பிறப்பில் ஐரோப்பிய ஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ‘சே’வின் நடவடிக்கை களில் ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தன. புரட்சியாளராக அவர் பின்னாளில் உருவெடுத்த போது கட்டற்ற ஆற்றலைக் கட்டுப்படுத்தி திட்டமான ஒரு பாதையில் அவரை நெறிப்படுத்த, இது பெரிதும் உதவியாக இருந்தது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவப் படிப்பை ‘சே’ தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. தன் பாட்டி இறப்பதற்குக் காரணமாக இருந்த புற்றுநோய்க்கு மாற்று கண்டு பிடிக்கும் பொருட்டு மருத்துவம் பயின்றார் என்பதும் அவற்றில் ஒன்று. தனது மருத்துவப் படிப்பு காலத்தில் ‘சே’ வசீகரத்தின் வசந்தத்தில் இருந்தார். கைகளை விரித்து உற்சாகக் குரல் எழுப்பி நண்பர்களிடம் நாயகனாக வலம் வந்தார்.அப்போது அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது.தன் நண்பர்களைச் சந்திக்க, ஃப்யூனஸ் அயர்ஸிலிருந்து 78 கி.மீ தொலைவில் இருந்த கோர்டோபா எனும் நகரத்துக்கு அடிக்கடி பயணித்தார். அக்காலங்களில் அவரது வசீகரம், உயர் அழுத்த மின்சாரம் போல பெண்களின் இதயங்களைப் படபடக்கவைத்தது. கொச்சையான சிரிப்பும், கட்டற்ற சுதந்திரத்தைப் பறைசாற்றும் பின் தள்ளப்பட்ட கேசமும், அசிரத்தையான உடைகளும், அதிகாரத் தைக் கேலி செய்யும் பாவனைகளுமாக எதற்கும் வசப்படாத வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார் ‘சே’! இருந்தும், இறந்தும் பெற்ற எல்லாப் பெருமைகளுக்கும், அவரது இந்தக் கட்டற்ற வசீகரமும் ஒரு காரணம். புறத் தோற்றத்தைத் தாண்டி அவரது கண்ணில் பிரகாசித்த ஒளிக்கு அவரது ஆன்ம விசாலமே காரணமாக இருந்தது.1960 மார்ச் 5&ம் தேதி, ஹவானாவின் வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான ஓர் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஆல்பர்ட்டோ கோர்டா (Alberto Korda) என்பவர் எதேச்சையாக எடுத்த ‘சே’வின் புகைப்படம் பின்னாளில் 20&ம் நூற்றாண்டை அடையாளப் படுத்தும் மிகச் சிறந்த புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒன்றே இதற்குச் சான்று!
1951&ல் மருத்துவப் படிப்பு இன்னும் முழுமையாக முடிந்திராத தறுவாயில் ‘சே’வுக்கும் அவரது நண்பர் உயிர் வேதியியல் மாணவர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுக்கும்(Alberto Grenado) ஒரு வித்தியாசமான ஆசை தோன்றியது. தென் அமெரிக்கக் கண்டம் முழுக்க மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை!அதுதான் உலகத்தின் மிக உன்னதமான ‘மோட்டார் சைக்கிள் டைரி’!
நண்பர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுடன் ‘சே’ மோட்டார் சைக்கிள் பயணம் புறப்பட்டார். இருவரின் விருப்பத்துக்கும் பின்புலமாக இருந்து தூண்டியது
அவர்களின் மருத்துவப் படிப்பு.தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.சித்தார்த்தன், புத்தன் ஆன கதை போல பயணம்தான் ‘சே’வின் பாதைகளைத் தீர்மானிக்கும் ஆரம்பமாகவும் இருந்தது. வெவ்வேறான நிலப்பரப்புகளிடையே பயணித்து தங்களது கலாசார அறிவை வளர்த்துக்கொள் வதற்கும் அது உதவும் என்று அவர்கள் நினைத்தனர். 500 சிசி நார்டன் மோட்டார் சைக்கிளில், சொற்ப ஆடைகளும், மனது நிறையத் தன்னம்பிக்கையுமாக, 1951 டிசம்பர் 29&ல் புறப்பட்ட அந்தப் பயணம், ‘சே’வின் வாழ்க்கையைத் திசை திருப்பியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணக் குறிப்புகள் தான், ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்ற பெயரில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட பிரபல புத்தகம்.
அப்போது ‘சே’வுக்கு வயது 23. தோழர் கிரனாடோவுக்கு 29. இளமையின் காற்று தழுவிக்கொண்டு இருந்த ஒரு குளிர் இரவில், துவங்கியது பயணம்.
காலத்தை உணர்தல் என்பது அறிவின் மூலமாக நிகழ்வதன்று, அது புலன்களின் வழியாக உணர்வது. 23 வயதில் மோட் டார் சைக்கிளில் ஏறக்குறைய 10,000 கி.மீ. பயணம் செய்யும் அவரது துணிச்சல் நமக்கு இதைத்தான் கற்றுத் தருகிறது. எண்ணற்ற மலைகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள் இவற்றினூடே நிகழ்ந்த அந்தப் பயணம் பல்வேறான அனுபவங்களைக்கொண்டு இருந்தது.
உழைப்பாளிகள், உழைப்பைச் சுரண்டு பவர்கள், தொழு நோயாளிகள், காவலர்கள், அறிவுஜீவிகள், முட்டாள்கள், அடிவருடிகள், பண முதலைகள், பராரிகள், திருடர்கள் மற்றும் எண்ணற்ற காதலிகள் என வெவ் வேறான மனிதர்களையும் அனுபவங்களை யும் தந்த அந்தப் பயணத்தில் ‘சே’வினுடைய ஆஸ்துமாவும் தன் பங்குக்கு அவரைப் பெரிதும் இம்சித்தது.
சிலி, பெரு, கொலம்பியா என நீண்ட அந்தப் பயணம் ஏறக்குறைய ஆறு மாதங்களைக் கடந்திருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான உணர்ச்சிப் பேரலைகள்!இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.
சுற்றுப்பயணம் முடிந்ததும், மனம் முழுக்க வேதனைகளைச் சுமந்தவராக அர்ஜென்டினா திரும்பினார். ஒருவித குற்ற உணர்ச்சியில் பீடிக்கப்பட்டவராக இருந்தார் ‘சே’.1953&ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும், சே அங்கிருக்கப் பிடிக் காமல், ஒரு நண்பரின் ஆலோசனை யில்பேரில், குவேதமாலாவுக்குப் பணி நிமித்தம் சென்றார். ஏற்கெனவே அவருக் குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. அப்போது குவேதமாலாவை ஆண்டு கொண்டு இருந்த அர்பான்சோ என்னும் கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.‘சே’, அங்கிருந்த கம்யூ னிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதி ரான வேலைகளில் ஈடுபடத் தொடங் கினார். ஆனால்,
அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது. இக்காலகட்டங்களில் கம்யூ னிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந் தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயி களிடம் குவேதமாலா அரசு, ஆயுதங் களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்கா வின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏ&வின் பார்வைக்கு இலக்கானார். பாது காப்புக்காக
அர்ஜென்டினா தூத ரகத்தில் தங்க நேரிட்டது.
-தொடரும்
//அஜயன் பாலா