ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)




தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2

  இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும் அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும்.  தமிழ் மணங் கமழும் திருநாட்டில்   அமைந்து   மலையும்  ஆறும் தமிழ்க் கவிகள் மனத்தில் தமிழ்மயமாகவே  விளங்கித்  தோன்றுகின்றன.  ‘என்றுமுள தென்தமிழை இயம்பி இசைகொண்ட’ திருமுனிவன்      வாழும்    பொதியமலை     தமிழ்   மலையாகவே திகழ்கின்றது. வட  திசையினின்றும்  இலங்கையை நாடிச் சென்ற வானர வீரரை   நோக்கி,    “தென்    தமிழ்   நாட்டில்  அமைந்த  அகன்ற பொதியமலையில்   அகத்திய   முனிவன்  அமர்ந்திருக்கின்றான்.  அம் முனிவன்     அமிழ்தினு     மினிய    தமிழ்மொழியை    ஆதரித்து வளர்க்குமிடம்   அதுவாதலின்,  வானரங்காள்! அம் மலையை  வணங்கி அப்பாற்  செல்க”   என்று   கம்பர்  கூறும் மொழிகளில் தமிழ் அன்பு கலந்து  இலங்குகின்றது.   இன்னும்,   அப்  பொதிய மலையிற் பிறந்து, திருநெல்வேலி   வழியாய்ச்   சென்று, அந் நாட்டை ஊட்டி வளர்க்கும் பொருநை   என்னும்  தமிழ் ஆற்றை, “பொன்திணிந்த புனல்  பெருகும் பொருநை எனும் திரு நதி” என்று கம்பர் போற்றிப் புகழ்ந்தார்.
  இத்      தகைய  தலையாய  அன்பு,  பிற்காலத்துப்  புலவரிடமும் பொருந்தித்   திகழக்   காணாலாம்.    செந்தமிழின்  சுவை   தேர்ந்து செஞ்சொற்கவி     செய்த    பாரதியார்,   தமிழ்   மொழி   வழங்கும் திருநாட்டைப்   போற்றிப்   புகழும்  மொழிகள்,  புதியதோர்  ஊக்கம் அளிப்பனவாம்.
 “செந்மிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
 தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
 தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
 சக்தி பிறக்குது மூச்சினிலே”
 என்று     கவிஞர்  அழகாக எடுத்துரைத்தார்.  செந்தமிழ்  நாடு என்று சொல்லும்பொழுது   தென்   தமிழின்  தீந்தேன்  செவிகளில் விரைந்து பாய்ந்து    நிரம்புகின்றது.    தாயின்  செவிகளில்  விரைந்து  பாய்ந்து நிரம்புகின்றது.  தாயின்  இனிமையும்  அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக      இன்பத்தேன்  வந்து  பாய்வதாகும்.  இத்   தமிழ்  நாட்டில் வாழ்ந்த   அறிஞர்,   இனிமையும்  தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ்  என்னும்   பதத்திற்கே   இனிமை  என்ற பொருள் கண்டார்கள். இத்  தகைய   இனிமை   வாய்ந்த  தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய்,   ஆனந்தத்   தேன்  சொரியும்  அழகிய  ஒலியாய் இனிமை பயப்பது    இயல்பே   யன்றோ?
(தொடரும்)
– சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017


மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

  வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்னூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக)ப் பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
  சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அஃதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதி இதழ்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.
  http://www.ypvnpubs.com/2017/03/blog-post_17.html என்ற இணைப்பைச் சொடுக்கி ‘தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும்’ என்ற பதிவைப் படித்த பின் “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற தலைப்பிற்கு ஏற்ற பதிவுகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழென்பதை நம்பக்கூடியவாறு பதிவுகளை ஆக்குதல் வேண்டும்.
 தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளைத் தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  சொற்கோப்பு (Word), பொதிஆவணமாக(PDF) அனுப்பி வைக்கக்கூடாது. வலைப்பூ இல்லாதவர்கள் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதிலே தங்கள் பதிவுகளை வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  உரிமம் – பொதுமைப்படைப்பு – எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்.”( “License: Creative Commons Attribution-Share Alike 4.0 International ) என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற அன்பளிப்பு (இலவச) மின்னூலில் எனது பதிவு இடம்பெற உடன்படுவதோடு ஒத்துழைப்பும் வழங்குகிறேன் எனப் பதிவின் இசைவை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.
  மின்னஞ்சலுக்கான பொருள் (Subject) ‘மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017’ என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் 120×160 pixel அளவான முகம் அளவு படத்துடன் ஐந்தாறு வரிகளில் தங்களைப் பற்றிய அறிமுகம் எழுதி அனுப்ப வேண்டும். குறித்த மின்-நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.
  ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளின் இணைப்புகளையும் வழங்கலாம். பதிவுகளைச் சித்திரை முப்பதாம் நாளுக்கு (30/04/2017) முன்னதாக அனுப்பிவைக்க வேண்டும். தங்கள் வலைப்பூக்களிற்கு பூட்டுப் போட்டிருந்தால் பரவாயில்லை. வாசகர் படித்துக் கருத்துப் போட இசைவளித்த வலைப்பூப் பதிவையே தெரிவுசெய்வோம்.
 பதிவிற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் அமைந்த அதிகமான வாசகர் கருத்துகளைக் கொண்ட பதிவுகளையே சிறப்புப் பதிவாகத் தெரிவு செய்வோம். அதற்காகத் தாங்கள் ஆக்கிய பதிவை மக்களாய(சமூக) வலைத்தளங்களில் அடிக்கடி விளம்பரப்படுத்தலாம்.
  எமக்குக் கிடைத்த பதிவுகளின் இணைப்பை நாமும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அறிமுகம் செய்து வைப்போம். 30/04/2017 இற்குப் பின் வரும் பதிவுகளின் இணைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈற்றில் பதிவுகளைத் தொகுத்து மின்நூல் ஆக்கி வெளியிட்டதும் பரிசில் பெறும் பதிவிற்கு உரிய அறிஞர்களின் விரிப்பு இந்த வலைப்பூவில் வெளியிடுவோம். பின் அவர்களுக்கான வெகுமதி இதழ்கள் / Gift Certificates அனுப்பிவைக்கப்படும்.
  உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
“உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்நூலிற்கான பதிவுகளை எழுதுவோருக்கு உதவும் பதிவு.
உலகின் முதன் மொழி தமிழா?
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html

 பங்கு பெறுவீர்! பரிசில் பெறுவீர்!

– யாழ்பாவாணன் வெளியீட்டகம்

‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு





வணக்கம்.

சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும்

‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள்,

  பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04,

  பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5 

ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன.

உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.


முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி
இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி

இடம் :  இரா அரண்மனை விருந்துக்கூடம்
 [ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6 (Markham & North of Steeles)]

முதல்நாள், செவ்வாய், மாலை 6.30;  கலந்துரையாடல் தலைப்பு :
குடும்ப வளர்ச்சிக்குக் கூடிய பங்களிப்பது ஆண்களா பெண்களா?
செவ்வாய் இரவு 6.00 மணிக்குரிய கலந்துரையாடல் தலைப்பு :
  காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதால் வன்முறைகள் அதிகரிக்கிறதா?                                                                                                                                              
 புதன் மாலை 6.30 மணி உரையாடலுக்கான தலைப்பு
பிள்ளைகளைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர் தவறுகிறார்களா?
 புதன் கிழமை இரவு 8.00 மணி கலந்துரையாடலுக்கான தலைப்பு:
மது மற்றும் போதைப்பொருள்களின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது வரவேற்கக்கூடியதா?
உங்களுடைய வருகையை  416-464-3551  அல்லது 416-797-1517 எண்ணில் பேசி உறுதி செய்க.
அல்லது sacem1983@gmail.com மின்வரிக்கு மின்னஞ்சலிடுக.
சேக்கம் அமைப்பு
SACEM Board