(தோழர் தியாகு எழுதுகிறார் 99: பதிவுகள் தளத்தில் செவ்வி 6 – தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 7

இதற்குப் பிற்பாடு தலைமை தொடர்பான கேள்வி வருகிறது. குமுகிய(சோசலிச)ப் புரட்சிக்குப் பாட்டாளி வருக்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். ஆனால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகரச் சனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொதுவான புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணக்கப்படுத்துவதற்குப் புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்துவதற்கு – பொது எதிரிக்கெதிராக இந்த அணிவகுப்பை வளர்த்துச் செல்வதற்கும் பொருத்தமான ஒரு பொதுத் தலைமை. அது காலப் போக்கில் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில்தான்உருவாக முடியும். அது ஒரே ஒரு சமூக சக்தியின் பிரதிநிதியாக இருக்காது. ஒரே ஒரு சமூக சக்தி மட்டும் தலைமை தாங்க முடியாது. அது தமிழ்த் தேசியச் சமூக நீதிப் புரட்சிகரத் தலைமை. நமது தந்திரோபாயம் என்ன? நாம் நீண்ட நாட்களாக அரசு அதிகாரம், அது ஒடுக்குமுறைத் தன்மை கொண்டது, அதற்கெதிராக நாம் படை கட்ட வேண்டும் எனப் பார்த்து வந்திருக்கிறோம். – அரசு அதிகாரம் பற்றிய பார்வையை இன்னும் கொஞ்சம் ஆழமாக்கிக் கொள்ள வேண்டும் – ஒரு சமூகப் பிரக்ஞையை அடிப்படையாக வைத்துத்தான் ஓர் அரசு அதிகாரம் இயங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது. இலெனின் புரட்சிக்கான நிலைமையைப் பற்றிக் குறிப்பிடுகிற போது: ஆளுகிற வருக்கங்கள் பழைய முறையில் தொடர்ந்து ஆள முடியாது என்ற நிலைக்கு வரும் போதும், ஆளப்படும் சக்திகள் பழைய முறையில் தொடர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வரும் போதும் இந்நிலை உருவாகிறது. இது மட்டும் நடந்தால் போதாது என அவர் குறிப்பிடுகிறார். ஆளும் வருக்கங்களின் சமூகப் பிரக்ஞையின் அதே அளவான பிரக்ஞை பொதுமக்களிடமும் இருக்கும் போதுதான் அவர்களை ஆள முடிகிறது. பொதுமக்களிடமுள்ள இந்தப் பிரக்ஞையை மாற்றுவதுதான் புரட்சிகர சக்திகளின் கடமையாகிறது. இது மாறும் போதுதான் பழைய முறையில் ஆளமுடியாத ஒரு நிலை வரும். இது புரட்சிக்கான புறநிலைத் தேவையை வளர்ப்பதற்கான ஒரு போராட்டம். இதை எவ்வாறு செய்யப் போகிறோம்? வெகுமக்களின் உடனடிக் கோரிக்கைகளின் மீதான வெகுமக்கள் போராட்டங்களின் வாயிலாகத்தான் அரசியல் இலக்கை நோக்கிய அணிவகுப்பை உருவாக்க முடியும். இவ்வகையில் இக்கட்டத்தில் பழைய சமூகப் பிரக்ஞைக்கெதிரான புதிய சமூகப் பிரக்ஞையை உருவாக்குவதற்கான தனித்தனியான உடனடிக் கோரிக்கையடிப்படையிலான போராட்டங்களும் ஒரு பொது அரசியல் இலக்கை நோக்கிய கருத்தியலையும் உருவாக்குவதுதான் முக்கியமானது. அதற்கு என்ன தேவை? இலெனின் சொன்னதைப் போல அமைப்புதான் நமது கையில் இருக்கிற ஒரே ஒரு கருவி. அந்த அமைப்பைக் கட்டுவதுதான் நமது இன்றைய தந்திரோபாயம்.

யமுனா: 

இந்த அரசு அமைப்பைத் தாங்கி நிற்கிறவையாக கருத்தியல் அமைப்பும் பண்பாட்டுக் கட்டமைப்பும் இருக்கிறது என்பதால் – இந்த அரசமைப்பை மாற்றவதற்குக் கருத்தியல் பண்பாட்டு அமைப்புத் தளத்திலான பேராட்டங்களை மேறகொள்ள வேண்டும் எனச் சொல்கிறீர்கள். எனில் இந்தப் பண்பாட்டு, கருத்தியல் செல்பாடுகளின் சமூகச் செயல்பாட்டு அங்கமாக இருக்கிற நடவடிக்கைகளில்தான் மாற்றுப் பண்பாட்டு, மாற்றுக் கருத்தியல் உருவாக்கம் நோக்கித்தான் நீங்கள் இடையீடு செய்ய வேண்டும்.

தியாகு:

நாம் இந்த அமைப்பின் எல்லைகளை நடைமுறையில் வெகுசனங்களுக்குப் புரியச் செய்ய வேண்டும். பொதுசனங்கள் இந்த அமைப்பில் இதுதான் முடியும் என நினைக்கிறார்கள். தமது நலன்களுக்காக அமைப்பை மாற்றுவது, மாற்று அமைப்பை உருவாக்குவது சம்பந்தமான பிரக்ஞையை நிலவும் அமைப்பின் எல்லையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம்தான் உருவாக்க முடியும். இவர்கள் இந்திய அரசமைப்புக்குள்தான் இயங்க முடியும் என நினைக்கிறார்கள். இவர்கள் வாசுபாயை விட்டால் சோனியா என நினைக்கிறார்கள். கருணாநிதியை விட்டால் செயலலிதா என நினைக்கிறார்கள். வேலைநிறுத்தம் செய்தால் இதுவரைதான் கிடைக்கும் என நினைக்கிறார்கள். இப்போது இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பு இருந்தால்தான் தமது சிக்கல்கள் தீரும் என்று மக்கள் வந்துசேர்கிற பிரக்ஞையை நாம் உருவாக்க வேண்டும். இதிலிருந்து அவர்கள் இன்றிருக்கிற அரசியல் அதிகாரம், மாற்று அரசியல் அதிகாரம் பற்றிய பிரக்ஞையைப் பெற முடியும். இந்தப் போராட்டங்கள் பொருளாதாரத் துறையில் இருக்கின்றன. கலாசாரத் துறையில் இருக்கின்றன. மொழித் துறையில் இருக்கின்றன. இவ்வாறான மாற்றுப் பிரக்ஞையைப் பல்வேறு போராட்டங்களின் மூலமாகத்தான் ஏற்படுத்த முடியும். அவ்வாறு போராடும் போதே ஒரு நீண்ட கால அரசியல் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்துகிறீர்கள். அந்த இயக்கம் இந்த எல்லாப் போராட்டச் சிற்றோடைகளையும் ஒரு பொதுப் போராட்ட நோக்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

யமுனா:

இந்தி மொழி ஆதிக்கம் என்கிற போது இந்திய மொழி பேசுகிற வடநாட்டவர்களைச் சொல்கிறீர்களா அல்லது இந்தி மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஆதிக்கச் சக்திகளைச் சொல்கிறீர்களா?

தியாகு: நாம் தெளிவாக இருக்க வேண்டும். நான் இந்தி மொழி ஆதிக்கச் சக்திகளென்கிறேன். இது இந்தி மொழி பேசும் மக்கள் என்பதைக் குறிக்காது. அவர்கள் நம் மீது இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிற சக்திகள் கிடையாது. அவர்களுக்குள் இருக்கிற ஒரு பகுதிதான் ஆளும் வருக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகள் என்கிற போது பெரும்பாலும் மார்வாரிகள் சேட்டுகள்தான். மற்ற தேசிய இனத்தவர்களில் பெருமுதலாளிகள் மிகக் குறைவு. இந்தியப் பெருமுதலாளிகளின் வரிசையில் இருக்கிறவர்களில் தொண்ணூறு சதவீதமானவர்கள் அவர்கள்தான். குசராத்தி சேட்டுக்கு குசராத்திதான் தாய்மொழி. ஆனால் இந்திதான் அவனது ஆதிக்கக் கருவி. அனைத்திந்திய சந்தையைப் பாதுகாப்பதற்கு இந்தியா என்கிற கட்டமைப்பை வைத்துக் கொள்வதற்கு, இந்திய தேசத்தைக் கட்டுவதற்கெல்லாம் இந்தி தேவைப்படுகிறது. இதை ஒரு மொழி பேசும் மக்களென்றோ ஒரு சமூக சக்தி என்றோ ஒரு தேசிய இனத்தவரென்றோ  பிரிக்க முடியாது. எல்லாமே கலந்ததாகத்தான் இந்தி ஆதிக்க சக்தி இருக்கிறது.

யமுனா:

தமிழ்த் தேசிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்? உதாரணமாக ஈழத்தை எடுத்துக் கொண்டால் சிங்களப் பெருந்தேசியத்தினுடைய ஒடுக்குமுறை வடிவங்கள் மிகத் தூலமாக இருக்கிறது. தரப்படுத்துதல், கோயில்கள் இடிப்பு, பாலியல் பலாத்துகாரம், சிவில் நிறுவனங்களில் புறக்கணிப்பு, யாப்புரீதியில் சிங்களமயமாக்கப்பட்டிருப்பது, தமிழர்கள் மீதான வெளிப்படையான இராணுவ வன்முறை என நிறைய வரையறுத்துச் சொல்ல முடியும். அவ்வகையில் தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் மீதான ஒடுக்குமுறைகளை நீஙகள் எப்படி வரையறுப்பீர்கள்?

தியாகு:

முதலாவதாக அடையாள மறுப்பு. தமிழ் மொழி தேசிய மொழியாக இங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழ்த் தேசிய இனம் என்பதற்கான அங்கிகாரம் இல்லை.  இதனுடைய விரிவாக்கமாகத்தான் மற்ற எல்லாவற்றையும் நாங்கள் பார்க்கிறோம். மைய அரசுப் பணிகளில் இந்தி அல்லது ஆங்கிலம் என்ற நிலைதான் இருக்கிறது. தமிழை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவன் மைய அரசுப் பணிக்குப் போகமுடியாது. இந்தி மொழித் திணிப்பு என்பது தொடர்கிறது. தமிழ் வழிக் கல்வி மறுக்கப்படுகிறது. அரசு உரிமை என்பது கிடையாது. தில்லியிலிருந்து மாநில அரசுகளைக் கலைக்க முடியும். ஆனால் எல்லா மாநில அரசுகளும் சேர்ந்தால் கூட தில்லி அரசைக் கலைக்க முடியாது. தமிழ்நாட்டின் ஆட்சிப் பரப்புக்கான உரிமை நமக்குக் கிடையாது. கச்சத் தீவைத் தமிழக அரசிடம் கேட்டுக் கெள்ளாமலேயே கொடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு எல்லைகளை மாற்றுகிற உரிமை தில்லியிடம்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களின் மீது தமிழ்த் தேசத்திற்கு இறையாண்மை கிடையாது. நமது இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்தி நமக்குத் தொழில் தொடங்க உரிமை கிடையாது. நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிற உரிமை நமக்குக்  கிடையாது. சாதி அடிப்படையிலான குலத் தொழில் முறையை உடைத்து யாரும் எந்த வேலையும் பார்க்கலாம் என்பதற்குப் பொருத்தமான வேலைவாய்ப்புக் கொள்கை இல்லை. நமக்குப் பொருத்தமான சட்டமியற்றும் உரிமை இல்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65