வியாழன், 23 டிசம்பர், 2010

dinamani editoriyals about sonia speech of corruption: தலையங்கம்: உதட்டளவு ஆதங்கம்!

இவ்வளவு தெளிவாகத்தலையங்கம் எழுதிவிட்டு உதட்ளவு நடிப்பை    உதட்டளவு ஆதங்கம் எனத் தவறாகக் குறிக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: உதட்டளவு ஆதங்கம்!

First Published : 23 Dec 2010 02:12:00 AM IST

Last Updated : 23 Dec 2010 04:28:35 AM IST

ஜேப்படித் திருடர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் திருடிவிட்டு, "அதோ திருடன், அதோ திருடன்' என்று கூக்குரலிடுவார்கள். ஏதாவது அப்பாவியை அடையாளம் காட்ட, கூட்டம் அந்தப் அப்பாவியைத் துவைத்தெடுக்க ஜேப்படித் திருடனும், கும்பலும் தப்பிவிடும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83-வது சிறப்புக் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராகப் போர்தொடுக்கப் போவதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சூளுரைத்திருப்பது ஜேப்படித் திருடனின் கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகியிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் என்று இவை எல்லாவற்றிலும் சம்பந்தப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும். இந்த நிலையில், ஊழலுக்கு எதிராகப் போர்தொடுக்கப் போகிறோம் என்றும், ஊழலை சகிக்க மாட்டோம் என்றும் வீரவசனம் பேசுவதைப் பார்த்தால், இந்த ஊழலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது போலவும், நடந்த தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட தனி நபர்கள்தான் காரணமே தவிர கட்சிக்கு எந்தவிதத் தொடர்போ தார்மிகப் பொறுப்போ இல்லை என்பதுபோலவும் அல்லவா இருக்கிறது?ஊழல் என்று வந்தால் அதற்கு காங்கிரஸ் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாகவும், ஊழல் சமுத்திரத்தில் மூழ்கிக் களித்தவர்களாகவும்தான் இருந்திருக்கின்றன. ஓரிருவர் எத்தகைய ஊழலிலும் தொடர்புடையவராக இல்லாமல் இருந்திருந்தால், அவர் எந்தவிதப் பதவியையும் அனுபவிக்காதவராக இருந்திருப்பார் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு ஊழல், காற்றைப்போல இந்திய நிர்வாகத்தில் வியாபித்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த லட்சணத்தில், சுதந்திர இந்தியாவின் 63 ஆண்டுகால சரித்திரத்தில் 51 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஊழலைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்கிற நியாயமான கேள்விக்கு சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.பிரதமர் மன்மோகன் சிங் பெரிய மனது வைத்து, தான் நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழுமுன் ஆஜராகி, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தைப் பற்றி விளக்கம் அளிக்கத் தயார் என்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிக் கைதட்டல் பெற்றிருக்கிறார். தனக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்றும், தான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் பேசியதைக் கேட்க நன்றாக இருக்கிறது.நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு என்பது பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு என்பதால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கான அவசியம் என்ன என்பது காங்கிரஸ் கட்சியின் கேள்வி. நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவுக்கு தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் விசாரிக்கும் உரிமை உண்டே தவிர, இதன் பின்னணி பற்றி விசாரிக்கவோ, தொடர்புடையவர்கள் என்று கருதுபவர்களை அழைத்து விசாரிக்கவோ உரிமை கிடையாது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்பது அப்படிப்பட்டதல்ல. பிரச்னையின் எல்லா பரிமாணங்களையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு.தேவைப்பட்டால் தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார், ஏன் சோனியா காந்தி உள்ளிட்ட யாரையும் எவரையும் கூப்பிட்டு விசாரிக்கலாம், கேள்வி எழுப்பலாம். இத்தனைக்கும், நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் பாஜகவைச் சேர்ந்த முரளிமனோகர் ஜோஷி. ஆனால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படுமானால், அதன் தலைவர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். அப்படி இருந்தும் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க ஏன் தயங்குகிறது என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்குத் தயாராகும் பிரதமர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு ஏன் தயங்க வேண்டும்? பயப்பட வேண்டும்?காங்கிரஸ் மாநாட்டில் பேசியவர்கள் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றம் செயல்படுவதை பாரதிய ஜனதா கட்சி தடுக்கிறது, மக்கள் பிரச்னையை விவாதிக்க முடியாமல் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். நாடாளுமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பது பாஜக மட்டுமல்ல. இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும்தான். அப்படி இருக்க, பிரச்னைக்கு "மதவாத' முலாம் பூச காங்கிரஸ் முயற்சிப்பது அரசியல் மோசடி அல்லாமல் வேறென்ன?நாடாளுமன்றம் 2ஜி அலைக்கற்றை பிரச்னைக்காக முடக்கப்பட்டதில் அரசுக்கு நஷ்டம் சில கோடிகள். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பாமல் விட்டிருந்தால், நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் மன்றத்தை விழிப்படையாமல் விட்டிருந்தால் காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ. 1,76,0000000000. அதாவது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய். ஜேப்படித் திருடன் கூக்குரலிடும் கதைதானே இதுவும்?ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று சூளுரைத்திருக்கும் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ் குடியிருப்பு, 2ஜி அலைக்கற்றை ஊழல்கள் தொடர்பான கோப்புகள் மாயமாய் மறைகின்றனவே, அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டு ஊழல் ஒழிப்பு கோஷத்தை எழுப்பட்டும். ஒருபுறம் கோப்புகள் காணாமல் போகின்றன. மறுபுறம், யோக்கிய வேஷம் போடுகிறார்கள். எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்!ஊழலைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்தக் கட்சிக்கும் அருகதை கிடையாது. அதற்காக, ஊழலை தேசியமயமாக்கவா முடியும்? ஏதோ, உதட்டளவு ஆர்வமாவது காட்டுகிறார்களே என்று நாம் திருப்தியடைய வேண்டியதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக