ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

மாணவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை கற்றுத் தர வேண்டும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

First Published : 12 Feb 2012 03:17:26 AM IST


மதுரை, பிப் 11: போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதை விட வாழ்க்கை நெறிகளை சொல்லித்தர வேண்டிய அவசியம் உள்ளது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார்.  உலகத் திருக்குறள் பேரவையின் 35-ம் ஆண்டு நிறைவு விழா, திருவள்ளுவர் விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பொன்னம்பல அடிகளார் பேசியது:  துன்பம் வரும் போது சிரிக்கச் சொன்னவர் வள்ளுவர். துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்பதை அவர் உணர்த்தினார். அவர் வகுத்த நெறிகள், இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால், இன்றைய மாணவர்கள் வன்முறை எண்ணம் நிறைந்தவர்களாக வளர்கின்றனர். ஓர் ஆசிரியை கொலை செய்யப்படும் அளவுக்கு மாணவனின் மனநிலை மோசமாக இருந்துள்ளது.  இன்றைய பள்ளிப் பாடங்களில் மாணவர்களுக்கு வாழ்க்கை நெறிகள் கற்றுத் தரப்படுவதில்லை. மாறாக, போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமே தயார்படுத்தப்படுகின்றனர். போட்டித் தேர்வுகளால் மட்டும் மாணவர்களின் வாழ்க்கை உயர்ந்துவிடுவதில்லை. சமூகத்திற்கு பயன்தரக்கூடிய வகையில் வாழ்க்கைப் பாடங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். ஜாதி, சமய, அரசியல் அடையாளங்களைத் தாண்டி பொதுவான அறநூலாக திருக்குறள் உள்ளது. இல்வாழ்க்கையிலும் அறம் பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அமைதி நிலவும்.  ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பார். 35 ஆண்டுகள் நூலகத்தில் வாழ்க்கையை கழித்தவர் மார்க்ஸ். குடும்பமே வறுமையில் வாடிய போதும் மனைவி ஜென்னி துணை நின்றார். இதனால் உலகம் போற்றிய மூலதனம் புத்தகத்தை அவரால் எழுத முடிந்தது.  இக்காலத்தில் இல்லறத்தில் மாண்பு காக்கப்படாமல் போவதால் குடும்ப உறவுகளில் விரிசல் விழுகிறது. வாழ்க்கையில் வசதிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அதே வேளை இதயத்தில் அன்பை இழந்து கொண்டிருக்கிறோம்.  காந்தியடிகள் தனது வாழ்கையே ஒரு செய்தி என்றார். மக்கள் பணியாளர்களாக இருப்பவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாகிறது என்றார்.  திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக