ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம் தொடர்ச்சி)

காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி

இனிய அன்பர்களே!
அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலம் மினியாபோலிசு நகரத்தில் 2020 மே 25ஆம் நாள் நடந்த அந்நிகழ்ச்சி அமெரிக்காவைக் குலுக்கி விட்டது, ஏன், உலகையே குலுக்கி விட்டது. தளைப்படுத்தப்பட்ட சியார்சு பிளாயிடு என்ற கறுப்பின இளைஞரை வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் கழுத்துநெரித்துக் கொலை செய்ததைக் கண்டு மாந்தக் குலமே அதிர்ந்தது. “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் (BLACK L LIVES MATTER)” என்ற இயக்கம் புத்துயிர் பெற்று எழுந்தது.

தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைக்கு எதிரான இயக்கத்தையும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் விதையாக மனத்தில் விழ சியார்சு பிளாயிடு கொலை ஒரு காரணமாயிற்று.

நான் 1985 நவம்பரில் வாழ்நாள் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, குறிப்பாகச் சூனியர் விகடனில் சுவருக்குள் சித்திரங்கள் எழுதத் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டில் மனிதவுரிமை இயக்கங்கள் பலவும் என்னோடு தொடர்பெடுத்தன. காவல் நீதி தொடர்பான பல கருத்தரங்குகளில் நான் பேசிக் கொண்டிருந்தேன். பல நிகழ்ச்சிகளில் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் ஓசுபெட்டு சுரேசும் பேசினார். நான் அவர் உரைகளை மொழிபெயர்ப்பது வழக்கமாயிற்று. ஒருவர் சட்டப்படிக் காவலில் வைக்கப்பட்டாலும் அவரைக் காவலில் துன்புறுத்தவோ மோசமாக நடத்தவோ அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உரிமை இல்லை. காவல் வைக்கப்பட்டவருக்கும் மறுக்கவொண்ணாத ஒரு நீதி உண்டு. இதுவே காவல்நீதி (CUSTODIAL JUSTICE) எனப்படும். காவல்நீதியை விளக்கி இந்திய உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காவல்நீதிக்காக இரு பரப்புரை இயக்கங்கள் நடத்தப்பட்டன. ஆசி பெருனாண்டசு தலைமையிலான மனிதவுரிமை ஆராய்ச்சி அமைப்பு, என்றி திபேன் தலைமையிலான மக்கள் கண்காணிப்பகம் ஆகியவை இந்தக் காவல்நீதி இயக்கங்களை முன்னெடுத்து நடத்தின. இரண்டு இயக்கங்களுமே என்னை ஆலோசகராக அறிவித்தன.

மக்கள் கண்காணிப்பகம் காவல் நீதிக்காகவும் சித்திரவதைக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் பரப்புரைப் பயணங்கள் உட்படப் பல இயக்கங்கள் நடாத்தியது. ஆனால் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக அக்கறை கொள்ளவில்லை.
இந்நிலையில்தான் சியார்சு பிளாயிடு கொலைச் செய்தி காவல்நீதி இயக்கத்தை மீண்டும் விழிக்கச் செய்தது. மக்கள் கண்காணிப்பகத்தின் முன்முயற்சியில் “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும், ஒடுக்கப்பட்டவர் உயிர்கள் பொருட்டாகும், முசுலிம் உயிர்கள் பொருட்டாகும்” என்ற தலைப்பில் மாபெரும் இணையக் கூட்டம் நடத்தினோம்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சித்திரவதையால் 2020 சூன் 22, 23இல் பென்னிக்சுசு – செயராசு உயிரிழந்த கொடுமை தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.

பென்னிக்குசு-செயராசின் குருதித் துளிகளில் கருக்கொண்டதுதான் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT). மக்கள் கண்காணிப்பகத்தின் முன்மொழிவின் பேரில் இந்தக் கூட்டியக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நானும், செயலாளராக தோழர் மீ.த. பாண்டியனும் பொறுப்பேற்றோம். அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களையும் சட்டத் தரணிகளையும் கூட்டியக்கத்தில் இணைக்க முடிவு செய்தோம்.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் இணைந்த அரசியல் கட்சிகள், இயக்கங்களின் முதல் கலந்தாய்வு 2020 சூலை 5ஆம் நாள் இணையவழி நடைபெற்ற போது 60 பேராளர்கள் கலந்து கொண்டார்கள். சாத்தான்குளம் கொடுமைக்கு முழுமையான நீதி கோரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்தோம். கூட்டியக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பகம் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தும் என்று தீர்மானித்தோம். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்துக்கான மாநிலச் செயற்குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்தோம்.
அடுத்த 4 நாளில் சூலை 9ஆம் நாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது 20 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். 37 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு சூலை 11ஆம் நாள் நடைபெற்றது. மகுடை(கொரோனா) பெருந்தொற்றுக் காலம் எனபதால் இந்தக் கூட்டங்கள் அனைத்தும் அணுக்கச்(சூம்) செயலி கொண்டு இணையவழி நடைபெற்றன.

கூட்டியக்கம் தன் முதல் கடமையாகச் சாத்தான்குளம் தொடர்பான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவெடுத்தது. சாத்தான்குளம் குற்றவாளிகள் தளைப்படுத்தப்பட்ட பிறகும், காவல்துறை, நீதித்துறை, மருத்துவத் துறையில் கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை முன்னிறுத்திப் பலவகையிலும் – இணையத்திலும் இயன்ற வரை நேராகவும் – கிளர்ச்சிகள் செய்தோம்.

காவல் சித்திரவதை சாத்தான்குளத்தோடு முடியவில்லை. தென்காசி மாவட்டம் அணைக்கரை முத்து வனக்காவலர்களால் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்காகப் போராடினோம். வேலூரில் சாலினியும் அவர் குழந்தையும் சித்திரவதை செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராடினோம்.

சூலை 23ஆம் நாள் நடைபெற்ற வழக்கறிஞர் கலந்தாய்வில், என்றி திபேன், ப.பா. மோகன், அசிதா, பிரிட்டோ, பார்வேந்தன், முகமதுராசா … கலந்து கொண்டனர்.

கடந்த மூன்றாண்டுக் காலத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் நடத்தியுள்ள பொது உரையாடல்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், வெளியிட்டுள்ள வெளியீடுகள்… ஒவ்வொன்றாகச் சொல்லிப் போவதை விரிவஞ்சித் தவிர்க்கிறேன். சாத்தன்குளம் படிப்பினைகள் அடிப்படையில் நாம் வெளியிட்ட சாத்தான்குளம் சாற்றுரையும், ஊபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்கள் குறித்து நாம் தொகுத்து வெளியிட்ட சட்டவாளர்களின் உரைத் தொகுப்பும் குறிப்பிடத்தக்க அறிவுசார் ஆவணங்களாகும்.
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் முதன்மைக் குறிக்கோள் தமிழகத்தில் காவல் சித்திரவதையே இல்லை என்ற நிலையை உருவாக்குவதாகும். அதற்கு அமைப்பை விரிவாக்கவும் ஆழமாக்கவும் வேண்டும். மாவட்டம், வட்டம் என்ற அளவில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இந்த நோக்கம் இன்று வரை முழுமையாக ஈடேறவில்லை.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கமும் மனிதவுரிமைக் காப்பாளர்கள் விழிப்பு அமைப்பும் இணைந்து அண்மையில் ஏற்காட்டில் நடத்திய இருநாள் (மே 27, 28) கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்துக்கான அமைப்புப் பணிகள் குறித்து விரிவாகக் கலந்து பேசி முடிவுகள் எடுத்தோம்.

இந்த முடிவுகளின் படி கூட்டியக்கம் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்குமான அமைப்புக் கூட்டம் வருகிற சூன் 10, 11 நாட்களில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைப்புகள் திருத்தியமைக்கப்படுவதோடு மனிதவுரிமை வகுப்பும் எடுக்கப்படும். 10ஆம் நாள் காரிக் கிழமை திருச்சிராப்பள்ளியிலும் 11ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை ஈரோட்டிலும் நான் கலந்து கொள்கிறேன்.

ஏற்காட்டில் எடுத்த முகன்மையான முடிவுகளில் ஒன்று: வருகிற சூன் 26ஆம் நாள் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான பன்னாட்டு நாளை முன்னிட்டும், சூலை 5ஆம் நாள் அருட்தந்தை இசுடான் சுவாமி நினைவு நாளை முன்னிட்டும் இரண்டுக்கும் இடைப்பட்ட நாட்களிலும் காவல் சித்திரவதைக்கு எதிராகவும், ஊபா போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை எதிர்த்தும் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவதாகும்.

சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டு (ஐநா) உடன்படிக்கையை இந்திய அரசு ஏற்புறுதி செய்ய வேண்டும் என்பது நம் நெடுநாளைய கோரிக்கை.

தமிழ்நாடு காவல் சித்திரவதை (தடுப்பு) ச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

ஏற்காடு கூட்டத்தில் பெரியகுளம் போராட்டக் குழு சார்பில் தோழர் மதியவன் தலைமையில் ஐந்து தோழர்கள் கலந்து கொண்டனர். மதியவன் எழுதிய பெரியகுளம் அறிக்கை குறுநூல் வடிவில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் (பல்லுடைப்பு பல்பீர் சிங்கு), செங்கல்பட்டு (கூர்நோக்கு இல்லம்) உள்ளிட்ட தமிழ்நாட்டின் போராட்டப் புள்ளிகளிலிருந்து வந்திருந்த தோழர்கள் அந்தந்தப் போராட்டப் பட்டறிவைப் பகிர்ந்து கொண்டதோடு, எதிர்காலத் திட்டம் குறித்தும் விவாதித்தார்கள்.

ஏற்காட்டில் இரண்டு நாள் எதிர்கால இயக்கத்துக்கு அளித்த வெளிச்சம் ஏந்தி மலையிறங்கினோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 210

சனி, 12 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்

 




 (தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு? -தொடர்ச்சி)

இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்

இனிய அன்பர்களே!

நம் இனத்தின் துயரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழினத்தின் அமைதியும் நிம்மதியும் கேள்விக்குறியாகவே நீடிக்கின்றன. இந்தோனேசியாவிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் சுட்டி நிற்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டிலிருந்து ஈழத் தமிழர்கள் சிலர் தொலைசிபேசி வழி என்னைத் தொடர்பு கொண்டனர்:

ஈழத்திலிருந்து தஞ்சம் கோரி ஆத்திரேலியாவுக்கு அவர்கள் ஒரு விசைப் படகில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் ஆத்திரேலியக் கடற்படை அவர்களை வழிமறித்துத் திருப்பியனுப்பி விட்டது. அவர்களிடம் மிகக் குறைந்த எரிபொருள்தான் மீதமிருந்தது. அருகிலிருந்த நாடு இந்தோனேசியாவில் அவர்கள் கரையொதுங்க நேரிட்டது. இந்தோனேசியாவில் காவல்துறையினர் அவர்களைக் கொண்டுபோய் ஓரிடத்தில் அடைத்து வைத்து விட்டனர்.

ஆத்திரேலியா ஒரு காலத்தில் ஈழத்தமிழ் ஏதிலியருக்கு இடம்கொடுத்து வந்தது. ஆனால் இப்போது புதிதாக யாரையும் எளிதில் கால்பதிக்க விடுவதில்லை என்று கடுமையான நிலை எடுத்து, நடுக்கடலிலேயே வழிமறித்து விரட்டியடிக்கும் நடைமுறையை மேற்கொண்டது. அவர்கள் கடலில் மூழ்கிச் சாக நேரிட்டாலும் ஆத்திரேலிய அரசுக்குக் கவலையில்லை.

எனக்குத் தொடர்பெடுத்தவர்கள் பற்றிய செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைமைக்குத் தெரிவித்துப் பிற நாடுகளிலிருந்து சட்டத் தரணிகள் இந்தோனேசியா சென்று அவர்களைச் சந்தித்து உதவுவதற்கு ஆவன செய்தேன்.

நான் குறிப்பிட்ட குழுவினருக்கு முன்னும் பின்னுமாக அதே போல் ஆத்திரேலியக் கடற்படையால் விரட்டப்பட்டு இந்தோனேசியாவில் குடும்பம் குடும்பமாகக் கரை ஒதுங்கிய ஈழத் தமிழர்கள் மொத்தத் தொகை 650க்கு மேல் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவைப் போலவே இந்தோனேசியாவும் ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951 ஐநா உடன்படிக்கையிலோ அதற்கான 1967 வகைமுறையிலோ ஒப்பமிடவில்லை. இந்தியாவில் போலவே இந்தோனேசியாவிலும் ஈழத் தமிழர்கள் ஏதிலியராகக் கூடச் சட்டத்தால் அறிந்தேற்கப்பெறாத அவலம்!

இப்போது இந்தோனேசிய அரசு தமிழ் ஏதிலியரைக் கட்டயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இலங்கைக்கே திரும்பிச் செல்ல விரும்புவதாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் எழுதி வாங்க முயல்கிறது. அவர்கள் எழுதிக் கொடுக்க மறுப்பதால் காவல்துறையைக் கொண்டு அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. கைபேசிகளைப் பறித்துக் கொண்டு வெளித் தொடர்புகளைத் துண்டிப்பது, அடிப்படை வசதிகளைக் கூட மறுப்பது, குழந்தைகள் கல்வி கற்க விடாமல் செய்வது… இப்படிப் பல வழிகளிலும் அவர்களைத் தொல்லைப்படுத்தி வருகிறது.

உலகெங்கும் ஏதிலியர் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அடிப்படைக் கொள்கை: எந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனரோ அந்த நாட்டுக்கே வலுக்கட்டாயமாக அவர்களைத் திருப்பியனுப்பக் கூடாது என்பதாகும். இதற்குத் திருப்பி அனுப்பாமைக் கொள்கை (PRINCIPLE OF NON-REFOULEMENT) என்று பெயர். ஏதிலியர் தொடர்பான ஐநா உடன்படிக்கைகளில் ஒப்பமிடாத நாடுகளும் இயற்கை நீதியின் பாற்பட்டு இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது. சான்றாக, இந்த உடன்படிக்கைகளில் ஒப்பமிடாத நாடாகிய இந்தியாவில் ஐ.நா. ஏதிலியர் ஆணையத்துக்கு தில்லியிலும் சென்னையிலுமாக இரண்டு அலுவலகங்கள் உள்ளன. ஏதிலியர் நலன் சார்ந்த சிக்கல்களில் சென்னை அலுவலகத்தை நாம் அணுகினால் கிடைக்கும் விளக்கம் இதுதான்: எங்களுக்கு இரண்டே பணிகள்தான் – முதலாவதாக, இலங்கையிலிருந்து ஏதிலியாக வந்துள்ள எவரையும் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பாமல் பார்த்துக் கொள்வது. இரண்டாவதாக, திரும்பிச் செல்ல விரும்புகிற எவரையும் தடுத்து வைக்காமல் பார்த்துக் கொள்வது.

இந்தக் கொள்கையை மீறித்தான் சென்னையிலிருந்து ஈழவேந்தன் இலங்கைக்குக் கடத்தப்பட்டார். நாங்கள் நடத்திய ஒரு போராட்டத்துக்காக வந்து கொண்டிருந்தவரை வழிமறித்த தமிழ்நாடு காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய் கொழும்பு செல்லும் வானூர்தியில் அமர்த்தி அனுப்பி விட்டது. இந்த ஆள்கடத்தலைத் தடுக்க யாரும் நீதிமன்றத்தை நாட அவகாசம் தந்து விடக் கூடாதாம்!

தலைவரின் அன்னை பார்வதி அம்மாள் உரிய பயண இசைவுகள் பெற்றுத் தமிழ்நாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த போது சென்னை மண்ணை மிதிக்கக் கூட விடாமல் திருப்பியனுப்பப்பட்டதையும், இந்தியாவில் சிகிச்சைக்கு வர அன்றன் பாலசிங்கம் அனுமதிக்கப்படாததையும் கூட நினைவுகூரலாம்.
உள்நாட்டுப் போர் இனவழிப்பில் முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் தஞ்சம் நாடி அலைவதும், அவர்களை மற்ற நாடுகள் அலைக்கழிப்பதும் தொடர்வதுதான் பெருந்துயரம்.
இந்தோனேசியாவிலிருந்து ஈழத் தமிழர்கள் அபயக் குரல் எழுப்புகின்றனர். உதவி கோரி ஐநாவுக்கும் ஏதிலியர் ஆணையத்துக்கும் மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் முயற்சியில் வென்றால் நம் மனம் அமைதியாகும்.
(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 210

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

இந்திய விடுதலை நாள் உரையரங்கம் : “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?”

 


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

                    செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 411)

தமிழ்க் காப்புக் கழகம்

மன்னும் இமயமலை                                         எங்கள் மலையே !

மாநிலமீததுபோல்                                                  பிறிதில்லையே !

இந்திய விடுதலை நாள் உரையரங்கம்

“விடுதலையானது இந்தியா!

அடிமையானது தமிழ்நாடு?”

நாள் : ஆடி 28, 2054 ஞாயிறு 13.08.2023  காலை 10.00

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள் :

உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

இளைய ஒளவை முனைவர் தாமரை

சிறப்புரை : தமிழ்த்தேசியச் செம்மல் தோழர் தியாகு    

நன்றியுரை: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை! – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாழி மடல் 153இல் வெளியிட்ட இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையில் (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர் திரு அரி பரந்தாமன் எழுதிய மடலை நேற்று தாழியில் (எண் 156) படித்திருப்பீர்கள். அதே உரையில் மேலும் ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் எழுதியுள்ள மடலை இன்று பகிர்கிறேன். தீர்ப்புகளையும் சமூகநீதிக் குறிக்கோளின் மீது அவற்றின் தாக்கத்தையும் சரிவரப் புரிந்து கொள்வதில் அன்பர் அரி பரந்தாமன் அவர்களின் விளக்கங்கள் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவை என நம்புகிறேன். ஒரு குறைக்கு இரு முறை படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். அதன் பிறகும் ஐயமிருப்பின் அவரிடம் கேட்டுத் தெளிவு பெறத் தாழி உங்களுக்கு உதவும். சரி, அவரது மடலைப் பார்ப்போம் –

எப்படி வந்தது மருத்துவக் கல்வியில்

அனைத்து இந்திய ஒதுக்கீடு?

அன்பர் அரி பரந்தாமன் எழுதுகிறார்.    

தோழரே, 

மேலும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: மருத்துவ மாணவர் சேர்க்கையில், அனைத்து இந்திய ஒதுக்கீடு என்ற போர்வையில், 2008 முதல் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகத்  தாழி(153)இல் குறிப்பிட்டுள்ளீர்கள்.

2006இல் அர்சுன்சிங்கு மத்திய அமைச்சராக இருந்த போது,  அவரது முயற்சியால் மத்தியக் கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும், அதற்கு உச்ச நீதிமன்றம் தடை கொடுத்தது என்றும், இறுதித் தீர்ப்பில் 2008இல் கல்வியில் 27% இட ஒதுக்கீடு  சரிதான் என்று கூறிய போது, உச்ச நீதிமன்றம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு இல்லாத அனைத்து இந்திய ஒதுக்கீட்டை (All India Quota)  உருவாக்கியது என்றும் கூறியுள்ளீர்கள். 

இந்த விவரம் பிழையானது.

மருத்துவர் தினேசு குமார் – எதிர் – மோதிலால் நேரு கல்லூரி என்ற வழக்கில் 1984 முதல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பி.என். பகவதி அமர்வு தொடர்ந்து பல உத்தரவுகள் போட்டது. 1984இலேயே அளித்த தீர்ப்பில் மருத்துவக்  கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு அளிப்பது பற்றியும், எந்த அளவு அளிக்க வேண்டும் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்பைச் செயற்படுத்துவது தொடர்பாகப் பல முறை உத்தரவுகள் போட்டது.

அந்த அமர்வு 1-5-1985, 16-9-1985, 2-7-86  ஆகிய தேதிகளில் உத்தரவுகள் போட்டது.

இதில், 2-7-86 உத்தரவில் எம்.பி.பி.எசு. (MBBS) மற்றும் பல்மருத்துவ (BDS) கல்வியில் 15%, எம்டி, எம்எசு (MD, MS) பட்ட மேற் படிப்புகளில் 25% அனைத்து இந்திய ஒதுக்கீடு என்று கூறியதுதான் இறுதியானது. 

இந்த அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லைஇது ஒரு மோசடி. அரசமைப்புச் சட்டம் கூறு 15இன் படி இட ஒதுக்கீட்டைப் பற்றி அரசு ஆணையோ, சட்டமோ செய்வது மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பாற்பட்டது.  இதில் நீதிமன்றத்தின் அதிகாரம் எங்கே வருகிறது?

அப்போதைய காங்கிரசு அரசு, அனைத்து இந்திய ஒதுக்கீட்டை அரசின் ஆணையாகவோ சட்டமாகவோ போட்டால் சிக்கல் வரும் என்பதால், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் உள்ள அரசின் நிர்வாகம் வழியாக உச்ச நீதிமன்றம் மூலம் இதைச் சாதித்துக் கொண்டது.

பார்ப்பன மேலாதிக்கம் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கும் இதில் ஆட்சேபணை இல்லை.

பின்னர், 28-2-2005இல் புத்தி பிரகாசு சருமா – எதிர் – இந்திய ஒன்றியம் (Buddhi Prakash Sharma Vs Union of India) என்ற வழக்கில், MD & MS கல்விக்கு 50% என உயர்த்தியது.

பட்டியல் இனத்தவர்கள் தொடுத்த வழக்கில் (அபய்நாத்து – எதிர் – தில்லிப் பல்கலைக்கழகம்), 31-1-2007இல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பாலகிருட்டிணன் அமர்வு அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் எசுசி / எசுடி (SC/ST) இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர், 2020-21இல், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் பின்தங்கிய வகுப்பாருக்கும் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றது

இதில், 1984 முதல் 1986 வரை நடந்த மருத்துவர் தினேசு குமார் வழக்கில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு  தெரிவித்த  விவரம் தீர்ப்பில் உள்ளது. மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் இதை ஆதரித்துத் திட்டமிட்டுச் செயல்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநில ஆட்சேபணைகளைப் புறந்தள்ளியது.

மேலே குறிப்பிட்டது போல, இதைக் கொண்டுவந்தது நீதிபதி பகவதி அமர்வு!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 157

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி

 











தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி

மொத்தம் 18 பரிசுகள்

 சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும்

முதல்பரிசு உரூ.5,000/-

இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /,  & மூன்றாம்  உரூ.2000/

நான்காம்  பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-)

ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-)

ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-)

கட்டுரைப்போட்டியின் தலைப்பு:

இந்தி, சமற்கிருத, ஆங்கிலத் திணிப்புகளை முறியடிப்போம்!

4 பக்கங்களுக்குக் குறையாமல் (மேல் வரம்பு இல்லை)

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆவணி 11, 2054 /

28.08.2023 தமிழக நேரம் மாலை 6.00 மணிக்குள்

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி:

thamizh.kazhakam@gmail.com

ஒன்றிய அரசு இந்தியையும் சமற்கிருதத்தையும் நாளும் திணித்துக் கொண்டு வருகிறது. அவற்றைத் திணிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் அதனை அகற்றிக் கொண்டுள்ளது. மாநில அரசு இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. ஆங்கில வழிப்பள்ளிகளில் இள மழலை வகுப்பிலிருந்தே இந்தி, இந்தி பரப்புரை அவை மூலம் இந்தி, தனிக்கல்வி மூலம் இந்தி, அஞ்சல் மூலம் இந்தி என எல்லா வகையிலும் இந்தியை வீற்றிருக்கச் செய்து விட்டு இந்தியை எதிர்ப்பதாகத் தலைவர்கள் நாடகமாடுகிறார்கள். ஊடகங்கள் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்துக் கொண்டு வருகின்றன. மொழியை இழந்தால் வாழ்வை இழப்போம் என்பதை உணராமலேயே மக்களும் மொழித்திணிப்புகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே, இந்தித்திணிப்பிற்கு எதிராகவும் தமிழ்க்காப்பிற்கு ஆகவும் இருமுறை சிறை சென்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு மேற்குறித்த தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறோம். மூன்று மொழிகளும் எவ்வாறெல்லாம் திணிக்கப்பட்டு வருகின்றன, இதனால் நாம் அடையும் இழப்பு என்ன? தமிழ் மொழி அழிப்பு, தமிழ் இன அழிப்பிற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பேரிடருக்கு முற்றுப்புள்ளி வைப்பது எவ்வாறு? எவ்வாறெல்லாம் மும்மொழித்திணிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? நாம் எவ்வாறு முறியடிக்க வேண்டும் எனக் கட்டுரைகளைப் பிற மொழிக் கலப்பு இன்றி எழுதி அனுப்ப வேண்டுகிறோம். மாணவர், மாணவரல்லாதார் , சிறியவர், பெரியவர், ஆண், பெண்,தொழிலாளி, முதலாளி என்பன போன்ற எவ்வகை வேறுபாடுமின்றி அனைவரும் பங்கேற்கலாம். எனவே போட்டியில் பங்கேற்று வாகை சூட வேண்டுகிறோம்.

ஆர்வமுள்ளவர்களைப் பங்கேற்க வேண்டுகிறோம்

இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க் காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும். ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர். வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே. வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது” – தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்

தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது தொடர்ச்சி)

ஓய்வு கொள்ள நேரமில்லை!

இனிய அன்பர்களே!

பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையத்தில் இருந்து எழுதுகிறேன். இங்கே தொலைபேசித் தொடர்பே திணறும் போது இணையத் தொடர்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நாள்தோறும் தாழி மடல் அனுப்புவதே போராட்டமாகத்தான் உள்ளது. இந்தத் திங்கட் கிழமை செய்தி அரசியல் நடத்த முடியாமற்போயிற்று. இன்று அறிவன் கிழமையில் ‘தமிழ்நாடு இனி’ அரசியல் வகுப்புக்கும் விடுமுறைதான்! எவ்வளவு இடர்ப்பாட்டிலும் அரசியல் வகுப்பை நிறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.

ஏப்பிரல் 15 கந்தர்வக்கோட்டை அருகே ஒரு சிற்றூரில் அம்பேத்துகர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு 16 காலை சென்னை வந்து விடுவேன். பிறகு வழக்கம் போல் திங்கள், அறிவன் இணைய நிகழ்வுகள் தொடரும். அது வரை பொறுத்தருள்க! இங்கிருக்கும் வரை தாழியில் முடியாமலிருக்கும் உரையாடல்களை விரைவுபடுத்தி முடிக்க இயன்ற வரை முயல்வேன்.

இரு நாள் முன்பு நானும் சுதாவும் கோவை சென்று இனிய தோழர் போத்தனூர் இராசகோபாலைப் பார்த்து வந்தோம். பல்லாண்டு இடைவெளிக்குப் பின் பார்க்கிறேன். அவரது உடல்நிலை குறித்து வினவியறிந்தேன். கிழமை மூன்று முறை கேசி மருத்துவமனையில் நீர்ப்பிரிப்பு (dialysis) செய்து கொள்கிறார். விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதற்காகப் பெயர் பதிந்து பட்டியல் வரிசையில் காத்திருக்க வேண்டும். இராசகோபால் உடல்நிலை, அவருக்கான சிகிச்சை, அடுத்துச் செய்ய வேண்டியது… அனைத்தையும் பற்றி ஒரு விரிவான மருத்துவ அறிக்கை தருமாறு அன்பர் மருத்துவர் மணிகண்டனைக் கேட்டுள்ளேன். கிடைத்தும் தாழியில் அறியத் தருகிறேன்.

ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்என் இரவிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் முதல் போராட்டத்தையே இந்த ஆளுநர் இரவியைப் பதவி விலகக் கோரித்தான் நடத்தினோம். அவரைக் கண்டித்துத் தமிழக சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்தை வரவேற்கிறோம்.

இரவிக்கு எதிரான போராட்டம் என்பது அவரை ஆட்டுவிக்கும் பாசிச மோதி கும்பலுக்கு எதிரான போராட்டமே என்பதை மறந்து விடக் கூடாது. இரவி விலகினால் அல்லது அவரை இந்திய அரசே விலக்கிக் கொண்டால் அது தமிழக மக்களுக்கு ஒரு வெற்றிதான்! ஆனால் அத்துடன் தன்னாட்சி மலர்ந்து விடாது, இறைமை வந்து விடாது. தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய பொதுத்தேர்வு (‘நீட்’) விலக்கு உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் சட்டங்களாக வேண்டும். இந்த நோக்கம் ஈடேற இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். நம் போராட்டம் மேலும் முனைப்பான வடிவங்கள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவிற்கொள்க! தமிழ் நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், தமிழ்நாட்டு முதலமைச்சரும் அடுத்தடுத்தப் போராட்டக் களங்களுக்கு அணியமாவோம்! ஒய்வு கொள்ள நேரமில்லை!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 157