ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மாணவர்களுக்கு நெறியுரை மையங்கள்: முதல்வர்

வளர் இளம்பருவ மாணவர்களுக்கு  நெறியுரை மையங்கள்: முதல்வர்சனவரி 19,2013,17:39 IST


சென்னை: வளர் இளம்பருவ மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மன பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மொத்தம் 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் வளர் இளம் பருவத்தினர், வறுமை, குடும்ப பிரச்சினை மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களால் பல்வேறான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால், படிப்பில் கவனம் சிதறுதல், தவறான வழிக்கு செல்லுதல் மற்றும் தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வாழ்வில் நடக்கின்றன.
எனவே, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம்(counselling centre) என்று 31 மையங்களும், சென்னையில் 3 மையங்களுமாக சேர்த்து, மொத்தம் 34 மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கென 2 கோடியே 51 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறான கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35லிருந்து 58ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் 3 மருத்துவம் சாராத பணியிடங்களைத் தோற்றுவிக்க அனுமதியளித்து, இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அக்கல்லூரி வளாகத்தில், 5 கோடி செலவில், 3 நிலைகள் கொண்ட, அடுக்குமாடி கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக