ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

Service is the only target: facing with will power: மன உறுதியால் எதிர்கொள்கிறேன்! "சேவை ஒன்றே இலக்கு!'


மன உறுதியால் எதிர்கொள்கிறேன்! 




சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டாலும், தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் கிருஷ்ணா: எனக்கு, 13 வயதிருக்கும் போது, சிறுநீரகங்கள் செயலிழந்தன. இருந்தாலும் மனம் தளராமல் பள்ளிப்படிப்பை முடித்து வெளியே வந்தேன். மேற்படிப்பிற்கு, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தேன். காரணம், அங்கு கல்லூரி வளாகத்திலேயே மருத்துவமனை இருந்ததால், டயாலிசிஸ் செய்து கொள்ளலாம் என்பதற்காகத்தான். விடுமுறையில் சென்னை வந்தபோது, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் முறைகளையும் முயன்று பார்த்தேன்; எதுவும் பலன் தரவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். என் அம்மா, தன் சிறுநீரகம் ஒன்றை தானம் செய்தார். ஆனால், மூன்று மாதங்களில் அந்த சிறுநீரகத்தை என் உடல் நிராகரித்து விட்டது. பெற்றோரின் ஆதரவுடன் சிங்கப்பூரில் டயாலிசிஸ் செய்து கொண்டே, கல்வியைத் தொடர்ந்தேன். ஐந்து செமஸ்டர்களிலும் நான் தான் கல்லூரியில் டாப்பர். இங்கு வந்த பின், மருத்துவமனையில் மீண்டும் வாரம் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்கிறேன். தற்போது, நான் பி.எல்., ஆனர்ஸ் பட்டம் பெற்று, அமெரிக்காவில், நடக்கவுள்ள மாதிரி கோர்ட் தேர்வில் பங்கேற்கப் போகிறேன். அமெரிக்காவில், பத்து நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அங்கு டயாலிசிஸ் செய்து கொள்ள, பல லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதற்காக, சில ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்து கொண்டு அங்கு செல்லவிருக்கிறேன். நான் ஒவ்வொரு முறை டயாலிசிஸ் செய்து கொள்வதும், படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதும் பெரும் சவாலான காரியம் தான். ஆனால், என் மன உறுதியால் அனைத்தையும் எதிர்கொள்கிறேன். இப்போது, எனக்கு வேலைக்கான வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டுள்ளன. விரைவில், என் தகுதிக்கு ஏற்றவாறு நல்ல பதவியை ஏற்றுக் கொள்வேன். மீண்டும் ஒரு முறை மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டால், இயல்பு வாழ்க்கை வாழலாம். அது வெற்றியடைந்தால், மேற்கொண்டு டயாலிசிஸ் தேவைப்படாது. இதற்காக பதிவு செய்திருக்கிறேன். சிறுநீரகங்கள் கிடைத் தவுடன், முன்பை விட உற்சாகமாக செயல்படுவேன்.

"சேவை ஒன்றே இலக்கு!' 

 "சென்னை சமூக சேவை' என்ற அமைப்பை உருவாக்கி, சமூகப் பணிகளை மேற்கொள்ளும் சதீஷ்குமார்: நாங்கள் செய்யும் சமூக சேவைகளை, பல பிரிவுகளாகப் பிரித்து பணியாற்றுகிறோம். ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கான தேவையை அந்த இல்லங்களே பூர்த்தி செய்தாலும், கூடுதலாக அவர்கள் எதிர்பார்ப்பது, அரவணைப்பு தான். அதனால், இந்த பிரிவுக்கு, "அரவ ணைப்பு' என்று பெயர். இந்த பிரிவில் உள்ள உறுப்பினர்கள், தங்களின் பிறந்த நாள், திருமண நாளை ஆதரவற்ற இல்லங்களில் கொண்டாடுவர். சுற்றுச் சூழல் அமைப்பின் மூலம் யாருக்காவது மரக் கன்றுகள் தேவைப்பட்டால், ஆங்கிலத்தில், "கிரீன்' என டைப் செய்து, 98840 62532 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று, மரக் கன்றுகளை வழங்குவதுடன், அவற்றைப் பராமரிப்பது குறித்தும் சொல்லிக் கொடுப்போம். "சிவப்புத் துளிகள்' மூலம் ரத்த தானம் செய்கிறோம். வீணாகும் உணவைச் சுத்தப்படுத்தி, விலங்குகளுக்கு உணவளிக்கிறோம். ஏழை மாணவர்களுக்கு உதவத் துவங்கப்பட்ட அமைப்பு, "நாளந்தா' அமைப்பின் மூலம், மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத் தருவதில் துவங்கி, கல்வி சார்ந்த பணிகளைச் செய்கிறோம். வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளை, அருகில் உள்ளவர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லும் போது, அந்தக் குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க, "துளிர்' என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுகிறோம். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளோம். "சாய்' என்ற அமைப்புடன் இணைந்து, மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கான அமைப்பை இயக்குகிறோம். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், "நான் உங்களுக்கு உதவலாமா?' என்ற பிரிவைத் துவங்கி, அதில் எங்கள் உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு உதவுகின்றனர். இந்த அமைப்புகளின் மூலம், ஆயிரமாயிரம் நற்பணிகள் செய்தாலும், அவற்றைச் சேவையாக நினைக்காமல், கடமையாக நினைப்பதே எங்கள் அமைப்பின் வெற்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக