ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சொல்கிறார்கள்                                                                                                                            


மன அழுத்தம் அனைவருக்குள்ளும் இருப்பது தான். அதற்கு அனைவருமே ஆளாகிறோம். ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது. மிதமான மன அழுத்தம் இருக்கும்போது, வேலையைத் துரிதமாகவும், அற்புதமாகவும் செய்து முடிக்க உதவுகிறது. உதாரணத்திற்கு, நாளைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும் என்றால், மிதமான மன அழுத்தம் அவரை நேர்முகத் தேர்வுக்குச் சரியாக தயார் செய்ய வைக்கும். அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவனுக்கு, இதுபோன்ற மிதமான மன அழுத்தம், காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வைக்க உதவும்.ஆனால், சமாளிக்கவே முடியாத அளவிற்கு மன அழுத்தம் அதிகமாகிவிட்டால், மனபதற்றம் அல்லது மனசோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், காரணமே இல்லாமல் மனசோர்வு வந்தால், அது மனநோயாக மாறிவிடுகிறது. குறிப்பாக தேர்வில் மதிப்பெண் குறைவது, வியாபாரத்தில் நஷ்டம், அதுபோல நாய்க்குட்டி இறந்தால், தற்கொலை செய்ய முற்படுவது கூட மனசோர்வின் வெளிப்பாடு தான். இதுபோன்றவற்றை தினம் 45 நிமிடம் நடைப்பயிற்சி, யோகா, பிராணாயாமம் செய்பவர்கள் சுலபமாகச் சமாளிக்கலாம்.அடுத்தது மனபதற்றம். இவை எல்லோருக்கும் தோன்றுவது இயற்கையே. உதாரணமாக,டமால் என சத்தம் கேட்டால், நம் கை, கால் உதறுவது, இதயம் துடிப்பது போன்றவை. ஆனால், காரணமே இல்லாமல், எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது, விடுமுறை நாட்களில் கூட பதற்றப்படுவது, இருப்பதை மனபதற்ற நோயாக மாறிவிட்டதற்கு அறிகுறி.இது போன்ற மன நோய்களின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், மனவழி சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்து மனநோயைக் குணமாக்க முடியும்.

காதல் சின்னம்!

ரோஜா பண்ணை வைத்துள்ள நடேஷ்: என் சொந்த ஊர் கர்நாடகா. விவசாயம் செய்து பிழைப்பதற்காக ஓசூருக்கு வந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக ரோஜா பண்ணை வைத்துள்ளேன். பெங்களூருக்கு அருகில் ஓசூர் அமைந்துள்ளதால், தமிழக, கர்நாடக, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலும், குத்தகை நிலங்களிலும் ரோஜாக்களை பயிர் செய்கிறோம். மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் விளையும் ரோஜாக்கள் சரியான சீதோஷணம், நல்ல நீர் வசதி இல்லாமை மற்றும் பசுமைக் குடில்கள் அமைக்காமை போன்ற காரணங்களால், அதிகபட்சமாக நான்கு நாட்கள் வரை தான் வாடாமல் இருக்கும். ஆனால், நாங்கள் பயிரிடும் ஓசூர் ரோஜாக்கள், 10 நாட்கள் வரை கெடாமல் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும்.செம்மண்ணில் தான் ரோஜா நன்கு வளரும். ஓசூர் மலைப் பகுதி என்பதால், ஊர் முழுக்க செம்மண் படர்ந்துள்ளது. இங்கு செம்மண் இருப்பதாலேயே, மற்ற மாநில ரோஜா விவசாயிகளும் இங்கு வந்து பயிரிடுகின்றனர். இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் விவசாயத்தில் முதல் இடம் பிடிப்பது ரோஜா சாகுபடி தான்.மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ரோஜா பூக்களை உற்பத்தி செய்கிறோம். என்னுடைய பண்ணையில் மட்டும் 10 ஏக்கர் அளவில், ரோஜா மலர்களைச் சாகுபடி செய்து, 80 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளேன். இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு மட்டும் ஓசூரிலிருந்து 25 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.ரோஜா பண்ணைகளை சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வெட்ட வெளியில் அமைத்தால், சரியாக வளராமல், தரமும் குறைந்து விடும். தரம் கெடாமல் இருக்க, இங்குள்ள அனைத்து விவசாயிகளும் பச்சை நிறத்தில் உள்ள பசுமைக் குடில்களை அமைத்து ரோஜாக்களை உற்பத்தி செய்கிறோம்; ஒரு பசுமைக் குடில் அமைக்க, 38 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக