(தோழர் தியாகு எழுதுகிறார் 197 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4 – தொடர்ச்சி)

தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாமா?

இனிய அன்பர்களே!

சில ஆண்டுகளுக்கு முன்னர் குடந்தையைச் சேர்ந்த சில தோழர்கள் தமிழ்த் தேசியத்துக்கென்று ஒரு சமயச் சார்பு வேண்டும் என்று என்னிடம் வாதிட்டார்கள். அவர்கள் குறிப்பாக சைவச் சமயச் சார்பை வலியுறுத்துவதாக நான் புரிந்து கொண்டேன். என்னால் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் சொன்னேன்: “நான் இறைமறுப்பாளன். இயல்பாகவே சமய மறுப்பாளன். நான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக இறைப் பற்றாளனாகவோ ஒரு சமயம் சார்ந்தவனாகவோ நடிக்க என்னால் முடியாது. அது நேர்மையற்றது, என் உளச்சான்றுக்குப் புறம்பானது.”

அவர்கள் வாதிட்டார்கள்: “தேசியத்துகென்று ஒரு சமயம் இருந்தாக வேண்டும். இல்லையேல் சமய நம்பிக்கையுள்ள மக்களை நம்மால் திரட்ட முடியாது.”

“தமிழ்த் தேசியத்துக்கு எந்த சமயச் சார்பும் தேவையில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சமயச் சார்பு கொண்ட இயக்கம் இந்தியத் தேசிய இயக்கமானாலும் தமிழ்த் தேசிய இயக்கமானாலும் அதில் என்னால் இணைந்திருக்க முடியாது.”

நான் அந்தத் தோழர்களிடம் சொன்னேன்: “உங்களுக்கு சமய நம்பிக்கை இருந்தால் இருக்கட்டும். ஒரு சமயத்தை நீங்கள் விரும்பினால் அதைக் கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை உண்டு. தமிழ்த் தேசியத்துக்காக நீங்கள் உழைக்க அது தடையில்லை. ஆனால் உங்கள் சமய நம்பிக்கை உங்களைச் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும், அது இயக்கக் கொள்கையாக இருக்க முடியாது. உங்களுக்கு உண்மையிலேயே இறை நம்பிக்கையும் சமய நம்பிக்கையும் இருக்குமானால் அதை மறைத்துக் கொள்ள வேண்டா. அதே போல் இறை நம்பிக்கை, சமய நம்பிக்கை இல்லையென்றால், இயக்க நலனுக்காக அதை மறைத்துக் கொண்டு நடிக்காதீர்கள்.”

ஏதோ ஒரு தேர்தலுக்காக நாத்திகர்கள் ஆத்திகர்கள் போல் பாசாங்கு செய்யும் நடிப்பு அரசியல் தமிழ்த் தேசியப் புரட்சிக்கான அணிதிரட்டலுக்கு உதவாது.

இறை நம்பிக்கை அல்லது இறை மறுப்பை, சமய நம்பிக்கை அல்லது சமய மறுப்பை அரசிலும் அரசியலிலும் கலக்கலாகாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதியை நம் மக்களிடையேயும் வளர்க்க வேண்டும். குடியாட்சியம் நிறைவு பெற உலகியமும், உலகியம் நிறைவு பெறக் குடியாட்சியமும் இன்றியமையாதவை. (குடியாட்சியம் = DEMOCRACY; உலகியம் = SECULARISM). நான் முன்வைக்கும் இந்தக் கருத்துகளை விளங்கிக் கொள்ள என் புதிய சொல்லாட்சியையும் தாழி அன்பர்கள் பயில வேண்டுகிறேன்.

‘தமிழ்த் தேசியமும் சமய நம்பிக்கையும்” என்ற தலைப்பில் இணையவழி அரசியல் வகுப்பு நடத்தியுள்ளேன். தாழி மடலிலும் இது பற்றி எழுதியுள்ளேன். எனது நிலைப்பாட்டில் கோவை அன்பர் பொன். சந்திரன் முழுமையான உடன்பாடு தெரிவித்து எழுதியதோடு, இது பற்றிய என் தாழி மடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மற்ற விடுதலை இயக்கங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தார். தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாகாது என்பதுதான் என் கொள்கை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 22
6