வியாழன், 9 ஜூலை, 2015
புதன், 8 ஜூலை, 2015
தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்
தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!
தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப்
புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை.
வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே
தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச்
சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் “என்மனார்’ “என்ப’ “என்மனார்
புலவர்’ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி
தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே தொல்காப்பியத்தை
விளக்க உரை நூலாக மட்டும் கருதாமல் வரலாற்று நூலாகவும் கருத வேண்டும்.
– பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்:
(Tholkāppiyam in English with critical studies)பக்கம்20
அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது – க.அன்பழகன்
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது
. . . .மேலும், தொல்காப்பியர் வடமொழியினும்
தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும்
ஐந்திரமோ, பாணீனீயமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல
என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே
பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன்
புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின்
பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; “பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை
இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும்
முதல்நூல் ஆக வழியில்லை. மேலும், பிறமொழி இலக்கண நூலார் எவரும்
எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் காண்பர். பிற்காலத்தில்தான்
செய்யுள் யாப்பும் (கட்டும்), கருத்துக்கு அழகு செய்யும் அணியும் குறித்து
இலக்கணம் செய்வாராயினர். ஆனால், தொல்காப்பியனார் விவரித்த “பொருள்” இலக்கணம் குறித்த சிந்தனையே வடமொழியாளரிடத்தில், என்றும் எழவில்லை.
“பொருள் என்றது சொல்லின் பொருள் விளக்கம் கருதியது அன்று. அது வாழ்க்கை
விளக்கம். அதுவும் இலக்கியத்தில் இடம்பெறும் முறையையும் வகையையும்
விளக்குவது. அகமும் புறமுமாய்ப் பகுக்கப் பெற்ற இலக்கிய உலகில் அகத்திணை,
புறத்திணை எனவும், களவுகற்பு எனவும், பிறவாறும் வகை செய்யப்பட்டு உலகியல்
வாழ்வியல் இணையும் ஆடவரும் மகளிரும் ஆன இரு சாராரும் எய்தும் உணர்வுகளைப்
புறலப்படுத்தும் காட்சிகளைச் செய்யுளாக்குவதற்கு உரிய இலக்கணத்தை
விவரிக்கும் தனிச் சிறப்புடையதாகும்.
– பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின்) தொல்காப்பியர் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13
தொல்காப்பியத்துக்கு முன் பல்வகை இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன – மா.நன்னன்
தொல்காப்பியத்துக்கு முன் பல்வகை இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன.
நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள்
தொல்காப்பியமே முதல் நூலாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை
இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்றும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத்
துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில்
பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பனபோலக்
கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு
போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் சில்லாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம்
புறக்கணித்துவிடக் கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துக்கள் நாட்டில் பரவவேண்டும்.
– பேராசிரியர் புலவர் மா.நன்னன்: (கலைஞரின்) தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம்.23
அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன – கா.பொ.இரத்தினம்
தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன
தொல்காப்பியத்துள்,
”என்மனார் புலவர்””
”என மொழிப, உணர்ந்திசி னோரே””
”பாடலுட் பயின்றவை நாடுங் காலை””
”சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே””
” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே “”
”நல்லிசைப் புலவர் , , , , வல்லிதிற் கூறி வகுத்துரை த்தனரே “”
”நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே “”
”நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே “”
என்றிவ்வாறு காணப்படுகின்ற சொற்றொடர்கள்,
தொல்காப்பியர் காலத்தில் பல தமிழ் நூல்கள் பெருவழக்கிலிருந்தன என்பதைப்
புலப்படுத்துகின்றன, தொல்காப்பியம் இயற்றப்படு முன் அந் நூல்கள் எவ்வளவு
ஆண்டுகளாக விளங்கிவந்தன என்பதற்கு விடை காண முடியாதிருக்கிறது,
தொல்காப்பியத்துக்குப் பின்னெழுந்த பல இலக்கண நூல்களுள் ஒன்றாகிய
நன்னூலுக்கும் தொல்காப்பியத்திற்கு மிடையிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட
வருடங்கள் கழிந்தனவெனில் தொல்காப்பியத்திற்கும் அதற்கு முன்னிருந்த இலக்கண
நூல்களுக்குமிடையில் எவ்வளவாயிர வருடங்கள் கழிந்திருக்கும்? தொல்காப்பிய
இலக்கணம் தோன்றிய காலத்திருந்த பல நூல்கள்கூட நமக்குக் கிடைக்கவில்லை,
தொல்காப்பியம் கூறும் சில இலக்கணங்களுக்குரிய இலக்கியங்கள மறைந்து விட்டன.
”தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே””
எனுமித் தொல்காப்பியச் சூத்திரத்தில்
வழிநூல்கள் செய்யும் முறை நான்காக வகுக்கப் பட்டிருக்கிறது. தொகுத்தும்,
விரித்தும், தொகுத்து விரித்தும், மொழி பெயர்த்தும் செய்யப்பட்ட நூல்கள்
தொல்காப்பியர் காலத்திலிருந்தன. இந் நூல்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து
கொள்ள முடியாதிருக்கிறது.
– அறிஞர் கா.பொ.இரத்தினம் அகநானூற்றுச் சொற்பொழிவுகள் : பக். 43:44
ஞானாலயா கிருட்டிணமூர்த்தி 75 ஆவது பிறந்த நாள்
நண்பர்களே,
நம் பாரதத் திருநாட்டின்
விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான்,
ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள்.
எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015,
இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும்.
இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட,
கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும்
சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.
மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா!
உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா!
நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,
பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்
எனத் தங்களை
இன்றே அழைக்கின்றேன்.
வாருங்கள், வந்து வாழ்த்துங்கள்
கதைத்தமிழ் 13ஆவது ஆய்வு மாநாடு
ஆனி 26, 2046 / சூலை 11, 2015
முற்பகல் 9.00 முதல் மாலை 6.00 வரை
கோயம்புத்தூர்
செவ்வாய், 7 ஜூலை, 2015
தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்
கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் அவரது அறிவுக்குச் சான்றாய்த் திகழ்கின்றது.
– பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்:
(Tholkāppiyam in English with critical studies) பக்கம் 20
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)