாம் எச்சரிக்கை விட வேண்டாவா? எனவே, இச்செய்தியைப் பரப்புங்கள். கல்லூரியைத்  தொடர்பு கொண்டு (044 - 2432 8506 / 2432 8507 ; 044 - 4286 8246 / 4286 8247)  கண்டனம் தெரிவித்து, மாணவியை மீளச் சேர்க்கவும் தேர்வு எழுதச் செய்யவும் வற்புறுத்துங்கள்.

 தமிழ்நாட்டில் இருந்து கொண்டு  தமிழக அரசு தரும் உதவிகளைப் பெற்றுக்  கொண்டு, தமிழ் மக்களின் நன்கொடையிலும் கட்டணத்திலும் வளர்ந்து கொண்டு, தமிழுக்கு  எதிராகச் செயல்படும்  கல்லூரிகளின் ஏற்பிசைவை விலக்க வேண்டும்! வேட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்களை அடக்கியதுபோல் தமிழக அரசு, தமிழுணர்வை அழிப்போர் மீதும் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சிதைப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நாமடைந்த
துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய்


தமிழ்நாட்டில் தமிழர்களின்
தன்னுணர்வு நாட்டுவதைத்
தவிர்ப்பீராயின்


உமிழாதோ, வருத்தாதோ
உம்மையே உம்மருமை
உள்ளச் சான்றே?


அமுதூட்ட நஞ்சூட்டி
அகமகிழும் தாயுண்டோ

அருமைச் சேய்க்கே?
என்னும்  பாவேந்தர் பாரதிதாசன்  வருந்திய நிலை இன்னும் மாறவில்லை.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து. (திருக்குறள் 879)

ஒத்துழைப்பை நாடும்

இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாடு - புதுச்சேரி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக