ஞாயிறு, 15 நவம்பர், 2009

இலங்கையில் இப்போது எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்ற வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்



சென்னை, நவ. 14: இலங்கையில் இப்போது எஞ்சியுள்ள தமிழ் மக்களையாவது காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று "ஈஷா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
"ஈழம்- மெüனத்தின் வலி' என்ற நூலின் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நூலை வெளியிட்ட பின் அவர் பேசியதாவது:
உலகில் நீண்ட காலமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. 20-ம் நூற்றாண்டில் நடந்த வன்முறை, போர்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மனிதராக இருப்பதற்கே நாம் வெட்கப்படும் நிலை உருவானது.
ஆனால், இப்போது நம் வீட்டு வாசலான இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் மனிதர்கள் மட்டுமல்லாமல் மனிதத் தன்மையும் செத்துவிட்டது.
நோக்கம் சரியானது என்று நாம் கருதுவதால் தான் உயிரையும் துச்சமென மதித்து போராடுகிறோம். பாரபட்சமான போக்கு, அநீதி நடப்பதே அனைத்து போராட்டத்துக்கும் காரணம்.
பிறர் செய்யும் அநீதிகள் மட்டுமே நமக்கு தெரிகிறது. நாம் செய்யும் அநீதிகள் நமக்குத் தெரிவது இல்லை.
எந்த நோக்கமாக இருந்தாலும், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், நாகரிகம் அடைந்துள்ள நிலையில் போருக்கு, வாய்ப்பே அளிக்கக் கூடாது.
போர், வன்முறையால் எந்தப் பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு காண முடியாது. ஏற்கெனவே நடந்த போரால் இழந்தவைகளை நாம் ஒருபோதும் மீட்க இயலாது. வருங்கால தலைமுறையாவது இழப்புகளைச் சந்திக்காத வகையில் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோபமும், குரோதமும் தொடர்வதால் பயன் இல்லை. நடந்த அநீதியால் ஏற்பட்ட பாதிப்பை யாராலும் சீர் செய்ய இயலாது. ஆனால், இனி வரும் காலத்தில் அநீதி நடக்காமல் தடுக்க முடியும்.
அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்ற உணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும்.
இலங்கையில் எஞ்சியுள்ள தமிழ் மக்களையாவது காப்பாற்ற நம்மிடம் சக்தி உள்ளது. அதற்கான அமைப்புகளும் உள்ளன. இது நமது கடமை ஆகும்.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் தான் நாம் இதில் வேகமாக செயல்படாமல் உள்ளோம்.
மக்களை பிளவு படுத்த மதம், ஜாதி, மொழி என பல கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், மக்களை மனித நேயத்துடன் ஒருங்கிணைக்க நம்மிடம் கருவிகள் ஏதும் இல்லை.
உலகில் யார் துன்பமுற்றாலும் நாம் துன்புறுவது போன்ற உணர்வு இருந்தால் மட்டுமே மனிதத் தன்மை வளர்ந்தோங்கும்.
இலங்கையில் இப்போதுள்ள நிலையில் தமிழ் மக்களை காக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இதற்கான சிறிய முயற்சிகளையாவது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இது, நமது மனிதத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும்.
இதன் மூலம் இலங்கையில் வாடும் தமிழர்களுக்கு, நமது ஆதரவான நிலையால் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
சென்னை-மயிலை பேராயர் சின்னப்பா, நடிகர்கள் சிவகுமார், பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

மதிப்பிற்குரிய சத்குரு தன் அன்பர்களை ஒன்று திரட்டி அவர் கூறியவாறு எஞ்சியுள்ள தமிழர்களைக காப்பாற்றவும் தமிழ் ஈழ இறையாண்மையைக் காப்பாற்றவும் முன் வரவேண்டும். வெறும் அறிவுரையால் பயன் இல்லை. கட்சித் தலைவர்களை நம்பியும் பயன் இல்லை. எனவே. நன்றே செய்க! இன்றே செய்க! விரைந்து செய்க!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2009 2:22:00 AM

தமிழ் மக்களுக்கு இன உணர்வு கிடையாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தியநாட்டுக் குடிமக்கள் என்ற அடிப்படையில் மிகுதியாக இந்தியர் என்ற உணர்வு உள்ளது. ஆனால் காங்.அரசிற்குத் தமிழ் மக்கள் இந்தியராகவும் தெரிவதில்லை. தமிழராகவும் தெரிவதில்லை. பெரும் வெட்கக்கேடு என்னவென்றால் மனிதர்காகக் கூடக் கருதுவதில்லை. தமிழகக் காங்கிரசோ மத்தியக காங்கிரசிற்கு அடிமை. தமிழகக் கட்சிகளோ அச்சத்தாலும ஆதாயத்தாலும் ஆதாய எதிர்பார்ப்பாலும் மத்திய அரசிற்கு அடிமை. வெட்கமின்றி அடிமைத்தன்தை ஒப்புக் கொண்டு அடிமையால அடிமைக்கு என்ன செய்ய முடியும? என்று பேசத் தெரிகிறதே தவிர காங்கிரசு தமிழகக் கட்சிகளை நம்பியிருக்கும்பொழுது கூட குடும்பநலன்தான் மேலோங்குகினற்தே தவிர இனநலன் என்பது சிறிதும் எட்டிப்பார்ப்பதில்லை. எனவேதான் இனப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்த முடிகிறது. எனவே. மதிப்பிற்குரிய சத்குரு தன் அன்பர்களை ஒன்று திரட்டி அவர் கூறியவாறு எஞ்சியுள்ள தமிழர்களைக காப்பாற்றவும் தமிழ் ஈழ இறையாண்மையைக் காப்பாற்றவும் முன் வரவேண்டும். வெறும் அறிவுரையால் பயன் இல்லை. கட்சித் தலைவர்களை நம்பியும் பயன் இல்லை. எனவே. நன்றே செய்க! இன்றே செய்க!

By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2009 2:21:00 AM

சத்குரு ஜக்கி வாசுதேவ் இருக்கும் அக்கறை இந்திய அரசுக்கு இல்லை .

By mu.chandrasekaran
11/15/2009 12:13:00 AM

மத்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க் கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மக்கள் இனியாவது மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

By Ram Chetty
11/15/2009 12:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக