வியாழன், 20 ஜூலை, 2023

ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: 23.07.2023

 


கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர்,திருக்குறள் 414)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்:  இணைய அரங்கம்:

நிகழ்ச்சி நாள்: ஆடி 07, 2054 /23.07.2023  ஞாயிறு

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழிசை அறிஞர் பேராசிரியர் முனைவர் சண்முக. செல்வகணபதி

எழுத்தாளர் கவிஞர் அகணி சுரேசு, கனடா

கலைமாமணி குறட் செம்மல் முனைவர் சேயோன்

இணைப்புரை : தமிழ்த்தேசியர் தோழர் மகிழன்

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி

தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!

 






(தோழர் தியாகு எழுதுகிறார்  151: சித்திரம் அல்லேன் தொடர்ச்சி)

சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!

இனிய அன்பர்களே!

பன்னாட்டுப் பெருமுதலின் விருப்பத்துக்கேற்ப வேலைநேரத்தை நீக்குப்போக்காக மாற்றியமைக்கும் முடிவு பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோருகின்றோம். இந்தச் சறுக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை மீளாய்வு செய்யவும் அடியோடு களையவும் வேண்டும்.

திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த திமுக ஆட்சியும் சரி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டணிக் கட்சிகளும் சரி, ஒரே குரலில் பேசும் வசனம் “நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறோம்” என்பதாகும். மோதி சொல்கிறார் வளர்ச்சி! மு.க.தாலின் சொல்கிறார் வளர்ச்சி!  இடதுசரிக் கட்சிகள் சொல்கின்றன வளர்ச்சி! அரசுகளின் திட்டங்களை எதிர்ப்பவர்கள் கூட “நாங்கள் வளர்ச்சியை எதிர்க்கவே இல்லை” என்று தலையிலடித்து சத்தியம் செய்கின்றார்கள்.

வளர்ச்சி என்றால் என்ன? என்று உடைத்துப் பேசுங்கள். வளர்ச்சி என்று சொல்லித்தானே அதானிகள், அம்பானிகளை வளர்த்து விடுகிறார் மோதிஜி? மோதியின் இந்த வளர்ச்சிக் கொள்கையைத்தான் நீங்களும் கடைப்பிடிக்கின்றீர்கள் என்றால் மோதியையும் அதானியையும், அவர்களின் ஒட்டு முதலியத்தையும், அதன் தொடர்ச்சியான மோசடிகளையும் எதிர்ப்பதாகச் சொல்வதில் என்ன பொருள் இருக்க முடியும்?

சுருங்கச் சொல்லின் புதுத்தாராளிய வளர்ச்சியைத்தான் வளர்ச்சி என்று சொல்லிக் கடைப்பிடிக்கின்றீர்கள். வளர்ச்சியல்ல சிக்கல், புதுத்தாராளிய வளர்ச்சிதான் சிக்கல்! புதுத் தாராளியம் தொழிலாளர் நலனுக்கு எதிரானது! உழவர்களை ஓட்டாண்டியாக்குவது! சிறு குறு நடுத்திட்ட தொழில் முனைவோரை ஒடுக்கிப் பெருங்குழுமங்களை கொழுக்கச் செய்வது!

புதுத் தாராளியம் குமுகிய, குடியாட்சிய, இயற்கைநல, சூழல்நல, சமூகநல, சமூகநீதிக் கொள்கைகளுக்குப் புறம்பானது!

அண்மையில் சமூகநீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் மு.க.தாலின் உரையாற்றிய போது தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை பற்றிப் பேசினார். ஆனால் தனியார் முதலீட்டைத் தமிழ்நாட்டுக்கு வருந்தியழைக்கும் போது, தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஒரு வேண்டுகோளாகக் கூட வலியுறுத்த வில்லையே, ஏன்? சமூக நீதி தெற்கு என்றால் புதுத் தாரளியம் வடக்கு என்பது அவருக்கே தெரிந்துள்ளது.

மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கம் எப்படி வீழ்ந்தது? முதலமைச்சராக இருந்த புத்ததேவ பட்டாச்சார்யா “உலகமயம் தவிர்க்கவியலாதது” என்று பறைசாற்றினார். சிங்கூர், நந்திகிராம் அவலங்கள் அதனால்தான் நேரிட்டன. புதுத்தாரளியம்தான் ஒரே வழி என்றால், அதற்கு உங்களைக் காட்டிலும் பாசகவே பொருத்தம் என்று வாக்காளர்கள் முடிவு செய்ய மாட்டார்களா?

திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் பாசிச பாசகவை எதிர்ப்பது உண்மையானால் அதன் புதுத் தாராளிய வளர்ச்சிக் கொள்கையை எதிர்க்க முன்வர வேண்டும்.

மு.க.தாலின் குறிப்பிட்ட திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதால் தன் சனநாயகப் பண்பை மெய்ப்பித்திருப்பதாக ‘திராவிட மாடல்’ ஆதரவாளர்கள் பெருமைப்படுகின்றார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் திருத்தச் சட்டத்தை சட்டப் பேரவையில் முன்மொழிவதற்கு முன் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இந்த சனநாயகப் பண்பு மிளிர்ந்ததா? குத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, மீண்டும் சறுக்காமலிருக்க எச்சரிக்கை காக்க வேண்டும் என்பதற்காகவே கேட்கிறோம்.

பாசிசத்துக்கு எதிரணியில் இருப்பதாகத் திமுக தலைமை அகநோக்கில் சொல்லிக் கொள்கிறதோ இல்லையோ, புறநோக்கில் அது அந்த அணியில் இருப்பதாகவே நம்புகிறோம். திமுக தலைமை கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்சியிலும் குடியாட்சியத்தை மதிக்கா விட்டால் அதன் பாசிச எதிரப்புத் தகைமை கேள்விக்குள்ளாகும். முடிவுகளின் உள்ளடக்கம் மட்டுமல்ல, முடிவெடுக்கும் வழிமுறையும் குடியாட்சியத் தன்மையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.     

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 
    172

தோழர் தியாகு எழுதுகிறார் 151: சித்திரம் அல்லேன்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும் தொடர்ச்சி)

சித்திரம் அல்லேன்


இனிய அன்பர்களே!

எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் போல் எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டார்கள். பள்ளி செல்வதற்கு முன்பே அப்பாதான் ஆசிரியர். வீடுதான் முதல் பள்ளிக்கூடம். மிகவும் சிறு வயதிலேயே கற்கை தொடங்கி விட்டது.

திருவாரூரில் வீட்டருகே இருந்த ‘பாத்திமா கான்வெண்டில்’ சேர்த்த போது எடுத்தவுடனே இரண்டாம் வகுப்பு. பிறகு இரட்டை வகுப்பேற்றம் (double promotion) கொடுத்து நான்காம் வகுப்பில் போட்டார்கள். மடப்பள்ளியில்(கான்வெண்டில்) ஆசிரியர்கள் நிருவாகிகள் பெரும்பாலும் கிறித்துவ அருட்சகோதரிகள்தாம். அப்போது ஒருநாள் மாதாகோயில் நிகழ்ச்சிக்காக மெழுகுவத்தி வாங்கக் காசு கேட்டார்கள். காலணாவோ அரையணாவோ இருக்கலாம். நான் அம்மாவைக் கேட்டேன். அவர்கள் அப்பாவிடம் சொல்லி விட்டதோடு “இதே வேலையாப் போச்சு” என்று விசிறியும் விட்டார்கள்.

அப்பாவுக்கு வந்தது கடுஞ்சீற்றம்! என்னை இழுத்துக் கொண்டுபோய் அருட்பெண்ணிடம்(சிசுட்டரிடம்) நிறுத்தி மா.சா.(டி.சி.) கேட்டுக் கத்தினார்கள். மா.சா.வோடு நந்தவனம் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துப் போய் நான்காம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். நான்காம் வகுப்பு ஆசிரியர் என் பேர்க்காரர்: தியாகராசன். திருவாரூரில் தியாகராசன், அடுத்தபடி தட்சிணாமூர்த்தி அதிகம்.

என் நான்காம் வகுப்பு ஆசிரியர் தியாகராசன்தாம் பிற்காலத்தில் ஆரூரான் என்றும் சின்னக்குத்தூசி என்றும் பெயர் பெற்றார். ஆசிரியர் வரிசையில் உயர்நிலைப் பள்ளியில் பிசி கணேசன், சிவசண்முகம் என்று பலரும் வந்தனர், என்னைச் செதுக்கினர் என்றாலும் நான் எப்போதுமே சின்னக் குத்தூசியைத்தான் என் முதல் ஆசிரியராகக் குறிப்பிட்டு வந்தேன். நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் சிறைமீண்டு வந்து சென்னையில் தங்கிய போது எல்லாரிடமும் நான் சின்னக்குத்தூசியின் மாணவன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது குங்குமத்தில் பாவை சந்திரன் ஆசிரியராக இருந்தார், அப்பாவிடம் படித்தவர். என்னிடம் மூலதனம் தமிழாக்கம் பற்றி நண்பர் வந்தியத்தேவனை அனுப்பிப் பேட்டி எடுத்து வெளியிட்டார்.

அந்தப் பேட்டி பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதும் சின்னக்குத்தூசி என் ஆசிரியர் என்றேன். இதைச் சொன்ன போது சின்னக் குத்தூசி சொன்னாராம்: “அது அந்தக் காலம். இப்போது அவர்தான் எனக்கு ஆசிரியர் என்று சொல்லுங்கள்.”

பெரியார் திடலில் ஒருமுறை ஆசிரியர் வீரமணியுடன் பேசிக் கொண்டிருந்த போது சின்னக் குத்தூசியைப் பற்றிச் சொன்னேன். வீரமணி சொன்னார்: “நீங்கள் அவருடைய மாணவர். அவர் எங்கள் மாணவர்.” சின்னக்குத்தூசிதான் பெரியார் சுயமரியாதைப் பயிற்சி நிறுவனத்தின் முதல் மாணவர் என்று விளக்கினார்.

சின்னக்குத்தூசி அப்போது முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னையில் பத்திரிகையாளர்கள் அனைவரும் அவரைப் பெரிதும் மதித்தனர். விகடன் ஆசிரியர் குழுவினருடனும் அவருக்கு நல்ல உறவு என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால்தான் அவர் சொல்லித்தான் அவர்கள் என்னை அழைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இல்லை, உங்கள் கடிதம்தான் உங்களை எங்களுக்குக் காட்டியது என்று இராவு சொல்லி விட்டார்.

“நீங்கள் எங்கள் இதழில் எழுத வேண்டும், இது ஆசிரியர் (பாலசுப்ரமண்யம்) விருப்பம்” என்றார்.

விகடன் இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் வருகின்றன. ஆனால் அறிவியல் என்றால் இயற்கை அறிவியல் மட்டும் போதாது. சமூக அறிவியல் அதை விடவும் தேவை. நான் சமூக அறிவியல் எழுதலாம். விடுதலை இயக்கங்களின் வரலாற்றை எழுதினால் நன்றாக வரும்.

ஆனால் அவர்கள் வேறு குறி வைத்திருந்தார்கள். “முதலில் உங்கள் சிறைவாழ்க்கை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். பிறகு மற்றதை எழுதலாம்” என்றனர். சிறை வாழ்க்கை பற்றி எழுதுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. சிறையில் நாங்கள் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அது பற்றி வெளிப்படையாக எழுதும் நேரம் இன்னும் வரவில்லை என்பது என் பார்வையாக இருந்தது.

இதற்கு முன்பே தராசு சியாமும் நக்கீரன் கோபாலும் என்னைச் சிறை வாழ்க்கை பற்றி எழுதக் கேட்டதுண்டு. அவர்கள் முதலில் என் வழக்கைப் பற்றி எழுத வேண்டும் என்றனர். குறிப்பாக அழித்தொழிப்பு நடவடிக்கையிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றனர்.

நான் அதை ஏற்கவில்லை. அழித்தொழிப்பு நாங்கள் செய்த புரட்சி என்று பெருமை கொள்ளும் நிலையில் நாங்கள் (தோழர் இலெனினும் நானும்) இல்லை. அது மோசமான அரசியல் பிழை என்ற முடிவுக்கு வந்திருந்தோம். அதனால் புரட்சிக்கு நன்மை இல்லை என்பதோடு சில கேடுகளும் நேரிட்டிருந்தன. அது பற்றிப் பகுத்தாய்ந்து எழுதுவதானாலும் அதற்குரிய நேரமும் இடமும் இதுவன்று.

என்னை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். அவர் சொன்னார்: தியாகு, நீங்கள் தோழர்தானே? சூவியில் எழுதும் போதும் நீங்கள் தோழராகவே எழுதலாம், எங்களுக்காக நீங்கள் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம். எதை எழுதலாம் எதை எழுத வேண்டா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குறுக்கிட மாட்டோம். எங்களை நீங்கள் ஏற்கச்செய்ய வேண்டியதில்லை. உங்கள் வாசகரை நீங்கள் ஏற்கச் செய்தால்போதும்.

என்னைச் சிறைக்கு அனுப்பிய வழக்கு பற்றியோ என் சிறை வாழ்க்கை பற்றியோ இப்போதைக்கு எழுத மாட்டேன். சிறையில் நான் சந்தித்த மனிதர்களைப் பற்றி மட்டும் எழுதுவேன். சுவருக்குள் சித்திரங்கள் என்ற பெயரையும் நானே கொடுத்தேன். சித்திரங்கள் தீட்டுவேன், நானே சித்திரமாக மாட்டேன். எல்லாவற்றையும் பாலசுப்ரமண்யம் ஏற்றுக் கொண்டு ஓர் அறிமுக உரை எழுதிக் கொண்டுவரச் சொன்னார்.

அடுத்த ஓரிரு நாளில் எழுதி எடுத்துப் போனேன்.
“ஓ, சூவிக்கென்று எழுதி வந்தீர்களா? உங்கள் பத்திரிகையில் இப்படித்தான் எழுதுவீர்களா? உங்கள் எழுத்தில் வருக்கச் சீற்றம் இல்லையே? விகடனையும் என்னையும் மறந்து விட்டு எழுதி வாருங்கள்.”

நான் எழுதிய எதையும் அவர் நீக்கியதோ மாற்றியதோ இல்லை. மாற்றம் வேண்டுமென நினைத்தால் எனக்கே சொல்லியனுப்புவர். ஆனால் முடிவை என்னிடமே விட்டு விடுவார். நல்ல ஆலோசனைகள் சொல்வார்.

சுவருக்குள் சித்திரங்கள் முதற்சில பகுதிகள் எல்லாம் சித்திரங்களே! மாணிக்கம் செட்டியார்! சுப்பையா கவுண்டர்! வரதராச ஐயர்! எம்.ஆர். இராதா கூட வருவார். என்னைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம்! இந்தப் போக்கை மாற்றி என்னை உள்ளே இழுத்து விட்டவர் ஒரு நாள் இராவு அறையில் என்னைச் சந்தித்த எழுத்தாளர் திரு சா. கந்தசாமி! எப்படி? நாளை சொல்கிறேன்.
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 121

புதன், 19 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும்


 



(தோழர் தியாகு எழுதுகிறார்  149 : அஞ்சலட்டை தொடர்ச்சி)

கீழடியும் தென்முடியனூரும்

மதுரையிலிருந்து  12 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தென்கிழக்கே சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் இரண்டு காணி(ஏக்கர்) பரப்பளவில் 18.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. தாலின் திறந்து வைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்த பின்னர் சாதி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அகழ் வைப்பகம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள், பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ள தொல்பொருட்கள், இரும்பு நெசவு கைவினைத் தொழில்கள், கடல் வணிகம் செய்ததற்கான தொல்பொருள் சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் நுழைய நீண்ட காலமாகவே பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாகவே அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

15 நிமிட ஒலி-ஒளி காட்சியகம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி, 2 நிமிட அசைவூட்டக் காணொளி (அனிமேசன் வீடியோ) காட்சி ஆகியவையும் இந்தக் கூடங்களில் இடம்பெற்றுள்ளன.

வட்டார வளர்ச்சி அலுவலர் இருதரப்புச் சார்பாளர்களிடமும் சனவரி 25  அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் சனவரி 30 அன்று பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்லலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கீழடி அருங்காட்சியகத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனித்துவமான கலைப் பொருட்கள் உள்ளன. இவை 2018  முதல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழ்வாய்வின் 4ஆம், 8ஆம் கட்டங்களுக்கிடையே தோண்டி எடுக்கப்பட்டவை ஆகும்.

தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயில் நுழைவின் போது மாவட்ட ஆட்சியர் தொடங்கிப் பலரும் மரியாதையுடன் முன்னிறுத்தப்பட்டனர். அனால் அந்நிகழ்வுக்குப் பிந்தைய விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் துணை நின்றார்களா என்பது கேள்விக்கு உரியதாகி விட்டது.

கீழடி அகழாய்வுகள் சங்கக் காலத்தைப் பொது ஊழிக்கு முன் 300க்கும் பொது ஊழி 300க்கும் இடைப்பட்ட காலம் என்பதிலிருந்து பொது ஊழிக்கு முன் 6 ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளி விட்டன.

“ஆதிக்கச் சாதியினர் இந்தக் கோயில் நுழைவை எதிர்க்கின்றார்கள், நாங்கள் பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளோம்; அசம்பாவிதம் நடந்தால் சட்டம் தன்கடமையைச் செய்யும்” எனக் காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது.

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்களை வழிநடத்திய கண்காணிப்பு அகழாய்வாளர் கே. அமர்நாத்து இராமகிருட்டிணா அண்மையில் இந்திய அகழாய்வுத் துறைக்கு அளித்துள்ள அறிக்கை சங்கக் காலம் பொது ஊழிக்கு முன் 800 ஆண்டுகள் என்று கூறியுள்ளார்.

கோயில் நுழைவில் பங்கெடுத்த பட்டியலின மக்கள் மிரட்டப்பட்டனர். ஒரு பெண்ணின் பெட்டிக் கடை கொளுத்தப்பட்டது.

அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று தற்படம்(செல்ஃபி) எடுத்துக் கொண்டார்.  

நிகழ்விடத்தைப் பார்வையிட்ட காவல் துறையினர் ‘புகார் தரப்படவில்லை’ எனும் காரணத்தைச் சொல்லி முதலில் வழக்குப் பதிவு செய்யவில்லை. பிறகு பதியப்பட்ட வழக்கு பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்யபப்பட வில்லை. இதை விடக் கொடுமையாகப், பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடுக்கும் வகையில் ஆதிக்கச் சாதியினர் தங்கள் கடைகளை மூடியுள்ளனர். பட்டியலின மக்களிடமிருந்து பால் கொள்முதல் போன்ற வருத்தகத் தொடர்புகளையும் துண்டித்துள்ளனர். வேளாண் நிலங்களுக்கான தண்ணீரையும் தடுத்துள்ளனர்.  

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 120

தோழர் தியாகு எழுதுகிறார் 149 : அஞ்சலட்டை

      16 July 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார்  148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!- தொடர்ச்சி)

அஞ்சலட்டை

இனிய அன்பர்களே!

‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூல் வடிவம் பெற்ற போது “அறிவுப் பாலம்” என்ற தலைப்பில் அதற்கோர் அறிமுகவுரை எழுதினேன். அதன் முதல் பத்தி இதுதான்:

“செத்தும் கொடுத்தவர் சீவலப்பேரியார். சௌபாவின் பாண்டி குறித்து நான் விடுத்த மடலை வெளியிட்ட சூனியர் விகடனார் அத்தோடு விடாமல் என்னைத் தேடிப் பிடித்து, சிறை அனுபவத் தொடர் எழுதச் சொன்னார். ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தீட்டத் திட்டிவாசல் திறந்தது இப்படித்தான்.”

இந்தச் சுருக்கத்தைக் கொஞ்சம் விரித்தெழுதினால் சுசி பிறந்த கதை தெரிய வரும். அப்போது 1992-93 காலம். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘என்சிபிஎச் சு’ தலைமையகத்தில் மூலதனம் தமிழாக்கம் சீர்மைப் பணியில் ஈடுபட்டிருந்தேன். சாந்தாராம், மணிகண்டன் (?), ஆமீனா ஆகியோர் என் உதவியாளர்கள். மாலையில் மட்டும் இரா. கிருட்டிணையா வந்து போவார். அப்போது சூனியர் விகடனில் சௌபா ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார். பாண்டி என் சிறை நண்பர். அது பற்றி சுசி-இல் எழுதியுள்ளேன். பாண்டிக்காகவும் சௌபாவின் ஈர்ப்பான எழுத்துக்காகவும் தொடர்ந்து சூவியில் அந்தத் தொடரைப் படிக்கலானேன். பாண்டி சிறைப்படக் காரணமாய் இருந்த வழக்கு குறித்து எனக்கே தெரியாத செய்திகளையெல்லாம் சௌபா எழுதியிருக்கக் கண்டு வியந்து போனேன். சுவைபடப் போய்க் கொண்டிருந்த கதையில் சிறைக் கட்டம் வரட்டும் என ஆவலாகக் காத்திருந்தேன். பாண்டி சிறையிலிருந்து தப்பிய கதை எனக்கு முழுமையாகத் தெரியும். சௌபாவால் இதை எப்படிச் சொல்ல முடிகிறது? என்று பார்க்க என்று ஆவலாகக் காத்திருந்தேன்.

 திருச்சிராப்பள்ளியிலும் கடலூரிலும் பல்லாண்டுக் காலம் என்னோடு சிறையிலிருந்த ஒரு தோழர் விடுதலைக்குப் பின் சென்னை வந்து ஒரு பாத்திரக் கடையிலும் பாத்திரக் கடை உரிமையாளருக்குச் சொந்தமான திருமண மாளிகையிலும் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் கருணாநிதி. அவர், அண்ணன் சிவப்பிரகாசம், அப்பா ஆகிய மூவரும் ஒரே கொலைவழக்கில் வாழ்நாள் (ஆயுள்) சிறைத்தண்டனை பெற்று வந்தார்கள். அவர்கள் முடிதிருத்தத் தொழிலாளர்கள். சிறையிலும் அதே வேலைதான்.

 கருணாநிதியை நண்பர்கள் “கலைஞர்” என்று அழைப்பது வழக்கமாயிற்று. நான் மட்டும் கருணா என்றுதான் அழைப்பேன். கலைஞர் என்று விளித்து இருவரையும் அவமதிக்க வேண்டாமே என்பேன். கருணா பற்றிச் சொல்ல வேண்டியவை நிறைய உண்டு, சொல்வேன்.

இப்போதைக்கு… 1992-93 காலத்தில் நான் அம்பத்தூரில் ‘என்சிபிஎச்சு’ அலுவலகத்தில் ஒரு புத்தகக் கிடங்கு போன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து மூலதனம் சீர்மைப் பணி செய்து கொண்டிருந்த போது, சூனியர் விகடனில் சௌபா ‘சீவலப்பேரி பாண்டி’ தொடர் எழுதிக் கொண்டிருந்த போது, கலைஞர் என்னும் கருணாநிதி என்னும் கருணா  அடிக்கடி என்னை வந்து பார்த்துப் போய்க்கொண்டிருந்தார். இருவரும் சௌபாவின் தொடர் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருப்போம். சூவி கடைக்கு வந்ததும் அதை எனக்கு வாங்கி வருவதே கருணாவாகத்தான் இருக்கும்.

சீவலப்பேரி பாண்டி கதையில் அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் செய்தியை சௌபா முழுக்கக் கற்பனையாக எழுதியிருப்பது தெரிந்து விட்டது. இதை நான் கருணாநிதியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவர் அஞ்சலட்டையில் இந்தச் செய்தியை சூவிக்கு எழுதிப் போட்டு விட்டார். “பாண்டி பற்றி எங்கள் தோழர் தியாகுவிடம் கேட்டு எழுதுங்கள்” என்றும் எழுதி விட்டார். இதற்கு மேல் எதுவும் நடக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

அப்போதெல்லாம் இயக்கப் பணிக்காக அடிக்கடி மதுரை போய் வருவதுண்டு. அந்த முறை மு.கருப்பையாவின் அறைக்கே சௌபா வந்து விட்டார்: “பாண்டி தப்பியமை பற்றி நான் எழுதியது கற்பனைதான். வேறு வழியில்லை. அந்தக் காவல் நிலையத்தில் ஏதோ எழுதி வைத்திருந்தான். அதை வைத்து நான் சமாளித்தேன். ஆனால் விகடன் ஆசிரியர் “தியாகுவிடம் கேட்டு உண்மையை எழுதிப் போடு” என்கிறார்.”

“சரி, நான் என்ன செய்யட்டும்?”

சூவியில் இந்தத் தொடர் முடிந்த பின் விரிவான கடிதம் எழுதுங்கள். அவர்கள் அதை அப்படியே வெளியிடுவார்கள்.”

 அப்படியே அப்போது கருணா உடனிருந்து தூண்ட நானும் செய்தேன். அடுத்த இதழில் அது அப்படியே வெளிவந்தது. அத்துடன் இதையெல்லாம் மறந்து விட்டு மற்ற வேலைகளில் மூழ்கி விட்டேன். சில நாள் கழித்து விகடனிலிருந்து எனக்கு ஓர் அஞ்சலட்டை வந்தது: “ஆசிரியர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.”

 அவசரமில்லாமல் மெதுவாக ஒருநாள் போனேன். உதவி ஆசிரியர் இராவு என்னைப் பார்த்தார். “நீங்கள் சூவியில் எழுத வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். சரி என்றால் உங்கள் விருப்பம்போல் ஒரு தலைப்பில் தொடர்ந்து எழுதுங்கள்.” 

 “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? சின்னக் குத்தூசி சொன்னாரா?”

 “இல்லை, நீங்கள் எழுதிய ஒரு கடிதம் போதும் உங்களைத் தெரிந்து கொள்ள. வாசன் அவர்களுக்குப் புதுமைப்பித்தனைத் தெரிந்து கொள்ள அவர் எழுதிய ஒரே அஞ்சலட்டை போதுமானதாக இருந்தது, தெரியுமா?”

“சரி, நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்கள்?”

“இரண்டு யோசனை உண்டு.”

“இரண்டில் எது வேண்டுமானாலும் எழுதுங்கள். அதற்கு முன் ஆசிரியரைப் பார்த்து விடுங்கள்.”

ஆசிரியர் பாலசுப்பிரமணியம் எனக்கு ஓர் உறுதி கொடுத்தார்.

நாளை சொல்கிறேன்…

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 119

செவ்வாய், 18 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!

 




(தோழர்தியாகுஎழுதுகிறார்  147 : வேண்டும்உரோகித்துசட்டம் –  தொடர்ச்சி)

சுசி, கவெ: அரசியல் உயிர்!

இனிய அன்பர்களே!

அண்மையில் நடந்த என் தொடர்பான ஒரு நிகழ்ச்சி பற்றித் தாழியில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத வேண்டா என்றுதான் இருந்து விட்டேன். ஆனால் எழுத வேண்டும் என்று அன்பர்கள் சிலர் எனக்கு உணர்த்தியுள்ளனர். நான் எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்” குறித்து நற்றுணை நண்பர்கள் காளிபிரசாத்து முதலானோர் கவிக்கோ மன்றத்தில் சென்ற பிப்பிரவரி 25 மாலை ஒழுங்கு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

அந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ததோடு இந்த நூல்கள் குறித்தும் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு உரையாற்றியவர் அன்பு நண்பர் சாம்ராசு. தலைவர் மேடையிலோ எதிரில் முன்வரிசையிலோ உட்கார்ந்து கொண்டு தமக்கான புகழுரைகளை மெய்ம்மறந்து கேட்டு மகிழ்ந்து போவதும், அடுத்தடுத்த புகழுரையாளர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சப் போட்டியிடுவதுமான காட்சி தமிழ்நாட்டில் புதிதோ அரிதோ அன்று. இந்தத் தலைவர்களை “மனநோயாளிகள்” என்றுதான் மற்றத் தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். ஒருநாளும் அந்த மன நோயாளிகளில் ஒருவனாகி விடக் கூடாது என்ற எச்ச்சரிக்கை உணர்வு எனக்குண்டு.

நற்றுணை மேடையில் என் அரசியல், இலக்கியம், பேச்சு எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். நானும் மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எழுதியதாகச் சொல்லி சிலவற்றைப் படித்துக் காட்டினார்கள். இதையெல்லாம் நாம்தான் எழுதினோமா? என்று எனக்கே வியப்பாக இருந்தது. ஒரு காரணம்: எழுதி நீண்ட நாளாகி விட்டது. இன்னும் முக்கியமான காரணம்: குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே அப்படி எழுத வரும். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், ஏதோ இடம் பொருள் ஏவலில் உங்களிடமிருந்து இயல்பாக வெளிப்பட்ட சொற்களை வேறொரு சூழலில் செயற்கையாகப் பேச உங்களுக்கு வராது.

சுவருக்குள் சித்திரங்கள்’, ‘கம்பிக்குள் வெளிச்சங்களில்’ அழகு உண்டானால் அது உண்மையின் அழகுதான். அதன் அழகியல் கொள்கை என்பது வாசகருக்காக எழுதுவதுதான்! வாசகரின் கோணத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பார்த்து பழகிய நடைதான்!

நான் தமிழ் நடை பழக எனக்குப் பெரிதும் உதவியவர்களில் ஒருவர் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டுள்ள இரா. கிருட்டிணையா அவர்கள். அவர்தான் ‘மூலதனம்’ தமிழாக்கத்தின் பதிப்பாசிரியர். ஏழாண்டு காலம் என் அருகில் அமர்ந்து அந்தப் பணியைச் செய்தளித்தவர்.  அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை: “வாய்க்கு வழங்கும் படி எழுதுங்கள்.” மொழிபெயர்த்ததை வாய்விட்டுப் படித்துக் காதிலே கேளுங்கள்; பிசிறில்லாமல் ஒலித்தால் அதுதான் நல்ல மொழிபெயர்ப்பு! இல்லை, நல்ல எழுத்து!

அவர் சொல்வார்: தியாகு, நீங்கள் எழுத எழுத ஒரு வாசகர் எட்டிப் பார்த்துப் படித்துக் கொண்டே இருப்பதாகக் கற்பனையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவது புரியா விட்டால் அவர் உங்கள் கையைப் பிடித்து இழுப்பார், உங்களை மேற்கொண்டு எழுத விட மாட்டார். திருத்தி அவருக்கேற்ப எழுதினால்தான் அவர் உங்களை மேற்கொண்டு எழுத விடுவார்! 

சுவருக்குள் சித்திரங்களும் கம்பிக்குள் வெளிச்சங்களும்தான் தமிழ்நாட்டில் எனக்குப் பரவலாக அறிமுகம் பெற்றுத் தந்தன என்பதை நற்றுணை கலந்துரையாடலில் பலரும் சுட்டிக்காட்டினார்கள். உண்மைதான்! அப்படியில்லாமல் என் அரசியல் பணியால் இந்த அறிமுகம் கிட்டியிருந்தால் அதுதான் எனக்குக் கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும் என இப்போதும் நம்புகிறேன். சுவருக்குள் சித்திரங்கள் தோழர் ஏசிகே அவர்களையும், கம்பிக்குள் வெளிச்சங்கள் தோழர் ஏஎம்கே அவர்களையும் வெகுமக்கள் தளத்தில் பரவலாக அறியச் செய்தன என்றால் அதுதான் மகிழ்ச்சிக்குரியது. என் அரசியல்-கருத்தியல் நிலைப்பாடுகளையும் பொதுத்தளத்தில் பதியச் செய்யக் கிடைத்த வாய்ப்பும் மதிக்கத்தக்கது. எனக்கு எல்லாவற்றையும் விட அதுதான் முதன்மை! என்னை நேசித்தாலும் வெறுத்தாலும் அது என் அரசியலுக்காகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் அணுகுமுறையில் எரிச்சலுற்ற ஒருவர் என்னை “political being” என்று திட்டுவதுண்டு. “Man is a social being, but you are a political being” என்பார். ஆம், social being என்பதை முழுமையாக உணர்ந்து விட்டதால் political being ஆகி விட்டேன். Being என்பதை ‘பிறவி’ என்றோ ‘பிராணி’ என்றோ சொல்வதை விடவும் உயிர் என்றே சொல்லத்தகும். Natural being = இயற்கை உயிர்! Social being = சமூக உயிர் அல்லது குமுக உயிர்! Political being = அரசியல் உயிர்!

நமக்கோர் அரசியல் வாழ்க்கை போதாது, நமக்கு அரசியலே வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் வளர்த்தவர் எங்கள் பேராசிரியர் மருதமுத்து (அக்காலத்தில் இராதாகிருட்டிணன்). எங்கள் கல்லூரிக்கு ஆங்கில ஆசிரியராக வந்தவர் எனக்கு அரசியல் ஆசிரியராகிப் போனார். அவர் தனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் என்று சான் மில்டனைச் சொல்வார். ‘இழந்த சொர்க்கம்’ எழுதிய சான் மில்டன். இதற்கு மில்டனின் அரசியல் துடிப்பைத்தான் காரணமாகச் சொல்வார். அதிலும் விழியிழந்த பின்னும் தன் முடியாட்சிய எதிர்ப்புச் சிந்தனையில் ஊன்றி நின்று காப்பியம் படைத்தவர். ஆகவே இலக்கியமாவது, கலையாவது, எல்லாம் அரசியலுக்காகத்தான்! அரசியல் தனக்காக அல்ல, மக்களுக்காக என்ற தெளிவு மட்டும் சேர்ந்து கொண்டால் போதும்!   

சு.சி., க.வெ. எனும் சிறை எழுத்து ஈர்ப்புப் பெற்றமைக்கு ஒரு காரணம் அது பொது வாசகர் அறியாத ஓர் உலகம் பற்றிப் பேசியது, அந்த உலகத்தின் மனிதர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்தது. அந்த உலகத்திற்கே உரிய மொழியில் பேசியது. நாடு – மதில்களால் சூழப்படாத சிறை; சிறை – மதில்களால் சூழப்பட்ட நாடு என்பார் ஏசிகே. அந்த நாட்டுக்குப் போய் வராதவர்களுக்கு அது பற்றி என்ன சொன்னாலும் அதிசயமாகத்தான் இருக்கும்! ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறை தெரிந்திருக்க வேண்டும். சிறை வாழ்க்கை இல்லாமல் பொது வாழ்க்கை நிறைவு பெறாது. இப்போதுள்ள அரசியல் சூழலில் மக்களுக்காகப் போராட விரும்பினால் சிறையச்சம் கூடாது. நற்றுணை கலந்துரையாடலில் என் ஏற்புரையில் இதைத்தான் சொன்னேன்.

ஆனால் இசை, இலிபி ஆரண்யா, கவின்மலர், சாம்ராசு இவர்களைத் தவிர கலந்துரையாடலில் பங்கேற்ற நண்பர்கள் சிலரும் சில எதிர்பார்ப்புகள் வெளியிட்டனர், சில வினாக்களும் தொடுத்தனர். சில குற்றாய்வுகளும் இருந்தன. என் ஏற்புரை முழு நீதி செய்யவில்லை என்பதை உணர்கிறேன். 

சில வினாக்களுக்கு நான் தந்த விடைகள் என் அன்புக்குரியவர்களிடமிருந்து புதிய வினாக்கள் எழச் செய்துள்ளன. அவற்றையும் நான் சந்திக்கத்தான் வேண்டும். தொடர்ந்து எழுதுகிறேன். இதற்கிடையில் எப்படி சூனியர் விகடனில்  சுவருக்குள் சித்திரங்கள் எழுத வந்தேன் என்ற கதையை நாளை சொல்கிறேன்.

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல்  118

தோழர் தியாகு எழுதுகிறார் 147 : வேண்டும் உரோகித்து சட்டம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார்  146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை தொடர்ச்சி)

வேண்டும் உரோகித்து சட்டம்!

இனிய அன்பர்களே!

தொடர்ந்து உரோகித்து வேமுலா குறித்து எழுதிக் கொண்டிருந்தேன். மீயுயர் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான ‘உரோகித்து வேமுலா (VEMUOLA) சட்டம்’ இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுப்பப்பட்டது .

நான்கைந்து ஆண்டு முன்பு புதுவை பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது உரோகித்து வேமுலா குறித்துப் பேசியதோடு உரோகித்து வேமுலா சட்டத்தின் தேவை பற்றியும் பேசினேன்.

இன்று காலை நாளேடுகளில் வந்துள்ள ஒரு செய்தி உரோகித்து வேமுலா பேரில் சட்டம் இயற்றும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளது. இந்தக் கோரிக்கை எதிர்பாராத ஓரிடத்திலிருந்து வந்திருப்பது இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாலையில் தோழர் அரி பரந்தாமன் அழைத்துச் சொன்னார்: “காங்கிரசு பேரவைக் கூட்டத் தீர்மானங்கள் எல்லா நாளேடுகளிலும் வந்துள்ளன. பாருங்கள்.” உடனே இந்துவைப் புரட்டினேன்.

“Rohit Vemula Act, quota in higher judiciary in Cong. promises for social justice” என்ற தலைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

மெய்யாலுமே நல்ல செய்திங்கோ! மாறி வரும் காலத்தின் அறிகுறிகள்! நாளை விரிவாகப் பேசுவோம்!

 தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113