மரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 டிசம்பர், 2012

மரங்களுக்கும் காப்பீடு - நிறுவன மேலாளர் தகவல்

மரங்களுக்கும் காப்பீடு - நிறுவன மேலாளர் தகவல்

கோவை:""விவசாயிகளின் தோட்டப்பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுவது போல, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கப்
படுகிறது'' என, சென்னை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமை மேலாளர் புட்தா பேசினார்.கோவை வன மரபியல் அலுவலகம் மற்றும் வன விரிவாக்க மையத்தின்
உதவியுடன் நடத்தப்படும், மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம் சார்பில், கருத்தாய்வு
கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கோவை மருதம் வன மரபியல் வன பாதுகாவலர் ராமச்சந்திரபதி தலைமை வகித்தார். கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க தலைவர் தேவராஜன் வரவேற்றார்.தோட்டப்பயிர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம் குறித்து, சென்னை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமை மேலாளர் புட்தா பேசியதாவது:மருத்துவ இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள்காப்பீடு திட்டங்கள் இருப்பது போல், விவசாயிகளின் தோட்டப்பயிர் மற்றும் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இப்போது இத்திட்டத்தின் மூலம் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

இதில் மா, தென்னை, வாழை, பப்பாளி,தேக்கு, காகிதம் மற்றும் தீக்குச்சி பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் மரங்கள் ஆகிய வற்றுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. மூலிகை செடிகள் வளர்ப்போரும் இன்சூரன்ஸ் பெறலாம்.இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். பயிரிட்டுள்ள நிலத்தின் அளவு, விளை பொருளின் மதிப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு இன்சூரன்ஸ் பிரிமியம் நிர்ணயம் செய்யப்படும்.

பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் செய்துள்ள விவசாயிகளுக்கு வங்கிகள் விவசாய கடன் வழங்க முன் வருகின்றன. ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக இன்சூரன்ஸ் செய்யலாம். மரம் வளர்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டம் நல்ல பலன் தரும்.இவ்வாறு, புட்தா பேசினார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மரபுசார் மூலிகை மருத்துவ துறைத்தலைவர் புண்ணியமூர்த்தி, புலவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




ஞாயிறு, 18 நவம்பர், 2012

இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!!

இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!!

First Published : 17 November 2012 05:17 PM IST
திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி.
இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. "சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடுகளைக் களைந்து மனிதநேயத்துடன், இயற்கை நேயத்துடன் வாருங்கள்' என நுழைவாயில் அழைக்கிறது.
 "ஜெபிக்கும் உதடுகளைவிட
 சேவை செய்யும் கரங்களையே
 கடவுளுக்குப் பிடிக்கும்'
 "சாதி மதங்களை மறுப்போம்
 நல்ல ஜாதி மரங்களை வளர்ப்போம்'
"ஆடம்பர மத விழாக்களை தவிர்ப்போம்
நிறைய மரம்நடும் விழாக்களை செய்வோம்'
 - இவற்றுடன் வேதாத்ரி மகரிஷி, அன்னை தெரசா போன்றோரின் பொன்மொழிகளும் உண்டு.
  தோட்டத்தின் நடுவே கேரள பாணி கோயில் போன்று ஒரு சிறிய கட்டடம். உள்ளே சுவரில் இத்தோட்டத்தின் தத்துவம், கீழே இயற்கை குறித்த புத்தகங்கள் சில. இங்கு வரும் நண்பர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்வதற்கான உறுதிமொழி இது:
"கண் கண்ட தெய்வமாய்
 கருணை நிறை கொண்டவளாய்
 கண்ணின் இமை போல்
 எங்களைக் காத்தருளும்
 பூமித்தாயே!
 இனி உம்மைக் காப்பது
 எங்கள் அனைவரின் கடமை
 அதை நிச்சயம் செய்வோம்
 என உறுதி கூறுகிறோம்'.
 ஏறத்தாழ இதுதான் கருவறை. சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களிடம் தண்ணீர் கொடுத்து, தோட்டத்திலுள்ள மரங்களுக்கு ஊற்றச் சொல்கிறார், ஆர். சந்தானம். எக்ஸ்னோரா அமைப்பில் பொறுப்பில் இருக்கும் இவர்தான் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர். வருகைதரும் எல்லோருக்கும் பிரசாதம் உண்டு- அது சில மரங்கள், செடிகளின் விதைகளாக!
"பூமித்தாய் தோட்டம்' குறித்து விளக்குகிறார் சந்தானம்:
"2009 இறுதியில் இந்த இடத்தை வாங்கி, இப்படியொரு தோட்டத்தை அமைக்கத் தொடங்கிய நாளில், "பூமி பூஜை போட்டு தேங்காய் உடைக்க வேண்டும்' என்றார்கள். நான் சுற்றிலும் 108 தென்னை மரக்கன்றுகளை நட்டுவைத்தேன்.
உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும்போது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகள் அகன்றுவிடுகின்றன.
மனிதகுலம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. எனவே, இந்த மனித குலத்தை தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய இயற்கைச் சூழல் அவசியம்.
பிரபலங்கள் பலரும் இங்கு வந்து கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தோட்டத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
கல்லூரிகளில் இருந்து வரும் எக்ஸ்னோரா, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கு, இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கிக் கூறிவருகிறேன்.
"உயிரைக் காக்க ரத்த வங்கி; உலகைக் காக்க மரவங்கி' என்ற முழக்கத்துடன், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கும் நாற்றங்கால் பண்ணை ஒன்றையும் உருவாக்கும் திட்டமிருக்கிறது' என்கிறார் சந்தானம்.
கருவறை போன்ற அமைப்புக்கு பின்புறம் கழிவறை அமைத்திருக்கிறார் சந்தானம். "உடல் நலன் பேண கழிவறை மிகவும் அவசியம். எனவே, அதை முகம் சுழிக்கும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் முக்கியத்துவம் கொடுத்து கருவறைக்கு பின்புறமே அமைத்திருக்கிறேன்'' என்கிறார் சந்தானம்.