பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…!

 கட்சி உறுப்பினர்களைக் குடும்ப உறுப்பினர்கள்போல் நடத்திய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை என்னும் அவரின் பெயரின் சுருக்கம்போல் அண்ணா என்பது திகழலாம். ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான தம்பியர் அவரைப் பாசமுடன் அழைத்த சொல்லே அண்ணா என்பது. தம்பிக்கு என மடல் எழுதி விழிப்புணர்வு ஊட்டிமையால் வயது வேறுபாடின்றி அனைவருக்குமே அவர் அண்ணா ஆனார். எனவேதான் அவர் மறைவின் பொழுது  திரண்டிருந்த மக்கள் கூட்டம் உலகிலேய மிகுதியான இறுதி அஞ்சலி எனக் கின்னசு உலக ஆவணப்பதிவு அறிவித்தது.
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுத்த அப்பெருந்தகை அவற்றை நனவாக்கலாம் என எண்ணினார். தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் அவற்றை நிறைவேற்றவும் தொடங்கினார். மேலும் சில ஆண்டுகளேனும் அவர் வாழ்ந்திருந்தார் எனில் அனைத்துக் கனவுகளையும் நடைமுறையாக்கி இருப்பார். என்னசெய்வது? நமக்கு அந்த நற்பேறு வாய்க்கவில்லை. அவரது கட்சியினரும் அக்கட்சி வழிவந்தவர்களும் அவரது பிறந்த நாளின் பொழுதும் நினைவு நாளின் பொழுதும் அவரை நினைத்தால் மட்டும் போதாது. இனியேனும் அவர் கனவை நனவாக்க வேண்டும்.
தமிழின் பெருமையைத் தமிழர்களே உணராமல் இருக்கிறார்கள். எனவேதான் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழைப் புறக்கணித்துப் பிற மொழிகளைத் தாங்கிக்கொண்டுள்ளார்கள். பேரறிஞர் அண்ணா, “தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதை தமிழனிடத்திலேயே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பதை அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்.(தம்பிக்குக் கடிதம் – 03.07.1960)” என்று அன்றே சொன்னார். அந்த அவமானம் இன்னும் நீங்கவில்லை. எனவே, தமிழின் சிறப்பைத் தமிழர்களும் தமிழ்நாட்டவர்களும் அறியச் செய்ய வேண்டும்.
“தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே, பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவற்றைக் கண்டித்து, அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழிகாண வேண்டும்” எனப் பேரறிஞர் அண்ணா(இந்தி எதிர்ப்பு மாநாடு – திருவண்ணாமலை – 1957) வேண்டியதை இப்பொழுதாவது அரசும் தமிழன்பர்களும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தமிழ் மேலும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படும்.
தமிழ் ஏற்றம் பெறுவதற்கு ஒரே வழி ஆட்சிமொழியாகத் தமிழ் விளங்க வேண்டும் என்பதுதான். 1967 இல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 5 ஆண்டுகளுக்குள் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக நடவடிக்கை எடுத்தார். மூவாண்டு முனைப்புத்திட்டம் மூலம் பல துறைகளில் தமிழ் ஆட்சிமொழியாகத் திகழ நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவரது எதிர்பாராத மறைவு ஆட்சிமொழித் திட்டத்தை முடக்கிப்போட்டுவிட்டது.அவர், எந்த மொழியும் ஏற்றம் பெற்று வாழவேண்டுமானால், மக்களின் மதிப்பைப் பெற்று வாழவேண்டுமானால், அம்மொழி அரசாங்க அலுவல் மொழியாகவும் அமைதல் வேண்டும் என்பது அரிச்சுவடி! தமிழ் இவ்வளவு வளம் பெற்றதாகத் திகழ்வதற்குக் காரணம், முன்னாளில் முடியுடை மூவேந்தர்களும் தமிழையே துரைத்தன மொழியாகக் கொண்டிருந்ததனர். அதனால் புலவர் கூடிடும் மன்றங்களிலும் பூவையர் ஆடிடும் பூம்பொழில்களிலும், போர்க்களத்திலும், உழவர் மனையிலும், தமிழே முதலிடம் பெற்றிருந்தது. யவனத்துக்கும், பிற நாட்டுக்கும், தமிழர்கள் வாணிபம் செய்யச் சென்றனராமே, கலங்களில், அந்தக் கலங்களிலே தமிழ் பேசியன்றோ சென்றனர். அந்தத் தமிழுக்கு ஆட்சி மொழியாளரின் மொழி என்கின்ற உரிமை நிலை இருந்ததால்தான் உயர்நிலை கிடைத்தது. ஊராள்வோருக்கு உரிய மொழி வேறு, மக்களுக்குள்ள மொழி வேறு என்ற நிலை இருப்பின் எம்மொழிச் சிறக்கும் – எம்மொழி உயரும்? (இந்தியும் தமிழ் மகனும் – கட்டுரை – 21.05.1950) எனத் தமிழ் ஆட்சிமொழியாக அணி செய்ய மக்களிடையே உணர்வு ஊட்டி வந்தவர். அந்த உணர்வைச் செயலாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டார். அவை அவரது மறைவினால் தொய்வுற்றன. தமிழ்நாட்டில் தொடர்ந்து தி.மு..அல்லது .தி.மு..தான் ஆட்சியில் இருக்கின்றனஆனால்தமிழ்தான் இல்லை.  வருகைப்பதிவேடுகள் கூடத் தமிழில் இருப்பதில்லை. தமிழில் பணியாளர்கள் கையொப்பம் இடுவதில்லை. அறிக்கைகள், ஆணைகள் தமிழில் இல்லை. செய்தி இதழ்களில் அடிக்கடி மாறுதல் ஆணை போன்ற ஆணைகள் வெளிவருகின்றன. ஒன்றாவது தமிழில் உள்ளதா என்றால் இல்லை . 
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் பேராசிரியர் சி.இலக்குவனார் அரசு முத்திரையில் உள்ள ‘சத்யமேவ செயதே’ என்னும் பிறமொழித் தொடரை நீக்கிவிட்டுத் தமிழில் ‘வாய்மையே  வெல்லும்’ என மாற்ற வேண்டும் என்றார். இதனை ஏற்ற பேரறிஞர் அண்ணா சத்தியம் தான் சரி, வாய்மை பொருந்தாது என மூதறிஞர் இராசாசி போன்றோர் கூறியும் தமிழ்ச்சொல்லான வாய்மை என்பதுதான் மிகச் சரி எனக் கூறி அதனை நடைமுறைப்படுத்தினார்.
தமிழ் என வாயளவில் சொல்லாமல் செயல்வழியாகத் தமிழை நிலை நிறுத்தினார். பிற மொழிப் பெயரோ பிற மொழி எழுத்தோ நம் பயன்பாட்டில் இருக்கக் கூடாது எனக் கனவு கண்டார் பேரறிஞர் அண்ணா. “ஜாதி என்ற சொல்லே தமிழிலில்லை. அதன் முதல் எழுத்தான  தமிழ் எழுத்தில்லை. சாதியை ஏற்றுக் கொண்டது போலவே ஜ-வை, ஏற்றுக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார். தமிழ் மக்கள் அனைவரும் கிரந்த எழுத்துகள் இல்லாத பெயர்களையே பயன்படுத்த வேண்டும் எனக் கனவு கண்டார். இன்றைக்கு நாம் பெயரில் கிரந்த எழுத்து இருந்தால்தான் நல்ல பெயர் எனத் தவறாகக் கருதுகிறோம். நல்ல பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களை விடப்பொருள் புரியாத பிற மொழிப்பெயர்களே உயர்வானவை எனத் தவறாகக் கருதுகிறோம். சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயர்களைத் தேடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளி விட்டோம்.
பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாகிட இனியேனும் தமிழகம் விழிக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டுப் பயன்பாட்டிலும் தமிழ் இருந்தால் நாட்டுப் பயன்பாட்டிலும் தமிழ் வந்து விடும். ஆண்டிற்கு இருமுறைமட்டும் பேரறிஞர் அண்ணாவின் பெயரை ஒலித்துவிட்டுப் பின்னர் அமைதி காத்துப் பயனில்லை. கல்விமொழியாக, வேலைவாய்ப்பு மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அறிவியல் மொழியாக, முழுமையான ஆட்சி மொழியாகத் தமிழ் வீற்றிருந்தால் பேரறிஞர் அண்ணா அங்கெல்லாம் இருப்பார். அதுவே அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.
வாழ்க தமிழர்கள் வளமெல்லாம் பெற்று!வாழ்க தமிழர்கள் வையகம் வாழ்ந்திட!வாழ்க தமிழ் அறம் தாரணி தழைத்திட!வாழ்க தமிழ் மொழி இனிமை பொங்கிட!
(பேரறிஞர் அண்ணா)
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 15.09.2019