ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

I am a lucky person& No respect to farmers

சொல்கிறார்கள்

"நான்அதிர்ஷ்டசாலி!'



தன் மனைவிக்காக, கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியுள்ள ஏகாம்பரம்: என் 25வது வயதில், 13 வயதுப் பெண்ணான மெய்யம்மாளுக்கும், எனக்கும் திருமணம் முடிந்தது. எங்களுடையது கூட்டுக் குடும்பம். மூன்று தம்பிகள், ஒரு தங்கை. திருமணத்திற்குப் பின், குடும்பப் பொறுப்புகளை, என் மனைவி தான், கவனித்துக் கொண்டார். அப்போது முதல், எங்கள் வீட்டில், ஒரு சின்ன பிரச்னை கூட வந்ததில்லை. என் தம்பிகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து, தனித்தனியாக சென்று விட்டனர்.எனக்கு நான்கு பெண்கள், இரண்டு ஆண் பிள்ளைகள். பெண்கள் திருமணம் முடிந்து நன்றாக உள்ளனர். என் ஆண் பிள்ளைகள், அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.

இதற்கெல்லாம் ஒரே காரணம், என் மனைவி தான். விவசாயம் முழுவதும், என் மனைவியின் மேற்பார்வையில் தான் நடந்தது. ஒரு குடும்பத் தலைவியாக, ஓய்வு இல்லாமல் எப்போதும், குழந்தைகள், குடும்பம் என்று ஓடிக் கொண்டேயிருப்பார்.என் மனைவியின் மரணத்திற்குப் பின், அவரை என்னால் மறக்கவே முடியவில்லை. அவரை தெய்வமாக வழிபட வேண்டும் என்று நினைத்தேன். மெய்யம்மாளுக்கு கோவில் கட்டலாம் என்ற என் யோசனையை, மகன்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, எங்கள் இடத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் கோவில் கட்டினோம். சங்கு, பெருமாள் நாமத்துடன், விமானத்தின் மேல் கலசம் அமைத்து, கும்பாபிஷேகம் செய்தோம்.தினமும், கோவிலுக் குப் போய் பூஜை செய்து கொண்டிருந்தேன். இப்போது, என் உடல் நிலை காரணமாக, வாரம் ஒருமுறை சென்று வருகிறேன். என் மனைவியின் நினைவு நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் இட்டு, வேட்டி, சேலை கொடுத்து வருகிறேன். இதற்காகவே, அறக்கட்டளை ஒன்றையும் துவக்கப் போகிறேன். ஒரு மனிதனுக்கு, மனைவி மட்டும் சரியாக அமைந்து விட்டால், அவன் தான் பெரிய அதிர்ஷ்டசாலி, அந்த வகையில், நான் பாக்கியம் செய்தவன்.

விவசாயிகளுக்குமதிப்பில்லை!

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள விவசாயி வெங்கடபதி: நான் பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால், செல்லமாக வளர்ந்தேன். நான்காம் வகுப்பிற்கு மேல், படிப்பு வரவில்லை. பொறுப்பில்லாமல், திரிந்த என் போக்கை மாற்றுவதற்காக, 16 வயதில் எனக்கு திருமணம் முடித்தனர். 19 வயதில் தான், எங்க குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த நிலத்தில், விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.

நெல், கடலை என்று, வழக்கமான பயிர்களால் லாபம் இல்லை. லாபம் தேட துவங்கிய போது தான், "கனகாம்பர செடியை பயிர் செய்' என்று பெரியகுளம் தோட்டக்கலையில் அறிவுறுத்தினர். அப்படியே செய்தேன். நல்ல லாபம் கிடைத்தது. பின், சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவதற்காக, நாற்றுகளை விலைகொடுத்து வாங்கினேன். அதில் தரம் இல்லாததால், நஷ்டம் ஏற்பட்டது. நாற்றுகளை நாமே உருவாக்குவோம் என்று தொடர்ந்து ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, கதிர் வீச்சு முறை கைகொடுத்தது. கல்பாக்கம் அணுமின் நிலைய உதவியுடன், அதில் ஜெயித்தேன்.

பின் சவுக்கு மர ஆராய்ச்சியில் இறங்கி, ஏக்கருக்கு, 200 டன் மகசூல் கிடைக்கும் ரகத்தை உருவாக்கினேன். நான் உருவாக்கிய கனகாம்பரம், சவுக்கு கன்றுகளை, குறைந்த விலையில் தான், விவசாயிகளுக்கு விற்கிறேன். இப்போது, இது இந்தியா முழுவதும் பரவி, விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. அந்த வகையில் நான், "பத்ம ஸ்ரீ' விருதிற்கு தகுதியானவன் தான் என்று நினைக்கிறேன்.விருது வாங்கியதில் மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், வருத்தமும் உண்டு.

விவசாயிகளை இந்த நாடு சரியாக மதிக்கவில்லை. விருது வாங்கியவர்களில் நான் மட்டும் தான் விவசாயி. ஜனாதிபதி மாளிகையில், விருது வாங்கிய சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள், இசைக் கலைஞர்களை, மதித்து, அருகில் அழைத்துப் பேசினர்; புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், ஒரு விவசாயியான என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு காலம் வரும், இந்நிலை மாறும்; எங்களுக்கும் உயர்வு வரும்.

மேலும் சிறப்பு பகுதிகள் செய்திகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக