14 September 2023 அகரமுதல
(தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” – தொடர்ச்சி)
நடந்தார் வாழி காலுடுவெல்!
இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிச் செல்கிறார்:
“இவ்வாறு கிறித்து சமயம் பரவி வரும் பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பருவந்தவறிப் பெய்த பெருமழையால் பொருனையாறு கரைபுரண்டு எழுந்து பல சிற்றூர்களைப் பாழாக்கியது. ஆற்றுவெள்ளம் அடங்கிய பின்பு கொள்ளைக் காய்ச்சலென்னும் கொடிய நோய் விரைந்து பரவியது. வெள்ளத்தால் வீடிழந்து உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வருந்திய மக்கள் காய்ச்சலுக்கிரையாகிக் கழிந்தார்கள். இந்நோய் கிருத்தவ நாடார்கள் வசித்த ஊர்களில் நூற்றுக்கணக்கான மாந்தரைச் சூறையாடினமையால் மதம் மாறிய மக்கள் மனம் பதைத்தார்கள். முன்னோர் பொன்னே போற் போற்றிய தொன்னெறி துறந்து கிறித்து மதத்தை ஏற்றமையாற் கேடு வந்துற்றதென்று எண்ணினார். தள்ளருஞ் சீற்றமுற்ற பழைய தெய்வங்களின் ஏவலாற் கொள்ளைக் காய்ச்சல் வந்திறுத்ததென்று உள்ளங்கவன்றார். குற்றம் புரியும் மாந்தரை ஒறுக்கும் திறம் வாய்ந்த கொடிய தெய்வங்களைக் கொடையாற் சாந்தி செய்ய முற்பட்டார். இடையன் குடியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும், கொடைகளும் விழாக்களும் மலிந்தன. மதம் மாறிய மாந்தரிற் பலர் மீண்டும் தொன்னெறியைக் கடைப்பிடித்து வாழத் தொடங்கினர். ஆகவே சத்தியநாதர் முதலிய தொண்டர் ஆர்வத்தால் விரைந்து பரவிய கிறித்து மதம் வெள்ளத்தாலும் கொள்ளைக் காய்ச்சலாலும் துளங்கித் தளர்வுற்றது. பஞ்சமும் பிணியும் நீங்கிய பின்னரும் புதிய மதத்தினை நெஞ்சினால் நினைக்கவும் பலர் அஞ்சினர்; அம்மதத்தைப் புகழ்ந்து பேசிய வேதியரை மனமார வெறுத்தார். ஒல்லும் வகையால் அன்னார்க்கு அல்லல் விளைத்து அவரை நாட்டை விட்டு ஓட்ட முயன்றார். ஆயிரத்து எண்ணூற்று முப்பதாம் ஆண்டில் இடையன் குடியிற் பணி செய்த கிருத்தவ வேதியர் மீது கொள்ளைக் குற்றஞ் சாற்றப்பட்டது. சருக்காருக்குரிய வரிப் பணத்தை வசூலித்துத் தலையாரி கொண்டுவரும் பொழுது வேதியரும் அவர் வகையினரும் வழிமறித்துப் பணத்தைத் தட்டிப்பறித்துக் கவர்ந்து கொண்டாரென்று வழக்குத் தொடரப்பட்டது. குற்றஞ் சாற்றப்பட்ட கிருத்தவர்கள் கையில் விலங்கு பூட்டி முப்பது கல் தூரத்திலமைந்த பாளையங்கோட்டைக்கு அவர்களை இட்டுச் சென்று சிறைக்கொட்டத்தில் அடைத்து வைத்தார்கள். குற்ற விசாரணை முடிவதற்குள் ஐந்து மாத காலம் கழிந்தது. இறுதியில் கிருத்தவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்று நீதிமன்றத்தார் தீர்ப்புரைத்தாரேனும் ஐந்து மாதங்களாக அவரடைந்த துன்பத்திற்கு ஓரளவில்லை. இத்தகைய இடுக்கண்ணுற்றவிடத்தும் கிருத்து மதத்தை விடாது பற்றி நின்றார் சிலர். அன்னார், மாசற்ற ஏசுநாதரின் பெருமையையும், சிறியோர் கையிற் சிக்குண்டு அவரடைந்த சிறுமையையும் நினைத்து நெஞ்சந்தேறி நெறிமுறை தவறாது வாழ்ந்து வந்தார். இங்ஙனம் அலக்கணுற்று நின்ற நாட்டில் காலுடுவெல் ஐயர் அறப்பணி செய்யப் போந்தார்.”
இரா.பி.சே “நாடும் நடையும்” என்ற தலைப்பில் காலுடுவெல் சென்னை மாநகர் வந்தடைந்து அங்கிருந்து 400 கல் நடந்தே நெல்லைக்குப் புறப்பட்ட செய்தியை வண்ணிக்கிறார். காலுடுவெல் நடந்த வழிநடையும் அதைச் சொல்லும் இரா.பி சேதுப்பிள்ளையின் மொழிநடையும் கருதிச் சில சொல்லியங்களை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்.
“நானூறு கல் தூரம் நடந்து செல்லுகையில் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும், அவர் பேசும் மொழியையும் நன்கு அறிந்து பயனுறலாகுமென்பது அவர் கருத்தாகும்….”
“பொன்னி நாடென்று ஆன்றோராற் புகழப்பெற்ற சோழ நாட்டின் வளம்பெருக்கும் காவிரியின் செழும் புனலைக் கண்டுகளித்தார். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் பழமையையும் பெருமையையும் கண்கூடாகக் கண்டார்;…
“…கும்பகோணத்தின் வழியாகத் தஞ்சை மாநகரம் போந்து விண்ணளாவிய கண்ணுதற்பெருமான் கோயிலையும், சோழ மன்னர்கள் எடுத்த கோட்டையையும் கண்டு மகிழ்ந்தார்….”
“..சோழ நாட்டின் நிலவளமும், தரங்கம்பாடியின் கடல்வளமும், நீலகிரியின் மலைவளமும் அவருள்ளத்தில் நன்கு நிலைபெற்றன.” .
நீலகிரியிலிருந்து கோவை வழியாக மதுரை நோக்கிப் புறப்பட்ட காலுடுவெல் வழிநெடுக அடைந்த அவதிகள் பல.
“வண்டியேறிச் செல்ல வகையற்ற வெள்ளையர் திண்டாடித் தெருவழியே செல்கின்றாரென்று அவரை இழித்துரைத்தார் பலர். தொல்லை வினையால் துயருழந்து செல்லும் பரங்கியைப் பார்மின் என்று வீட்டிலுள்ளாரைப் பரிந்தழைதார் பலர்.”
“பாண்டிய நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்த பொழுது தாயைக்கண்ட சேய்போல் ஐயர் அகமலர்ந்து இன்புற்றார்; ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் பெருமை வாய்ந்த வையையாற்றில் புது வெள்ளம் பெருகிவரக் கண்டு உள்ளங்குளிர்ந்தார். அப்பால் அங்கயற்கண்ணியோடு இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோவிலின் அழகினைக் கண்டு ஆனந்தமுற்றார். திருமலை நாயக்கர் எடுத்த மாளிகை முற்றும் சுற்றிப் பார்த்து அதன் மாண்பினை மனமாரப் புகழ்ந்தார்.”
மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருமங்கலம் சென்று, சமயத்தொண்டு ஆற்றி வந்த தமிழறிஞர் திரேசியருடன் அளவளாவி விட்டு, சில நாட்களில் நெல்லை வந்தடைந்த காலுடுவெல் பொருனையாற்றைக் கடந்து பாளையங்கோட்டை சென்று, அங்கு வாழ்ந்த கிருத்தவர்களோடு அளவளாவி விட்டு, நலிந்த மக்கள் வாழும் நாசரேத்தை அடைந்து அவர்கள் விரும்பியவாறு சமயச் சொற்பொழிவாற்றினார். அடுத்த ஞாயிற்றுக் கிழமை முதலூரில் விரிவுரை ஆற்றிய பின் இடையன்குடி நோக்கிப் புறப்பட்டார். காத வழி தூரத்தில் அமைந்திருந்த அவ்வூரை நோக்கிச் செல்லும் பொழுது வழிதவறி நெடுந்தொலைவு சுற்றி இராப்பொழுதில் அவ்வூரை அடைந்தாராம்.
இடையன் குடியின் புவியியலை இரா.பி. சேதுப்பிள்ளை சுள்ளென வண்ணிக்கிறார்:
“திருநெல்வேலி நகருக்குத் தென்கிழக்கே நாற்பது கல் தூரத்தில் செக்கச் சிவந்த தேரியில் இடையன் குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கதிரவன் வெம்மையை ஆண்டு முழுதும் பெற்று விளங்கும் அவ்வூரில் ஊற்று நீரல்லால் வேற்று நீரில்லை. காலையெழும் கதிரொளி மாலையில் மறையுமளவும் அதன் வெம்மையைத் தாங்கி நிற்கும் தேரியைக் காணும் கண்ணும் கருத்தும் மனமும் ஒருங்கே கருகுவனவாகும். வெய்யோன் ஒளி விரைந்து பரவிச் செந்நிலத்தை வெந்நிலமாக்கும் பொழுது ‘செந்நெருப்பினைத் தகடு செய்து பார் செய்ததொக்கும் அச்செந்தரை’ என்று பரணிக் கவிஞர் எழுதிய பாலையின் வடிவம் நம் கண்ணெதிரே பரந்து தோன்றுவதாகும்.”
பனிபொழியும் குளிர்நிலத்தில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞர் வெம்மை வாட்டும் இந்தச் செம்மணல் காட்டில் எப்படி வாழத் துணிந்தாரோ? இத்தனை நீண்ட ஆண்டுகளுக்குப் பின் அதே இடையன்காட்டில் அவர் வாழ்ந்த இல்லத்தின் மரநிழலில் நின்ற பொழுது என் நெஞ்சை வாட்டிய நினைவு இதுவே! இடையன்காடு அக்காலத்தில் எப்படி இருந்தது? அங்கு வதிந்த மக்கள்? அவர்கள் வாழ்வில் கால்டுவெல் நிகழ்த்திய மாற்றம்? பார்ப்போம்
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 236
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக