திங்கள், 1 ஆகஸ்ட், 2011

விரசத்தை விலக்கிக் கவிதை எழுதுங்கள்!

விரசத்தை விலக்கி கவிதை எழுதுங்கள்!

First Published : 01 Aug 2011 03:41:39 AM IST

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவிஞர் சிற்பி பவள விழாவில், சிற்பி இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசுகிறார் தினமணி ஆசிர
கோவை, ஜூலை 31: விரசத்தை விலக்கி கவிதை எழுதுங்கள் என்று இளம் கவிஞர்களுக்கு "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவிஞர் சிற்பியின் பவள விழாவில் சிற்பி இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
ஒரு கவிஞருக்கு நடைபெறும் பாராட்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது என்பது வியப்புக்குரியது. இனிமேல் மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படுமானால் வேண்டுமெனில் அது கோவையில்தான் அமைக்கப்பட வேண்டும் என்பதை இவ் விழா காட்டுகிறது.
இலக்கியத்துக்காக, தமிழுக்காக, ஒரு கவிஞனைப் பாராட்டுவதற்காக மனமுவந்து இத்தனை பேர் கூடி பாராட்டு விழா நடத்துவது எங்கும் பார்த்திராதது, நடந்திராதது.
கவிஞர் சிற்பி தலைசிறந்த கவிஞர் என்பது ஒருபுறம் இருக்க, அவர் பல மாயைகளை உடைத்தெறிந்திருக்கிறார் என்கிற கோணத்தில்தான் நான் அவரைப் பார்க்கிறேன்.
புலவர்கள் பலர் தலைசிறந்த கவிஞர்களாக இருப்பதில்லை. புலவர்களாக இருப்பவர்கள் இலக்கணத்தில் ஊறி, அவர்களது படைப்புகளில் கவித்துவம் சற்று குறைவாகவும், இலக்கியத் தரவுகளும், மொழி ஆளுமையும்தான் மேலோங்கியதாகவும் இருக்கும். ஆனால், புலவர்கள் கவிஞராக முடியாது என்ற கண்ணோட்டத்தை உடைத்தெறிந்திருப்பவர் சிற்பி. பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய அவர், மரபுக் கவிதைகளுக்குள்ளே ஊறியிருக்க வேண்டியவர், அதையெல்லாம் விட்டு வானம்பாடிப் பறவையாகப் பறந்து, புதியதொரு வழித்தடத்தை சமைத்திருக்கிறார். தான் புலவனுக்கும் புலவன், கவிஞனுக்கும் கவிஞன் என்று நிரூபித்திருக்கிறார். அவரது கவிதைகளில் கற்பனைச் செறிவும் இருக்கிறது, இலக்கணச் செறிவும் இருக்கிறது. மொழி ஆளுமையும் இருக்கிறது.
அவர் உடைத்தெறிந்த இன்னொரு மாயை, நல்ல கவிஞர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் சென்னையில் தஞ்சமடைய வேண்டும் என்கிற தவறான கண்ணோட்டத்தை. தான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டே தனது கவித் திறத்தால் அத்தகைய பெருமையைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சிற்பி.
பாரதிக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அவர் வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை என்ற வேதனை அனைவருக்கும் இருக்கிறது.
தாகூருக்கு கிடைத்த நோபல் பரிசு, பாரதிக்கு அல்லவா கிடைத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பாதவர்களே இல்லை. பாரதியின் பாடல்களால் தமிழகம் கொதித்தெழுந்தது.
பாரதி தமிழகத்தின் எல்லைகளைக் கடந்து தேசிய அளவில் தான் ஒரு கவிஞன் என நிலைநாட்டிக் கொண்டது அவரது மறைவுக்குப் பிறகுதான்.
தான் வாழும் காலத்திலேயே இனம், மொழி, மாநிலம் இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து அகில இந்திய அளவில் ஒரு கவிஞன் எனத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருப்பது சிற்பியின் மிகப் பெரிய சாதனை.
நாமக்கல் கு.சின்னப்பபாரதி தனது பிறந்த நாளைக் கொண்டாடும்போது பிற மாநில எழுத்தாளர்களை அழைத்து சிறப்பிக்கிறார். அதேபோல, கவிஞர் சிற்பி தனது பவள விழாவில் கேரளத்து கவிஞரை அழைத்து கெüரவிக்கிறார். இதைப் பார்க்கும்போது, "கற்றாரை கற்றாரே காமுறுவர்' என்பது கோவை மண்ணுக்கே உரிய சிறப்போ என்று நினைக்கத் தோன்றுகிறது.
கவிஞர் சிற்பியின் கவிதைகளில் மொழி ஆளுமை, சமூகப் பார்வை, கவிதை நயம் எல்லாமே இருக்கிறது. ஆனால், எங்கு தேடினாலும் இம்மி அளவுகூட விரசத்தைக் காண முடியாது.
இன்றைய கவிஞர்கள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும். இளம் கவிஞர்கள் தங்களது கவித்துவம், மொழி ஆளுமை, கருத்துச் செறிவு, சமுதாயக் கண்ணோட்டம் ஆகியவற்றை நம்புங்கள். தயவு செய்து விரசத்தை விலக்கி கவிதை எழுதுங்கள் என்பதுதான் கவிஞர் சிற்பியின் பவள விழா தரும் செய்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறை கடந்து தமிழ் நிலைத்திருக்கும். நாளைய தலைமுறை நம்மை மதிக்கும் என்றார் "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்.
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன்: மண்ணின் மணம், கிராமிய வாழ்வியல், அதன் விழுமியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக சிற்பியின் கவிதைகள் இருக்கின்றன. அவர் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தும் கவிஞர் அல்ல. மனித வாழ்வியலையே தனது படைப்புகளில் கொண்டு வருபவர். சங்க காலப் புலவர்களின் படைப்புகளில் இருக்கக் கூடிய மனிதப் மாண்புகளை சிற்பியின் கவிதைகளில் காண முடியும்.
அவர் பழமைவாதியல்ல, பழமையை புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்கக் கூடியவர்.
பழமை என்பது முடிந்துபோனதல்ல, ஒவ்வொரு தலைமுறையும் பழமையில் இருந்தே வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைப் பெற முடியும் என்பதைப் புரியவைத்தவர் கவிஞர் சிற்பி என்றார்.
நூல் ஆசிரியர்கள் கே.எஸ்.சுப்பிரமணியம், பி.மருதநாயகம், நவபாரதி, பதிப்பாளர்கள் சேது சொக்கலிங்கம், மீனாட்சிசுந்தரம், மீரா கதிர், வேனில் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெüரவித்தார் "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்.
கவிஞர்கள் அபி, லீலா மணிமேகலை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருதுகளையும், கவிஞர்கள் பா.சத்தியமோகன், சென்னிமலை தண்டபாணி ஆகியோருக்கு சிற்பி இலக்கியப் பரிசுகளையும் மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் வழங்கினார். லீலா மணிமேகலை சார்பில் கவிஞர் செல்மா பிரியதர்ஷன் விருதை பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக