(தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி)

தமிழ்நாடா? தமிழகமா?

 அன்பர் இரவி (பரிவாதினி நூலகம்) கேட்கிறார்: தமிழ்நாடா? தமிழகமா?

+++

இரண்டும்தான்! இலக்கியத்தில் இரு பெயர்களும் ஆளப்படுகின்றன.

இது வரை கிடைத்துள்ள சான்றுகளின் படி சிலப்பதிகாரம்தான் முதன் முதலாகத் தமிழ்நாடு என்ற பெயரைக் குறிப்பதாக அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருதினை யாயின்…”

சிலப்பதிகாரம் வஞ்சிக் காதையில் அமைச்சர் வில்லவன் கோதையின் கூற்றாக இது இடம் பெறுகிறது. கடல்சூழ்ந்த இந்நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர்கள் யார்? என்பதை  இளங்கோ அடிகள் வில்லவன் கோதை வாயிலாகக் கேட்கிறார்.

சிலப்பதிகாரம் புகார்க் காதையிலும் தமிழ்நாடு என்ற குறிப்பு உள்ளது.

தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்

செருவேட்டுப் புகன்று எழுந்து

மின்தவழும் இமய நெற்றியில்

விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்.”

சங்க இலக்கியமான பரிபாடலிலும்*** “தமிழ்நாடு” குறிக்கப்படுகிறது:

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்

நின்று நிலைஇப் பூத்தலல்லது

குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றமுண்டாகு மளவு.”

தமிழ்நாட்டகம்! தமிழுக்கும் தமிழர்க்கும் தாயகமாகிய தமிழ்நாடு எனப் புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி புழங்கும் இடமே தமிழ்நாடு என்ற வரைவிலக்கணம் பெறப்படுகிறது.

வடவேங்கடம் தமிழ் கூறும் நல்லுலகம்” என்பது மொழியும் புலமும் சேர்ந்த தொல்காப்பிய இலக்கணம். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”,அதாவது  வினாவும் விடையும் குழப்பமில்லாமல் துல்லியமாகவும்   தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறியதுதான் “நும் நாடு யாது எனில் தமிழ்நாடு என்றல்” என்று கட்டளையிடுகிறார்.

கம்ப இராமாயணத்தில் கம்பரும்

“மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ

என்று  அனுமனும் வானரப் படையினரும் இலங்கை செல்லும் போது கடந்து செல்ல வேண்டிய இடமாகத் தமிழ்நாட்டைக் குறிப்பிடுகின்றார்.
(கவனம்: இராமப் பற்றர்கள்)    

பக்தி இலக்கியத்திலும் சேக்கிழார், காரைக்கால் அம்மையார் போன்றவர்களின் பாடல்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. ஒட்டக்கூத்தரின் தத்தயாகப்பரணியிலும் தமிழ்நாடு குறிக்கப்படுகிறது. 

அரசியல் கணக்கில் சேர சோழ பாண்டிய நாடுகளாகவும் எத்தனையோ சிற்றசுகளாகவும் தமிழ்நிலம் பிரிந்து கிடந்த காலத்திலேயே மொழி, மொழி பேசும் மக்கள் என்ற அளவைகள் கொண்டு தமிழ்நாடு என்றும் தமிழகம் என்றும் தொன்றுதொட்டு பெயர் பெற்றுத் திகழ்ந்தோம்.

புதுமக் காலத்திலும் (நவீனக் காலம் அல்லது பிழையாகச் சொல்லப்படும் ‘தற்காலம்’ [modern times]) விடுமைப் போராட்டக் காலத்திலேயே இந்தியத் தேசிய காங்கிரசு 1920 முதல் மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தமைக்கப்பட்டு விட்டது. பெரியார் தமிழ்நாடு காங்கிரசு தலைவராகத்தான் இருந்தார்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”

என்று மகிழ்ந்து பாடிய பாரதியார்    

தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!”

என்று வாழ்த்தினார்.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயரிடக் கோரி 1956ஆம் ஆண்டு சங்கரலிங்கனார் 76  நாள் உண்ணாப் போர் தொடுத்து உயிரீகம் செய்தார். 1956 நவம்பர் முதல் நாள் தமிழ்நாடு ஒரு மாநிலமாகப் பிறந்தது, ஆனால் பெயர் என்னவோ மதராசு, மெட்ராசு அல்லது சென்னை!   

1967ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அறிஞர் அண்ணா முதல்வரானார். உடனே புனித சியார்சு கோட்டையின் தலைமேல் “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்று ஒளிர்ந்தது. தமிழ்நாடு என்று முறையாகப் பெயர் சூட்டுமுன்பே இது நடந்தது.

ஆகவே தமிழ்நாடு, தமிழகம் என்ற இரு பெயர்களும் இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரைக்குமான வரலாற்றிலும் ஒரே பொருளில் ஆளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டரசை இன்றளவும் தமிழக அரசு என்று பேசியும் எழுதியும் வருகிறோம்.

ஆனால் எது அதிகார முறைப்படியான பெயர் என்றால் தமிழகம் அல்ல, தமிழ்நாடுதான்! ஒரு மாநிலத்துக்கு நாடு என்று பெயர் இருக்க முடியுமா? என்று கேட்பவர்கள் மகாராட்டிரம், இராசத்தானம் என்பதற்கெல்லாம் என்ன பொருள்? என்று கேட்டுப் பார்க்கட்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த ராட்டிரங்களும் தானங்களும் இந்தியாவை விடப் பழைமையானவை.  இவையெல்லாம் வரலாற்று வழிப்பட்ட தேசங்கள், இப்போது இறைமையிழந்த நாடுகள்!

உண்மையில் இந்தியாதான் மாநிலம்! அகன்ற நிலப்பரப்பு எனபதற்கு மேல் அதற்கு வேறு என்ன தகுதி உள்ளது? இந்தியாவைத் தேசம் என்றும் இந்தியாவில் அடங்கிய தேசங்களை மாநிலங்கள் என்றும் அழைப்பது ஒரு வரலாற்றுப் பொய்மை! இந்தியா தேசங்களடங்கிய மாநிலம் என்பதை மறைத்து அதனை மாநிலங்களடங்கிய தேசமாகக் காட்டும் புரட்டுIndia is a state of nations and not a nation of states.  

இந்த இந்தியப் புரட்டு முற்றி ஆர்எசுஎசு பாசக கும்பலின் இந்துப் புரட்டும் சேர்ந்து ஆளுநர் ஆர்.என்.இரவியின் ஆணவப் பேச்சாக வெளிப்பட்டுள்ளது. தமிழக அரசு எழுதிக் கொடுத்ததைத்தான் ஆளுநர் உரையாக அவர் படித்திருக்க வேண்டும். நீக்கவும் சேர்க்கவும் அவருக்கு உரிமை இல்லை. நீங்கள் எழுதியதை நான் ஏன் படிக்க வேண்டும்? என்று அவர் கேட்பதாக இருந்தால் பதவி விலகிப் போய்க் கேட்கலாம். அல்லது கேட்டு விட்டுப் பதவி விலகலாம். அந்த உரிமை அவருக்குண்டு. 

ஆர். என். இரவிக்குத் தமிழ்நாட்டுச் சட்ட மன்றமும் தமிழ்நாட்டரசும் தமிழ்நாட்டு மக்களும் கொடுத்துள்ள அடியை வரவேற்போம். அதே போது ஆளுநர் உருவில் தில்லியரசு பிடிவாதமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் சமூகநீதிக்கும் வளர்ச்சிக்கும் தடையாக நிற்கும் போது இந்தத் தடையை வெல்ல தமிழ்நாட்டரசின் திட்டம் என்ன? தமிழ்நாட்டரசு எழுதிக் கொடுத்த ஆளுநர் உரையில் இதற்கு விடையுண்டா? நாளை பார்ப்போம்.

பின்குறிப்பு (ஒரு சிறு ஐயம்):

தமிழ்நாடு வெல்க! என்ற முழக்கத்தில் “இதோ நானும் இருக்கிறேன்” என்று இணைந்து கொள்ளும் இந்தியக் கம்யூனிசுட்டுக் கட்சி (மார்க்குசிசுட்டு) தமிழகக் கிளையின் பெயர் என்ன? தமிழ்நாடு மாநிலக் குழுவா? தமிழக மாநிலக் குழுவா? வெறும் தமிழ் மாநிலக் குழுதானே? தமிழ்நாடு என்று சொல்ல விடாமல் உங்களைத் தடுப்பது என்ன?

சிபிஐ, சிபிஎம் இரண்டுமே தமிழ்நாட்டில்தான் இந்தியக் கம்யூனிசுட்டுக் கட்சி! வடநாட்டில் பாரதியக் கம்யூனிசுட்டு! ஏன் இப்படி? யாராவது கேட்டுச் சொல்லுங்கள்!        

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 67
     

***இதழாசிரியர் குறிப்பு: பரிபாடல் சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட காலத்தில் பிற்பட்டதே தவிர, சிலப்பதிகாரத்திற்கு முற்பட்டதே. சிலர் அதனைப் பிற்பட்ட இலக்கியமாகக் கூறுகின்றனர். அதனடிப்படையில் மடலாளர் தோழர் தியாகு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.