grantham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
grantham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஏப்ரல், 2012

மீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலைவெறி ஏன்?????

மீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலைவெறி ஏன்?????


நட்பு இணைய இதழ் பதிவு செய்த நாள் : 30/04/2012
http://kavise.blogspot.com/
=============================
http://kavise.blogspot.com/
ஒருங்குறி நிறுவனம் சார்ந்த தமிழரிடமும் ஒற்றுமையின்மை தலை விரித்தாடுகிறது.
மே மாதம் 2012ல் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஒருங்குறி நிறுவனத்தின்  காலாண்டுக் கூட்டத்தில் மீண்டும் ஒரு சில தமிழ் எழுத்துக்களை கிந்தத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை திரு எவர்சன் அவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. (L2/12-039).
2010-2011ல் இந்த முயற்சியை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தனிக் கவனத்திற்குக் கொண்டு சென்று அவர் வழிகாட்டுதல்களுடன் தமிழ் அறிஞர்கள் ஒப்புதலுடன், இந்திய அரசின் வழி ஒருங்குறி நிறுவனத்திற்கும் வரைவும் அனுப்பப் பட்டுள்ளது.
பல மொழிகளின் எழுத்துருவங்களை இணையத்திலும் ஒன்றாக இணைத்துப் பயன்படுத்த இன்றைய கணினி நுட்பத்தில் தடைஇல்லை.
அமெரிக்காவில் பல மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிறுவனத்திற்காக உருவாக்கப் பட்ட இணையதளம் இங்கே.
http://www.sethuinc.com/bht1/
இவ்வாறிருக்க தமிழ் எழுத்துக்களையும் கிரந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது சிலரின் வீம்புப் போக்கு மட்டுமே.
கணினி நுட்பத் தடை இருப்பின் அதைக் களைய முயல வேண்டுமேயின்றி ஒரு மொழியின் எழுத்துருக்களை மற்ற அட்டவணைக்கும் இணைத்து, அந்த அட்டவணையை தமிழ் உள்ளடக்கிய அட்டவணையாக மாற்றும் முயற்சி கண்டிக்கத்  தக்கது.
தமிழிற்கென்று ஒரு தனி அட்டவணை தேவையில்லை, கிரந்த அட்டவணையில் உள்ளடக்கி விட்டோம் என்ற நிலை பின்னாளில் ஏற்படும்.
இந்த நிலையை கண்காணித்து விழிப்பாகச் செயல் பட வேண்டிய தமிழ்க் கணிமையின் நிறுவனங்கள் அமைதி காத்து வருகின்றன. செயல்பட வேண்டிய நிறுவனங்கள் செயலிழந்து இருப்பதும், எழுப்ப முயன்ற ஒரு சிலரும் நிந்திக்கப் படும் சூழல் இந்த நிறுவனங்களில் உருவாக்கப் பட்டுள்ளது, வருத்தமளிக்கும் செயல்.
தமிழை அழிக்க நினைக்கும், ஒரு சிலரின் இந்தத் தமிழ்க் கொலைவெறி என்று முடியும்?  தமிழனே விழித்தெழு!!!
அன்புடன்
.கவி.

செவ்வாய், 15 மார்ச், 2011

கிரந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

வெறும் வர்க்கக்குறியீடுகள் 15 மட்டும் கொண்டு வரட்டும் - இந்த நிலைப்பாடு ஏன்  பேரா.இறையரசன் அவர்களுக்கு வர வேண்டும். கிரந்தம்அடியோடு வேண்டா என்பதிலேயே நிலையாக இருங்கள். ஒருவர் 15 வரலாம் என்றால் மற்றொருவர் 515 வரலாம் எனச் சொல்லலாம்.  தலைப்பில் இருந்து விலகும் முடிவு தெளிவின்மையாகக் கருதப்படும். எழுத்தைக் காத்து. மொழியைக் காத்து . இனத்தைக் காக்க நாம் அனைவரும் கிரந்த ஒழிப்பில் ஈடுபட்டு வாகை காண்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /


கிரந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

வியாழன், 27 ஜனவரி, 2011

Eradicate Grantham - Resolutions of Suggestions committee : கிரந்தத்தை அடியோடு அகற்றுக! கருத்துரையாளர் குழு தீர்மானம்

>>சென்னை நிகழ்வுகள்

 தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பிலான கருத்துரையாளர் குழுவின்  கூட்டம் 24.01.11 அன்று சென்னையில் திருவல்லிக்கேணியில் சிவ இளங்கோ அரங்கத்தில் நடைபெற்றது, குழுவின் தலைவர் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன் தலைமை தாங்கினார். கருத்துரையாளர்களும் வெளியூர்ப்பயணத்தால்  வர இயலாமல் போனவர்களின் சார்பாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.
 தொடக்கத்தில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், கூட்டத்தின் நோக்கம், கிரந்தத்தை அகற்றுவது தொடர்பாக மேற்கொண்டு வரும் பணி ஆகியவை பற்றி விளக்கினார்.
அடுத்துத்தலைமைதாங்கிய புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், தொல்காப்பியர் அளித்துள்ள சட்டத்திற்கு மாறாகத் தமிழைச் சிதைப்பது அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

அன்றில் பா.இறைஎழிலன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.

மரு.கி.ஆ.பெ.மணிமேகலை கண்ணன், பேராசிரியர் இலக்குவனார் மறைமலை, கவிஞர் இளவரச அமிழ்தன், முனைவர் இரா.சேது, முனைவர் கு.பாலசுப்பிரமணியம், திரு அன்பு தென்னரசன், திரு தனித்தமிழ் வேங்கை, திரு பெ.மணியரசன் சார்பில் திரு ஆறுமுகம், வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன், வழக்குரைஞர் கோ.இரா.சுந்தரகாந்தம், பாவலர் மறைமலையான், திரு மூதுரை பொய்யாமொழி, திரு பூங்குன்றன், தொல்.திருமா சார்பில் வழக்குரைஞர் ஆர்வலர், திரு தமிழேந்தி, திரு தருமராசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

 கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏற்கப்பெற்றன.

1.தமிழ்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ச.மோகன் தலைமையிலான தமிழ்க்காப்பு வல்லுநர் குழுவினருக்குத் தமிழ்க்காப்புக் கருத்துரையாளர் குழு வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2.நீதியரசர் மோகன் குழு, தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கிரந்தத்தில் இருந்து தமிழைக் காக்கும் வகையில் அறிக்கை அளிக்குமாறு இக் குழு கேட்டுக் கொள்கிறது.

3.சீருரு அவையம் (யூனிகோடு கன்சார்ட்டியம்) 7.02.11 அன்று கூட உள்ளதால், ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்கான கால வாய்ப்பு வேண்டிக் கிரந்தத் சீருரு தொடர்பான பொருண்மையை ஒத்தி வைக்க ஆவன செய்ய தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகிறது.

4.தமிழ்நாட்டு அரசின் கருத்தை அறிந்த பின்பே நடுவண் அரசு கிரந்தச் சீருரு தொடர்பான முடிவை எடுக்குமாறு இக்குழு வேண்டுகிறது.

5.தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் பொதுநல அமைப்புகளும் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளும் கிரந்தத்தால் ஏற்படும் தீமைகளை மக்களிடையே விளக்கிப் பரப்புரை மேற்கொள்ள இக்குழு வேண்டுகிறது.

6.பாடநூல்களில் இருந்தும் அகரமுதலிகள்,  பொருள்களஞ்சியங்கள் ஆகியவற்றில் இருந்தும் அயலொழுத்துகளை அகற்றுவதுடன் ஊடகங்களில் அயலெழுத்துகளும் அயற்சொற்களும் இடம் பெறாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகிறது.

7.கணிணிவழியாகவும் சீருரு அல்லது ஒருங்குறி வாயிலாகவும் வேறு எவ்வகையிலும் கிரந்தம் நுழைவதற்கு வாய்ப்பளிக்காமலும் வரிவடிவச் சிதைப்பிற்கும் வரிவடிவச் சேர்க்கைக்கும் இடம் தராமலும் தொல்காப்பியர் வழி நின்று தமிழைக் காத்துப் பேணுமாறு தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகின்றது.

8.சட்டம், மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்விகளில் தமிழை விருப்பப்பாடமாக வைக்குமாறும் இதில் தேர்ச்சி பெறுபவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்குமாறும் தமிழ்நாட்டு அரசை இக்குழு வேண்டுகிறது.

 அமைப்பின் சார்பாக வந்திருந்தவர்கள் தத்தம் அமைப்புகளின் சார்பில் கிரந்தம் அகற்றும் பணியில் ஈடுபட உறுதி அளித்தனர்.
 - இலக்குவனார் திருவள்ளுவன்