வெள்ளி, 8 அக்டோபர், 2010

தினமணி செய்தி வழக்கானது


மதுரை,அக்.7: ​பஸ் நிறுத்தங்களில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் விபத்துகள் ஏற்பட்டது தொடர்பாக தினமணியில் வெளியான செய்திகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக ​வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.​ இதுகுறித்த வழக்கு விவரம்:​ ராமநாதபுரத்தில் பஸ் பாஸ் எடுத்துவராத மாணவி ஒருவர்,​​ நடத்துனரால் அவமதிக்கப்பட்டு பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார்.​ இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.​ பட்டுக்கோட்டை அருகே பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.​ இது தொடர்பான செய்திகளையடுத்து ​நீதிபதிகள் டி.முருகேசன்,​​ எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட்டது.​ அதில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும்.​ இலவச பஸ் பாஸ் எடுத்துவராதவர்களிடம் கடுமையாக ​ நடந்துகொள்ளக் கூடாது.​ பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் சென்றால் போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் புகார் செய்யுமாறு கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.​ இதுகுறித்து தினமணியில் எது இலவசம் என்ற தலைப்பில் 18.9.2010-ல் தலையங்கம் வெளியானது.​ இந்நிலையில் செப்டம்பர் 22-ம் தேதி மதுரை தல்லாகுளம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றபோது,​​ அதில் ஏற முயன்ற ஒரு மாணவரின் கால்கள் நசுங்கிச் சேதமடைந்தது.​ இதுதொடர்பாக தினமணி விரிவான செய்தி ​ வெளியிட்டது.​ இந்தச் செய்திகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.முருகேசன்,​​ டி.ராஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.​ இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.​ அப்போது மதுரை,​​ திண்டுக்கல்,​​ நாகர்கோவில் உள்ளிட்ட தென்மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக பொது ​மேலாளர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.​ நீதிபதிகள்:​​ நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்,​​ ஓட்டுநர்,​​ நடத்துனர்கள் அரசின் கொள்கையை உணராமல் செயல்பட்டு வருகின்றனர்.​ கிராமப்புற மாணவர்களை ​பள்ளிகளுக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும்நிலை உள்ளது என்றனர்.அரசு வழக்கறிஞர்:​​ நடத்துனர்,​​ ஓட்டுநருக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம் என்றார்.நீதிபதிகள்:​​ உயர் நீதிமன்றம் முன்புற நிறுத்தத்திலேயே பஸ்கள் நிற்காமல் செல்வது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.​ மாணவர்கள் அதிகம் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் பஸ் நின்றுசெல்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள்,​​ இதுகுறித்து விரிவான பதில் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

நீதிபதிகளுக்குப் பாராட்டுகள். தினமணியின் கடமை தொடரட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2010 1:51:00 PM
சிண்டு முடியும் செய்திகளைத் தவிர்த்து இப்படி உருப்படியான மக்களுக்கு பயன்படும் செய்திகளை வெளியிட்டால் அதுவே மக்களுக்கு செய்யும் பெரிய தொண்டு. தொடரட்டும் தினமணியின் இத்தகையப் பணி.
By நிரஞ்சன்
10/8/2010 11:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக