வியாழன், 19 அக்டோபர், 2023

ஆளுமையர் உரை 70,71 & 72 : இணைய அரங்கம்: 22.10.2023

 

ஆளுமையர் உரை 70,71 & 72  :

 இணைய அரங்கம்: 22.10.2023

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை (திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                                      தமிழா விழி!                                           

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 70,71 & 72  : இணைய அரங்கம்: 22.10.2023

ஐப்பசி 05, 2054 ஞாயிறு 22.10.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

முனைவர் குமரிச்செழியன்

முனைவர் அ.காளியப்பன்

கவிஞர். அ. இருளப்பன்

தொகுப்புரைஞர்:   குமுகாயப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : மயிலை இளவரசன்




தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று

13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டது என்று பொருள்.

36 ஆண்டுகளுக்கு முன் இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையின் தொடர்ச்சியாக 13ஆம் திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட நேரத்தில் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு ஈழத் தேசிய அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை கேலிக் கூத்து என்று சாடின.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவிக்கும் வகையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம், துணைத் தலைவர் சம்பந்தன் ஆகிய மூவரும் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு 1987 அட்டோபர் 28ஆம் நாள் எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம். இந்தக் கடிதத்தில் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்:

“இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யவில்லை. தமிழ் மக்கள் சந்தித்துள்ள உயிரிழப்பு, இன்னல்கள், துயரங்களுக்கு எவ்விதத்தும் ஈடாகவும் இல்லை.”

சுருங்கச் சொல்லின் 13ஆம் திருத்தச் சட்டம் ஒரு கேலிக்கூத்து! ஒரு மோசடி! இந்தக் கேலிக் கூத்தைத்தான், இந்த மோசடியைத்தான் இப்போது முழுமையாகச் செயலாக்கச் சொல்லித் தமிழ் அரசியல் தலைவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு சிங்கள அரசிடம் பேரம் பேசுகின்றது இந்திய வல்லரசு.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கூட இந்திய அரசிடமிருந்து வரவில்லையே, ஏன்? ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி வலியுறுத்த வேண்டிய கோரிக்கையை வாய்மொழியாகக் கூட பேசாமல் மோசடியான 13ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத் தமிழர்கள் தலையில் கட்ட முயலும் இந்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 13ஆம் திருத்தச் சட்டம் எவ்வகையிலும் தமிழர்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் கட்டமைப்பியல் இனவழிப்புக்குத் துணை செய்வதாகவும் அமையும் என்பது ஆய்ந்து தெளிந்த முடிவாகும்.

ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு 13ஆவது திருத்தச் சட்டம்தான் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ்த் தலைவர்களும் உள்ளனர், ஆய்வு அறிஞர்களும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட ஈழத் தமிழர் இனவழிப்பு குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் தமிழர் போராட்டம் குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கும் மூன்று ஐநா அறிக்கைகள் (தாருஸ்மன், சார்லஸ் பெற்றி,மனிதவுரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கை)குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இந்தக் குற்றச்சாட்டுகள் மீது புலனாய்வு செய்ய உள்நாட்டுப் பொறிமுறையா? பன்னாட்டுப் பொறிமுறையா? கலப்புப் பொறிமுறையா? என்ற வினாவில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன?

ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் உள்ளிட்ட கூட்டு முன்மொழிவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் குறித்தும், அதிலிருந்து சிறிலங்கா ஓடிப்போனது குறித்தும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா தொடர்ச்சியாகவும் முன்பின்முரணின்றியும் கடைப்பிடித்துள்ள கொள்கை நிலைப்பாடு என்ன?
ஈழத் தமிழினம் கோருவது இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி, குற்றவியல் நீதியும் அரசியல் நீதியும்! இந்தியா ஏனோதானோ என்று முன்வைப்பது தமிழர்களால் மறுதலிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்! இது மோசடியான கேலிக்கூத்து என்று கருநிலையிலேயே தலைவர்கள் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கமும் சம்பந்தர் ஐயாவும் தோலுரித்துக் காட்டிய பின், அதையே வரலாற்றின் குப்பைத் தொட்டியிலிருந்து தூக்கி வந்து சீவி சிங்காரித்து அம்பலத்தில் ஆடவைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிக்குப் பலியாகலாமா தமிழர்கள்?
பரமபத விளையாட்டு போல் இஃது இந்தியாவின் 13பத விளையாட்டு!
தமிழினம் போரிலே தோற்றபின் வெற்றியாளனின் நீதிக்குத்தான் பணிந்து போக வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசுக்கு அடங்கிப் போகச் சொல்லும் இரண்டகக் கும்பல் ஒரு பக்கம்! இந்தியாவின் விரிவாதிக்க அரசியலுக்குத் துணைநின்று அது ஈவதை இரந்து பெற்றுக்கொள்ள ஓடேந்தி நிற்கும் இரவலர் கும்பல் மறுபக்கம்! இந்த இரண்டகர்களையும் இரவலர்களையும் எதிர்த்துப் போராடி வெல்வதுதான் விடுமை வாழ்வுக்கு வழி!
இந்தியாவுக்கு என்ன வந்தது? அது ஏன் 13ஆம் திருத்தத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? இந்திய வல்லரசின் புவிசார் அரசியல் அப்படி! சீனக் கொள்ளையருக்கும் இந்தியக் கொள்ளையருக்கும் இலங்கை என்னும் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வதில் போட்டி! இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழர்களைப் பகடைகளாக உருட்டுவது இந்தியாவின் உத்தி! அதற்காகத் தமிழீழ விடுதலையையும் ஏற்றுக் கொண்டு விடக் கூடாது! தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு! பன்னாட்டு நீதிப் பொறிமுறை! குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றுவது! பொதுவாக்கெடுப்பு வழியிலான அரசியல் தீர்வு! இவற்றில் எதுவும் சிங்கள அரசை மிரட்டிக் கைக்கடக்கமாக வைத்துக் கொண்டே சீனச் செல்வாக்கைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாகத் தமிழர்களின் விடுமைப் பயிருக்கு இவையெல்லாம் நீர் பாய்ச்சுவதாகி விடும்.
3ஆம் திருத்தம் வெறும் புழு! யாரையும் கடிக்காது. 13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் எந்த உரிமையையும் மீட்டுக் கொடுக்காது. தமிழர் தாயகத்தின் மீதான வன்பறிப்பை (ஆக்கிரமிப்பை) முடிவுக்குக் கொண்டுவராது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்காது. சிறையில் அடைபட்டுள்ள போர்க் கைதிகளை விடுவிக்காது. தமிழ் நிலத்தின் சிங்கள பௌத்த மயமாக்கத்தைத் தடுக்காது. சிங்கள வன் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தாது.
13ஆம் திருத்தத்துக்காக இந்தியக் குடுமி ஆடுவதேன்? இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை: முள்ளிவாய்க்காலுக்கு முன் நேர் இனவழிப்புக்குத் துணைபோன இந்திய வல்லரசு இப்போது தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது என்பதே!
எச்சரிக்கை தமிழா!


(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 272

தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி)

தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே காந்தளகம் சச்சிதானந்தன் போன்றவர்களும் இசுலாமிய வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளையும் சேர்த்து அகண்ட பாரதம் அமைப்பது ஆர்எசுஎசு-பாசக திட்டம். இந்தியாவில் போலவே இலங்கை, மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலும் அது இசுலாமியரை நசுக்கத் திட்டமிடுகிறது. அதற்குக் காசி ஆனந்தன் போன்றவர்களுக்கு ஈழ’ஆசை காட்டி இந்துத் தமிழர்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறது. பாசக ஆதரவோடு தமிழீழம் அமையும் எனக் கொண்டாலும் அது காவித் தமிழீழமாகவே இருக்கும். இந்தப் பின்னணியில்தான் நான் சொன்னேன்: தமிழீழம் மலரும். அது காவித் தமிழீழமாக இருக்காது, சிவப்புத் தமிழீழமாகவே இருக்கும்.

முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை என்ன பேசினார் தெரியுமா? 2009இல் நரேந்திர மோதி பிரதமராக இருந்திருந்தால் இது (முள்ளிவாய்க்கால் கொடுமை) நிகழ்ந்திருக்காது.

மோதி அப்போது இந்தியத் தலைமையமைச்சராக இல்லை. ஆனால் குசாராத் முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சராக அவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டாரா?

அவர் சார்ந்த பாரதிய சனதா கட்சி முள்ளிவாய்க்கால் இனக்கொலையைக் கண்டித்ததா? அப்போதைய காங்கிரசு அரசு சிறிலங்காவின் சிங்கள அரசுக்கு ஆய்தங்களும் ஆதரவும் வழங்கியதை எதிர்க்கட்சியான பாசக கண்டித்ததா?

2009 தொடங்கி இன்று வரை ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் ஏமாற்று அணுகுமுறையில் தமிழ் மக்களின் ஈடுசெய் நீதிக் கோரிக்கையை மறுக்கும் அணுகுமுறையில் மன்மோகன் சிங்குக்கும் நரேந்திர மோதிக்கும் என்ன வேறுபாடு?

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொதுவாக்கெடுப்பு ஆகிய பொதுவான தமிழர் கோரிக்கைகளை மறுப்பதில் காங்கிரசுக்கும் பாசக-வுக்கும் என்ன வேறுபாடு? 13ஆம் திருத்தச் சட்டம் என்னும் கவைக்குதவாத திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிக்க முற்படுவதில் முந்தைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வேறுபாடு?

2013ஆம் ஆண்டு அட்டோபரில் கொழும்பில் நடைபெறவிருந்த பொதுநலவாய (காமன்வெல்த்) உச்சி மாநாட்டுக்கு இந்தியத் தலைமையமைச்சர் செல்லக்கூடாது எனக் கோரி காலவரையற்ற பட்டினிப் போர் தொடுத்தேன். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எமது போராட்டத்தை ஆதரித்த போது கொழும்பு மாநாட்டை மன்மோகன் சிங்கு புறக்கணிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவர் பாசக அனைத்திந்தியத் தலைவர் இராசுநாத்துசிங்கு.

ஒரு கேள்விக்கு அண்ணாமலை விடை சொல்லட்டும்: 2009 முள்ளிவாய்க்காலில் நடந்ததை மோதியால் தடுத்திருக்க முடியுமா? என்ற இறந்த காலம் தொடர்பான வினா கிடக்கட்டும். அன்று நடந்தது இனக்கொலைதான் என்பதை இப்போதாவது மோதியும் அண்ணாமலையும் அறிந்தேற்பார்களா? இன்றைய பன்னாட்டரங்கில் ஓர் அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை ஆதரிப்பதாக இருந்தால் அதற்கான முதல் படியே தமிழினவழிப்பை அறிந்தேற்பதுதான், அங்கீகரிப்பதுதான்.

ஆனால் அண்ணாமலை அந்தக் கூட்டத்திலேயே சொல்கிறார்: என்னால் சில சொற்களை உச்சரிக்க முடியாது என்று. இனவழிப்பு என்று தன் வாயால் சொல்ல முடியாதவரை ஏன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைக்க வேண்டும்? அவர் ஏன் அங்கு வந்து சுடர் ஏற்ற வேண்டும்? தமிழ்த் தலைவர்கள் அவரையும் அவரின் தலைவரையும் ஏன் பாராட்ட வேண்டும்?

தமிழீழ மக்கள் இனவழிப்புக்கு ஆளானவர்கள், இன்றளவும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் இன்றைய போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டம். இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்கள அரசியல் தலைவர்களும், படைத் தலைவர்களும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது. இறுதி நோக்கில் இனவழிப்பு என்பது சிறிலங்கா எனப்படும் சிங்களப் பேரினவாத அரசின் குற்றம். சிறிலங்கா கலைக்கப்படுவதே முறையான அரசியல் நீதியாக நிறைவுபெறும்.

தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் இயல்பிலேயே இறைமைக்கு உரிமை படைத்தவர்கள். இனவழிப்புக்கு ஆளான மக்கள் என்ற வகையில் இறைமைக்கான சிறப்புரிமையும் அவர்களைச் சாரும். (இ)யூதர்கள் ஒரு தேசமாக மாட்டார்கள் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் போர்க் காலத்திலும் பாரிய இனவழிப்பு ஆளானவர்கள் என்பதால் அவர்கள் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்று இசுரேல் அமைத்துத் தரப்பட்டது. இசுரேல் அந்த இறைமையைப் பாலத்தீனர்களுக்கும் பிற அராபியர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி வருகிறது.

தமிழீழத்தை இசுரேலுடன் ஒப்பிட்டு, அமெரிக்க வல்லரசுக்கு இசுரேல் போல் இந்திய வல்லரசுக்கு ஈழம் பயன்படும் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அப்படித்தான் ஈழம் பயன்படும் என்றால் இந்தியாவில் ஓர் ஒடுக்குண்ட தேசம் என்ற வகையில் தமிழர்களாகிய நாம் அதை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

விடுதலை பெறும் தமிழீழம் ஒருபோதும் இந்தியாவுக்கோ வேறு வல்லரசுக்கோ அடியாளாக இருக்காது, அது முற்போக்கான கொள்கைகளைக் கடைப்பிடித்துக் குறிப்பாகத் தெற்காசியாவில் பிற தேசங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமையும் என்பதற்கு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமும், சோசலிசத் தமிழீழம் நோக்கி’’ என்ற விடுதலைப் புலிகளின் வேலைத் திட்டமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க முன்முயற்சியில் பறைசாற்றப்பட்டுள்ள விடுமைப் பட்டயமும் சான்று பகர்கின்றன. இப்படியொரு தேசம் மலர்வதை அமெரிக்க, இந்திய, சீன வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வல்லரசுகளின் விருப்பமே வரலாற்றைத் தீர்மானித்து விடுவதில்லை.

ஈழம் இந்தியாவின் எந்த நியாயமான நலனுக்கும் எதிரானதல்ல. இந்தியா ஈழத்தை எதிர்க்கவும், நீதிக்கான ஈழத் தமிழர் போராட்டத்தை மறுக்கவும் நியாயமான காரணம் ஏதுமில்லை. நீதிக்கான போராட்டத்தில் இந்தியா தமிழ்மக்களுக்கு உதவ விரும்பினால் அவர்களின் மூன்று முதன்மைக் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

1) ஈழத் தமிழருக்கு எதிராக இனவழிப்புப் போர் நடந்துள்ளது என்பதை அறிந்தேற்று, இனவழிப்பு, போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய பன்னாட்டுக் குற்றம் இழைத்தவர்களை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற ஆதரவளிக்க வேண்டும்.

2) இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான பொறுப்புக்கூறல் என்ற வகையில் வந்துள்ள ஐநா அறிக்கைகளின் தொடர்ச்சியாகத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றப்புலனாய்வு செய்ய ஆதரவளிக்க வேண்டும்.

3) தமிழீழத்தின் வருங்காலம் குறித்துத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் ஈழத் தமிழர்களிடையே ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பொதுவான கோரிக்கைகளை ஆதரிக்காமல் 13ஆம் திருத்தச் சட்டம் என்ற பாட்டையே இந்தியா திரும்பத் திரும்பப் பாடி வருகிறது. இது தவிர வேறு எதுவும் தமிழர்களின் கோரிக்கைகளாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம் அல்லது இந்தியப் படையெடுப்புக் காலம் என்ற வரலாற்றையே மறந்து விடும்படிச் சிலர் அறிவுரை கூறக் கிளம்பி வருவது பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களும் கூட அக்காலத்தின் எச்சமான ஒன்றை மட்டும் இன்றளவும் பற்றிக் கொண்டு தொங்குகிறார்கள். அதுதான் 13ஆம் திருத்தச் சட்டம். ஏன்? என்று அடுத்த மடலில் பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 271

திங்கள், 16 அக்டோபர், 2023

காவியா தமிழ்ச்சங்கமம், மதுரை புத்தகத்திருவிழா

      16 October 2023      அகரமுதல

16 நூல்கள் வெளியீட்டு விழா

ஐப்பசி 02, 2054 வியாழன் 19.10.2023 மாலை 5.00
மதுரை புத்தகத் திருவிழா

நியூ காலேசு அவுசு, மதுரை

தலைமை: காா்த்திகேயன் மணிமொழியன்
முன்னிலை: பேரா.காவியா சண்முகசுந்தரம்

முனைவர் இல.அம்பலவாணனின் ‘பெயர்தல்’ முதலான
16 நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை

பேரா.சாலமன் பாப்பையா




தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மோதியும் இரணிலும்

பேசியதும் பேசாததும்

“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்!” இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு குறித்து இப்படி மொழிந்திருப்பவர் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் திருவாளர் செய்சங்கர். இலங்கைக்கு வந்துள்ள நெருக்கடியிலிருந்து அந்நாட்டை மீட்க இந்தியா எல்லா உதவியும் செய்யும் என்பதைத்தான் செய்சங்கர் இப்படிச் சொன்னார்.

இது ஒரு புறம் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் மோதியரசு அனைத்து வகையிலும் துணைநிற்கும் என்று தமிழ்நாடு பாசக தலைவர் அண்ணாமலை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.

செய்சங்கரையும் அண்ணாமலையையும் விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் இருவரும் யாரைக் காட்டி வாயளக்கிறார்களோ, அவர் – அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி – என்ன சொல்கிறார்? என்ன செய்கிறார்?

அண்மையில் அவருக்கொரு வாய்ப்பு வந்தது. சிறிலங்கா அதிபர் இரணில் விக்கிரமசிங்கா இந்தியத் தலைநகர் தில்லிக்கே வருகை புரிந்தார். இந்தப் பயணம் மிகுந்த விளம்பரத்துடன் மேற்கொள்ளப்பட்டது. சாரத்தில் சிங்கள அரசாக இருக்கும் இலங்கை அரசுடன் பல்வேறு துறைகள் சார்ந்த பல ஒப்பந்தங்களில் மோதி கையொப்பமிட்டார். பொருளியல் உறவுகளை மேம்படுத்த உடன்பாடாம்! குறிப்பாக விசைத் துறையில்!

இனக் கொலைகார உடன்பிறப்புகள் மகிந்த, கோட்டபாய இராசபட்சர்கள் சிங்கள மக்களால் துரத்தியடிக்கப்பட்ட பின் அவர்கள் தயவிலேயே அதிகாரக் கதிரையில் அமர்ந்த இரணில் அதன் பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். நிதி நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருந்த போது பில்லியன் தாலர் கொடுத்துக் கைதூக்கிக் கரையில் விட்டதல்லவா தில்லி, அதற்கு நன்றி பாராட்ட வேண்டாமோ? நன்றி சொன்னால் போதுமா? இந்தியா இலவசமாக எதுவும் தராது (There is no free lunch) என்று அரசவையிலேயே சொன்னவர்தான் இரணில். ஷ்ய்லாக் போல தனக்கான இராத்தல் சதையைக் கேட்பார் மோதி என்பது இரணிலுக்கே தெரியும்.

இரு தலைவர்களும் பொருளியல் கூட்டாண்மைக்கான தொலைநோக்கு ஆவணம் ஒன்றை இயற்றியுளளார்களாம். இது கடலோரத் தொழில்களிலும் வான் பயணத்திலும் விசைத்துறையிலும் மக்களுக்கிடையிலான இணைப்பு வசதியிலும் கூட்டுறவை வளர்ப்பதற்காம்! சுற்றுலா, மின்சாரம், வணிகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றை முடுக்கி விரைவுபடுத்துவதற்காம்!

இதற்கெல்லாம் மெய்ப்பொருள் காண்பது நமக்குக் கடினமில்லை. முதலாவதாக, இந்தத் துறைகளில் சீனத்துக்கு இடம் தரக் கூடாது, தந்தாலும் இந்தியாவுக்குக் கீழேதான் தர வேண்டும். இரண்டாவதாக இந்தியாவுடன் கூட்டாண்மை என்பது இந்தியப் பெருங்குழுமங்களுடன் கூட்டாண்மையைக் குறிக்கும். அதிலும் அதானி, அம்பானி வகையறாவைக் குறிக்கும். கடந்த காலத்தில் கோட்டபயாவே இதை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இரண்டில் ஒரு முனயம் இந்தியாவுக்கு என்றனர், அதானிக்குப் பெற்றுக் கொடுத்தனர். அரசியலில் இந்தியா என்றால் மோதி! பொருளியலில் இந்தியா என்றால் அதானி!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் செல்லப் போகிறது மோதியின் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பதன் அடையாளம்தான் உயர் கல்வி, திறன் மேம்பாடு பற்றிய குறிப்பு! தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்களும் மோதி குறித்து எச்ச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

இந்துத்துவத்தின் அகண்ட பாரதக் கொள்கையும் அதன் செயலாக்கமும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்களுக்கும் கேடு பயக்கக் கூடியது. மோதியின் இந்துத்துவமும் இரணிலின் சிங்கள பௌத்தமும் கைகோத்து வருவது இக்கரையிலும் அக்கரையிலும் வாழும் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல. இந்து, கிறித்துவ சமுதாயங்கள் உட்பட தெற்காசியத் தேசங்கள் அனைத்துக்கும் ஆபத்தின் முன்னறிவிப்பு ஆகும்.

மோதி-இரணில் குலாவலில் இந்த முறை ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. கடல் வழி, வான் வழி, கடலடிக் கம்பி வழி, கடலடிக் குழாய் வழி … இவற்றோடு இப்போது சாலைவழியும் சேரப் போகிறது. பாக் நீரிணைக்கு மேல் பாலம் அமைக்கத் திட்டமாம்! நல்லதுதானே எனத் தோன்றும். இரு கரையிலும் ஆதிக்க ஆற்றல்கள் ஒழிந்து விடுமைக் காற்று வீசும் போது அப்படியே கூட இருக்கலாம்! ஆனால் இப்போது? திருகோணமலை, கொழும்பு துறைமுகங்களுக்கு அணுகல் தேவைப்படுகிறதாம்! யாருக்கு?

தமிழ்த் தேசம் சிங்களத் தேசத்துக்கு அடங்கி வாழக் கூடாது என்பது மட்டுமன்று நம் விருப்பம். இந்த இரு தேசங்களும் சீனத்துக்கோ இந்தியாவுக்கோ அடங்கி வாழவும் கூடாது என விரும்புகிறோம். இந்திய-சீன வல்லரசுப் போட்டியில் இலங்கைத் தீவு சிக்கிச் சீரழிவது தமிழர், சிங்களர் இரு தரப்பினர்க்கும் கேடுதான்.

புதுத் தாராளியத்தின் இரட்டை முகவர்கள்தாம் மோதியும் இரணிலும். மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாதவர்கள். தேசிய இனங்கள், மக்கள் சமூகங்கள் பற்றிய கவலையே இல்லாமல், வளர்ச்சி எனபதை வாகான துறைமுகங்கள். தோதான கடல்வழிகள், நெடிய விரைவுச் சாலைகள், வலைப் பின்னலான பாலங்கள், அகக் கட்டமைப்புகள் என்று மட்டுமே சிந்திக்கப் பழகியவர்கள்.

இருக்கட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு மோதி துணை நிற்பார் என்று வாயால் முழம் போட்டரே அண்ணாமலை? இரணிலிடம் பேசும் போது மோதிக்குத் தமிழர்கள் பற்றி ஏதாவது நினைவு இருந்ததா? 2009ஆம் ஆண்டு மோதி மட்டும் தலைமையமைச்சராக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் பெருங்கொடுமையே நிகழ்ந்திருக்காது என்றாரே அண்ணாமலையார், தமிழர்களுக்கு நீதி கேட்டரா மோதி?

மோதி உதிர்த்த முத்துக்கள் இதோ – “We hope that the government of Sri Lanka will fulfil the aspirations of the Tamils.”

அதாவது, “தமிழர்களின் வேணவாக்களை சிறிலங்கா அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகிறோம்.”

மீளிணக்கத்துக்கும் அதிகாரப் பகிர்வுக்குமான ஒரு முன்மொழிவை இரணில் விக்கிரசிங்கே மோதியிடம் கையளித்தாராம்!

தமிழர்களின் வேணவாக்கள் என்றால் என்ன? சொல்வாரா மோதி? வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 பொதுத் தேர்தல், நீண்ட நெடிய விடுதலைப் போராட்டம், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகம், முள்ளிவாய்க்கால் பேரழிவு, ஐநா அறிக்கைகள், தீர்மானங்கள், அவற்றின் இப்போதைய தகுநிலை எவை குறித்தாவது மோதி பேசினாரா? இரணில்தான் சொன்னாரா?

மாட்டுத் தரகர்கள் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு கைவிரல்களால் பேரம் பேசுவது போல் இரு தலைவர்களும் எண்ணி எண்ணிக் காட்டுகிறார்கள் – எத்தனை முறை எண்ணினாலும் அதே 13தான் வருகிறது – 13ஆம் சட்டத் திருத்தம்தான் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரே மருந்து! அதுதான் மந்திர எண் 13. இவர்கள் கேட்பார்கள்! கேட்டுக் கொண்டே இருப்பார்கள். தமிழர்களையும் அதே 13ஐக் கேட்கச் சொல்வார்கள்! தலையாட்டிகளும் கேட்பார்கள்!

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்னாயிற்று? வடக்கு கிழக்கு இணைப்பு என்னாயிற்று? இதைக் கேட்கத் துப்பில்லாமல் 13 எனும் வெற்றுப் பேச்சு ஏன்? அண்ணாமலையும் செய்சங்கரும் மோதிக்காகப் பேசுவதில் வியப்பில்லை. அது அவர்களுக்குத் தரப்பட்டுள்ள வேலை. தமிழர்களுக்கு வேறு வேலை உள்ளதே!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 270

சனி, 14 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் காதை 14 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கசேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட அறைகூவல்!

தமிழீழ மக்களின் தேசியச் சிக்கலுக்கு அமைதியாகவும் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் குடியாட்சியத் தீர்வு காண ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான். ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையில் ஒரே கருத்துடன் இருக்கிறோம்.

இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்றாலும், பூசல் நிலையிலிருந்து இணக்க நிலைக்கு நிலைக்குச் செல்வதற்கான நிலைமாற்ற நீதி என்றாலும் அது குற்றவியல் நீதியாக இருந்தால் போதாது, அரசியல் நீதியாகவும் இருக்க வேண்டும். குற்றவியல் நீதியின் சாறம் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதிலும் குற்றத்தால் தாக்குற்றவர்களின் தயரத்தைத் தணிப்பதிலும் அடங்கியுள்ளது.

அரசியல் நீதியின் சாறம் அதே குற்றங்கள் மீண்டும் நிகழ விடாமல் தடுப்பதற்கான கட்டமைப்பியல் மாற்றங்களில் அடங்கியுள்ளது. இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு வழிகோலிய அரசியல் கட்டமைப்பில் உரிய மாற்றங்கள் செய்வதாகும். எவ்வகையான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைத் துயருற்ற மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்கள் அடைய வேண்டிய குற்றவியல் நீதிக்கான போராட்டம் பல தளங்களில் தொடர்கிறது. இனவழிப்புக் குற்றவாளிகளான சிங்கள அரசியல் – படையியல் தலைவர்களைப் பன்னட்டுக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டிலேற்றுதல், சிங்களப் பேரினவாத அரசு இழைத்த குற்றங்கள குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி, போர்ச் சிறையாளர் விடுதலை உள்ளிட்ட நீதிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.

சிங்களத்தோடு இணக்கம் காண்பதற்காக நீதிக் கோரிக்கைகளைக் கைவிடுவது அல்லது அடக்கி வாசிப்பது என்றொரு போக்கு சில தமிழர்களிடம் காணப்படுகிறது. இது அறியமையாகவோ நேர்மையின்மையாகவோதான் இருக்க வேண்டும். சிங்களர்கள் இணக்கம் வேண்டினால் தமிழர்களின் நீதிக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்.

நீதி இல்லையென்றால் இணக்கம் இல்லை [NO RECONCILLIATYION WITHOUT JUSTICE] என்பதில் தெளிவாக இருக்கிறோம். இணக்கம் அல்லது அரசியல் தீர்வு என்பது புதிய கட்டமைப்பைக் குறிக்கும். புதிய கட்டமைப்பு என்பதைத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் வாழும் தமிழீழ மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை. இது தமிழீழத் தேசத்துக்குள்ள தன்-தீர்வுரிமையின் செயலாக்கமும், அரசியல் நீதிக்கான வழிவகையுமே ஆகும்.

பன்னாட்டுச் சட்டங்களும் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களும் ஒப்புக் கொண்டுள்ள இந்தக் குடியாட்சிய வழிமுறையை சிங்களப் பேரினவாத அரசும் இந்திய வல்லரசும் ஏற்க மறுக்கின்றன. அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால் நாம் அந்தக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்று பொருளாகாது. நாம் இன்னுங்கூட உறுதியாகப் போராட வேண்டும் என்றுதான் பொருள்.

வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட 13ஆம் திருத்தச் சட்டம் போன்றவற்றைக் காட்டித் தமிழர்களின் நீதிப் போராட்டத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் குறித்துத் தமிழர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த நோக்கில் மாநாடே நடத்தினோம். தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறோம்.

புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் இந்தியா சொல்வதைக் கேட்டு நடப்பதே அறிவுடைமை என்று “புவிசார் அரசியல்” பேசும் திறமைசாலிகள் இருப்பினும், மிகப் பெரும்பாலான மக்கள் 13ஆம் திருத்தம் விரிக்கும் வலையில் விழ மறுத்துப் பொது வாக்கெடுப்பையே விரும்புகின்றனர் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விடுதலை என்றாலும் நீதி என்றாலும் இறுதியாகத் தீர்வு செய்யப் போவது தாயகமே. பொது வாக்கெடுப்புக் கோரிக்கைக்கே தாயகத் தமிழர்களும் ஆதரவாக இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை. பொதுவாக இந்திய வல்லரசின் பகடைகளாக நகரவே அவர்கள் விரும்புகின்றனர்.

இதற்கு மாறாகத் தமிழீழத் தாயகத்தில் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதிலும் சிறிலங்கா அரசவை எனப்படும் நாடாளுமன்றத்திலேயே ஒலிக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கசேந்திரகுமார் பொன்னம்பலம்.

கசேந்திரகுமார் சிங்கள ஆளும் தரப்புக்கு அறைகூவல் விட்டுள்ளார்:
“தமிழ் மக்கள் என்ன விரும்புகின்றார்கள்? அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவது ஒற்றையாட்சி அரசா? கூட்டாட்சி அரசா? உங்களுக்கு முதுகெலும்பு இருக்குமானால், தமிழ் மக்களுக்குத் தனியரசு வேண்டுமா? என்று கேட்டுப் பொதுவாக்கெடுப்பு நடத்திப் பார்க்க அறைகூவல் விடுகிறேன்.” – 2023 சூலை 21ஆம் நாள் கசேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் பேசியது.

இந்த உரை பொதுவாக்கெடுப்புக் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாய் உள்ளது என உலகெங்கும் தமிழர்கள் பாராட்டியுள்ளனர். பொதுவாக்கெடுப்புக்கான இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் குமுதினி குணரத்தினம் பாராட்டு மடல் எழுதியுள்ளார். நாமும் அன்பர் கசேந்திரகுமாரின் இந்த உரையைப் பாராட்டுகின்றோம்.

சிங்கள அரசு நெருக்கடியில் விழுந்து இராசபட்சர்கள் ஓட்டமெடுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற போது யாருக்கும் வாக்கில்லை என்று கசேந்திரகுமார் முடிவெடுத்தார். எந்த வேட்பாளரும் கிஞ்சிற்றும் தமிழ்மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இல்லை என்பதால் வேறு வழியில்லை என்று விளக்கமளித்தார். “We are left with no choice” என்ற அவரது விளக்கம் பொருத்தமாக இருந்தது. அவரது சொற்களை ஒட்டி “Tamils have no choice but to fight on” என்ற தலைப்பில் ஆபேல் மின்னிதழில் எழுதினேன்.

இப்போதைய நாடாளுமன்ற உரை மட்டுமல்ல, தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தின் கடமைப்பியல் இனவழிப்பு முயற்சிகளுக்கு எதிராக அன்பர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வரும் அறப் போராட்டங்களும் நம்பிக்கையளிக்கும் படியாக உள்ளன.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தாயகத்தில் போராடும் உங்களோடு தோழமை கொள்கிறது. தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு ஆற்றல்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வளர உங்களோடு இணைந்து முன்முயற்சி எடுக்க விழைகிறோம்.
அன்பர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் உரைக்கு இணைப்பு:
https://twitter.com/tamilkingdom1/status/1682427840539533312?s=48&t=Bw53um4m51xaVuSC3kXD1w

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 269

வெள்ளி, 13 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 14

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 238 : உழவர் போராட்டம் வெல்க! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES)

காதை 14

என் பெயர் இமா (உ)லூரம்பம் நிகாம்பி. அகவை 72. நான் மெய்த்தி இனத்தைச் சேர்ந்தவள். இந்தப் போரில் மெய்த்தி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மீரா பைபி பெண்களை ஒரு கருவியாகக் கையாண்டு வருவது வெட்கக் கேடானது. மீரா பைபி குழுவை நிறுவிய பெண்களில் ஒருத்தி என்ற முறையில் இதற்காக வெட்கப்படுகிறேன்.

2004ஆம் ஆண்டு மணிப்பூரில் அசாம் படைப் பிரிவினரின் காவலில் மனோரமா தஞ்சாம் என்ற 32 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதும் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதும் நினைவிருக்கிறதா? அந்தக் கொடுமையை எதிர்த்து ஆடை களைந்து INDIAN ARMY RAPE US என்ற பதாகையுடன் போராடிய 12 பெண்களில் நானும் ஒருத்தி.

மீரா பைபி அமைப்பு எப்போது எதற்காக நிறுவப்பெற்றது? எப்படிப் புகழ் பெற்றது? என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பைபி என்றால் சுடரேந்தி என்று பொருள். மீரா பைபி என்றால் பெண் சுடரேந்தி! அல்லது சுடரேந்திய மகளிர்! மணிப்பூரில் மனிதவுரிமை மீறல்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் இந்த இயக்கம் வகித்த பங்கினால் மணிப்பூர் அன்னையர் என்றும் புகழ்பெற்றனர்.

இப்போதைய காக்சிங் மாவட்டத்தில் 1977ஆம் ஆண்டு மீரா பைபி இயக்கம் தொடங்கப்பெற்றது. மணிப்பூர் மக்கள் அப்போது தன்-தீர்வுக்காகவும் தன்னாட்சிக்காகவும் விடுமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். அரச வன்கொடுமைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஆய்தப்படைகள் சிறப்பதிகாரச் சட்டத்துக்கு (AFSPA) எதிராகவும், போதைப் பழக்கத்துக்கு எதிராகவும் அடித்தட்டுப் பெண்களைத் திரட்டி மணிப்பூர் சமுதாயத்தில் ஒரு புத்தெழுச்சியை மீரா பைபிகள் தோற்றுவித்தார்கள்.

மணிப்பூரில் மகளிர் இயக்கம் என்பது பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதாகும். மகளிர் போர், மகளிர் எழுச்சி என்ற பொருளில் ‘நூப்பி இயான்’ என்ற மகளிர் இயக்கம் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1939ஆம் ஆண்டு மணிப்பூரில் உணவுப் பஞ்சத்துக்குக் காரணமான அரிசி ஏற்றுமதியை எதிர்த்து மகளிர் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் மீரா பைபிக்கள் திசம்பர் 12ஆம் நாளை மகளிர் போர் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

1970களில் நிசா பந்திகள் என்ற பெண்கள் இயக்கம் வளர்ந்தது. குடிவெறிக்கும் போதைப் பழக்கத்துக்கும் எதிராக இந்தப் பெண்கள் நடத்திய போராட்டத்தால் மணிப்பூரில் மதுவிலக்குச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பெண்கள் இம்பாலிலும் மணிப்பூர் எங்கும் தெருக்களில் நடக்கும் போது கையில் விளக்கேந்திச் செல்வார்கள். மதுவெறியர்களைக் கண்டிப்பார்கள். மதுபானக் கடைகளுக்குத் தீவைப்பார்கள். விளக்கேந்திகள் தீச்சுடர் ஏந்திகளாக மாறிய போது பெண் சுடரேந்திகள் என்று பெயர் பெற்றனர். இப்படித்தான் மீரா பைபிக்கள் இயக்கம் பிறந்தது.

இந்திய இராணுவம் புரிந்த வன்கொடுமைகளுக்கு எதிராக மீரா பைபிக்கள் நடத்திய அறப் போராட்டம் உலகப் புகழ் பெற்றது. இதன் உச்சமாகத்தான் 2004ஆம் ஆண்டு 12 பெண்கள் ஆடை களைந்து போராடினார்கள். மீரா பைபி என்ற முறையில்தான் இரோம் சருமிளா ஆண்டுக் கணக்கில் நீண்டு சென்ற பட்டினிப் போராட்டம் நடத்தினார்.

எப்படி இருந்த மீரா பைபி இயக்கம் இப்படி ஆகி விட்டது என்று நினைக்க நினைக்க அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. குக்கி பழங்குடிகளுக்கு எதிராக மெய்த்தி வன்முறையைத் தூண்டுவதில் மீரா பைபிக்கள் முனைப்புடன் செயல்படுவதற்குச் சான்றாகப் பல செய்திகள் வருகின்றன. 2023 சூலை 21ஆம் நாள் இம்பால் கிழக்கில் 18 வயதுக் குக்கிப் பெண்ணை ஆய்தமேந்திய நான்கு மெய்த்தி இளைஞர்கள் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்து விட்டனர். அந்தப் பெண்ணை வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்ததே மீரா பைபி இயக்கப் பெண்கள்தாம் என்பது நம்ப முடியாத கொடுமை!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 268