தியாகு எழுதுகிறார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகு எழுதுகிறார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4)தொடர்ச்சி)

காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும்

(CLIMATE ACCOUNTABILITY AND CLIMATE JUSTICE)

இந்தப் புவிக் கோளத்தில் காலநிலை மாற்றத்துக்குப் புவி வெப்பமாதல் காரணம். புவி வெப்பாமதலுக்கு கரியிருவளி(Carbon dioxide) உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு காரணம். இந்த உமிழ்வு என்னும் கேடு செய்வதில் நாடுகளிடையே நிகர்மை (சமத்துவம்) இல்லை. கேடு செய்யும் நாடுகள் சில என்றால், கேட்டின் கொடும்பயனைத் துய்த்துத் துன்புறும் நாடுகள் பல. அந்தச் சில நாடுகள் தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற நாடுகள் என்றால், இந்தப் பல நாடுகள் வளர்ச்சியற்ற நாடுகள். 

காலநிலை மாற்றத்தின் தீவிளைவுகளால் — இயற்கைப் பேரிடர் முதலானவற்றால் — மக்கள் புலம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது புது வகையான ஏதிலியரை — காலநிலை அகதிகள் எனப்படுவோரை—தோற்றுவித்துள்ளது. இந்த ஏதிலியரில்  பெரும்பாலார் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உலக வங்கி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. சகாராவின் கீழுள்ள ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்தவையாக  இந்நாடுகள் உள்ளன. ஆனால் கரியுமிழ்வில் இந்த நாடுகளின் பங்கு மிகக் குறைவு.

ஈழத்தில் இனவழிப்புக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்று கேட்கின்றோம். இதே போல் மிகையான கரியுமிழ்வுக்கும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்று சூழலியலர் குரல் கொடுத்து வருகின்றனர். இது காலநிலைப் பொறுப்புக் கூறல் (climate accountability) எனப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் துயரப்பட்ட நாடுகளுக்கும் மக்களுக்கும் நீதி செய்தாக வேண்டும். இது காலநிலை நீதி (climate justice) எனப்படுகிறது.

தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் காலநிலை மாற்றத்தால் தாக்குற்ற நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கா.க.மா.27 (காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அவைகளின் கட்டமைப்புக் கட்சிகளின்மாநாடு 27/Cop27)

மாநாட்டில் இது ஒரு முகன்மைத் தலைப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்துக்கு இழப்பீடு பெற்றுக் கொண்டு இதே நிலை தொடரவும் இன்னுங்கூட மோசமடையவும் இடமளிக்கப் போகிறோமா?

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் கேடுகளும், இவற்றுக்குக் காரணமான கரியுமிழ்வுகளும் உயிரற்ற வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. வரவிருக்கும் பேரழிவுகள் இந்தப் புள்ளிவிவரங்களின் பின்னால் மறைந்துள்ளன. எந்த இழப்பீடும் இந்தப் பேரழிவுகளை மறைக்கவோ தடுக்கவோ உதவாது.

இழப்பீட்டுத் தொகையே கூட மேலும் கரியுமிழ்வுக்கு வழி செய்யும் காரணிகளுக்கு அடிப்படையாகும் வாய்ப்பும் உள்ளது. இழப்பீட்டுத் தொகைகள் ஊழலின் வாய்ப்படும் ஆபத்தும் உண்டுதான்.

தூத்துக்குடியில் செம்பு உருட்டு (Sterlite) தொழிலகத்திற்குத் தண்டம் விதித்த உயர் நீதிமன்றம் அந்தத் தண்டத் தொகையை சூழற்கேடுகளுக்கு எதிராகச் செலவிடுமாறு ஆணையிட்டதும், ஆலை நிருவாகம் அந்தத் தொகையில் கொஞ்சம் செலவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஒரு பூங்கா அமைத்து அந்தப் பூங்காவிலேயே செம்பு உருட்டு (Sterlite) தொழிலகத்திற்கு விளம்பரம் வைத்ததும்தான் நினைவுக்கு வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் கானா நாட்டில் வறுமையும் அடிமை முறையும் பெருகி வருவது பற்றி முன்பே பார்த்தோம். உலக வங்கி கானாவுக்கு 5 கோடி தாலர் உதவி வழங்க உறுதியளித்துள்ளது. ஆனால் இந்தத் தொகை எவ்வகையில் செலவிடப்படும் என்ற கேள்வி மீதமுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் வளர்ந்து வரும் விழிப்புணர்வு அரசியல் நிலைப்பாடுகளில் சில மாற்றங்களுக்கும் வழிகோலி வருவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மீதான நாட்டம் வளர்ந்துள்ளது. நிலக்கரி, கன்னெய்(பெற்றோல்), எரிவாயு போன்றவை எடுக்க எடுக்கக் குறைந்து போகும் என்பதால் புதுப்பிக்கவொண்ணா ஆற்றல் மூலங்கள் எனப்படும். கதிரொளியும் காற்றும் எவ்வளவு பயன்படுத்தினாலும் தீரப் போவதில்லை என்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாகும்.

கரியல்லாத வழிகளில் ஆற்றல் இயற்றும் வழிகள் பற்றிய ஆராய்ச்சியும் பெருகி வருகிறது. புனல் மின்சாரம் கரியல்லாத ஆற்றல் மூலம்தான் என்றாலும் இதற்காகப் பேரணைகள் கட்டுவதும் ஆறுகளைத் திருப்பி விடுவதும் சுற்றுச்சூழலுக்குக் கேடாய் முடியும். கூடுதலாகக் கரியுமிழும் நாடுகளிடமிருந்து அவ்வளவாகக் கரியுமிழாத நாடுகளுக்கு ‘கரிச் செலாவணி’ பெற்றுத்தரும் வழியும் உள்ளது. கரியுமிழ்வைக் குறைத்துக் கொண்டால் ஊக்கத் தொகை கிடைக்குமாம். கரியுமிழும் நாடுகளிடமும் நிறுவனங்களிலும் கரி-வரி தண்டலாம் என்ற முன்மொழிவும் உள்ளது.

உடற்கொழுப்பைக் குறைக்க நேராக உறிஞ்சியெடுக்கும் சிகிச்சை முறை போல், காற்று மண்டலத்திலிருந்து கரியிருவளியை (Carbon dioxide) உறிஞ்சியெடுத்து நிலத்தடிப் பாறையிடுக்குகளில் செலுத்தும் செயல்வழிக்கான தொழில்நுட்பங்களும் ஆராயப்படுகின்றன. ஐசுலாந்து நாட்டில் இதற்காக ஒரு கோடி தாலருக்கு மேல் மதிப்பீட்டுச் செலவில்  அமைக்கப்பட்டுள்ள ‘ஆர்க்கா’ எனும் ஆலை அனல் மின்சாரத்தால் இயக்கப்பட்டு, ஆண்டொன்றுக்கு 4,000 பதின்மப் பாரம் (Metric Ton) கரியைப் பிடித்து வெளியேற்ற வல்லது. இதுதான் இவ்வகையில் உலகத்திலேயே மிகப் பெரிய ஆலை! உலக அளவில் 2020இல் உமிழப்பட்ட கரியிருவளி(Carbon dioxide) அளவு 30 நூறுகோடிப் பதின்மப் பாரத்திற்கு(Billion Metric Ton) மேல்! யானைப் பசிக்கு சோளப் பொறி என்று கூட சொல்ல முடியாது. அவ்வளவு சொற்பம்!   

புவிசார் அரசியல் போல் புவிசார் பொறியியல் திட்டங்கள் பலவும் பேசப்படுகின்றன. பெருங்கடலில் உரம் தூவி, குறிப்பிட்ட சிலவகை உயிரிகளின் பெருக்கத்தை ஊக்குவித்தால் காற்று மண்டலத்திலிருந்து பெருமளவு கரியிருவளி(Carbon dioxide) உறிஞ்சப்படுவதோடு, கடல்நீர் அமிலமாக்கத்தின் நச்சு விளைவுகள் குறைந்து, பவழப் பாறைகளும் கடல்சார் உயிர்க் கோளங்களும் காக்கப்படும்.

இப்படிப் பல வழிகள் உண்டு. எப்பாடுபட்டும் காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் முன்னிற்கும் அறைகூவல். இந்த அறைகூவலை ஏற்று நாம் செயல்படத் தவறினால், அடுத்த தலைமுறை…? அப்படி ஒன்று இருக்குமா?

தரவு : தாழி மடல் 18

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 15: காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும்

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்-தொடர்ச்சி)

காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும்


காலநிலை மாற்றம் என்றால் என்ன? கோடைக் காலத்தில் வெப்பமும் குளிர் காலத்தில் குளிரும் கூடுதலாக இருக்கும் என்பதுதான் என்றால், வெப்பதட்பத்தைச் சீர்செய்ய உதவும் மின் பொறிகளின் துணைகொண்டு சமாளித்து விடலாம். பெருமழை பெய்வதுதான் என்றால் குடை அல்லது மழையங்கி கொண்டு சமாளிக்கலாம். புயல்தான் என்றால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம். இவையெல்லாம் இடையில் வந்து போகிறவை என்றால் நிலையாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் வழக்கம் போல் நம் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கலாம் அல்லவா?

நாம் புரட்சி செய்ய விரும்புகிறோம் என்றால் அதற்கான பணிகளைச் செய்யலாம். புரட்சிப் பணிகளைப் புறக்கணித்து விட்டுக் காலநிலை மாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அது இடையிடையே வரும் போது ஆவன செய்து விட்டு நம் புரட்சி வேலைக்குத் திரும்பி விடலாம். அப்படித்தானே?

காலநிலை மாற்றமா? புரட்சியா? எது முதன்மை என்றால் புரட்சிதான் முதன்மை என்று நம்பக் கூடிய அன்பர்கள் உள்ளனர். காலநிலை மாற்றம் என்பதே அமெரிக்காவின் பெருமையைக் குலைக்கும் சூழ்ச்சி என்று அந்தப் பக்கம் துரும்ப் பேசுவது போல், இந்தப் பக்கம் சுற்றுச்சூழலியல் பற்றிய தடபுடலே வல்லரசிய சூழ்ச்சி (ஏகாதிபத்திய சதி), தொண்டு நிறுவனங்களின் உள்நோக்கங்கொண்ட புரட்டுவேலை அல்லது மிகைப்படுத்தல் என்று நம்பக் கூடிய புரட்சித் தோழர்கள் சிலரும் இருக்கக் கூடும்.

எஃது எப்படியானாலும் உண்மைகளுக்கு இரக்கமில்லை, பக்கச் சார்புமில்லை. (Facts are ruthless.) காலநிலை மாற்றம் என்பதும், அதன் கொடுந்தாக்கம் என்பதும் மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள். கிரெட்டா துன்பர்க்கு அல்லது நம் தோழர் சமந்தா இட்டுக்கட்டிய புனைகதைகள் அல்ல. சரி, இது ஒரு பக்கம், புரட்சி ஒரு பக்கம் என்று இயங்கலாம்தானே? என்று கேட்கலாம். இரண்டையும் இரண்டாகப் பார்ப்பது இந்தக் கேள்வியில் உள்ள அடிப்படைக் குறைபாடு.

குமுக முரண்பாடுகள் முற்றி அவற்றின் தீர்வுக்காக நடப்பதுதான் புரட்சி! அது எவ்வகைப் புரட்சி என்றாலும் இதுவே உண்மை. காலநிலை மாற்றம் குமுக முரண்பாடுகள் மீது தாக்கம் கொள்ளவில்லை என்றால், அது குமுகத் தாக்கமற்ற வெறும் தட்பவெப்ப மாற்றம் மட்டுமே என்றால் புரட்சி அது பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ள வேண்டியிருக்காது. ஆனால் உண்மை என்ன?
காலநிலை மாற்றம் வறிய நாடுகளையும் வறிய மக்களையும் எப்படியெல்லாம் தாக்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக எந்தப் புரட்சிக்கும் வறுமைதான் ஒழிக்க வேண்டிய இலக்கு, வறுமை ஒழிப்புதான் அடைய வேண்டிய குறிக்கோள் என்றால், காலநிலை மாற்றம் பற்றிய அலட்சியம் எந்தப் புரட்சிக்கும் உதவாது. உழைக்கும் மக்கள் தம்மைத்தாமே விடுதலை செய்து கொள்ள வேண்டுமென்றால், சுரண்டலுக்கு எதிராகப் போராடுவது போலவே காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும் போராடியாக வேண்டும்.

குபேரபுரியாக வண்ணிக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளையே எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவைத் தாக்கிச் சிதைத்துச் சின்னபின்னமாக்கிய பத்தில் ஒன்பது பெரும் சூறாவளிகள் 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின் வீசியுள்ளன. இவையனைத்தும் புவி வெப்பமாதலின் விளைவுதான் என்று கண்டறியப் பட்டுள்ளது. இருபதாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கத் தென்மேற்கைக் கொடிய வறட்சி வாட்டி யெடுக்கிறது. மேலை யுலகின் இருபெரும் நீர்நிலைகளான மீட்டு ஏரியும், பொவெல் ஏரியும் விரிந்து பரந்த கோடை வயல் போல் வெடிப்பு விட்டுக் கிடக்கின்றன. இந்த நீர்நிலைகளை நிரப்பும் கொலராடோ ஆறு விரைந்து மறைந்து வருகிறது. அமெரிக்க மேற்கில் நீர் வழங்கலுக்கு இந்த ஆற்றை நம்பியுள்ள 4 கோடி மக்களின் அவல நிலைக்கு முடிவில்லை.

புவியழிந்தால் ஏழை பணக்காரர் எல்லாரும் அழிய வேண்டியதுதான்! உடனுக்குடனான இன்னல்களும் கூட அனைவருக்கும் உண்டுதான்! ஆனால் இன்று காலநிலை மாற்றத்தின் படுமோசமான பொருளியல் விளைவுகள் எங்கெங்கும் வறிய மக்களையே பெரிதும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பீடிக்கப்பட்டுள்ள உலக ஏழைகளில் 50 கோடிக்கு மேற்பட்டோர் வளர்ச்சி குன்றிய நாடுகளில் உள்ளனர். இந்த நாடுகளே காலநிலை மாற்ற அதிர்ச்சிகளின் இடிதாங்கிகளாக இருப்பவை. 2030க்குள் காலநிலை மாற்றத்தினால் இன்னும் 10 கோடிப்பேர் வறுமைக் குழியின் அடியாழத்துக்குப் போய் விடுவர் என்று உலக வங்கி ஆய்வு கண்டறிந்துள்ளது.
வறுமை என்றால் இல்லாமை மட்டுமன்று, வசதியின்மை மட்டுமன்று, ஆள் கடத்தலும் அடிமை வணிகமும் பரவி வருவதும் கூடச் சான்றுகளுடன் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடாகிய கானாவில் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்படும் கொடுமை பெருகி வருகிறது.
இப்போது ஆள் கடத்தலுக்கும் அடிமை வணிகத்துக்கும் எதிரான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் இயேம்சு சொல்கிறார்:

“ஆறு வயதில் என்னை என் தந்தை வோலுடா(Volta) ஏரி மீனவர்களிடம் விற்று விட்டார். 12 குழந்தைகளில் நான்தான் கடைக்குட்டி. என் உடன்பிறந்தவர்களில் பலரும் முன்பே உழைப்புக்குத் தரப்பட்டு விட்டனர். படகுகளில் 17 மணி நேரம் உழைக்க வேண்டும், மீன் வலைகளில் சிக்கெடுப்பது என் வேலை. தூங்க முடியாது. ஒரு வேளைதான் உணவு. என்னோடு விற்கப்பட்ட மற்றக் குழந்தைகளில் பாதிப்பேர் சீரழிக்கப்பட்டும் மற்ற வகையிலும் இறந்து விட்டனர். 13 வயதிருக்கும் போது தப்பி சொந்த ஊருக்கு வந்து விட்டேன். எனக்கு நேர்ந்தது கானாவில் மற்றக் குழந்தைகளுக்கு நேரக் கூடாது என்று நினைத்தேன். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கலானேன். கானா பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்று வைப்பக வேலையில் சேர்ந்தேன். ஆனால் எனக்கொரு குறிக்கோள் இருந்தது. கானாவில் ஆள்கடத்தலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அறைகூவும் உச்சங்கள் என்ற அறக்கட்டளையை நிறுவினேன்.”

ஆனால் கென்யாவில் அடிமை வணிகம் குறையவே இல்லை. சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கூடிக் கொண்டே போகிறது.
இயேமுசு சொல்கிறார்: “புவிவெப்ப உயர்வினால் ஆள்கடத்தல் பெருகி வருவதைப் பலரும் அறியவில்லை. ஆனால் வெப்பமாதலின் தீய விளைவுகள் அச்சமூட்டும் படியாக உள்ளன.”

வடக்குக் கானாவில் இந்த ஆண்டு ஒற்றை மாரிப் பருவத்துக்குப் பின் நீடித்த வறட்சி வாட்டுகிறது. பயிர்செய்யும் காலம் மிகவும் குறுகிப் பெரும்பாலான மக்களுக்கு வேலை இல்லை. ஆறுகள் வறண்டு போய் விட்டன. 27 நூறாயிரம் மக்களுக்கு வேலை கொடுக்கும் மீன்பிடித் தொழிலும் ஓய்ந்து விட்டது. பிழைப்பும் வயிற்றுப்பாடும் இழந்து மக்கள் மோசமான முடிவெடுக்கத் தள்ளப்படுகின்றார்கள்.


உரிய வயதடையுமுன்பே குழந்தைகளை மணம் செய்விப்பதும், அடிமைத் தரகர்களிடம் விற்று விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தொலைவாகச் சென்று குதிரை இலாயங்களில் நல்ல ஊதியத்துக்கு வேலை செய்வார்கள் என்பதெல்லாம் பொய். ஆள்கடத்தலுக்கும் பாலியல் தொழிலுக்கும்தான் இந்த வணிகம் வழி செய்கிறது.

பயிர்செய்கை பொய்த்துப் போவதாலும், தண்ணீர்ப் பஞ்சத்தாலும் 2050க்குள் காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்வோர் தொகை 14 கோடிக்கு மேல் போய்விடும் என்பது உலக வங்கியின் மதிப்பாய்வு.
இப்போதே கானாவில் 1,33,000 பேர் அடிமைகளாக்ககப் பட்டுள்ளனர். அடிமை வணிகம் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவி வருகிறது. ஆபிரகாம் இலிங்கன் தலைமையில் அடிமை முறையை ஒழித்து விட்டதாக வரலாறு சொல்லும் அமெரிக்காதான் இன்று காலநிலை மாற்றத்துக்கு வழிகோலும் காலநிலை மாற்றக் கேடுகளின் முதன்மைத் தோற்றுவாயாகி மீண்டும் ஆப்பிரிக்காவில் அடிமை அங்காடி திறக்க வழியமைத்துள்ளது.

கானாவிடமிருந்து விடைபெறுமுன் ஒரு சின்ன ஒப்பாய்வு: மக்கள்தொகையுடன் நிரலளவுக் கரிய உமிழ்வை ஒப்புநோக்கின், ஆள்வாரி உமிழ்வு கானாவிற்கு 0.52 பாரம்(ton). அமெரிக்காவிற்கு 14.24 பாரம்.
கரிய உமிழ்வை அமெரிக்கா குறைத்துக் கொள்ளுமா? ஆளும் வகுப்பான பெருங்குழும முதலாளர்கள் இதற்கு ஒப்புவார்களா? காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றும் அவ்வளவு ‘இலேசுபாசான’ ஒன்றில்லை. ஏனென்றால் அது முதலாண்மைக் கொள்ளையீட்ட (கொள்ளைலாப) வேட்டைக்கு எதிரான போராட்டம். எப்படி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம்?

தரவு: தாழி மடல் 14

வியாழன், 5 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 5 - பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும்

 அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 5

பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும்

பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்:

புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.”

[கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பிற்காலத்தில் பாசிச இயக்கத்தின் முன்னோடியாக மாறியவர். அவரது இலக்கியப் படைப்புகளில் காமமும் ஒழுக்கக் கேடுமே நிறைந்திருந்தன. டி‘அனுன்சியோ சொந்த வாழ்க்கையிலும் அவ்வாறே இருந்தார். ஒழுக்கக்கேட்டுக்கு அவரும் அவர் படைத்த நாயக நாயகிகளும் எடுத்துக் காட்டாக விளங்கினர்.]

மா இலெனின் பார்வையில், காமக் களியாட்டங்கள் முதலாண்மைச் சீரழிவின் வெளிப்பாடு! மாறாக,

“பாட்டாளி வகுப்பு எழுந்து வரும் வகுப்பாகும். அதற்கு எந்த விதமான போதை அல்லது ஊக்க மருந்தும் தேவை இல்லை. பாலியல் மிகைப்பாடும் தேவை இல்லை. சாராயக் குடியும் தேவை இல்லை. அது முதலாண்மையின் வெட்கக்கேட்டை, அழுக்கை, காட்டுமிராண்டித் தனத்தை, மறக்கக் கூடாது, மறக்காது. வகுப்புகள் (வருக்கங்கள்) என்ற சூழலிலிருந்து, பொதுமை இலட்சியத்திலிருந்து அது மிக மிக வலுவான போராட்ட ஊக்கம் பெறுகிறது. அதற்குத் தேவை தெளிவு, தெளிவு, மீண்டும் தெளிவு. ஆகவே மீண்டும் சொல்கிறேன்: ஆற்றல்களை நலிவுறச் செய்தல் வேண்டா, வீணடித்தல் வேண்டா, அழித்தல் வேண்டா. தன்னை அடக்கியாளுதல், தற்கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது, காதலில் கூட அப்படி ஆகாது.”

பெண்கள் சிக்கல் பற்றிய உரையாடல்தான் திசை மாறிப் பாலியல் சிக்கல்கள் பற்றிய பேச்சாயிற்று. இலெனின் தொடர்கிறார்:

“ஆனால் மன்னியுங்கள் கிளாரா, நம் உரையாடலின் தொடக்கப் புள்ளியிலிருந்து விலகிப் போய் விட்டேன். நீங்கள் ஏன் என்னை வழிப்படுத்தவில்லை? வாய் போன போக்கில் போய் விட்டேன். நம் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எனக்கு ஆழ்ந்த கவலை. அது புரட்சியின் ஒரு பகுதி. தீங்கான போக்குகள் தலையெடுத்தால்,  விதவிதமான களைகளின் வேர்களைப் போல முதலாண்மைக் குமுகத்திலிருந்து புரட்சி உலகிற்குள் அவை படர்ந்தால், முளையிலேயே அவற்றைக் களைதல் நன்று. இந்த வினாக்களும் பெண்கள் சிக்கலின் பகுதியே.”

கிளாரா எழுதிய இலெனின் நினைவுக் குறிப்புகளில் பாலியல் சிக்கல்கள் தொடர்பான இந்தக் கருத்துகள் காலங்கடந்தும் நிலங்கடந்தும் நமக்குப் பொருத்தப்பாடு கொண்டவை எனக் கருதியதால் தாழி மடலில் அவற்றை எடுத்துக் காட்டினேன். ஈண்டு இது போதும் என அடுத்த செய்திக்கு நகரலாம் என நினைக்கிறேன்.

தரவு – தாழி மடல் 5