புதன், 18 ஜனவரி, 2012

Writing is the only weapon: தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்: உதயச்சந்திரன்

தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்: உதயச்சந்திரன்

First Published : 18 Jan 2012 02:40:49 AM IST


சென்னை புத்தகக் காட்சி நிறைவுநாளின்போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக பதிப்புத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் மு. வேலாயுதத்
சென்னை, ஜன. 17: தமிழர்களிடம் இப்போது இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலர் த. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். கூறினார்.  சென்னை புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியது:  புத்தகக் காட்சியில் எவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகிறது என்பதை அதன் விற்பனை மதிப்பை வைத்து எடைபோடக்கூடாது. எவ்வளவு தரமான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்பதை பார்த்துதான் கணிக்க வேண்டும்.  ஒரு தாய் தனது குழந்தைக்கு தரமான, நல்ல உணவை எப்படி பார்த்துப் பார்த்து கொடுக்கிறாளோ, அதுபோல ஒரு பதிப்பகம் வாசகர்களுக்கு தரமான புத்தகங்களை வழங்க வேண்டும்.  தமிழ், தமிழர், தமிழகம் கடல் கடந்து மட்டும் தாக்கப்படவில்லை. இயற்கைச் சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான். பழமையான பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை புத்தகத்தில் பதிவு செய்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச்செல்ல முடியும்.  தமிழகத்தில் நடந்த களப்பிரர் ஆட்சிக் கால வரலாறு, வலங்கை சாதி, இடங்கை சாதி, வடக்கில் இருந்து வந்த மொகலாய மன்னர்கள் பற்றிய வரலாறு ஆகியன இதுவரை முறையாக பதிவு செய்யப்படவில்லை. நிகழ்காலத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.  தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியது ராஜராஜ சோழன்தான் என்பதை வெளிப்படுத்தியதுகூட ஓர் ஆங்கிலேயர்தான். மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து ஆங்கிலேயர் ஒருவர்தான் ஆய்வு செய்து இந்தத் தகவலைப் பதிவு செய்தார்.  வரலாற்றுச் சம்பவங்களை ஆவணமாக பதிவு செய்யும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் தகவல்கள் குறித்த புத்தகங்களை பதிப்பாளர்கள் வெளியிட வேண்டும். உலகில் பல தலைவர்களுக்கு மாற்றுச் சிந்தனை, புரட்சிகரமான சிந்தனைகளை வழங்கியது புத்தகங்கள்தான். எனக்குக்கூட தைரியம் கொடுத்தது புத்தகம்தான் என்றார் உதயச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக