திங்கள், 14 ஏப்ரல், 2025

மூ மா(Dinosaur) – இலக்குவனார் திருவள்ளுவன்

      29 October 2017      அகரமுதல

 

மூ மா(Dinosaur)  

 ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை.  நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த – அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை – ஊர்வனவற்றை  மூ ஊரி – மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை  முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள்.  இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.

 மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான்  தயனோசர் என்னும் சொல்லும் குறித்தாலும், ஊர்வன அல்லாத சில உயிரிகளும் இவற்றில் அடங்கும் என்பதால், தமிழறிந்தோர் தவறு என எண்ணுவர். எனவே, மா என்பது விலங்கினத்தைக் குறிப்பதால் இவ்வகை உயிரினங்களை மூமா எனலாம். இவற்றுக்கும் முந்தையவை  தொன்மா  ஆகும்.  எனவே மூமா  என்பதைக் கேலியாக எண்ணாமல் பயன்படுத்தினால் எளிய பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மூமா வகைகளை அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கம் முதலியவற்றின் அடிப்படையில்தான் பெயரிட்டுள்ளனர். அவ்வாறே நாமும் தமிழில் கூறலாம். எனினும் சில உயிரினங்களை அவற்றின் நேர்  பொருளில் குறிப்பதைவிடத் தோற்றம் அல்லது உண்ணும் முறை அல்லது செயல்பாட்டு அடிப்படையில் கூறுவதே ஏற்றதாக இருக்கும். மேலும், இவ்வினங்கள் நீர் வாழ்வன அல்லது பறப்பனவாக இருப்பின் அதற்கேற்ற வகையில் மீனம், நீரி, புள்(பறவை) முதலான அடைமொழிகளுடன் அழைக்கலாம். தமிழில் குறிப்பிடுவதால்  அதன் உடல் அமைப்பை வைத்துக்கொண்டே பெயரைப் புரிந்து கொள்ளவும் அல்லது பெயர் மூலம் உருவ  அமைப்பைப் புரிந்து கொள்ளவும் இயலும். சான்றாகப் பரு மூமா என்னும் பொழுது மிகவும் பருத்துள்ள மூமா எனப் புரிந்து கொள்ளலாம். அல்லது மூன்று கொம்புடைய – முக் கொம்புடைய- மூமாவின் படத்தைப் பார்த்தால் முக்கொம்பு மூமா  எனப் புரிந்து கொள்ளலாம். புரியாமல் பிறமொழிச் சொற்களை மனப்பாடமாகக் கூறுவதை விடப் புரிந்து சொன்னால் எளிதில் மனத்தில் பதியுமல்லவா?

மூமா  வகைகளை இனிப் பார்ப்போம்.

  • ஆப்பிரிக்க வேட்டை மூமா (Afrovenator):

 ஆப்பிரிக்க வேட்டையாளர் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க வேட்டை மூமா எனத் தமிழில் கூறலாம். விலங்குபோல் காலும் மூன்று விரல்களும் கொண்ட இருகாலி. ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. இதன் மூக்கிலிருந்து வால் வரை ஏறத்தாழ 9 கோல்(மீட்டர்) நீளம் உள்ள விலங்கு; இதன் எடை ஏறத்தாழ  1.5 பாரம்(டன்).

  • ஈரளவிப் பல் மூ மா / இரை கொல் மூமா (Dimetroden):

 வெட்டுப்பற்களும் கூரிய பற்களும் என  ஈரளவுப்  பற்களை உடையன என்னும் பொருளில்  பெயரிடப்பட்டுள்ளது. ஈரளவிப் பல் மூ மா என்பது  சரியாக அமையும். ஏனெனில்  தோற்றத்தின் அடிப்படையில் இதனை  மூத்த ஊர்வனவற்றுடன் கருதினாலும் இவ்வினம் அதற்கும் முந்தைய பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இரையைக் கொன்று தின்னும் மூத்த உயிரினம் என்னும் பொருளில் இரைகொல் மூமா  என்றும் சொல்லலாம். இரையைக் கொன்று தின்பன பலவாக இருப்பினும் மூத்த இனம் என்ற வகையில் அச் சிறப்பை இவ்வுயிரினத்திற்குத் தரலாம். 285 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 3.5 கோல்(மீட்டர்)/11 அடி நீளமானது; சிறு விலங்குகளைக் கொன்று இரையாக உண்ணும் உயிரி; முதுகுத் துடுப்பு உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த உதவும்.

  • கிளியலகி மூ மா(Achelousaurus):

 கிரேக்கத் தொன்மைக் கதையில் குறிக்கப்படும் ஆக்கிலோசு (Achelous)என்னும் கொம்பிழந்த ஆற்றுத் தேவதையின் பெயரில் இம் மூமா அழைக்கப்பெறுகிறது.  தோற்றத்தில் இதன் மூக்கு,  கிளியின்அலகைப் போல் உள்ளதால் நாம் இதனைக் கிளியலகி மூமா எனலாம். இது 74  நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூமா எனப்பெறுகிறது.  இதன் உயரம் 6 கோல்(மீட்டர்). இது பயிருண்ணி விலங்கு.

  • கொடு நக மூ மா(deinonychus):

 பயங்கரமான கை என்னும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. கொடு(வளைந்த) நகம் உடையதால் கொடுநக மூமா  என நாம் அழைப்பின் ஏற்றதாக இருக்கும்.  மனிதனின் அளவே உயரமானது; விரைவாகச் செல்லக் கூடியது. இரையாகும் உயிரிகளின் குடல்களைக் கிழித்து எடுப்பதற்கேற்ப 12 சிறுகோல்(செ.மீ)/4.5 அங்குலம் நீள வளைந்த நகங்களை உடையது.

  • கொம்பு மூ மா (Agathaumas):

 பெருவிந்தை என்னும் பொருளுளில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொம்புமுக உயிரினங்களில் இவ்வகைதான் முதலில் கண்டறியப்பட்டது. கொம்புடைய மூமா என்பதால் கொம்பு மூமா என்று சொல்வது எளிதில் புரிவதாக அமையும். 65 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 30 அடி நீளமும் 6 பாரம்(டன்) எடையும் உடையது.

  • சதை உண் மூ மா (Allosaurus):

 பல்லியினங்களில் இருந்து இதன் முதுகு மாறுபட்டு அமைந்துள்ளமையால் மாறுபட்ட பல்லி என்னும் பொருளில் இதற்குப் பெயர் சூட்டி உள்ளனர். பிற உயிரிகளின் சதைகளைக் கிழித்து உண்ணும் பழக்கமுடைய இதனைச் சதைஉண் மூமா என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  இருகால் உயிரினம்; 13 கோல்(மீட்டர்)/43 அடி நீளமும் இரண்டு பாரத்திற்கு(ton) மேல் எடையும் உள்ளது; 3 கோல்(மீட்டர்)/10 அடி உயரமானது.

  • சிதள் மூ மா (Stegosaurus):

 கூரைப்பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. முதுகில் உள்ள சிதள்கள் கூரைபோல் அமைவதால் அவ்வாறு கூறுகின்றனர். அதைவிடச் சிதள் மூமா என்பது தமிழுக்கு ஏற்றதாக அமையும். 1.5 பாரம்(ton) எடையுள்ளது. முதுகில் உள்ள சிதள்கள் உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும். 8 கோல்(மீட்டர்)/26அடி நீளமுள்ளது; தீங்கற்றது; பயிர் உண்ணி.

  • சிறு மூ மா(Euparkeria):

 இங்கிலாந்து நாட்டு இயற்பியலாளர்-விலங்கியலாளர் வில்லியம் கிச்சன் பார்க்கர் (William Kitchen Parker :23.06.1823 – 03.07.1890)  என்னும் அறிஞரைப்  போற்றும்  வகையில் பார்க்கரின் சிறந்த விலங்கு என்னும் பொருள்பட இப்பெயர் இடப்பட்டுள்ளது. எனினும் சிறிய மூ மா என்பதால் நாம்  சிறு மூ மா என்று சொல்லலாம். 245 பேராயிரம் (மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; கோழி அளவு உடையது; ஊண் உண்ணி; வெகுவிரைவாகச் செல்லக் கூடியது.

  • நெட்டெலும்பு மூ மா (Acrocanthosaurus) :

 நெடுமுதுகெலும்புப் பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. நெட்டெலும்புப் பல்லி  என்று சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, நெட்டெலும்பு மூ மா எனலாம். இருகால் உயிரி; பிற உயிரிகளை இரையாகக் கொண்டு வாழும்;  இதன் நீளம் ஏறத்தாழ 12 கோல்(மீட்டர்); இதன் எடை  6 முதல் 7   பதின் பாரம் (மெட்ரிக் டன்).

  • நெடுங்கழுத்தி மூ மா(Mamenchisaurus):

  தாவர உண்ணி. 156 முதல் 145 பேராயிரம் (மிலலியன்) ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம். 9.3 கோல் (மீட்டர்)/31 அடி நீளமுடைய நெடுங்கழுத்தும் நீண்ட வாலும் உடைய நாற்கால் விலங்கு. மிக நீளமான கழுத்தையுடைய தோற்றத்தின் அடிப்படையில் நெடுங்கழுத்தி மூ மா எனப்படுகிறது. இதன் நீளம் 21 கோல்(மீட்டர்).

  • பயிர் உண் மூ மா (Dryosaurus):

 இதன்பின் கடைவாய்ப்பற்கள்  கருவாலி(ஓக்) இலை போன்று இருப்பதால் கருவாலி(ஓக்) பல்லி என்னும் பொருளில் அழைக்கின்றனர். பயிரினங்களை உண்பதால், பயிர் உண் மூமா என்று நாம் சொல்லலாம். சதைஉண் மூமாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக மிக விரைவாகச் செல்கிறது.

● பரு மூ மா  (Brontosaurus):

 இடி முழக்கப் பல்லி என்னும் பொருளில் பெயர் கொண்டது. பருத்த உடல் அமைப்பின் அடிப்படையில் நாம், பரு மூமா என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 200 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 21 கோல்(மீட்டர்) /69 அடி நீளமுடையது.

  • புடைப்போட்டு மூ மா(Stygimoloch) :

 ஃச்டைக்சு(styx) ஆற்றிலிருந்து வந்த பேய் என்னும் பொருளில்  அழைக்கப் படுகிறது.  பயிருண்ணி மூமா; இருகால் விலங்கு. இதன் தலை ஓட்டில் கொம்பு போன்ற 4 அங்குலப் புடைப்பு இருக்கும். எனவே, இதனைப் புடைப்போட்டு மூ மா என்று சொல்லலாம். இதன் நீளம் 2 முதல் 3 கோல்(மீட்டர்); எடை 170 நிறை.

  • புள்ளலகி மூ மா(Pterodactylus):

 சிறகு விரல் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. பறவையின் அலகைப் போன்ற அலகு உடையது.  எனவே, புள்ளலகி மூமா என்று சொல்லலாம். மிக நீண்ட இறக்கை உடையது.

  • பெரு மூ மா(Tyrannosaurus):

 பல்லி அரக்கன் என்னும் பொருளில் குறிப்பிட்டுள்ளனர். அரக்கன் என்பது உயர்திணை. அரக்கனைப் போன்ற பெருந்தோற்றம் கொண்டது என்பதால் பெருமூமா என்று சொல்வதே சிறப்பாய் அமையும். 100 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம். 5 கோல்(மீட்டர்)/16.2 அடி உயரமும் 14 கோல்(மீட்டர்)/45 அடி நீளமும் உள்ளது; 6.8 பதின்பார(metric ton)எடை உடையது.

  • முக்கொம்பு மூ மா (Triceratops):

 முகத்தில்  மூன்று கொம்புகளை உடையது. மூன்று கொம்புடைய முகம் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. எனவே, மூன்று  கொம்புடைய – முக்கொம்புடைய – மூமா என்னும் பொருளில் முக்கொம்பு மூமா என்பது பொருத்தமாக இருக்கும். 6 பாரம்(ton) எடையுடையது; 9 கோல்(மீட்டர்)/30அடி  நீளமுடையது. இதுவும் பயிர் உண்ணியே.

  • மூச் சிறகி (Pteranodon):

 பெரும் சிறகின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  பெருஞ்சிறகினை  உடைய மூத்த இனம் என்பதால் மூச்சிறகி எனப்படுகிறது. 100 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 7.5 கோல்(மீட்டர்)/25 அடி நீளத்தில் பெருஞ் சிறகுடையது. எனினும் பறவை போல் உயரத்தில் பறக்காது. தலையிலுள்ள தட்டைக் கொம்பு சுக்கான் போல் செயல்படும்.  இரையாகப் பிற உயிரைக் கொன்று தின்னும் இரைகொல்லி விலங்கு.

  • மூ நீரி (Plesiasaurus):

 பல்லியை விட நீர் வாழ் மீனினத்துடன் ஒப்புமை மிகுதியாக உள்ளமையால் பல்லியை ஒத்தது என்னும் பொருளில் அழைத்துள்ளனர். நீரில் வாழும் உயிரி என்ற வகையில் தமிழில் தெளிவாகவே மூ நீரி என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 5 கோல்(மீட்டர்)/16 அடி நீளமுடையது.

  • மூப் புள் (archaeopteryx):

 தொன்மைச்சிறகு என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில்  மூலப்பறவை அல்லது முதல் பறவை என்னும் பொருள்கொண்ட உருவோகெல்(Urvogel) என்னும் செருமானியப் பெயரிலும் குறிக்கப்படுகின்றது. மூப்புள் எனத் தமிழி்ல்  இப்பொருளில் சுருக்கமாகச் சொல்வது சிறப்பாக உள்ளது.  195-135 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த உயிரினம்; .5 கோல்(அரை மீட்டர்) நீளம் உடையது; காகம் அளவுடையது. சிறு வடிவப்பறவை. எனினும்  இதன் சிறகுகள் நீளமானவை.

  • மூ மீனம் (Ichthysaurus):

 மீன் பல்லி என்னும் பொருளில் அழைக்கப்பட்டாலும் நீர் வாழ் உயிரினமான இதனை மூ மீனம் என்பதே பொருத்தமாக இருக்கும். 2 கோல் முதல் 10 கோல்(மீட்டர்)/(6.6 அடி முதல் 33அடி) வரை நீளமுள்ளது. பொதுவாகச் சிறிய அளவிலே காணப்பட்டவை. 225 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (கடற்பன்றி/டால்பின் வகை) உயிரினம். மீன்களை உண்பது. ஊனுண்ணி; பிற உயிரினங்களின் சதை முதலியவற்றை உண்ணும் உயிரினம்.

  • மூப் பெரு முதலை (Deionosuchus):

 பயங்கர முதலை என்னும் பொருளில் பெயரிட்டுள்ளனர். பெருத்த உருவம் கொண்ட முதலை என்பதால் மூப் பெரு முதலை என்று சொல்லலாம். 75 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 16 கோல்(மீட்டர்)/52அடி  நீளம் வரை உள்ளது.

 மேலும் நூற்றுக்கணக்கிலான மூமாக்கள் பற்றிக் கண்டறிந்து உள்ளனர். எனவே, இவற்றின் தொடர்ச்சியைப் பிறிதொரு நாளில் காணலாம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அறிவியல்
http://www.newscience.in/katturaikal/page-a5

ஞாயிறு, செட்டம்பர் 30, 2012




ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

காலிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

      13 April 2025      அகரமுதல



  புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநே
Tuesday, September 18, 2012 12:03 IST

மூன்று கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான எண்ணிக்கையில் கால்கள் கொண்ட பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சொல்வதுபோல்  பின்வரும்  பெயர்களின் அடிப்படையில்  அவற்றிற்கான விளக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாகச் சொல்வாதானால் பதின்காலி என்றால் பத்து கால்களை உடைய உயிரி  இழுநகக்காலி என்றால் இழுத்துக்கொள்கின்ற நகங்களை உடைய கால்களைக் கொண்ட உயிரி எனலாம். இனி இத்தகைய உயிரிகளின் வகைகளைப் பார்ப்போம்.

  1. அறுகாலி – hexapod
  2. ஆட்டுக்காலி – capriped
  3. ஆயிரங்காலி – millepede
  4. இணைப்புக் காலி – arthropod
  5. இருகாலி  – biped  
  6. இழுநகக்காலி – aeluropodous
  7. ஈரிரு காலி (நாற்காலி) – tetrapod
  8. உகைப்புக் காலி copepod
  9. எண்காலி – octopod
  10. ஏழிணைக்காலி – isopod
  11. ஒழுங்கிலி (விரற்) காலி – anomaliped
  12. ஒற்றைக்காலி – uniped
  13. குட்டைக்காலி – breviped
  14. கைபோல் காலி – brachiopod
  15. கோணற்காலி – taliped
  16. சாய்காலி – anglepod
  17. சிறகுக்காலி – pteropod
  18. சுணைக்காலி – chaetopod   
  19. சுருள்காலி  – cirriped
  20. தட்டைக்காலி – branchiopod
  21. தலைபோல்காலி – cephalopod
  22. தழைக்காலி – phyllopod
  23. துடுப்புக்காலி   – pinniped   
  24. நடைகாலி – Pereiopod
  25. நீந்துகாலி – Pleopod
  26. நுண்ணிழைக்காலி-Campodea
  27. நூறுகாலி – Chilopoda / centipede
  28. பதின்காலி – decapod
  29. பல காலி – polypod
  30. பற்பல காலி  – myriapod/ myriopod
  31. பன்முகக்காலி – amphipod
  32. பாம்புவடிவக்காலி  – anguiped
  33. பெருங்காலி – megapod, megapode   
  34. முவ்விரல் காலி – ornithopod
  35. முன்விரல்காலி – aliped
  36. மெத்துக்காலி – tylopod
  37. வயிற்றுக்காலி – gasteropod

http://www.newscience.in/articles/kalika

வியாழன், 10 ஏப்ரல், 2025

உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari - இலக்குவனார் திருவள்ளுவன்

 







உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari - இலக்குவனார் திருவள்ளுவன்

 

   காதி அல்லது கதர் - khadi என்பதற்குக் கைந்நூலாலை, கதர் ஆடை (ஆட்.), மெருகேறிய கதர்(தொ.நுட்., மனையியல்) எனக் கூறுகின்றனர். ‘மதிப்பு மிகுந்த’ என்னும் பொருளில் சொல்லப்பட்ட காதி - khadi/கதர் கையால் நூற்கப்படுவதையே குறிப்பிடுகிறது. கையில் கட்டும் காப்பு நூலைக் கைந்நூல் எனக் குறுந்தொகை(218.2) குறிப்பிடுகிறது. விசையால் இயங்கும் தறியை விசைத்தறி (ஆட்.,மனை.) என்றும் கையால் இயங்கும் தறியைக் கைத்தறி (வேளா.,மனை.) என்றும் சொல்வதுபோல் கையால் நூற்கப்படுவது என்ற பொருளில் கைந்நூல் என்பதே சரியானது.

கஞ்சுகம் என்னும்  உடை வகை குறித்து,

   கஞ்சுக முதல்வர்

 என இளங்கோ அடிகள்(சிலப்பதிகாரம்.26:138)கூறுகிறார்.

 

திருத்தக்கத்தேவர், உடைக்கு மேல் அணியும் குப்பாய உடை குறித்து,

 "வெங்கணோக்கிற் குப்பாய மிலேச்சனை" (சீவகசிந்தாமணி.431);.

என்கிறார்.

காவிரிப் பெருக்கின் பொழுது நீச்சல் ஆடையான ஈரணி அணிந்து நீராடச் சென்றதை,

வதுவை ஈரணிப் பொலிந்த நம்மொடு

புதுவது வந்தகாவிரி (அகநானூறு : 166 : 13-14)

என்கிறார் புலவர் இடையன் நெடுங்கீரனார்.

வையை ஆற்றில் நீராட மகளிரும் மைந்தரும் நீச்சல் உடையை அணிந்து சென்றதாக ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடலில்

ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்

ஈரணி அணியின் இகல் மிகநவின்று  (பரிபாடல் : 6: 27-28)

ஈரணிக்கு ஏற்ற

நறவுஅணி பூந் துகில் நன்பல ஏந்தி (பரிபாடல் : 22: 18-19)

எனப் புலவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

 

பரணரும் ஈரணி குறித்து

இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ,

நீர்பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண் 

(அகநானூறு: 266:4-6) எனக் கூறுகிறார்.

ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்

ஈரணி அணியின் இகல் மிகநவின்று (பரிபாடல் : 6: 27-28)

என ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடலில் பாடியுள்ளார்.

ஈரணி என்றும் நீரணி என்றும் புலவர்கள் வெவ்வேறு வகை நீச்சல் ஆடைகளைக் கூறியுள்ளனர். மேலும் கீழுமாக உடுத்தும் ஈராடை வகையையும் வேறு வகை நீச்சல் உடைகளையும் பழந்தமிழகத்தில் உடுத்தியுள்ளனர்.தோள்மேல் அணியும் மேல் சட்டையை மீகை என்றனர்.

தோள்மேல் அணியும் தோள்மேல் அணியும் மேல் சட்டையை மீகை என்றனர்.

தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும் (பதிற்றுப்பத்து: 81.11).

சட்டையின் கை, தோளை மூடி அதன் மேல் உயர்ந்து தோன்றலின், மீகை எனப்பட்டது என உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி விளக்குகிறார்.

காழகம் (௭) பொதுவாக ஆடையைக் குறிப்பிட்டாலும், வினைமாண் காழகம் வீங்கக் கட்டி(கலித்தொகை: 7.9) என்னும் பொழுது கைகளில் அணியும் தோலுறையைக் குறிப்பிடுகிறது. இப்பொழுது கைகளில்அணியும் உறை கையுறை (வேளா.), காப்புறை(மரு.) என்றும் சொல்லப்படுகின்றது. மாறாக இதனைக், காழகம் – Glove எனலாம்.

கழுத்தில் அணியும் துணியினைப் பலர் கழுத்துப்பட்டை என்று குறிப்பிடுகின்றனர். collar என்பதையும் கழுத்துப்பட்டை என்பதால் பொருந்தவில்லை. சிலர் கழுத்துக் கச்சை என்கின்றனர். கச்சு என்றால் பெண்கள் மார்புஆடை என உள்ளத்தில் பதிந்து விட்டதால், இச் சொல் பழக்கத்தில் வரவில்லை. கழுத்தின் மற்றொரு பெயர் கண்டம். கண்டத்தில் அணியும் நகையைக் கண்டிகை என்றனர். (கழுத்தில் அணியும் துணியும் கண்டிகை எனப்பட்டுள்ளது.) எனவே, கழுத்தில் அணியும் துணியைக் கண்டிகை எனலாம்.

இவற்றின் அடிப்படையில் பின்வரும் ஆடையியல் சொல் லாட்சிகளைப் பயன்படுத்தலாம்.

 

ஈரணி - two piece dress

கஞ்சுகம் - safari

குப்பாயம் - coat

கைந்நூல் - khadi

நீரணி - swimming dress

மீகை - over coat

குறுவட்டை - mini skirt

காழகம் - Glove

கண்டிகை - neck tie

 

- இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 3 ஏப்ரல், 2025

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 126 & 127; நூலரங்கம்

 




கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) 

தமிழே விழி!                                                    தமிழா விழி!

பங்குனி 23, 2056  ஞாயிறு 06.04.2025  காலை 10.00 மணி

நூலாய்வு

உடல் உறுப்புகள் விளக்கம், இலக்குவனார் திருவள்ளுவன்

 




பழந்தமிழர்கள் உடலுறுப்புகளுக்கு வைத்துள்ள பெயர்களும் அவர்களது அறிவியல் அறிவை உணர்த்துன்றன. சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம்.

‘உடு’ என்பதன் அடிப்படையில் உயிருக்கு உடுப்பு போல் அமைந்தது உடல் எனப்பட்டது.

பண்டத்தை உள்ளே வைத்துக்கட்டப்பட்டது பொதி. அதுபோல் உறுப்புகளை அடக்கிய உடல் ‘பொதி’  எனப்பட்டது.  கட்டப்படுவதை யாக்கை என்பர்.

தோல், நரம்பு, எலும்பு, தசை, குருதி முதலிய தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பதால்  யாக்கை என்றனர்.

கூடை முடையப் பெற்றிருப்பது  போல் ‘தாதுக்களால்’   முடையப்பட்டது முடை என்று சொல்லப்பட்டது.

உயிர் புகுவதற்குரியது உடல்; ஆதலின் உடலைப்  புகல் என்றனர்; திரண்டு அமைந்ததைப் பிண்டம்  என்பர்; உயிர்மிகளால் திரண்டுஅமைந்த உடல் பிண்டம்  எனப்படுகிறது. இவை  போன்று அறிவியல் உண்மையின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் உடலுக்குக் குறிக்கப்பெற்றுள்ளன.

உடலின் உள் உறுப்புகளுக்கு வாயிலாக அமைந்துள்ள உறுப்பிற்கு வாய் எனப் பெயர் இட்டுள்ளனர்.

உதடு என்றால் விளிம்பு என்று பொருள். வாயின் விளிம்பாக அமைவதால்  உதடு என்றனர்.

உதடுகள் மலரிதழ்கள் போல் மென்மையாக உள்ளமையால் இதழ்கள் என்று குறிக்கப் பெற்றன.

அதர் என்றால் வழி என்றுபொருள். உள்ளுறுப்புகளுடன் தொடர்பு கொள்ளவழியாக அமைவதால் இதழ்கள் அதரங்கள் என்று அழைக்கப் பெற்றன.

முகத்தில் ‘தொளை’  போன்ற பகுதியில் அமைந்த உறுப்புகள் அப்பொருளில் கண்கள் எனச் சுட்டப் பெற்றன.

கட்டடத்தின் மேனிலை முகப்பிற்கு நெற்றி என்று பெயர். உடலின் மேனிலையில் முன்பகுதியில் அமைந்துள்ள உறுப்பு நெற்றி எனப்பட்டது.

துளை அல்லது குழியுடைய பொருள்களைக்  கன்னம்  என்பர். எனவேதான் சுவரில் திருடர்கள் போடு துளைக்குக் ‘கன்னம்  வைத்தல்’ என்கின்றனர். இதுபோல் முதலில் துளையுள்ள காதிற்குக் கன்னம்  என்று பெயர் வைத்திருந்துள்ளனர். பின் அப்பெயர் முகத்தில் குழிவாகத் தோன்றும்  கதுப்பிற்குக் கன்னம்  எனப் பெயராக மாறியது.

உடலுக்கு முகப்பாக அமைவதால் முகம் என்றும் முகத்தில்  முனை போல் உள்ளதால்  மூக்கு என்றும் பெயர் வைத்துள்ளனர்.

வாயின் இறுதிப் பகுதி என்ற பொருளில் வயிறு என்றும் இரை தங்கும் பை என்ற பொருளில் இரைப்பை என்றும் பெயரிட்டனர்.

நுரை போன்ற தோற்றத்தில்  பல  காற்றறைகள் கொண்ட உறுப்பிற்கு நுரையீரல் என்று பெயரிட்டனர்.

உடலின் கால் பாகத்தில்  அமைவதைக் கால் என்றும் அரைப்பகுதியில் அமையும் உறுப்பிற்கு அரை என்றும் உடலின் நடுவாகிய இடைப்பகுதியில்  அமைவதால் இடை என்றும் பெயரிட்டனர்.

குருதி ஓட்டத்தில் நடுவாக இருந்து செயல்படும் உறுப்பிற்கு நடு என்னும் பொருளின் அடிப்படையிலான  நெஞ்சம் என்று பெயரிட்டனர்.  அகன்ற பரப்புடைய உடல் பகுதி என்பதால் ‘ அகலம்’  என்றனர்; பின்னர் அகலம் என்னும்  பொருளுடைய ‘மார்பு’  என்னும் பெயரையும்  சூட்டினர்.

உடலின் பக்கவாட்டில் அமைந்த உறுப்புகளுக்குப் பக்கம் என்னும் பொருளும் செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைவதால்  செயல் என்னும் பொருளும் வரும் வகையில் கைகள் எனப் பெயரிட்டனர்.

உடலில் தொடுத்தாற்போல் கால்கள் அமைய இணைப்பாக அமையும் உறுப்புகளுக்குத் தொடைகள் எனப் பெயரிட்டனர்.

உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடனிருப்பது உடல் அல்லது உடம்பு எனப்பட்டது. மேலும், முழு உடல் உடம்பு எனவும் தலையற்ற உடம்பு உடல் எனவும் உடலற்ற தலை முண்டம் எனவும் உயிரற்ற உடம்பு உடலம் எனவும் கூறப்பெறும். குஞ்சு பொரித்தபின் அதனுடனான தொடர்பு நீங்கப் பெற்றதே முட்டைக் கூடு. உயிர் நீங்கிய பின் தொடர்பற்றுப் போகும் உடம்பும் குடம்பை அல்லது கூடு எனப் பெற்றது.

உயிர் நீங்கிய உடல், கட்டை போல் கிடப்பதால் ’ கட்டை’  என்றும் கூறினர். கட்டை போல் எரிவது அல்லது மண்ணோடு மண்ணாகப் போவதுதானே உடல்!

 இவ்வாறு அனைத்து உறுப்புகளின் பெயர்களும் தோற்றம் அல்லது செயல்முறை அடிப்படையில் அறிவியல் உணர்வுடன் சூட்டப்பட்டுள்ளன. 

     புதிதாய் முளைக்கும்  மீசைக்கு அருப்பம்  என்றும்மெல்லிய அரும்பு மீசையைக் கரிக்கோடு என்றும்  வளர்ந்த மீசையை மீசை என்றும்  குறித்தனர். தாடி ‘அணல்’  எனப்பெறும்.

புதன், 2 ஏப்ரல், 2025

இலக்குவனார் திருவள்ளுவனுக்குப் படைப்பாற்றல் அரசு விருது

 




விருது வழங்கிப் பாராட்டியது.







புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.