human rights commissionate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
human rights commissionate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 அக்டோபர், 2011

மனித உரிமைகள்ஆணையர நியமனம் - இந்திய எதிர்ப்பு எடுபடவில்லை.





பெர்த்: காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள், அந்த அமைப்பில் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளா விடில், பிரிட்டன் பல நாடுகளுக்கு அளித்து வரும் தனது நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்து உள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

நிபுணர்கள் குழு: காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை அந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, 2009ம் ஆண்டு நவம்பரில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் நியமிக்கப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு: இக்குழுவின் பரிந்துரைகளில், காமன்வெல்த் நாடுகளுக்கு என தனியாக ஒரு மனித உரிமைகள் கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. இலங்கையில் 2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் வெளிப்படத் துவங்கியதையடுத்து, கமிஷனர் நியமனம் அவசியம் என காமன்வெல்த் அமைப்பு கருதியது.ஆனால், இதுகுறித்து நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கமிஷனர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கமிஷனர் தேவை: மலேசிய முன்னாள் பிரதமரும், நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "கமிஷனர், ஒரு போலீஸ் அதிகாரியாகச் செயல்பட மாட்டார்; அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்காது. காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கை குழு மற்றும் பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக ஏற்படும் விடுதல்களை நிரப்பவே இந்த பதவி' என்றார்.

106 பரிந்துரைகள்: மனித உரிமைகள், எச்.ஐ.வி., ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் வகையில், 106 பரிந்துரைகளை நிபுணர் குழு நேற்று முன்தினம் அளித்தது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க, காமன்வெல்த் அமைப்பு அனுமதியளிக்கவில்லை.

ஒப்புதல்: இந்நிலையில் நேற்று நடந்த இறுதிக் கூட்டத்தில், மனித உரிமைகள் கமிஷனர் நியமனத்திற்கு, பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறுகையில், "இந்த பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதன் மூலம் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் காமன்வெல்த் செயல்படும் என்பதை நாம் உறுதி செய்துள்ளோம்' என்றார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக, சிறிய தீவு நாடுகளுக்கு உதவுவதாக காமன்வெல்த் உறுதியளித்துள்ளது. அந்த அமைப்பில் பாதிக்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் தீவுகளே.இலங்கை விவகாரம் தவிர, குழந்தைத் திருமணம் மற்றும் எச்.ஐ.வி., ஆகிய விவகாரங்களில் இக்கூட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.இந்த அமைப்பில் உள்ள 20 நாடுகளில் இன்னும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் உள்ளது. அவற்றிலும், 12 நாடுகளில் அதிகளவில் உள்ளது. அதேபோல், உலகில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் பேர் காமன்வெல்த் நாடுகளில் உள்ளனர்.

காமன்வெல்த் நாடுகள் 54ல், 41 நாடுகள் ஓரினச் சேர்க்கையை சட்ட விரோதமாகவே இன்னும் வைத்துள்ளன. பிரிட்டனின் நிதியுதவி பெறும் நாடுகள், மனித உரிமைகள், ஓரினச் சேர்க்கை தடை உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவில்லையெனில், இனி அந்த உதவியைப் பெற முடியாது என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். பொதுச் செயலராக தொடர்கிறார் சர்மா: காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா, 70, உகாண்டாவில் 2007ல் நடந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டு காலம் கொண்ட இப்பதவிக்கு அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரது இரண்டாவது பதவிக் காலம், 2012, ஏப்ரல் மாதம் துவங்குகிறது.

இலங்கை விவகாரத்தில் தோல்வி:மனித உரிமைகள் கமிஷனர் நியமனம் குறித்த காமன்வெல்த் கூட்டமைப்பின் ஒப்புதல் என்பது பெயரளவில் தான் என, நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்த கூட்டம், இலங்கை விவகாரத்தில் தோல்வியையே தழுவியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.வரும் 2013ல் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடந்தால், அதில் பங்கேற்க முடியாது என கனடா தனது எதிர்ப்பை பதிவு செய்த பின் கூட, பரவலான எதிர்ப்பு இலங்கைக்கு எதிராக காமன்வெல்த்தில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கையோடு, 2013 கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது காமன்வெல்த் அமைப்பிற்கு அவமானமே' என, சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது.



வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஐ. நா. மனித உரிமைகள்அவை இலங்கையிடம் தோல்வி அடைந்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ. நா. மனித உரிமைகள் சபை இலங்கையிடம் தோல்வி அடைந்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பதிவு செய்த நாள் : 23/09/2011


ஐ. நா. மனித உரிமைகள் சபை, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஓராண்டுகால நடவடிக்கைகள் குறித்து 69 பக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில் 2010 ஜூலை மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பணிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகளில் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் விடயத்தில் நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபை தவறிவிட்டது என்று கண்காணிப்பகம் சாடியுள்ளது.
அறிக்கையில் இலங்கை குறித்து ஒன்றரைப் பக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டும் கண்காணிப்பகம், நிபுணர் குழு சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசு வெறுமனே குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததாகவும் சாடி உள்ளது.
அத்தகைய அறிக்கையைப் பெறுவதற்காக, நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் அதிகாரம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இல்லை என்று இலங்கை அரசு தவறாகக் கூறிவருகிறது. இது நிபுணர் குழுவில் அடங்கியிருந்தவர்களின் பக்கச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
அறிக்கையின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று மனித உரிமைகள் சபை உள்ளிட்ட ஐ.நா.வுக்கு, இலங்கை ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.
2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையின் மீது மீண்டும் கவனம் செலுத்துமாறு நிபுணர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்தபோதும், மனித உரிமைகள் சபை கடந்த ஜூன் மாதம் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபை மீளாய்வு செய்யவேண்டும்.
மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்துக்கு, தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்காதது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி பான் கீ மூனுக்கு மனித உரிமைகள் சபை அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.
குறிப்பாக போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்துச் செயற்படவேண்டும்
என்று இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது.

திங்கள், 12 செப்டம்பர், 2011

இலங்கையில் பொதுநல மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்பு

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்பு

First Published : 11 Sep 2011 01:13:45 PM IST

Last Updated : 11 Sep 2011 01:56:30 PM IST

கொழும்பு, செப்.11: இறுதிக்கட்ட போரில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் வருகிற 2013-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ளது.இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை 2013-ம் ஆண்டு இலங்கையில் நடத்துவது தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் காரணமாக 2011-ம் ஆண்டு கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு தள்ளி வைக்கப்பட்டது.போர்க்காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், இலங்கையில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான ஒடுக்குமுறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இவ்வாறான பின்னணியில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை இலங்கையில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கி விடும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப்போகின்றது என்ற நிலையில், கூட்டம் இலங்கையில் நடத்தப்படுவது கவலை தருவதாகும்.காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதாக இருந்தால் அதற்கு முன்பு வன்னியில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உள்ளூர் மற்றும் அனைத்துலக விசாரணை நடத்த இலங்கை அரசை காமன்வெல்த் நாடுகள் கட்டாயப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.