புதன், 15 பிப்ரவரி, 2012


"ஒரு அடியேனும் திருப்பி அடியுங்கள்!' 


பெண்களுக்கான தற்காப்புக் கலை பயிற்சியளிக்கும் கோபுடோ கிருஷ்ணமூர்த்தி: தமிழக அளவில் பலருக்கும் கராத்தே பயிற்சி அளிக்கிறேன். என்னிடம் பயின்ற, 16 மாணவ - மாணவியர், உலக அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். பெண்கள், தங்களை தற்காத்துக் கொள்ளும் முறைகள் பற்றி பயிற்சியளிக்கிறேன். ஒருவரின் உடலில் எளிதாக தாக்கக்கூடிய பாகங்களான கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தாக்கினாலே, எதிராளி எளிதில் தடுமாறி விடுவான். கைவசம் பாக்கெட் கத்தி, மிளகாய்ப் பொடி, ஸ்பிரே இல்லையென்றாலும், துப்பட்டா, டவல், குடை, சாவிக்கொத்து, மோதிரம், சில்லறைக் காசு, சுருட்டப்பட்ட மாத, வார இதழ் என்று, கையிலுள்ள பொருட்களையே ஆயுதமாகப் பயன்படுத்தலாம்; குறைந்த கால பயிற்சியே இதற்குப் போதுமானது. உதாரணமாக, ஒரு பெண் இரவு நேரத்தில், இருட்டான பகுதியில் செல்லும் போது, முன்னெச்சரிக்கையாக துப்பட்டாவில் ஒரு கல்லை முடிந்து வைத்துக் கொள்ளலாம். யாரேனும் கத்தி அல்லது ஆயுதம் கொண்டு தாக்க வந்தால், தங்கள் கையில் உள்ள குடையை, சட்டென ஆயுதமாக்க வேண்டும். எதிராளி குத்த வரும் போது, குடையால் அதைத் தடுத்து, குடையின் வளைந்த கைப்பிடிக்குள் அவன் கையைச் சிக்க வைத்துத் திருகி, கீழே இழுத்துப் போட்டு, அவன் சுதாரிப்பதற்குள் தப்பிக்கலாம். வளையலைக் கழட்டி எதிராளியின் மணிக்கட்டில் வேகமாக குத்தினால், வலி தாங்காமல், கையை விட்டுவிடுவான். எதிராளி கழுத்தை நெரித்தால், கைவிரல்களே ஆயுதம். இரண்டு விரல்களைக் கொண்டு அவன் கண்களைக் குத்தலாம். பெண்கள் பெரும்பாலும் எதிர்ப்பதில்லை என்பதாலேயே திருடர்களும், போக்கிரிகளும் தைரியமாக, துணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். துப்பட்டாவே துப்பாக்கி, வளையலே வாள் என்று மனதில் நினைத்து பதிலடி கொடுத்தால், நிச்சயம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக