சனி, 9 அக்டோபர், 2010

சோதனை இல்லாமல் சாதனை இல்லை!


சமீபத்தில் காதில் விழுந்த ஒரு செய்தி. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்று, கட்டுரைப் போட்டிக்கு "இன்றைய இளைஞர்களுக்கு சமுதாய அக்கறை இருக்கிறதா இல்லையா?' என்ற தலைப்பில் மாணவர்களை எழுதச் சொன்னது.  இன்றைய இளைய தலைமுறைக்கு சமுதாய அக்கறை இருக்கிறதா இல்லையா என்பதைவிட, இன்றைய சமுதாயத்துக்கு இளைய தலைமுறைகள் மீது அக்கறை உள்ளதா இல்லையா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து எழுதவைக்கும் அவல நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.  ÷சமுதாயம் என்பது தனிநபர் சார்ந்தது அல்ல. தனிநபர், குடும்பம் மற்றும் நம்மோடு வாழும் அனைவரும் சேர்ந்ததுதான் சமுதாயம். இன்றைய தொழில்நுட்பம் பல நல்ல பொக்கிஷங்களை நமக்கு வாரிவழங்கி இருந்தாலும், அதன் பின்னணியில் விளைவது என்னவோ தீமைதான்.  ÷பள்ளி, கல்லூரி, தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி, திரைப்படம் என பலவகையில் இளைஞர்களின் கவனத்தை இவைகள் திசை திருப்புகின்றன. அவர்களது உடல் வகுப்பறையில் இருந்தாலும் மனம் என்னவோ வகுப்பறைக்கு வெளியில்தான் சுற்றித் திரிகிறது. இளைஞர்களின் கவனச் சிதறலுக்கு யார் காரணம் என்றால், குறிப்பாக இந்தச் சமுதாயத்தையே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதிவேகமாக முன்னேற்றம் கண்டுவரும் தொழில்நுட்பத்தால், இளைஞர்கள் தவறான பாதையில் ஈர்க்கப்பட்டு, சீரழிந்து வருகின்றனர்.  ÷இருபது ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றால், குடும்ப ஒற்றுமை, தாய்-தந்தை பேச்சை மதித்து நடத்தல், எடுத்தெறிந்து பேசாது இருத்தல், ஆசிரியர்களை மதித்தல், அடுத்த வீட்டுக்காரருக்கு உதவுதல், குடும்பத்தின் நல்லவை கெட்டவைகளைக் கலந்து ஆலோசித்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை எல்லாம் இருந்தன. ஆனால் இப்போது, அனைத்துப் பண்புகளும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.  ÷குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டாலும், குடும்பத்தார் அனைவரும் கலந்து பேசமுடியாமல், அங்கு தொலைக்காட்சியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இளைஞர்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. இதற்குப் பெற்றோர்களும், குறிப்பாக வீட்டுப் பெண்களும் ஒரு காரணம்.  ÷தாய்-தந்தை இருவருமே பணிக்குச் சென்றுவிடுவதால், தனித்து விடப்படும் அவர்களின் தீய பழக்கங்களுக்கு தொழில்நுட்பங்களும் கைகோத்துக்கொண்டு துணைக்கு வருவதும்தான்.  ÷""என்னிடம் 100 இளைஞர்களைத் தாருங்கள்; நான் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்'' என்று இளைஞர்களின் பெருமையை, சிகாகோ மாநாட்டில் வீர முழக்கமிட்டுக்கூறிய சுவாமி விவேகானந்தருக்கு, நமது இளைய தலைமுறையின் மீது இருந்த அதீத நம்பிக்கை, இன்றைய பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகள் மீது இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.  ÷இந்தச் சமுதாயம் என்ற கட்டடத்தைத் தாங்கிப்பிடித்து, தூக்கி நிமிர்த்தும் தூண்களாக இளைஞர்களை விவேகானந்தர் கண்டார். அவர்களால்தான் இந்தச் சமுதாயம் தலைநிமிரும் எனவும் நம்பினார். ஆனால், அவர்களை நம்ப மறுக்கும் இன்றைய பெற்றோர்களாலும் சமுதாயத்தாலும்தான், இன்றைய இளைஞர்களுக்குக் குடும்பத்தின் மீதும், சமுதாயத்தின் மீதும் அக்கறை இருப்பதில்லை. "ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?' என்று தன்போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.  ÷அவர்களுக்கு, சமுதாய அக்கறை இல்லாததற்கு கல்விச்சுமையும் ஒரு காரணம். மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் கல்விச்சுமை அவர்களை அழுத்துவது என்னவோ உண்மை. இதனால், தன் குடும்பத்தைப் பற்றியே அக்கறை எடுத்துக் கொள்ளாத இளைய தலைமுறைக்கு, நாட்டைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எப்படி அக்கறை ஏற்படும்?  ÷இன்றைய சமுதாயத்தில், நவநாகரிக கலாசாரச் சீர்கேடுகள் பல தலைவிரித்தாடுகின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மது அருந்துவது, புகைபிடிப்பது, பெண்களை கலாட்டா செய்வது, கைப்பேசியைத் தவறாகப் பயன்படுத்துவது, பேருந்தில் பலரும் முகம் சுளிக்கும்படி அநாகரிகமாக நடந்துகொள்வது முதலியவைகளின் பிடியில் இன்றைய இளைஞர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.  இவைகளிலிருந்து அவர்களைக் கைதூக்கிவிடுவது யார் பொறுப்பு? எந்த இளைஞனுமே வேண்டுமென்றே கெட்டுப்போக நினைப்பதில்லை. இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்புவது இன்றைய சமுதாயம்தான். அவர்கள், மாற்றத்துக்காக எந்த நேரமும் காத்திருக்கின்றனர்.  ÷முதலில், இளைய தலைமுறையினர் ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்ந்தாலொழிய சமுதாய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  ÷மனதை பாம்புக்கு உருவகப்படுத்துகிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். ""மனம் மனிதனைக் கொன்றுவிடும். ஆனால், மனிதனை உயர்த்தவும் செய்யும். அது எப்படிக் கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்தது. மனதைப் பக்குவப்படுத்துவதும் மனமே; திரியவிடுவதும் மனம்தான்! பாம்பைத் திரியவிடாமல் அடக்கும் மனிதன், மனமாகிய பாம்பையும் அடக்க வேண்டும். மனதை அடக்கக் கற்றுக்கொண்டவனுக்கு ஆபத்தில்லை; கஷ்டமுமில்லை'' என்கிறார்.  ÷இன்றைய இளைய தலைமுறையினரின் மனதைப் பலவழிகளில் திசை திருப்பும், குடும்பச் சூழல், அரசியல், திரைப்படம், தொழில்நுட்பம், பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவைகளில் உள்ள சீர்கேடுகள் முதலில் களையப்பட வேண்டும். இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. அவர்கள் எந்த நேரமும் மாறத் தயாராக இருக்கின்றனர். அவர்களை வழிநடத்தத்தான் யாருமில்லை.  ÷""சோதனை இல்லாமல் சாதனை இல்லை'' என்ற அப்துல் கலாமின் பொன்மொழியை மனதில் கொண்டு, பல சோதனைகளுக்கு இடையேயும் பல சாதனைகளைப் படைத்துவரும் இன்றைய இளைய சமுதாயத்தை முழுக்க முழுக்க நம்புவதன் மூலம்தான், அவர்களின் ஆற்றலை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும். வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். சமுதாயத்தின் சீர்கேடுகளை அவர்களால் மட்டுமே களைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இனியாவது, சுவாமி விவேகானந்தர் கண்ட கனவு பலிக்கட்டுமே...!
கருத்துக்கள்

ஆம். சமுதாயம் நெறி கெட்டு இருக்கையில் இளைய தலைமுறை தறிகெட்டுத்தான் இருக்கும். இளைய தலைமுறையினரை நம்பத்தான் வேண்டும். இளைய தலைமுறையினரும் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும். இளைஞர்களை வழி நடத்த தகுந்தோர் உருவானால் இளைய தலைமுறை வெல்லும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 5:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆம். சமுதாயம் நெறி கெட்டு இருக்கையில் இளைய தலைமுறை தறிகெட்டுத்தான் இருக்கும். இளைய தலைமுறையினரை நம்பத்தான் வேண்டும். இளைய தலைமுறையினரும் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும். இளைஞர்களை வழி நடத்த தகுந்தோர் உருவானால் இளைய தலைமுறை வெல்லும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/9/2010 5:22:00 AM கட்டுரையைப் பாராட்டும் வகையில் எழுதிய இக் குறிப்புரையில் என்ன தவறு உள்ளது என எடுத்துள்ளீர்கள்?தினமணியின் நடுநிலைமை சரிவது ஏன்? அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2010 6:36:00 AM
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக