திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இலங்கைச் சிக்கல் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாடல்

இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வு குறித்துத்தான் பேசுவார்களாம். 

இனப்படுகொலைகள் குறித்தும் போர்க்குற்றங்கள் குறித்தும்  பே ச 

மாட்டார்களாம். என்ன கொடுமையடா இது?

 வருத்தத்துடன் 
 இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /
 எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!  


இலங்கைப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்

First Published : 01 Aug 2011 04:07:33 AM IST


புது தில்லி, ஜூலை 31: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. மக்களவைக் கட்சித் தலைவர் தம்பிதுரை, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தின.
இது குறித்து மக்களவை அதிமுக தலைவர் தம்பிதுரை கூறியது: தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை, இலங்கையில் தமிழர் மறுவாழ்வு, ஐ.நா. வெளியிட்டுள்ள இலங்கை அறிக்கை, உள்நாட்டு நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை, மின் பற்றாக்குறை பிரச்னை ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கட்சியின் சார்பில் வலியுறுத்தினேன்.
குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து நாடாளுமன்ற ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற தமிழகத்தின் அண்டை மாநில நதி நீர்ப் பங்கீட்டு பிரச்னைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படவில்லை. அது குறித்து விவாதிக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள அணை பாதுகாப்புச் சட்டத்தை எங்கள் கட்சி எதிர்க்கிறது. தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தம்பிதுரை தெரிவித்தார்.
தி.மு.க., நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறியது: தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம், கச்சத் தீவு விவகாரம், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பிரச்னை, இலங்கை பிரச்னை தொடர்பான ஐ.நா. அறிக்கை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக