(தோழர் தியாகு எழுதுகிறார் 27: தொடர்ச்சி)

மாவீரர்களின் பெயரால் 

ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள்.

2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும் மாவீரர் நாளை வெற்றுச் சடங்காக இல்லாமல் போராட்டத்தைத் தொடர மீள்சூளுரை ஏற்கும் நாளாகக் கொள்வோம் என்றால், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து பட்டறிவுகளைத் தொகுத்து எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும்.

சென்ற ஆண்டு மாவீரர்களை நாம் நினைவுகூர்ந்து இந்த ஆண்டு பற்பல வழிகளில் அவர்களைப் போற்றும் வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்திலும் பன்னாட்டுலகிலும் அரங்கேறியுள்ள பொருத்தப்பாடு கொண்ட வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்துக் கொள்ளும் கடமை நமக்குண்டு.

இனநாயகம் கோலோச்சும் இலங்கைத் தீவில் சிங்கள அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களைக் கணக்கில் கொண்டு ஈழ மக்கள் உரிமைப் போராட்டத்தில் அவற்றின் தாக்கம் என்ன என்பதைக் காய்தல் உவத்தலின்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். அரியணையில் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதல்ல நாம் சுட்ட விரும்புவது. இந்த மாற்றங்களுக்கு வழிகோலிய மக்கள் போராட்டங்களையே மனத்திற்கொண்டுள்ளோம்.

இனவழிப்புச் செய்து போர்க்கள வெற்றிகளை அடித்தளமாக்கி சிங்களப் பேரினவாத அலை விளிம்பேறி ஆட்சியைப் பிடித்த அதே இராசபட்சர்கள் தம் மக்களிடமிருந்தே ஓடவும் ஒளியவும் ஒருநாள் வரும் என்று அவர்களும் அஞ்சியிருக்க மாட்டார்கள். நாமும் எண்ணியது இல்லை. தமிழர்களின் நீதிப் போராட்டத்தின் பார்வையில் ‘அறகலய’ எழுச்சியின் முதன்மை விளைவு சிங்கள அரசியல் சமூகத்தில் ஏற்பட்ட உடைப்புதான். பேரினவாத ஆளும் கும்பலின் சமூக அடித்தளமான சிங்கள வெகுமக்களே அந்தக் கும்பலை ஓட ஓட விரட்டியடித்ததை மறக்கவியலாது. ‘அறகலய’ நேராகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுப்பத் தவறியது என்பதை நாம் மறக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை அந்த மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை நமக்கும் உள்ளது என்று மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் நீண்ட நெடிய நீதிப் போராட்டத்துக்கும் சிங்கள மக்களின் அண்மைய தன்னெழுச்சிக்கும் மொழியாப் புரிந்துணர்வு ஒன்றுண்டு என்பதை வரலாற்று மாணவர்கள் உய்த்துணர்வார்கள். தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரே பன்னாட்டு அரங்கில் சிங்களத்தை அரசியல் வழியில் தனிமைப்படுத்தும் சூழலைத் தோற்றுவித்தது என்பதோடு, தாங்கவொண்ணாத படைச் செலவால் இலங்கைப் பொருளியலையும் நொடிக்கச் செய்தது. இந்த வரலாற்று ஏரணத்தைத் தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் உள்வாங்கினார்களா? இனியாவது உள்வாங்கி நீதிக்கான போராட்டத்தில் உரியவாறு கணக்கில் கொள்வார்களா?

இனி என்ன நடந்தாலும் சரி, குறிப்பிடத்தக்க அளவில் சிங்கள இளைஞர்களிடம் துளிர்த்துள்ள குடியாட்சிய உணர்வும் இனவாத எதிர்ப்பும் இலங்கைத் தீவிலடங்கிய இரு தேசங்களின் போராட்டத்திலும் ஒரு நிலைத்த காரணியாகப் பங்கு வகிக்கும். நீதிக்கான போராட்டத்தை முடுக்கி விரைவாக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்கும்.

இரண்டாவதாக, இந்த நாளில் குழப்பம் நீங்க வேண்டிய ஒன்று இந்திய வல்லரசின் வகிபாகம் பற்றியதாகும். இனவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்கு உடந்தையாகச் செயல்புரிந்த இந்தியா தமிழர்களின் நீதிக்கான போரட்டத்திலும் இனக் கொலையாளிகளைக் காக்கும் கவசமாகச் செயல்பட்டு வருகிறது. ஐநா மனிதவுரிமைப் பேரவையில் மேலைநாடுகள் முன்மொழிந்த அரைகுறைத் தீர்மானத்தைக் கூட ஆதரிக்க மறுத்து வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. ஈனக் குரலில் 13ஆம் திருத்தம் பற்றி முனகித் தன் கடமையை முடித்துக் கொள்கிறது.

ஐநா அறிக்கைகளில் குவிந்து கிடக்கும் சான்றுகள், மனித வுரிமைகளுக்கான உயராணையர்கள் அறிக்கையிடும் மெய்ம்மைகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிப்படுத்தி வரும் கோரிக்கைகள், ஆற்றல்மிகு பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகள் வெளிச்சமிடும் செய்திகள் – இவற்றில் எதுவும் இந்திய வல்லரசின் கண்ணிற்படுவதில்லை. காதில் கேட்பதில்லை. கண்ணை மூடிக் கொண்டு சிங்களம் காக்கக் காக்க கவச மந்திரம் படித்துக் கொண்டிருக்கிறது.

அடியோடு ஒதுங்கியிருந்தாலும் தாழ்வில்லை என்னும் படியாகத் தமிழீழ அரசியலை ஆட்டிப்படைக்கக் குறுக்கிட்டுக் கொண்டிருப்பதுதான் இந்தியா செய்து வரும் ஆகப்பெரும் கேடு. வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குப் போய்விட்ட பதின்மூன்றாம் திருத்தத்தை மீட்டு வந்து அதனைத் தமிழர்களின் கோரிக்கையாக மாற்றிக் காட்ட அது அருவருக்கத்தக்க தந்திரங்களைக் கையாண்டது. இந்திய வல்லரசின் எடுப்பார் கைப் பிள்ளைகளாக மாற ஒப்புக் கொண்ட தாயகத் தலைவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள்.

சிங்களப் பேரினவாதத்துக்கு ஏற்பட்ட பொருளியல் நெருக்கடி அரசியல் நெருக்கடியாக முற்றிய நிலையில், சிங்களத் தலைவர்களுக்குள் மூண்ட அதிகாரப் போட்டியில் தமிழ் அரசியல் தலைவர்கள் ‘சொந்த புத்தி’ கொண்டு ஒரு முடிவெடுக்கக் கூட விடவில்லை மோதி அரசு. இதனால் தமிழ்த் தலைவர்களில் சிலர் இனக் கோட்டின் இரு பக்கமும் மதிப்பிழந்து நிற்க நேரிட்டது. “எங்கள் முடிவை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்று பணிவுடன் தெரிவித்திருந்தால் உங்களுக்காக நாங்கள் பெருமைப்பட்டிருப்போம்.

2021 சனவரியில் ஐநா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு நீங்கள் எழுதிய கூட்டு மடல், பொத்துவில் – பொலிகண்டி பேரணி போன்றவை நீதிக்கான போராட்டத்தில் முகன்மையான நடைபடிகள். இந்த வழியை விட்டு விலகிப் போய், இந்தியாவின் கோலுக்கேற்ப ஆடவும், இரணிலோ அழகப்பெருமாவோ யாரேனும் ஒருவரை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரிக்கவும் வேண்டிய தேவை என்ன? எங்களுக்கு இதில் ஒரு தேர்வு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கலாமே? “இரணில் ஆதரவு கேட்டார், கொடுத்தேன்” என்று ஒரு தலைவர் சொன்னது போல் நகைப்புக்கிடமானது எதுவும் இல்லை.

தமிழீழத்தின் உள்ளார்ந்த இறைமையைக் கொழும்புவிடம் விட்டுக் கொடுக்க மறுத்தே வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்துப் போராடத் தொடங்கினோம். அதனை தில்லியிடமும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை நம் மாவீரர்கள் தம் செங்குருதியால் ஈழமண்ணில் எழுதி வைத்தார்கள்.

மாவீரர்களின் பெயரால் இறைஞ்சுகின்றோம்: தாயகத் தமிழ்த் தலைவர்களே! சரியோ தவறோ நீங்களாக ஒரு முடிவெடுத்து நில்லுங்கள். அதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருங்கள். தமிழ்நாடும் உங்கள் பக்கம் நிற்கும். 

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 21