வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009
இன்று போலவே அன்றும்...

தமிழீழம்: கருணாநிதியின் கருத்துக் குழப்பம்

பேராசிரியர் து. மூர்த்தி எழுதிய "1989 - அரசியல் சமுதாய நிகழ்வுகள்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் கோவை விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகள் கடந்த இருபதாண்டு காலத்தில் எதுவுமே மாறவில்லையோ? என்று எண்ணச் செய்கின்றன. கருத்துக்குரிய சில பகுதிகள் மட்டும் இங்கே. - ஆசிரியர்

அவருக்கு இவர் மேல்? (19.6.89)

என்னதான் இருந்தாலும் கருணாநிதி தமிழ் நாட்டின் முதல்வர் அல்லவா? இருப்பதில் அவர் மேல் அல்லவா? அவரையும் விமர்சித்தல் எப்படி? - என்றெல்லாம் பலர் அதிமேதாவிகள் போலப் பேசுகிறார்கள். பிரச்சினையே அதுதான்! கருணா நிதி என்ற தனிமனிதனைப் பற்றிக் கடந்த 13 ஆண்டுக் காலமாக யார் கவலைப்பட்டார்கள்? ஆனால் முதல்வர் கருணாநிதி பற்றி நாம் கவனமாக இருக்கத்தான் வேண்டியிருக் கிறது.

* * *

இருப்பதில் அவர் மேலல்லவா? என்ற கேள்வி கோழைகளின் புத்திசாலித்தனமான கேள்வி யாகும். தமிழகத்தில் ஓர் அமைப்பு மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறோம். சுரண்டும் வர்க்க அமைப்பில் இவர் மேல் அவர் பரவாயில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. சோச லிச சமுதாய அமைப்புக்காகப் போராட வேண்டிய தருணத்தில் இந்த நிலபிரபுத்துவச் சக்திகளின் மேல் கீழ் பார்ப்பது அரசிய லாகாது!

“அவரை எடுத்து விட்டால் யாரைக் கொண்டு வந்து வைக்கப் போகிறீர்கள்” என ஏதோ பிடி போட்டு விட்டது போலக் கேட்கின்றனர். நடு வீட்டில் நரகல் இருக்கிறது, அதை எடு என்கிறேன், அதை எடுத்து விட்டால் அங்கே என்ன வைப்பது எனக் கேட்கிறார்கள் எனப் பெரியார் கடவுள் பற்றிக் கூறும் போது குறிப்பிடுவார். அது கருணாநிதிக்கும் பொருந்தும்.

தமிழ் மொழி, இனம், நாடு என்ற போர்வையில் ஓர் அராஜக கும்பல் தமிழ்நாட்டைக் கவ்விக் கொண்டுள்ளது. பெரியார், அண்ணா பாதை எனக் கூறிக் கொண்டு தமிழ் இன விரோதிகள் முற்போக்குச் சக்திகளின் தடுப்புச் சுவராக உள்ளனர். கைதுகள் தொடர்கின்றன. சித்திர வதைகள் படர்கின்றன. மக்கள் பீதியால் நாளும் ஒடுங்கி வருகின்றனர். ஜனநாயகக் காற்று இலேசாக வீச வேண்டும் என்றாலும் இந்தப் போலிகள் புறந்தள்ளப்பட வேண்டும்.

தனிப்பட்ட முறையில் நாம் யாருக்கும் பகைவர் அல்ல! அதே சமயம் தமிழ்நாட்டை ஏலம் போடவும் அனுமதிக்க முடியாது.

* * *

தனித்தமிழ் ஈழம் கருணாநிதியின் கருத்துக் குழப்பம் (5.4.89)

கருணாநிதி கெடுத்த உயிர்ப் பிரச்சினைகள் ஒன்று இரண் டல்ல. அவற்றுள் தமிழனைக் குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கியவை இரண்டு ஆகும்.

1) தேசிய இனங்களின் விடுதலையும் கூட்டாட்சியும்,

2) தனி ஈழம். கருணாநிதியின் பேச்சுகள் நடவடிக்கைகள் ஆகிய வற்றைக் கூர்ந்து கவனிப்பார், ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். கருணாநிதியின் தமிழ்க் குரல் என்பது எல்லா காலத்தும் தமிழனைத் தில்லிக்கு அடகு வைக்கும் அடிமை பேரக் குரலாகும்.

சட்டமன்ற நாற்காலிக்காகத் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கழுத்தைத் திருகிக் கொன்றது தி.மு.க. பின்னர் மாநில சுயாட்சி என்று முழங் கினார் கருணாநிதி. இன்று வரை அந்த கொள்கைக்கு வரைவிலக்கணம் தரப்படவில்லை. அதிக அதிகாரமா? சுயநிர்ணய உரிமையா? பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய, விடுதலை பெற்ற இனங்களின் கூட்டாட்சியா? எது மாநில சுயாட்சி?

அரசியல் சட்டத்தை எரிக்கின்றோம் என்று கூறி விட்டு, அதன் நகலை எரிக்கின்றோம் என நழுவி, முழங்கால் தேய்ந்த பின்னால், “அரசியல் சட்டம் சுடச்சுட ஒளிரும் பொன் போன்றது. ரோஜா இதழ் போல மென்மையானது” என மத்திய அரசிடம் படிகிடந்த கருணாநிதி, மத்திய அரசுக்கு எதிராக ஈழத் தமிழர் பிரச்சினையில் முடிவு எடுப்பார் எனக் கருதுவது அரசியல் அறியாமை ஆகும்.

ஈழப் போராளிகளுக்கு இடையே குழுச் சண்டையில் கருணாநிதி ‘மீன்பிடிக்க’ முயன்றதால் டெலோ அமைப்பின் தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டார். இழவு வீட்டில் அகப்பட்டதைச் சுருட்டும் கதை போல இவர்கள் ஈழப் பிரச்சினையை ஆக்கிப் போராளிகளை நிரந்தர மாகப் பிரித்து வைத்தனர். இன்று அதன் விளைவு பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகும்.

தமிழ் ஈழம் அடைந்தால் கருணாநிதி மகிழ்வாரா இல்லையா என்பதா பிரச்சினை? தனி ஈழம்தான் தி.மு.க.வின் கொள்கை என்றால், அதற்கான நடவடிக்கை என்ன? மக்களையும், போராளி களையும் கொல்லும் அமைதிப்படை அங்கே இன்னும் இருக்க வேண்டுமா? ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்தம் எதிரிகளுக்கும் நடக்கும் யுத்தத்தில் எதிரிகளின் இழப்புக்காக கருணாநிதி கண்ணீர் வடிப்பது யாரை நிறைவு செய்ய?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக