செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தமிழ்க்காப்புத் தளபதி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்

'சிலர் தமிழால் வளர்ந்தார்கள். சிலர் தமிழை வளர்த்தார்கள்''

natpu நூற்றாண்டுவிழா கொண்டாடப் பட்டுக்கொண்டிருக்கும் தமிழறிஞர் இலக்குவனாரின் நினைவரங்கம் சென்னை ஒய்.எம்.சி. ஏ மையத்தில் சமீபத்தில் நடந்தது.
விழாவில் வரவேற்புரை ஆற்றியவர் இலக்குவனாரின் புதல்வரான மறைமலை. '' இலக்குவனார் தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியை முடித்துக் கொண்டிருந்த போது அது வெளியே வர வேண்டும் என்று விரும்பியவர் திரைப்பட இயக்குநரான ஏ.கே.வேலன்.மற்றொரு திரைப்பட இயக்குநரான கே.சுப்பிரமணியத்திடம் அதற்கான விழாவை நடத்தும் பொறுப்பு விடப்பட்டிருந்தது.
அப்போது குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனைக் கொண்டு இதை வெளியிடத்திட்டமிட்டிருந்தார் சுப்பிரமணியம். அண்ணாவும் கலந்துகொள்ள இருந்த அந்த விழாவில் ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வதை இலக்குவனார் சிறிதும் விரும்ப
வில்லை.அதை இயக்குநர் சுப்பிரமணியத்திடம் சொல்லிவிட்டார்.1962 ல் குடியரசுத் தலைவர் இசைவு கொடுத்தும் அதை விரும்பாமல் இலக்குவனார் மறுத்ததை மாநிலங்களவையில் அண்ணா பேசி அது பதிவாகியிருக்கிறது.
அந்த நூலுக்கான முன்னுரையில் இலங்கையைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே பார்த்திருக்கிறார் இலக்குவனார்.அவருடைய ஆய்வேடு கூட அவருடைய போர்க்குணத்தைக் காட்டுகிறது.63 ஆண்டுகள் வாழ்ந்த அவர் தமிழுணர்வுடனேயே வாழ்ந்திருக்கிறார் '' என்று பேசினார்.

அடுத்துப் பேச வந்த பாஸ்கரன் இலக்குவனாரைப்பற்றிய ஒரு சம்பவத்தை நினைவு படுத்தினார். '' கோவையில் நடந்த ஒரு மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன் பேசும் போது ஆங்கிலத்திற்கு இணையாகத்தமிழை உயர்த்த வேண்டும் ' என்று பேசிய போது இலக்குவனார் அதற்கு உடனே மறுப்புத் தெரிவித்து ''நீங்கள் என்ன நாவலரா? ஆங்கிலத்திற்குக் காவலரா?''என்று எதிர்ப்பைத் தெரிவித்தார். இங்குள்ள சிலர் தமிழால் வளர்ந்திருக்கிறார்கள். இவரோ தமிழை வளர்த்தவர்'' என்றார்.
சிறப்புரை ஆற்றியவர் பேராசிரியர் சாகுல்ஹமீது .'' இலக்குவனாரையும் மாணவர்களையும் பிரிக்க முடியாது. தமிழையும் பிரிக்க முடியாது.மதுரை தியாகராஜர் கல்லூரியில் நான் சேர்ந்தபோது அப்போது அங்கு தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் இலக்குவனார்.அப்போது நடந்த இந்தி மொழித்திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக இலக்குவனார் தேசியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.1963 ஆம் ஆண்டில் அண்ணா முன்னிலையில் இந்தி எதிர்ப்பைப் பற்றிப் பேசியவர் அவர்.அதன் பிறகே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்தது.நாளிதழ்களில் விஜயம் என்று இருந்ததை வருகை என்றும் ஸ்ரீயை திரு என்றும் மாற்றி எழுத வைத்ததில் அவருக்கு முக்கியப்பங்குண்டு.அப்போது மாணவராக இருந்த கா.காளிமுத்து '' ஸ்ரீஸ்ரீ என்று சிரித்தவர்கள் இப்போது திருதிருவென்று விழிக்கிறார்கள்'' என்று பேசினார்.1967ல் மாணவர்கள் முழுவதுமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியை மாற்றினார்கள். அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் பணியிடங்களில் எங்கே தன்மானம் குறைகிறதோ அப்போதெல்லாம் இலக்குவனார் அவற்றிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
சுயநலத்தை மட்டும் அவர் கடைப்பிடித்திருந்தால் எத்தனையோ பதவிகளுக்கு வந்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்படி இறங்க வில்லை. உஸ்மானியப் பல்கலைக் கழகத்திற்கு அவர் மாற்றப்பட்டபோது அதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்த போது சொன்னார் '' நான் மாற்று மாநிலத்தில் மொழியைப் பரப்புவதற்காகச் செல்கிறேன் '.' அது இலக்குவனாரின் தனித்த பண்பைக்காட்டுகிறது''.
மொழியுணர்வைத் தன்வாழ்வில் பிரதிபலித்து வாழ்ந்த இலக்குவனாரைப் போன்றவர்கள் - இன்றைய வறண்ட சூழலில் நினைவுகூரப்படுவதே அபூர்வமாகத்தான் நிகழ்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக