நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே!

 சங்கத்தமிழ் வேந்தர்கள் புலவர்களை ஆதரித்ததுடன் தாங்களும் பெரும் புலவர்களாக இருந்தனர். அதுபோல், சோழவேந்தன் கரிகாலனின் தாய்மாமாவான இரும்பிடர்த்தலையார் சிறந்த புலவராக இருந்துள்ளார். இவர் பாடிய 26 அடிகள் கொண்ட பாடல் ஒன்று புறநானூற்றில் 3ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் 11ஆவது அடி
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
என்பதாகும்.
இரும்பிடர்த்தலை:  இரும்பிடர் = பெரிய கழுத்து; பிடர்த் தலை இருந்து = கழுத்திடத்தே இருந்து; அஃதாவது யானையின் பெரிய கழுத்தருகே அமர்ந்து போரிட்டவன். இவ்வாறு புலவர் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளமையால் இவர் இயற் பெயர் அறியாமையால் ‘இரும்பிடர்த்தலையார்’ என்றனர்.
இப்புலவர் பெருந்தகை ‘கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி’ என்னும் மன்னனைப் பாராட்டி வாழ்த்துவதே இப்பாடல். இந்த அடியும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளதே! பாண்டியனின் குடிப்பெயரில் ஒன்றான வழுதி என அழைக்கப்பெறும் வேந்தனின் முழுப்பெயர் தெரியவில்லை. வலிமையான கையில் ஒளிவீசும் வாளினை ஏந்திய பெருமைக்குரிய பெயர் பெற்ற வழுதி என இவனைப் புலவர் பாராட்டுகிறார்.
பாடப்படுபவரது வெற்றி, புகழ், வீரம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணை எனப்படும். இப்பாடல் பாடான் திணையைச் சேர்ந்தது. செவியில் அறிவுரை கூறுவதைக் குறிப்பிடும் செவியறிவுறூஉ என்னும் துறையைச் சேர்ந்தது இப்பாடல். இப்பாடலில் வேந்தனைப் பாராட்டுவதுடன் வாழ்த்தி அறிவுரையும் கூறுகிறார். இவ்வறிவுரைகள் எக்காலமும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்துவன.
 உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற (அடிகள் 1-2)
என இப்பாடலைத் தொடங்குகிறார்.
உவவு மதி என்பது முழுமதியை-பெளர்ணமியை-க் குறிப்பதாகும். முழுமதி போலும் வட்டவடிவிலான உயர்ந்த வெண் கொற்றக் குடை நிலைபெற்ற கடலை எல்லையாகக் கொண்ட மண்ணகத்தை -நாட்டை- நிழல் உடையதாக ஆக்கும் பெருமைக்குரியவர்களின் வழித்தோன்றல் எனப் பாராட்டியுள்ளார். வேந்தர்களின் வெண்கொற்றக் குடை அவர்களுக்கு நிழல் தருவதற்கல்ல. மக்களைத் துன்பங்களில் இருந்து காப்பதற்கே என்கிறார். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் தத்தம் வீட்டு மக்களுக்குக் குடையாக விளங்குகிறார்களே தவிர, நாட்டு மக்களுக்கு அல்ல.
அடுத்து,
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக், கவுரியர் மருக! (அடிகள் 3-5)
என்கிறார்.
பாதுகாப்பான முரசு(ஏம முரசம்) ஒலி எழுப்பி முழங்க, ஆட்சிச் சக்கரத்தைச் சிறப்பாகச் செலுத்தும், பிறர்க்கு உதவும் ஈர நெஞ்சம் கொண்ட கொடை உள்ளம் மிக்க பாண்டியர்களின் மரபினர் எனப் பாண்டியர்களின் கொடைச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் கூறுகிறார். நேமி என்பது சக்கரம். இங்கே ஆட்சிச்சக்கரம். நேஅ என்பதிலிருந்துதான் நேயம் பிறந்து நேசமாகியது.
அரசனைப்போல் சிறப்புடைய அரசியையும் பாராட்ட வேண்டுமல்லவா? எனவே,
 செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ (அடி 6)
என்பதன் மூலம் குற்றமற்ற கல்போன்ற உறுதியான உள்ளங் கொண்ட சேயிழையின் தலைவன் எனக் கூறி பாண்டியப் பேரரசியின் சிறப்பைப் பாராட்டுகிறார். செயிர் தீர்=குற்றம் நீங்கிய; சேயிழை = அழகிய அணிகலன்களை அணிந்த பெண்ணாகிய அரசி. எனவே, தரத்திலும் வடிவிலும் தோற்றத்திலும் செய்முறையிலும் குறைபாடு எதுவும் இல்லாத அணிகலன்களைச் செய்துள்ள சிறப்பை இதன் மூலம் அறியலாம். கற்பு என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நிலைப்பாட்டிலிருந்து மாறா உறவுநிலைத் தன்மையை மட்டும் கருதக்கூடாது. கல்போன்ற மன உறுதி; இல்லறத்திலும் அரசறத்திலும் இடையூறுகள் வரும் பொழுது எதிர்த்து நின்று நீக்கும் கல்போன்ற வினை உறுதி எனக் கொள்ள வேண்டும். மன உறுதியும் வினை உறுதியும் மிக்க அரசி எனப் போற்றுகிறார்.
தொடர்ந்து வேந்தன் அமர்ந்திருக்கும் யானையின் சிறப்பைக் கூறுகிறார்.
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி! (அடிகள் 7-13)
பொன்னால் ஆக்கப்பட்ட நெற்றிப்பட்டத்தையும் (பொன்னோடை) புள்ளியையும்(புகர்)நெற்றியில் (நுதல்) உடைய செறிவான வலிமை(துன்னருந் திறல்) மிக்க, மதநீரால் மணக்கும் (கமழ்தல்=மணத்தல், கடாஅம்=மதம்)யானை என யானையைச் சிறப்பிக்கிறார். மணிகள் கோக்கப்பட்ட கயிற்றால் பிணிக்கப்பட்ட யானை என யானைக்கு அழகுபடுத்தும் நிலையைப் புலவர் குறிப்பிடுகிறார்.
எயிறு என்றால் பல் எனப் பொருள். இங்கே மருப்பை – தந்தத்தை-க் குறிக்கிறது. எயில்=மதில். பகைவர் மதிலில் உள்ள கதவை யானை, தன் கொம்பாகிய மருப்பினால் – தந்தத்தினால் குத்தி வீழ்த்தும் செயல் வலிமை கூறப்படுகிறது.
‘மருந்தில் கூற்றம்’ என்பதை நிலப்பகுதியாகக் குறிப்பிட்டு அதனை வென்ற வேந்தன் என்று பொதுவாகக் கூறுகின்றனர். ஆனால், சிலர் ஏற்படப்போகும் சாவிற்கு மருந்து இல்லாத – வழியில்லாத வகையில் எதிரிகளை அழிக்கும் வேந்தன் என்கின்றனர். தனக்கு மாற்று இல்லாத கூற்றுவனைப் போன்றவன் என்கின்றனர் சிலர். எல்லாப் பொருளும் வேந்தனைச் சிறப்பிப்பனவே!
பாடலின் மையக் கருத்தாக வேந்தனிடம் புலவர் இரும்பிடர்த்தலையார்
நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்(அடி 14)
என வேண்டுகிறார்.
நிலப் பகுதி, நடுக்கத்தால், அதிர்ச்சியால் இடம் மாறுவதும் நிலத்திற்குள் மறைவதும் உண்டு.  இவ்வாறான இயற்கைப் பேரிடரைக் குறிப்பிட்டு அறிவுரை வழங்குகிறார். “நிலம் மறையும் சூழல் எழுந்தாலும் சொன்ன சொல் தவறாதே!” என்கிறார். அஃதாவது நிலப்பெயர்வு போன்று ஆட்சி மாறும் சூழல் ஏற்பட்டாலும் வாக்கு தவறாதே என்கிறார். நாளொரு வேளையும் புதுப்புது உறுதி தந்து மறக்கும் இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.
தமிழ்வேந்தர்களின் சொல் திறம்பாமை குறித்துப் பிற புலவர்களும் பாராட்டியுள்ளனர்.
 நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;(பதிற்றுப்பத்து 63, அடிகள் 6-7)
என நிலம் பெயர்ந்தாலும் – நில நடுக்கம் ஏற்பட்டாலும் – சொன்ன சொல் பொய்க்கும் படி நடக்காதவன் எனச் சேரலாதன் அந்துவஞ்சேரல் பண்பைக் கபிலர் பாராட்டுகிறார்.
வேந்தனின் தோற்றத்தைக் குறிப்பிடும் பொழுது, பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த காலையுடையவன், சந்தனம்  பூசி உலர்ந்த குறுக்கு(விலங்கு) அகன்ற விரிந்து பரந்த மார்பினை உடையவன் என்கிறார். (மக்களைப்போல் நேர் நிற்காமல் குறுக்காக நிற்கும் உயிரினத்தை மக்கள் விலங்கு என்றனர்.)
 பொலங் கழல் கால் புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியன் மார்ப (அடிகள் 15-16)
என்கிறார் புலவர்.
இவ்வரிகள் மூலம் வழுதியின் தோற்றத்தை மட்டுமல்ல தமிழகத்தின் சிறப்பையும் உணரலாம். ஆடவர் காலில் அணிவதன் பெயர் கழல் எனவும் அதனைப் பொன்னால் செய்யும் அளவிற்குப் பொன் விளைந்திருந்தது, நகை செய்யும் நுட்பம் பெருகியிருந்தது, பொன்னை உருக்கிப் பயன்படுத்தும் வினைத்திறன் சிறந்திருந்தது எனவும் நாம் அறியலாம்.
 ஊர்இல்லஉயவுஅரிய,
நீர்இல்லநீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை (அடிகள் 17-23)
என இரவலர் வரும் வழியிடைத் துன்பத்தைக் கூறுகிறார்.
வரும் வழியில் உண்ணவோ, தங்கவோ எந்த ஊரும் இல்லை. நீர் அருந்திப் பிழைக்கலாம் என்றால் நீர் நிலையும் இல்லை. பொறுத்தற்கு இயலாத துன்பம் தரும் நீண்ட பாதையாக உள்ளது. வீரர்கள் அம்பு எய்தி இறந்தவர்களின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள்(பதுக்கை) நடப்பதற்குத் துன்பம் தரும் வகையில் உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் கற் குவியல்களில் உள்ளமையால் அவற்றைத் தின்ன முடியாமல் அழகான சிறகுகளும் வளைவான வாயும் உடைய பருந்துகள் இலவர மரத்தில் இருந்து வருந்துகின்றன. பருந்துகள் அமர்ந்துள்ள இலவர மரங்கள் நிறைந்த பல பிரிவுகளாக உள்ள பாதைகள் வழியாகவே இரவலர்கள் வருகின்றனர். இத்தகைய துன்பங்களைத் தாங்கிக் கொண்டு வேந்தனிடம் கேட்காமலே பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வருகின்றனர்.
இங்கே ‘பார்வல்’ என்ற சொல் சிறப்பிற்குரியது. மேலும் பல பாடல்களில் பார்வல் பாசறை என்பதுபோல் இச்சொல் வருகின்றது.
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப் (மதுரைக் காஞ்சி அடி 231)
உயரப் பறக்கும் பருந்தும் பறக்க இயலா உயரத்தில் அமைக்கப்பட்ட ‘பார்வல்’ என்கிறார் மாங்குடி மருதனார்.
தொலைக்கண்டுணர்வி(RAdio Direction And Ranging-RADAR), வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளைப் பயன்படுத்தித் தொலைவில் உள்ள போர் விமானங்கள், கப்பல்கள் முதலான நடமாட்டத்தைக் கண்டுணரும் கருவியமைப்பாகும். பருந்துகளும் பறந்து செல்ல இயலா உயரத்தில் இருந்து தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டுணர்ந்துள்ளனர் தமிழர்கள். ‘பார்வல்’ என்றால் தொலை உணர்வுப் பார்வை வல்லமை மிக்க அமைப்பு. எனவே. ‘இராடார்’ என்பதற்கான ஒற்றைச் சொல்லாக இதனைக் கையாளலாம். இன்றைய அறிவியல் நுட்பக் கருவி செய்வதை அன்றைக்கு ஆட்கள் செய்துள்ளனர். எனினும் அதற்குத் துணைக்கருவிகள் இருந்திருக்க வேண்டும். அவை பற்றிய விவரம் தெரியவில்லை.
நிறைவாக,
நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது
முன்ன முகத்தி னுணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.  (அடிகள் 24-26)
என்று புலவர் பாடலை முடிக்கின்றார்.
முகக் குறிப்பை உணர்ந்து அவர்கள் வறுமையைப் போக்கும் வள்ளல் தன்மை உடையவன் என்பதால் வேந்தனிடம் இரவலர்கள் விரும்பி வருவர் என்கிறார். இரவலர்கள் தங்களின் இன்மையைச் சொல்லக்கூட நாணுவர். எனவே,அந்த நிலைக்கு அவர்களைத் தள்ளாத உயர்ந்த உள்ளம் கொண்டவன்; முகக்குறிப்பால் அவர்கள் தேவையை உணரும் உளவியல் அறிந்தவன்; வையகத்தார் நாடி வரும் வகையில் வள்ளண்மை மிக்கவன் என இரும்பிடர்த்தலையார், பாண்டிய வேந்தன் வழுதியைப் பாராட்டுகின்றார்.
அன்றைக்கு ஆள்வோரை வழிநடத்தும் புலவர்கள் இருந்தனர். இன்று வழிநடத்தும் புலவர்களும் இல்லை. யாரும் வழி நடத்தினாலும் கேட்டு நடக்கும் ஆட்சியாளர்களும் இல்லை!
இலக்குவனார் திருவள்ளுவன், தொடர்பிற்கு: thiru2050@gmail.com
தினச்செய்தி