bhodhidarumar01
asiviyal_niruvanam_muthirai_logo

 அனைத்துலகப் போதிதருமர்  மாநாடு

  ( ஆடி 28, 29, 2046 /  13,14  ஆகத்து  2015)

சென்னை,  இந்தியா

  வரும் ஆகத்துத் திங்கள் 13,14 ஆகிய இரு நாட்களில் அனைத்துலகப் போதிதருமர் மாநாடு சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை ஆசியவியல் நிறுவனமும், சப்பானிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கழகமும், சீன நாட்டிலுள்ள சவோலின் ஆலயமும், மொரிசியசு நாட்டிலுள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பும்,  ஆங்காங்கு நாட்டிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றன .
கி.பி. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமது எழுபதாவது அகவையில் தமிழத்தின்  இறைநெறி நகரமான காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, மாமல்லபுரத்திலிருந்து கடல் வழியாகப் பயணப்பட்டு தமது 73 ஆவது அகவையில் சீன நாட்டின் கான்சாக்கு பகுதியைச் சென்றடைந்த போதிதருமர் சான் பௌத்தம் என்று சீன மொழியில் அழைக்கப்படும் தியான பௌத்தப் பிரிவைச் சீன நாட்டில் நிறுவினார்.
தமிழகத்திலிருந்து சீனநாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்ற தமிழரான போதிதருமரை சீனநாட்டில் வாழ்ந்த தமிழ் வணிகர்கள் வரவேற்று அவரது பணிகளுக்குப் பல நிலைகளில் துணை நின்றனர். சீனநாட்டிலுள்ள சவோலின் ஆலயத்திற்குச் சென்ற போதிதருமர் அக்கோயிலின் பக்கத்திலுள்ள ஒரு குகையில் சுவரை நோக்கி 9 ஆண்டுகள் தொடர்ந்து   சிந்தனைத்தவம் செய்ததாகவும் தமிழகத்து மூலிகை மருத்துவ முறைகளையும், வருமம், களரி போன்ற தற்காப்புக் கலைகளையும் அவர் சீன நாட்டினருக்குக்  கற்று தந்ததாகவும் அறிகிறோம்.
சீனநாட்டு மக்கள் இவரைத் தாமோ என அன்புடன் அழைத்தனர். போதிதருமர் கற்றுத்தந்த சான் எனும் தியான நெறி சென்(Zen) என்ற பெயரில் சப்பானிலும், சியோன்(Seon) என்ற பெயரில் கொரியாவிலும் பரவியது. அவர் கற்றுத்தந்த தற்காப்புக்கலை ஆசிய நாடுகளில் கும்ஃபூ, கராத்தே, சொழிஞ்சோ கெம்போ என்று பல வடிவங்களில் பரிணமித்தது.
தமிழ்ப்பண்பாடு ஆசிய நாடுகளெங்கும் பரவக்காரணமாக அமைந்த தமிழ்த்துறவி போதிதருமர் சான் அல்லது சென் பிரிவைத் தோற்றுவித்த அற்புத மகானாக, தென்தமிழ் நாட்டுப் புத்தராகத்  திகழ்கின்றார் .
தமிழ்ப்பண்பாடு ஆசிய நாடுகளெங்கும் பரவக் காரணமாயிருந்த போதிதர்மர் குறித்த இந்த அனைத்துலக மாநாட்டில் ஏறத்தாழ 30 நாடுகளைச் சார்ந்த அறிஞர்கள் ஏராளமான  ஆய்வுரைகளை வழங்க உள்ளனர். போதிதருமரை மையமாகக் கொண்ட பல கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன.
மைய அரசின் தேசியப் புத்தக அறக்கட்டளையின் துணையோடு புத்தகக் கண்காட்சியும்  இம்மாநாட்டின்போது இடம்பெறவுள்ளது. நூல்வெளியீட்டாளர்கள் தமது வெளியீடுகளை இக்கண்காட்சியில் இடம்பெறச் செய்ய  வாய்ப்புகள் வழங்கப்படும்.
கல்வி வள்ளல்  முனைவர் எம்.வி. செயராமன் அவர்களின் பெயரில் தமிழாய்வு அறக்கட்டளையொன்றும் ஆசியவியல் நிறுவனத்தில் இம்மாநாட்டின்போது தொடங்கி வைக்கப்பெறும்.
மாநாட்டில் கட்டுரை வழங்குவோராகவோ  பார்வையாளராகவோ வாசகர்கள் கலந்து கொள்ளலாம். மாநாடு குறித்த விரிவான தகவல்கள் ஆசியவியல் நிறுவனத்தின் வலைத்தளத்தில்  www.instituteofasianstudies.com   உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளப் பதிவு செய்ய விழைவோர் பதிவுப்படிவங்களை ஆசியவியவியல் நிறுவன வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் தொடர்பு கொள்ள:  
மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com 
தொலைபேசி:   24500831, 24501851
பேசி:               9840526834