(தோழர் தியாகு எழுதுகிறார் 29: தொடர்ச்சி)
பொ.ந.பி. இட ஒதுக்கீடும் பாண்டேயின் கவனப் பிசகும்
பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான (EWS – பொ.ந.பி.) இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் குறித்தும், அதனை செல்லுபடியாக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய இணையவழிச் (Zoom) சிறப்புச் செய்தி அரசியல் நிகழ்வில் முன்னாள் நீதியர் அன்புக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் விரிவாக உரையாற்றியதோடு, பங்கேற்பாளர்கள் கேட்ட வினாக்களுக்கும் தெளிவாக விடையளித்தார்.
இங்கே நான் ‘பொநபி’ இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே நடைபெற்ற ஒரு விவாதம் பற்றி எழுதப் போகிறேன்.
பொநபி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பொதுவெளியில் சொல்லப்பட்ட வாதுரைகளில் ஒன்று அது ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்பதாகும். ஏழைகள் என்றால் உயர்சாதி ஏழைகளுக்கு மட்டுமா? என்று கேட்டால், அனைத்துச் சாதிகளிலும் இருக்கும் ஏழைகளுக்கு என்று விடையிறுத்தனர். இது உண்மையில்லை; அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள், ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏழைகளுக்கு இந்த பொநபி இட ஒதுக்கீடு பொருந்தாது என்பது திருத்தச் சட்டத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. ஆனால் பொநபி இட ஒதுக்கீடு அனைத்துச் சாதி ஏழைகளுக்கும்தான் என்று சிலர் விடாப்பிடியாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். இதையே பொநபி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான முதன்மை வாதுரையாகவும் முன்வைத்தனர்.
இவர்களுள் முதன்மையான ஒருவர் தமிழ்நாடு பாசக தலைவர் திரு அண்ணாமலை. பொநபி இடஒதுக்கீடு அனைத்துச் சாதி ஏழைகளுக்கும்தான் என்று அவர் கொடுத்த செவ்வி (பேட்டி) வலையொளியில் காட்டப்பட்டது. நான் இதைப் பார்த்தவுடன் மறுக்க எண்ணினேன். அவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்துக்கு வந்தால் நாமும் அதில கலந்து கொண்டு உரியவாறு மறுக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர் மாநில பாசக தலைவரான பின் எந்தத் தொலைக்காட்சி விவாதத்திலும் வரவில்லை.
பிறகு ஒரு நாள் சாணக்கியா வலைக் காட்சியில் திரு இரெங்கராசு பாண்டே சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் தோழர் இரவிந்திரநாத்தைப் பேட்டி கண்டார். இரவீந்தரநாத்து தமிழக அரசு அமைத்த நீதியர் ஏகே இராசன் தலைமையிலான பொதுத் தேர்வு((NEET) / நீட்டு ஆய்வுக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியவர். சாணக்கியா பேட்டி அதையொட்டித்தான். பேட்டி முழுவதையும் வலையொளியில் பார்த்தேன்.
பேட்டியின் இறுதிப் பகுதியில் ‘பொநபி’ (EWS) பற்றிய பேச்சு வந்தது. ‘வருக்க நலன்’ பற்றி இரவிந்திர நாத்து பேசியதால் ஏழை வருக்கத்துக்கான பொநபி இடஒதுக்கீட்டின் தேவை பற்றி நியாய ஆவேசத்துடன் பேசத் தொடங்கி விட்டார் பாண்டே. இரவிந்திரநாத்தை அவர் பேச விடவே இல்லை. பாண்டேயின் கருத்தை இரவிந்திரநாத்து மெல்ல மறுக்க முற்பட்ட போது, பாண்டே சீறினார்: “நான் எல்லாவற்றையும் நன்றாகப் படித்துப் பார்த்து விட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும்.
“இது எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடுதான். ப.சா. ப.ப. பி.பி.வ.(s.c.,s.t.,obc) எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும் சாதி இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக இந்த ‘பொநபி’/EWS ஒதுக்கீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது உயர் சாதியினர்க்கான இட ஒதுக்கீடு என்பது உண்மையில்லை.”
இந்தப் பேட்டி நான் காண்பதற்குச் சில நாள் முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். நான் வலையொளியில் பார்த்து முடித்த போது நள்ளிரவு நேரம். மறு நாள் காலை எழுந்தவுடன் இரெங்கராசு பாண்டேயைத் தொலைப்பேசியில் அழைக்க முயன்றேன். கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி: “அண்ணா, கோவை சென்றுள்ளேன். அறையில் இருக்கிறேன். சிறிது நேரத்தில் நானே உங்களை அழைக்கிறேன்.”
அவ்வாறே அழைத்தார். நான் நல வினவலுக்குப் பின் இரவிந்திரநாத்து செவ்வி, அதில் பொநபி பற்றிய அவரது கருத்து என்று பேசலானேன். அண்ணாமலையும் இப்படித்தான் சொல்கிறார், ஆனால் உங்கள் இருவர் கருத்தும் பிழை என்று சுட்டிக் காட்டினேன். அவர் அதை ஏற்க மறுத்து “இது பற்றிய அரசமைப்புச் சட்டத் திருத்தம், அரசாணை உட்பட எல்லாவற்றையும் முழுமையாகப் படித்து விட்டேன். உங்களைப் போன்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்க்கின்றீர்கள்.”
அவர் தன் கருத்துக்கு ஆதரவாக முன்வைத்த வாதுரைகள்:
1) இந்திரா சகானி வழக்கில் மண்டல் குழு பரிந்துரையைச் செயலாக்கும் அரசாணைக்குத் தடை விதித்தது போல் இந்த பொநபி (EWS) திருத்தச் சட்டத்துக்கு உச்ச நீதி மன்றம் தடை விதிக்க வில்லை. ஆகவே இதில் ஏதோ நிறை (weight) இருப்பதாக நீதிபதிகள் கருதுகின்றார்கள்.
2) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவும் தனித்தனி. எனவே அது செங்குத்து இட ஒதுக்கீடு (vertical reservation) பொநபி (EWS) அப்படியில்லை, இது கிடைமட்ட இட ஒதுக்கீடு (horizontal reservation). எந்தப் பிரிவும் இதில் விலக்கப்படவில்லை.. ஒன்றே ஒன்றுதான். ஒரே ஆள் இரண்டு வகை ஒதுக்கீட்டையும் அனுபவிக்க முடியாது. எது தனக்கு நன்மையோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
3) இது எல்லா சாதி ஏழைகளுக்கும் பயன்படக் கூடியது என்பதால்தான் சாதிக் கண்ணோட்டத்தை மறுத்து வருக்கக் கண்ணோட்டமுள்ளவர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். உயர் சாதியினர்க்கு அல்லது பிராமணர்க்கு மட்டுமென்றால் எப்படி ஆதரிக்க முடியும்? யார்தான் ஒப்புக் கொள்வார்கள்?
“நீங்கள் மீண்டும் படித்துப் பாருங்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.
நீங்கள்தான் படிக்க வேண்டியுள்ளது என்றார். சரி, உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள், நான் அனுப்புவதை ஒரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லி வைத்து விட்டேன்.
அரசமைப்புச் சட்டத் திருத்தம், பொநபி தொடர்பாக இணையத்தில் வந்த சில கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பாண்டேக்கு அனுப்பி வைத்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று நண்பர் (நீதியர்) அரி பரந்தாமன் அவர்களை அழைத்து பாண்டேயுடன் நடந்த விவாதம் பற்றிச் சொன்னேன். அவர் “என்ன? ‘பொநபி’ / EWS எல்லா சாதிகளுக்குமா?” என்று கேட்டுச் சிரித்தார். இரவிந்திரநாத்தையும் அழைத்து சாணக்கியா பேட்டியில் நடந்த உரையாடலை உறுதி செய்து கொண்டேன்.
பாண்டே விடை சொல்லட்டும் எனக் காத்திருந்தேன். மறு நாள் மாலை தன்னுடைய சுட்டுகையைப் (tweet) படம்பிடித்துப் புலனத்தில் எனக்கு அனுப்பியிருந்தார். ‘பொநபி’ / EWS பற்றி கவனப் பிசகினால் தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன் என்று அதில் சுட்டுகையிட்டிருந்தார்.
இரவிந்திரநாத்து செவ்வி, என்னுடன் நடைபெற்ற உரையாடல் எதையும் குறிப்பிடாமல் தன் கவனப் பிசகை மட்டும் காரணங்காட்டிப் பின்னடித்துக் கொண்டார் பாண்டே. வேறு எங்காவது தன் கவனப் பிசகின் முழுப் பின்னணியையும் எடுத்துரைத்தாரா என்பதறியேன். எனக்கு அது முகன்மையும் அன்று.
என்னதான் முகன்மை என்றால், பாண்டே எதை அடிப்படையாக வைத்து பொநபி இட ஒதுக்கீட்டை ஆதரித்தாரோ அந்த அடிப்படையே தவறு என்று தெரிந்த பின் அதை எப்படி ஆதரிக்க முடியும்? பொநபி இட ஒதுக்கீட்டையும், அதை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் குற்றாய்வு செய்வாரா? அந்த அறிவு நாணயத்தை ‘சாணக்கியா’ பாண்டேயிடம் எதிர்பார்க்கலாமா?
சரி, இந்த வகையில் பாண்டேயின் வாதுரையும் அண்ணாமலையின் வாதுரையும் ஒன்றாகவே இருந்தன. யாரிடமிருந்து யார் கற்றுக் கொண்டாரோ, தெரியாது. அண்ணாமலைசி தன் கருத்தை மாற்றிக் கொண்டாரா? மாற்றிக் கொள்ள அமித்சாசி அனுமதிப்பாரா?
பாண்டே எவரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லையே?
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக