வியாழன், 9 ஜூன், 2011

Changing thamizh schools as kannada shcols: கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்!

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்ப்பள்ளிகள் காப்பாற்றப்படவும் பெருகவும் ஆவன செய்ய வேண்டும். மக்கள் கவனத்திற்கு இச் செய்தியைக் கொணர்ந்த தினமணிக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்!

First Published : 09 Jun 2011 03:37:07 AM IST


பெங்களூர், ஜூன் 8: கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.  தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.  கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், கோலார், ஷிமோகா, தாவணகெரே, ஹூப்ளி, சாமராஜ் நகர் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 60 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.  இந்தியா விடுதலையானபிறகு, கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களுக்காக தமிழ் பயிற்றுமொழி பள்ளிகள் தொடங்கப்பட்டன.  1980-ல் நடைபெற்ற கோகக் போராட்டத்தின் விளைவாக கட்டாய கன்னடம் நடைமுறைக்கு வந்தது.  இதன்பிறகு, தமிழ்ப்பள்ளிகள் கன்னடப் பள்ளிகளாக நிறம்மாறத் தொடங்கின.  குறிப்பாக 1990-ல் நடந்த காவிரி கலவரத்துக்கு பிறகு, கன்னடம் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தமிழர்கள் ஆட்பட்டனர். கர்நாடகத்தில் மும்மொழித் திட்டம் அமலில் இருப்பதால், தமிழ், கன்னடம், ஆங்கிலம் படிக்க தமிழ் மக்களை தமிழார்வலர்கள் ஊக்குவிக்கத் தொடங்கினர்.  ஆனால், தமிழ்ப் பள்ளிகளை படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு இலைமறைவு காயாக செயல்படுத்தி வந்துள்ளது. இதற்கு அரசு தெரிவிக்கும் காரணம், தமிழ் படிக்கும் மாணவர்கள் இல்லை என்பதுதான்.  இதே காரணத்தை சுட்டிக்காட்டி ஓய்வுபெறும் தமிழாசிரியர்கள் இடத்துக்கு புதிய தமிழாசிரியர்கள் நியமனத்தையும் நிறுத்திவைத்து எழுதப்படாத சட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது.  இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து கர்நாடக தமிழாசிரியர் சங்கத் தலைவர் க.சுப்பிரமணியம், தினமணி நிருபரிடம் கூறியது:  பெங்களூரைத் தவிர கர்நாடகம் முழுவதும் அரசு, அரசு மானியம்பெறும், பெங்களூர் மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் பணியாற்றினர். மாணவர்களும் அதிக அளவில் படித்து வந்தனர்.  மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டி, தமிழாசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை.  இப்போது கர்நாடகம் முழுவதும் ஆயிரம் தமிழாசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  அடுத்த 10 ஆண்டுகளில் இது 200 ஆக குறையும் ஆபத்து உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழ் பாடத்தையும் அளிக்கத் தவறக்கூடாது என்றார்.  செயின்ட் அல்போன்சஸ் பள்ளி தமிழாசிரியர் கார்த்தியாயினி கூறியது:  10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் 250 அரசு தமிழ் பள்ளிகள் செயல்பட்டன. இப்போது, 101 தமிழ் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  இதை காரணம்காட்டி தமிழ் பள்ளிகள், கன்னடப் பள்ளிகளாக உருமாறி வருகின்றன.  சில பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், தமிழ் மாணவர்கள் தமிழ் கல்வியை கைவிடும் நிலை உள்ளது.  அரசு மானியம் பெறும் பள்ளிகளோ தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி கன்னட வகுப்புகளுக்கு மாற்றிவருகின்றன.  தமிழர்கள் தாய்மொழி கற்கும் உரிமை மறைமுகமாக பறிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நாம் நமது அடையாளத்தை இழக்க நேரிடும்.  தமிழ்க்கல்வியின் நலிவைத் தடுக்க கர்நாடக தமிழர்கள் ஒன்றுசேர்ந்து குரல் எனழுப்ப வேண்டும் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக