(தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்! – தொடர்ச்சி)
ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும்
இனிய அன்பர்களே!
தேரிக்காடு என்று முதன்முதலாக எப்போது கேள்விப்பட்டேன், தெரியுமா? கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) ஆக்கம் செய்யும் தொழில் அமைக்க (இ)டாடா குழுமம் மாநில அரசோடு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது.
தேரிக்காட்டில் கடலோரத்திலிருந்து தொடங்கி பலநூறு சதுரக்கல் பரவிக் கிடக்கும் தாது மணலைத் தோண்டியள்ளி வேதிச் செயல்வழிகளின் ஊடாகப் பிரித்தெடுத்தால் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) கிடைக்குமாம். தாது மணல் பரவிக் கிடக்கும் ஏராளமான நிலங்கள் தனித்தனி உழவர்களுக்குச் சொந்தமாக இருந்த படியால் அவற்றை (இ)டாடா குழுமம் விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. உழவர்களோ நிலத்தை விற்க மறுத்தார்கள். சூழலியல் நோக்கிலும் தாது மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு கிளம்பிற்று.
முதலமைச்சர் உழவர்களிடம் நிலத்துக்குக் கூடுதல் விலை பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அதற்காக அமைச்சர் ஒருவரையே நேரில் அனுப்பியும் வைத்தார். ஆனால் உழவர்கள் நிலம் கொடுக்கவில்லை.
அந்த நேரத்தில் (இ)டாடாவின் கரும்பொன்மத் (Titanium) திட்டத்துக்கு எதிராக நெல்லை சவகர் திடலில் பெரும் பொதுக்கூட்டமாக நடைபெற்ற மாநாட்டில் நான் பேச அழைக்கபப்ட்டு நெல்லை போயிருந்தேன். போகும் போது சமரனையும் அழைத்துப் போயிருந்தேன். மேடையில் அவனோடு உட்கார்ந்திருந்தேன். “அதிக நேரம் பேசாதே பும்பா, பேசினால் பேச்சை நிறுத்து என்று குரல் கொடுப்பேன்” என்று என்னை எச்சரித்துக் கொண்டே இருந்தான். அவன் செய்யக் கூடியவன். முன்பு அப்படிச் செய்தவன். இவனைக் கீழே கொண்டுபோய் ஏதாவது வாங்கிக் கொடுத்து யாரிடமாவது விட்டு விட்டு மேடைக்குத் திரும்பலாம் என்று நினைத்துக் கீழிறங்கி ஒரு கடைவாசலில் நின்றேன். ஒருவர் என்னைத் தனியாக அழைத்துப் போய்க் கேட்டார்: “நீங்கள் எப்படி இந்த மாநாட்டுக்கு வந்தீர்கள்?”
“அழைத்தார்கள், வந்தேன்.”
“அழைத்தது யார்?”
நான் அவர் பெயரைச் சொன்னேன்.
“இந்த மாநாட்டுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? யார் செய்யும் செலவு தெரியுமா?”
“தெரியாது.”
“தெரிந்து கொள்ளுங்கள். (இ)டாடாவை விடக் கூடாது என்ற நோக்கத்தில் விவி மினரல்சு வைகுண்டராசன் செய்யும் செலவு.”
அதற்கு மேல் பேச முடியவில்லை, வந்து விட்டேன்.
பிறகு நெல்லை நண்பர்கள் சிலரைக் கேட்ட போது அதுதான் உண்மை என்றனர். பல வழிகளிலும் வைகுண்டராசனின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கூடங்குளம் போராட்டத்தைக் குழப்ப அவர் செய்த முயற்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். யார் ஆட்சியில் இருந்தாலும் தேரிக்காட்டில் விவி மினரல்சின் தாது மணற் கொள்ளையை எதிர்த்துத் துரும்பும் அசைத்திடார். அதிகார வகுப்பிலும் அரசியல் கட்சிகளிலும் ஊடகங்களிலும் அவர் சிலரைக் கூலிகொடுத்து வைத்துள்ளார். அவர்கள் சொல்லிலும் செயலிலும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்வதையும் கண்ணுள்ள எவரும் காணலாம்.
அந்தத் தேரிக்காட்டின் ஓரத்தில்தான் இடையன்குடியும் அமைந்துள்ளது. ஆனால் காலுடுவெல் வந்த காலத்தில் வைகுண்டம் இருந்தது, சிறிவைகுண்டம் (திருவைகுண்டம்) என்று இருந்தது. ஆனால் மண்ணைச் சுரண்டி எடுத்துப் பொன் குவிக்கலாம் என்று தெரிந்து வைத்திருந்த வைகுண்டராசன் இல்லை.
மணல் = மண் + அல் என்று பிரித்துச் சொல்வார்கள் தமிழறிஞர்கள். ஒட்டுவது மண், ஒட்டாதது மணல் என்று விளக்கம் தருவார்கள். (இ)டாடாவுக்கு ஒட்டாத தாதுமணல் விவிக்கு மட்டும் அப்படியே ஒட்டிக் கொண்டது. ஒட்டும் போது உதறியதே ஒருசிலரை உயர்த்திக் கொண்டிருக்கிறதாம்! (இ)டாடா என்று சொல்லிப் பாருங்கள், உதடு ஒட்டாது! விவி என்றால் ஒட்டும்! என்று விளக்கந்தரக் கூலிக்காரர் யாருமில்லையா?
தேரிக்காட்டில் புதைந்தும் புதையாத இந்த செம்மணல் வளம் பற்றிக் காலுடுவெல்லுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கண்ணில் பட்டதெல்லாம் மனிதவளமே. “கல்லைப் பிசைந்து கனியாக்கும் கருணை வாய்ந்த கால்டுவெல் ஐயர்” என்பார் இரா.பி.சே.
வெம்மை தகித்த இடையன்காட்டில் காலுடுவெல் வந்திறங்கிய கதையை அவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் தொடரக் கேட்போம். –
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 238
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக