சனி, 12 நவம்பர், 2011

ஈகையாளர் சின்னச்சாமிக்குத் திருச்சியில் சிலை: முதல்வர் செயலலிதா அறிவிப்பு

பாராட்டுகள். பிற மொழிப்போர் ஈகிகளையும்  அவர்கள் புகழ் போற்றும் வண்ணம் சிறப்பிக்க வேண்டும். நீறு பூத்த நெருப்பாக முதல்வரிடமும் தமிழ் உணர்வு உள்ளது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தியாகி சின்னச்சாமிக்கு திருச்சியில் சிலை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

First Published : 12 Nov 2011 02:37:10 PM IST


சென்னை, நவ. 12; தமிழ் மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகி சின்னச்சாமிக்கு திருச்சிராப்பள்ளியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உயிரினும் மேலாக நாம் போற்றி வணங்கும் அன்னைத் தமிழ் மொழிக்கு இந்தி ஆதிக்கத்தால் ஆபத்து வந்த நேரத்தில், செந்தமிழுக்கு ஒரு தீங்கு எனில் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ எனக் கேட்டு செந்தணலுக்கு தன்னை இரையாக்கிக் கொண்டவர் தியாகி சின்னச்சாமி.திருச்சிராப்பள்ளி, ரயில்வே சந்திப்பில், 1964ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி  அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது, தியாகி.சின்னச்சாமி திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய வாசலில்,  விடியற்காலை 4.30 மணிக்கு, தனது இன்னுயிரைத் துச்சமென மதித்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, தனது உடல் பற்றி எரிந்து கொண்டிருந்த  நிலையிலும்,  “தமிழ் வாழ்க” -  “தமிழ் வாழ்க” என்று முழங்கியவாறு தமிழ் மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.  அப்போது அவருக்கு 27 வயதே ஆகும். 1964 ஆம் ஆண்டு தியாகி சின்னச்சாமியின் மறைவு செய்தி அறிந்து அவரது குடும்பத்தாருக்கு எம்.ஜி.ஆர். 5,000/- ரூபாய் நிதி அளித்தார். 1962ம் ஆண்டு நடந்த அதிமுக 21-ம் ஆண்டு துவக்க விழாவில் நான் 50,000/- ரூபாய் நிதி உதவி வழங்கினேன். மேலும்  1995 ஆம் ஆண்டு  தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில், சின்னச்சாமி குடும்பத்தாருக்கு மேலும் 50,000/- ரூபாய் வழங்கினேன்.திருச்சிராப்பள்ளியில் உள்ள அவரது  கல்லறையில் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவாக ஜனவரி 25 ஆம் நாளில் அனுசரிக்கப்படும் வீரவணக்க நாள் அன்று தமிழ் ஆர்வலர்களும், தமிழ் தொண்டர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். அவருடைய புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அவர்களின் நினைவைப் போற்றி  திருச்சிராப்பள்ளியில் அன்னாரின் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக